Tuesday, November 30, 2010

மொக்கை டாட்.காம்

மனைவி: ஏங்க, இன்னைக்கு சாப்பாட்டில் ஒரு விசேஷம், என்ன சொல்லுங்க பார்க்கலாம்?
கணவன்: ஹூம், வழக்கம்போல்தானே இருக்கு, என்ன புதுசா இன்னிக்கு?
மனைவி: இன்னைக்கு என் சாம்பார் சொக்கத்தங்கம் மாதிரிங்க‌
கணவன்: என்னடி சொல்றே?
மனைவி: இன்னைக்கு நான் 24 காரட் போட்டு சாம்பார் வச்சேங்க‌
கணவன்: (மனதுக்குள்): ஹய்யஹோ, என்ன கொடுமை சரவணன் இது!!
----------------------------------------------------------------------------

'அவள் அவல் அளந்தாள் இவள் அவல் அளப்பாள்
இவள் அவல் அளந்தாள் அவள் அவல் அளப்பாள்
இவளும் அவளும் அவல் அளக்காவிட்டால்
எவள் அவல் அளப்பாள்?’
இந்த நாக்குச் சுழற்றியை (டங் ட்விஸ்டர் சாமி!!) பழகி சரியாக உச்சரிப்பவர்களுக்கு தமிழில் ஒரு 'ஓ' போடலாமே?
நன்றி: அவள் விகடன் ‍ பகுதி ‍ சொல்லு மக்கா சொல்லு (19.7.2011) இதழ்.

Saturday, November 27, 2010

படித்ததில் ருசித்த ஜோக்குகள்

1) ஆசிரியர்: காந்திஜி மண்ணெண்ணெய் விளக்கில்தான் படித்தார்; கிரஹாம்பெல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்தான் படித்தார்; ஷேக்ஸ்பியர் தெருவிளக்கில்தான் படித்தார்.....(முடிக்கவில்லை)
மாணவன்: இவர்களெல்லாம் பகல்ல என்ன பண்ணினாங்க சார்!!
(நன்றி: ஆனந்தவிகடன், 1.12.2010 இதழ்)
2) வி.எஸ். தேவசேனாபதி, வேலூர்-9கே : ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி, தி.மு.க.விற்கு ஏதோ ‘செக்’ வைக்கிறது என்று நினைக்கிறேன்! சரியா?ப : ‘செக்’கா? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எல்லாமே ‘கேஷ்’தான்! வந்த ‘கேஷ்’ஷில் யாரோ, யாருக்கோ, நிறையப் பங்கு வைத்ததால்தான் – இன்னமும் முழு உண்மை வெளியாகாமல் இருக்கிறது!
[நன்றி: துக்ளக் கேள்வி‍ பதில் (02.12.2010 இதழ்]

Friday, November 26, 2010

நினைவோ ஒரு பறவை - வங்கிகளா வாங்கிகளா?

காலச் சக்கரத்தின் ஓட்டத்தில், வாழ்க்கை வாழ்வதற்கே என்பது உண்மையாயினும், இந்த ஒரு வாழ்க்கையை நலமாக வாழ்ந்து முடிப்பதற்குள் மனிதன் எத்தனைதான் பிரயத்தனமும், இஷ்டப்பட்டும் இஷ்டப்படாமலும் கஷ்டப்பட்டு, சில நேரங்களில் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு, பல நேரங்களில் காஞ்சிப்பட்டு கிடைக்காவிட்டாலும், வெண்பட்டாவது உடுத்தி தன் ஆதர்ச அல்லது அத்தியாவசியக் கடமைகளைச் சரிவர செய்ய வேண்டியுள்ளது.

சற்றே பின்னோக்கி 80களில் நாடு எப்படி இருந்தது; தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் இன்னபிற மாயமாக்கலினால் நம் சாதாரண வாழ்க்கை எப்படி எல்லாம் மாறிவிட்டது என்று யோசித்தால் (......பின்னோக்கி கனவான்களே!!).

வங்கித் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதெல்லாம் 5 அல்லது 10 ரூபாய் இருந்தால் ஒரு சேமிப்புக்கணக்கு துவங்க முடியும், கூடவே ஒரு காசோலைப் புத்தகமும் கிடைத்துவிடும், குறைந்தபட்சம் ரூ.100 கணக்கில் வைத்திருந்தால் போதும்.


