Saturday, October 15, 2011

சமீபத்தில் ரசித்தது (1)


நன்றி: துக்ளக் 13.10.2011 இதழில் ஆசிரியர் சோ அவர்களின் கவிதை அல்லது பாட்டு அல்லது கந்த சஷ்டி கவசம் உடான்ஸ் என்றும் சொல்லலாம். இதை நான் மிக மிக ரசித்தேன். நேயர்களின் பார்வைக்காக இங்கே மறுபடியும்:

ஸ்ரீஸ்ரீஸ்ரீ துக்ளக் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய மனமோகன துஷ்ட கவசம் 

அறிமுகம்

ஊழல் புகார்களில் சிக்கியவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்களில் பலர் மத்திய மந்திரிகள். இந்த ஊழல் காங்கிரஸ்காரர்களும், கூட்டணிக் கட்சியினரும், இப்போது நம்புவது பிரதமரைத்தான். அந்த தெய்வம், தங்களைக் காப்பாற்றி விடும் என்று ஊழல்வாதிகள் அனைவரும் நம்புகிறார்கள். அந்தப் புண்ணியாத்மாக்களான ஊழல்வாதிகள் வெறும் நம்பிக்கையுடன் நின்று விடாமல், பிரதமரைப் போற்றித் துதிப்பது, அவர்களுக்கு நன்மையைத் தரும். 

ஊழல்வாதிகளுக்கு உதவுகிற நல்லெண்ணத்தில், பிரதமரின் லீலா வினோதங்களைப் போற்றி, அவருடைய புகழைப் பாடி, அவருடைய கருணையை வேண்டுகிற ‘மனமோகன துஷ்ட கவசம்’, துக்ளக் தாண்டவராய ஸ்வாமிகளால் இயற்றப்பட்டிருக்கிறது. ‘கந்தர் சஷ்டி கவசம்’ கடவுளை நம்புகிறவர்களுக்கு; ‘மனமோகன துஷ்ட கவசம்’ காசையே கடவுளாக நம்புகிறவர்களுக்கு. 

நிருபர்களைச் சந்திக்கும்போதும், கோர்ட்டுக்குப் போகும்போதும், புகார்களுக்குப் பதில் சொல்லும்போதும், ஜெயிலுக்குப் போகும்போதும், ஜாமீனில் வரும்போதும், எதிர்க்கட்சியினரைப் பார்க்கும்போதும், இந்த ‘மனமோகன துஷ்ட கவசத்தை’ப் பக்தி சிரத்தையுடன் கூறும் ஊழல்வாதிகள், ஸகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள். 

– சோ 
------------------------------------------------------------------------------------------------------------
காப்பு

ஊழல் செய்வோர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்;
பர்ஸில் பதிப்போர்க்கு செல்வம் நிலைத்து
கதித்து ஓங்கும் – பதவியும் கைகூடும்; டெல்லி
அருள் மனமோகன கவசந்தனை. 


குறள்

க்வாட்ரோக்கி இடர்தீர விந்தை புரிந்த
வித்தகன் அடி, நெஞ்சே குறி. 
நூல்

துஷ்டர்களைக் காக்கும் பிரதமர் கனவான்
பாதகருக்கு உதவும் பஞ்சாப் சிங்கம்
பாதம் இரண்டும் சோனியாவைப் பணிய,
கீதம் பாடி, அன்னை பாட்டுக்கு 
தாளம் போடும், அறநெறி மேலோன்
வேடமணிந்து, ஊழலைக் காக்க உவந்து வந்து
வர வர டர்பனார் வருக வருக!
வருக வருக வேடக்காரர் வருக வருக!
சங்கடம் தீர்க்க சடுதியில் வருக!
சரிசரி சரிசரி சரிசரி சரிசரிசரி
நீதியின் குடிகெடுத்த ஐயா வருக!





எம்மை ஆளும் சிங்கனார் கையில்
பலபல பொய்யும், பாசாங்கும்
பரந்த விழிகள் பலதை மறைக்க 
விரைந்தென்னைக் காக்க மேலோன் வருக!


நன்னெறி வேடத் தலையில் டர்பனும்
இருசெவி கீழே தாடியும் மீசையும்
நிமிராத மார்பில் கோட்டும் பட்டனும்,
திருவடியதனில் பூட்ஸும் பளிச்சிட 

படபட படபட படபட படபட
தடதட தடதட தடதட தடதட
என்ற பாராளுமன்றப் பேச்சுக்களேற்று
நாட்டை ஆளும் நாடகக்காரா! 




