Thursday, July 21, 2011

ஏழ்மை ஒழிப்பு நாடகம்

இந்தியாவின் தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட ஒரே வழி ஏழ்மையை ஒழிப்பதுதான். ஏழ்மையை எப்படி நீக்குவது? ஏழை என்று ஒருவன் இருக்கும்வரை ஏழ்மையை ஒழிக்க முடியாது. யார் இப்போது இந்தியாவில் உண்மையான ஏழை?

மகாத்மா காந்தி சொல்லியுள்ளது போல், இந்தியாவின் உயிர் நாடி கிராமங்களே. கிராமங்கள் முன்னேறாமல் இந்தியா முன்னேறும்? கிராமங்கள் முன்னேற ஏழை முன்னேற வேண்டும். கிராமங்களை நகரங்களாக்கிவிட்டால், ஏழை நகரவாசியாகிவிடுவான். ஏழை நகரவாசியாகிவிட்டால், அவனிடம் நிலம் இருக்காது. நிலம் இருந்தால்தானே அவன் உழவுத்தொழில் செய்து, வருமானம் பார்த்து, தன் குடும்பத்தினை முன்னேற்ற முடியும்?

உழவுத் தொழில் செய்ய இப்போது பற்பல பிரச்சினைகள். தண்ணீர் இல்லை, சரியான தரமான உரமில்லை, விதையில்லை, மின்வசதி இல்லை, எனவே உழவுத்தொழில் செய்ய முடியாது. அதனால் நிலம் தேவையில்லை. நிலத்தை விற்று அல்லது கான்கிரீட் வீடு கட்டிவிட்டால் வேறு தொழில் செய்யலாமென்றால், வேறு தொழில் செய்யப் பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சி பெற பணம் வேண்டும். வேறு வழியின்றி நிலத்தை விற்கிறான், நகரம் நோக்கிப் பயணிக்கிறான். கிராமத்து ஏழை என்கிற நிலையிலிருந்து நகரத்து ஏழை என்கிற பதவி உயர்வினைப் பெறுகிறான்.

இப்படியாகத்தான் இங்கு இன்றைய இந்தியாவில் ஏழ்மை ஒழிப்பு என்கிற நாடகம் அரங்கேறி வருகிறது. யாரோ புண்ணியவான் (?) மனதில் தோன்றியதோ என்னவோ, ஏழையை ஒழித்து விட்டால் ஏழ்மையும் ஒழிந்தாற்போல்தானே? அதுதான் நம் நாட்டு அரசியல்வியாதிகளும் நிர்வாகத் துறையினரும் ஆட்சி அதிகார வர்க்கத்தினரும் தத்தம் திட்டங்களை வகுக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்த அல்லது கேட்டமாதிரி, ஏழை என்று ஒருவனை ஏழையாகவே வைத்திருந்தால்தான் ஏழ்மை ஒழிப்பு என்கிற நாடகத்தை இவர்கள் தொடர்ந்து நடத்த முடியும்?

இவர்கள் யோசித்து நிறைவேற்றுவது போல், ஏழைகளை பெருவாரியாக ஒழிதது, ஏழ்மையை ஒழித்துவிட்டதாக தம்பட்டமடித்துக் கொண்டால், ஜிடிபி உயரும், பின் ஜிஎன்பி உயரும், அதன்பின் விலைவாசிக் குறியீடு சாதகமாகக் காண்பிக்க முடியும் (உண்மைக்கு மாறாக).

No comments:

Post a Comment