பணப் பட்டுவாடா செய்ய அல்லது கணக்குப் புத்தகத்தில் அவ்வப்போது பதிவு செய்ய வங்கிக்கு விஜயம் செய்யும்போது அங்குள்ள கூட்டத்தைப் பார்த்தால், நமது முறை எப்போது வரும் என்று காத்திருப்போம்.

சில நேரங்களில் பணம் வாங்க நம் டோக்கன் எண் எப்போது கூப்பிடுவார்கள் என்று காத்திருப்போம். இடையே நாம் சற்று வெளியே சென்று வந்தாலும் அல்லது காத்திருப்பின் வலியில் சற்றே கண்ணயர்ந்துவிட்டாலும், எங்கே நம் முறை வந்து போய்விட்டதோ, காசாளர் கூப்பிட்டதை கவனிக்கவில்லையோ என்று மனம் பதறிவிடுவோம். இந்த அனுபவம் வயது வித்தியாசமில்லாமல் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அதுவும் 50 அல்லது 60 வயது தாண்டிய முதியோர் நிலை சொல்லவே தேவையில்லை. அவர்கள் காசாளர் அருகில் (கூட்டத்தில் அங்கும் இங்கும் இடிவாங்கித்தான்) சென்று 'என் எண் கூப்பிட்டீர்களா?' என்று வினவுவதும், அவர் பதிலுக்கு சில நேரங்களில் 'போய் அமருங்கள், கூப்பிடுகிறேன்' என்று சொல்லலாம், தன்னுடைய வேலைப் பளுவின் சுமை காரணாமாக சில சமயம் 'இந்தப் பெரிசுகளே இப்படித்தான், சரியான தொல்லையப்பா' என்று சலித்துக் கொள்வதும் உண்டு. அது அவரவர் தன்மை பொறுத்தது.


இப்போதெல்லாம் இப்படி இல்லை என்றுதான், தோன்றுகிறது.

பெரும்பாலான அரசு வங்கிகளில் இந்த நடைமுறை மாறாமல் வங்கி வாடிக்கையாளர்களின் அனுபவம் இப்படியேதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால், பெருவாரி வங்கிகளில் (அரசு அல்லது தனியார்) கணக்குத் துவக்க குறைந்தபட்ச தொகையும் காசோலை வசதி தேவையானால் கணக்கில் இருப்பு வைக்க வேண்டிய குறைந்தபட்ச தொகை, கூடவே காசோலை வசதிக்கான கட்டணம் அவ்வப்போது நம் கணக்கில் பற்று வைக்கும் கட்டணம் (ரு.40 அல்லது இன்னபிற வரிகள் உள்பட), தவிர தானியங்கி பணமெடுக்கும் பற்று அட்டை (Debit card) இருந்தால் அதற்கான வருடாந்திர கட்டணம் இத்யாதி என்று நம் தலையில் வரும் செலவினங்கள் தாராளமாகவே ஏராளம்தான்.


பல வங்கிகளில் இந்த ஏ.டி.எம் அட்டையை வைத்து நாம் மாதாமாதம் எடுக்கும் பணத்திற்கு ஒரு வரையறை வைத்துள்ளார்கள், அதாவது மாதாமாதம் 2, 3 முறைதான் அல்லது ஒரு காலாண்டிற்கு 8 முறைதான் இலவசமாக ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கலாம், அதற்கு மேல் போனால், ஒவ்வொரு முறை கூடுதலாக எடுக்கும்போதும் அதற்கு ஒரு கட்டணம் வரும் அடுத்த மாதாந்திர அறிக்கை வரும்போதுதான் அது தெரிய வரும்.

இதில் எனக்கு ஒன்று புரியவில்லை. பண்டைக்கால நடைமுறையின்படி (90கள் வரை இருந்த பழைய முறை) வங்கிகளில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கத்தான் கணினி மயமாக்கல், அதனால் நாம் எங்கு கணக்கு வைத்துள்ளோமோ அங்கு செல்லத் தேவையில்லை, இதே வங்கியில் வேறு கிளைகளுக்கோ அல்லது ஏ.டி.எம்.முக்கு சென்று நம் வங்கிச் சேவைகளை செய்து கொள்ள முடிகிறது.  நம் கணக்கிலிருந்து நாம் சம்பாதித்த நம் பணத்தை நாம் எடுக்க இவர்களுக்கு ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?