அடியேன் ஊழலை, டர்பன் காக்க
கண்ணாடி இரண்டும், கருப்புப் பணம் காக்க
பேசும் பொய்தனை, ப்ராண்ட் நேம் காக்க
தகவல் சட்டம் தாக்காமல் தாடியும் காக்க
ஸ்விஸ் பேங்க் கணக்கை, மீசை காக்க
பொருள் அனைத்தும், பொருளாதார மேதை காக்க
பினாமி சொத்தை, பிரதமர் காக்க 

காக்க காக்க கண்மூடி சாமி காக்க
நோக்க நோக்க நோஃபைல் நோக்க
தாக்க தாக்க தாடிக்காரர் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட 




பில்லி சூனிய சுப்ரமணிய சாமியும்
அல்லல் படுத்தும் அடங்கா கோர்ட்டும் 

பிள்ளைகள் தின்னும் புழக்கடை சோதனையும்
கொள்ளி வாய்ப் பேய்களும் ஸி.பி.ஐ.யும் 

அமைச்சர்களைத் தொடரும் ஊழல் புகார்களும்
அடியேனைக் கண்டால் அலறி நடுங்கிட 

தகவல் சட்டக்காரச் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓட 

வல்லபூத வலாஷ்டிகப் பேய்கள் –
விசேஷ கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும்
அடியேனைக் கண்டால் அலைந்து குலைந்திட 

மாற்றார் வஞ்சகர் பத்திரிகையாளரும்
டெலிவிஷன் சேனலும், பா.ஜ.க. ஆட்களும்
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட 

ஏமத்தில் சாமத்தில் எதிரே வந்து
என்னைத் துரத்தும் விசாரணைக் காட்டேரி
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டி, உன் பாசாங்கு பேச்சால்
கோர்ட்டுடன் சேர்ந்து கதறிக் கத்தி
கட்டி உருட்டு கால்கை முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
குத்து குத்து, உன் பொய்யால் குத்து! 




எல்லா வழக்கும் என்றனைக் கண்டால் 
நில்லாதோட நீ எனக்கு அருள்வாய்! 

எல்லா நாட்டு பேங்குகளும் எனக்கே ஆக,
மனையும், மைன்களும், அனைத்தும் எனக்கே ஆக, 
உன்னைத் துதிக்க, உன் திருநாமம்
மனமோகனே! மாசில்லா சிங்கே!
நாட்டின் பிரதமரே! பாவம் காக்கும் பவனே! 

பாடினேன், ஆடினேன் பரவசமாக
ஆடினேன், நாடினேன் பிரதமர் கருணை
வாழ்க வாழ்க, வேடக்காரர் வாழ்க!
வாழ்க வாழ்க, ஊழல் கேடயம் வாழ்க!
வாழ்க வாழ்க, சோனியா அடிமை வாழ்க!
வாழ்க வாழ்க, நாற்காலி பித்தர் வாழ்க! 

எத்தனை ஊழல்கள் அடியேன் செய்யினும்
அத்தனையிலும் உடனிருந்துக் காப்பது உன் கடன்!
கூட்டணி தர்மம் கண்டவன் நீ! அடியேன்
என்மீது மனமகிழ்ந்து அருள் செய்! 

மனமோகன துஷ்டக் கவசந்தனை விரும்பிய
துக்ளக் தாண்டவராயன் அருளியதைக்
காலையில், மாலையில், கோர்ட்டில், ஜெயிலில்,
கருத்துடன், நாளும் நேசமுடன், 
நினைவதை உன்முகமாக்கி, 
மனமோகன துஷ்ட கவசம்தனை 
சிந்தை கலங்காது தியானிப்பவரை
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்; 




பொல்லா சுப்பி ரமணிசாமியும்
குடைச்சல் சிலந்தி ஸி.பி.ஐ.யும்
சொக்கு சிரங்கு குன்மம் கோர்ட்டும்
ஏறிய விஷங்கள் எளிதில் இறங்கும்! 

சிதம்பர ரகசியம் அறிந்தாய் போற்றி!
பிரணாபின் ரோஷம் தணித்தாய் போற்றி!
உட்பகை கொன்று, ஊழலை மறைத்து,
நீதியின் காதில் பூவைச் சுற்றியவனே போற்றி! 




நாட்டுக்கு நஷ்டா போற்றி!
நேர்மைக்கு கஷ்டா போற்றி!
ஊழலோருக்கு இஷ்டா போற்றி!
சட்டத்திற்கு துஷ்டா போற்றி! 

திறமிகு மழுப்பல் திலகமே போற்றி!
ஊழல் காத்து வாழ்வாய் போற்றி!
பங்கே பெற்று விளங்குவாய் போற்றி!
போற்றி போற்றி, ஊழல்பதியே போற்றி!
போற்றி போற்றி, மனமோகனனார் போற்றி!! 
_________________________________________________________

வாசகர் பின்னூட்டங்களில் நண்பர் வெங்கட் அவர்களின் கவிதை நன்றாக இருந்தது, அதுவும் இங்கே:

   – வெங்கட் 
சோவே போற்றி சோவே போற்றி சோவே போற்றி  
தமிழத் தரணியின் ஐயனே போற்றி போற்றி  
 
நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் ஒன்றே கூற  
மன்றிலும் மக்கள்மத்தியிலும் மன்மோகன ஜயமே ஊற  
 
உரத்து பொய்களை உரைப்போரை, அவரை நம்பி இருப்போரை  
கலங்கச்செய்ய நடாத்துகிறீர் உம் எழுத்துப் போரை  
 
சோவே போற்றி சோவே போற்றி சோவே போற்றி  
தமிழத் தரணியின் ஐயனே போற்றி போற்றி



No comments:

Post a Comment