Sunday, July 31, 2011

அபாய கட்டத்தில் இந்திய அஞ்சல் நிலையங்கள்!

சமீபத்திய ஜூனியர் விகடன் 31.01.2011 இதழில் 'அபாய கட்டத்தில் அஞ்சல் நிலையங்கள்!' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படித்தேன். அதிலிருந்து சில கருத்துக்களும் (அப்படியே) என் அபிப்பிராயங்களும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


'இந்திய அஞ்சல் துறையின் 247 ஆண்டு வரலாற்றில், மிக மோசமான தருணம் இது. அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனையை ஏற்கிறோம் என்ற பெயரில், தபால் நிலையங்களின் எண்ணிக்​கையை படிப்படியாகக் குறைத்து, அஞ்சல் துறையை ஒட்டுமொத்தமாக மூடும் பாதையைத் நோக்கிச் செல்கிறது, மத்திய அரசு. 


இந்தியாவில் இப்போது 1,57,979 தபால் நிலையங்கள் இயங்குகின்றன. இவற்றில் கிராமங்களில் உள்ள நிலையங்களின் எண்ணிக்கை மட்டும் 1,39,182. கிட்டத்தட்ட 4,75,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ஒரு தபால் நிலையம் சராசரியாக 7,716 பேருக்கு சேவை செய்வதாகக் கூறுகிறது, இந்திய அஞ்சல் துறையின் ஆண்டு அறிக்கை!'


'அடிப்படை வியாபாரக் கட்டமைப்பில் கொஞ்சம்கூட அக்கறை காட்டாத அஞ்சல் துறை, வருவாயைப் பெருக்கத் தங்கக் காசு தொடங்கி தீபாவளி பட்டாசு வரை விற்பனை செய்கிறது. உலகின் முன்னோடி நிறுவனம் என்ற பெருமையை மறந்து, அமெரிக்காவின் 'மெக்கின்ஸே’ நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கிறது இந்திய அஞ்சல் நிறுவனம்'.



'மெக்கின்ஸே’ கொடுத்து இருக்கும் பரிந்துரைகளில் முக்கியமானவை இதுதான். நகர்ப் புறங்களில் உள்ள 9,797 அஞ்சலகங்களை மூடுவது. விரைவு அஞ்சல் மையங்களின் எண்ணிக்கையை 315-ல் இருந்து 89-ஆக குறைப்பது. அஞ்சலகச் சேவையின் முக்கிய ஆதாரமான ரயில்வே மெயில் சேவை மையங்கள் எண்ணிக்கையை 421-ல் இருந்து 84 ஆகக் குறைப்பது போன்றவைதான். இந்த செயல்பாடுகளைப் பார்த்தால், படிப்படியாக அஞ்சலகங்களை மூடி அஞ்சல் சேவையில் இருந்து அரசு விடுபட நினைக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
இந்தப் பரிந்துரையை அமலாக்கக் கூடாது என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த அஞ்சல் துறை ஊழியர்கள் தயாராகி வருகின்றனர். ''எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத முக்கியத்துவம் எங்கள் போராட்டத்துக்கு உண்டு. ஊழியர்கள் நலனுக்கான போராட்டம் அல்ல, எங்கள் துறையைக் காப்பாற்றும் உரிமைப் போராட்டம்!'' என்கிறார்கள் ஊழியர்கள்.
கூரியர் நிறுவனங்களிடம் இருந்து வெற்றி சூட்சுமத்தைக் கற்றுக்கொவதற்கு பதிலாக, கூரியர் நிறுவனங்களிடம் அஞ்சல் துறையை முழுமையாக ஒப்படைக்கும் வண்ணம், இந்தத் துறையில் இருந்தே அரசு வெளியேறுவதைப் பார்த்தால், என்னமோ நடக்குது... மர்மமாக இருக்குது!'




இனி என் கருத்து:


தற்போது சுமார் நாற்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரைக் கேட்டால் நான் சொல்லப் போகும் தகவமைவு (சூழ் நிலை) புரியும், அது ஒரு மலரும் நினைவாக என்றுமே காலத்தாலழியாத நினைவாகத் தெரியும். 


தமிழ்னாட்டிலிருந்து வெளியே (வெளி நாடு உள்பட) பஞ்சம் பிழைக்கச் சென்றவர்கள் தத்தம் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தபால் அனுப்புவார்கள் (அஞ்சலட்டை, உள்னாட்டுத் தபால் மற்றும் 30 அல்லது 50 காசு உறை இத்யாதி), அப்படி வரும் தபால்களை வீட்டுவாசலில் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தோர் பல கோடி. ஈ மெயில், செல்போன், எஸ்.எம்.எஸ் இத்யாதி வசதிகள் வந்துவிட்ட இந்தக் காலத்தோடு ஒப்பு நோக்கின், தற்போதைய நிலவரம் தெரியாது, அப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு இருவேளை டெலிவரி உண்டு, பதிவுத் தபாலும் பண அஞ்சலும் இரண்டாவது தவணையில்தான் வரும். 


அப்போதெல்லாம் தபால்காரர் (ஆணோ பெண்ணோ) அடுத்தத் தெருவில் வந்தாலும் முன்கூட்டியே சென்று வாங்கிக் கொள்ள நினைத்தாலும் பெரும்பாலும் அவர் மறுத்துவிடுவார். 'வீட்டுக்குப் போங்க, அங்கேதான் வருகிறேனே?' என்பார். அதோடு, அன்றெல்லாம் தபால்காரர் என்பவர் ஒவ்வொருவருக்கும் தத்தம் குடும்ப அங்கத்தினர் போல் நம் வீட்டு நல்லது கெட்டது விழாக்களுக்கு பரஸ்பர அழைப்பிதழ் தந்து குசலம் விசாரித்து வாடிக்கையாளர் ‍ மற்றும் சேவை செய்பவர் என்கிற வித்தியாசமின்றி ஒரு வித பரவசம் உண்டாக்கும் அன்னியோன்யம் இருக்கும். 


ஹூம், இதை எல்லாம் நினைத்துப் பார்த்தால், நம் அடுத்தத் தலைமுறையினருக்கு இப்படிப்பட்ட சமூகப் பரிமாணங்களையே அவர்களுக்குத் தெரியாது, சொல்லியும் புரிய வைக்க முடியாது, கமல் சொல்வது மாதிரி (பம்மல் கே.சம்பந்தம் திரைப்படம் என்று நினைவு) இதெல்லாம் ஆராயக் கூடாது, அனுபவிக்கணும், அப்போதுதான் அதன் நெளிவு சுளிவுகளும் வேதனைகளும் புரியும். 


மும்பை டி.என். ரோட்டிலும் பல்லார்ட் எஸ்டேட் போன்ற பழைய பாரம்பரியக் கட்டிடங்கள், சென்னை பாரீஸ் கார்னர் பாரம்பரியக் கட்டிடங்கள், சின்னங்கள், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன், எழும்பூர் ஸ்டேஷன், பழைய ஸ்பென்சர் கட்டிடம் (அண்ணா சாலை) இத்யாதி ஒரே இரவில் இடித்து (அல்லது இடிந்து) தரை மட்டமானால் சென்னை வாழ் நடுத்தர மற்றும் முன் தலைமுறையினருக்கு ஒரு வித மனோ வேதனை பற்றுமே (ஏக்கத்தோடு கூட), அது போன்ற ஒரு உணர்வுதான் எனக்கு தோன்றுகிறது, இந்திய அஞ்சலகத் துறை இழுத்துமூடப்படும் என்கிற தகவல் படிக்கும்போது. கண்ணீர் வருகிறதைய்யா? 


என்று தணியும் இந்த அன்னிய மோகம்? என்று தணியும் இந்த பன்னாட்டினரிடம் அடிமைப்படும் கையாலாகாத்தனம்? என்று தணியும் இந்த 'பரங்கியர் சொன்னாலும் செய்தாலும் எல்லாமுமே சரி, நம்மவர் செய்தால், சொன்னால் எட்டிக்காயாகக் கசக்கிறதே' என்கிற மனோபாவம்?


டெலிவரி செய்யாத பாஸ்போர்ட் மற்றும் கடிதங்கள் குப்பையில் - அந்த ஆவணங்களிலும் தபால்களிலும் எத்தனை எத்தனை பேர்களின் தலையெழுத்து மாறும் (படிப்பு, வேலைவாய்ப்பு, இத்யாதி!!) வாய்ப்புகள் ஒளிந்திருந்ததோ? இந்தியாவில் மட்டும்தான் இதுபோல் அராஜகங்கள் - அதுவும் அரசுத்துறையில் பணிபுரிபவர்கள் மூலம், பணிபுரிபவர்களால் - அரங்கேறும், வெட்கக்கேடு!! சில பல சொந்தச் சூழ்னிலைகளால் வெளி நாட்டு வேலை வாய்ப்பு வந்து, பின் உதறி, பிற்காலத்தில் மறுவாய்ப்பு வந்து லபக்கென்று வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியோர் 'போச்சுடா, தப்பித்தோம்!!' என்று பெருமூச்சு விடுவார்கள்.



இதே ஜூ.வி. இதழில் வேறு ஒரு கட்டுரையில் மாவட்ட ஆட்சியர் சகாயம் கூறியதாக ஒரு தகவல் வந்திருந்தது; அது அப்படியே இந்திய அஞ்சல் துறை விஷயத்திலும் முற்றிலும் சாலப் பொருந்துகிறது. 


சகாயம் சொன்ன சிறிய கதை உதாரணம்:

'ஜெல்லி மீன், நத்தையைச் சாப்பிடும். அப்போது தன் ஓட்டுக்குள் புகுந்துகொள்ளும் நத்தை, ஜெல்லி மீனின் வயிற்றுக்குள் போனதும் மெள்ள வெளிவந்து, ஜெல்லி மீனின் வயிற்றைக் கடித்து அதைக் கொன்று விட்டு வெளியேறுமாம். இன்றைய தேதியில் ஊழலும் லஞ்சமும் இந்த நத்தையைப்போல, மெது வாக நம் தேசத்தில் நுழைந்து, அழிக்கிறது' - 


மாவட்ட ஆட்சியர் சகாயம் சொல்லிய கதை அப்படியே இந்திய அஞ்சலகத்துறை, பிராவிடன்ட் பண்ட், சிறு மற்றும் குறு வணிகத்துறையில் பன்னாட்டு முதலாளிகள் காட்டும் ஆர்வம், புற்றீசல் போல் பல துறைகளில் இந்த பன்னாட்டு மோகம் எப்படியெல்லாம் நம் இந்தியாவைச் சீரழிக்கப் புகுந்துள்ளது என்று புரிய வைக்கிறது. நன்றி திரு. சகாயம் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டதற்கு.

No comments:

Post a Comment