ஒரு பக்கம் நாம் வங்கிப் பக்கம் நேரடியாக வருவதைத் தவிர்க்க அட்டை கொடுத்து விடுகிறார்கள், மறுபக்கம் நம் பணத்தை நாம் எடுக்க கட்டணம் வேறு.

ஸ்டேட்மென்ட்: முன்பெல்லாம் 'பாஸ்புக்' என்று ஒன்று இருக்கும், அவ்வப்போது போய் நாம் நம் கணக்கின் வரவுசெலவு வகையறா விவரங்களை கைப்பதிவாக பெற்று வருவோம். பின்னர், கணினிமயமாக்கலுக்குப்பின், அவ்வப்போது அச்சிட்டு வாங்கி வந்தோம். இதுவரை கட்டணம் ஒன்றும் இருந்ததில்லை.

பல வங்கிகளில் இது கட்டணமுறையை நோக்கி செல்கிறது. மாதாமாதம் அல்லது ஒரு காலாண்டு வரை இலவசமாகவும், சில வங்கிகளில் வருடாந்திர ஸ்டேட்மெண்ட் ஏப்ரல் மாதத்திலோ மே மாதத்திலோ வரும். இதுவும் இலவசம் தான் என்று நம்புவோம். மிகச் சமீப காலத்தில், உலகச் சுற்றுச் சூழல் உணர்வும் பச்சை மயமாக்கல் தொடர்பான கோரிக்கைகளின் பின் விளைவு
இப்பொதெல்லாம் பல வங்கிகளில் இந்த அட்டவணையை நமது ஈமெயிலில் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதால், காகித அட்டவணையே முற்றிலுமாக போய்விடும் என்று தோன்றுகிறது. பாஸ்புக் அனேகமாகப் போய்விட்டது, காகித அட்டவணையும் போய்விட்டது, ஏதாவது விசா, பாஸ்போர்ட், வங்கிக்கடன், வீட்டுக்கடன், பள்ளி அல்லது கல்லூரிகளில் மேற்படிப்புக்காக பிள்ளைகளுக்காக கடன் இன்னபிற காரணங்களுக்காக நம் வங்கி ஸ்டேட்மெண்ட் கேட்கிறார்கள், சில நேரம், நமக்கு வங்கிக் கணக்கு என்று ஒன்று உள்ளது என்பதை தெளிவுபடுத்தவே ஆதாரம் வேண்டி இந்த ஸ்டேட்மெண்ட் தேவைப்படுகிறது. இப்போதுள்ள நடைமுறைத் தேவைகளினால், முந்தைய 3 அல்லது 6 மாதக் கால வங்கி பற்று வரவு அறிக்கை மொத்தமாகக் கேட்டால், அதற்கென்று தனியாக கட்டணம் தர வேண்டியுள்ளது. ஈமெயில் வந்த அறிக்கை அப்படியே அச்சடித்துத் தருவோம் என்றால், அதை எவரும் ஒப்புக்கொள்வதில்லை, வங்கி அதிகாரியின் கையொப்பமிட்ட அறிக்கைதான் வேண்டும் என்கிறார்கள்.

நான் சொல்ல வந்தது என்னவென்றால், எதற்கெல்லாம் எந்தவித வங்கிச் சேவைகள் நமக்கு முன்பு இலவசமாகக் கிட்டியதோ அவையெல்லாம் இப்போது முழுவதும் கட்டண சேவையாக மாறிவிட்டது அல்லது மாறிவருகிறது.

கணினி மயமாக்கல், தொழிற்போட்டி, வியாபாரப்போட்டி, பன்னாட்டு வங்கிகளின் வருகை, அவர்களுடன் தேசிய வங்கிகள் போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தம், அதனால் கணினி மயமாக்கலுக்காக ஏற்படும் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் செலவு இத்யாதிகள மறைமுகமாக நம் தலையில் சிறிது சிறிதாக ஏற்றி வருகிறார்கள். இது எங்கு போய் முடியுமோ?

இந்த லட்சணத்தில், e-banking, m-banking, i-banking, internet-bankiங் என்கிற பூதகணாதி சேவிதங்கள் (யாரும் கோபித்துக்கொள்ளக் கூடாது, இவை எல்லாம் ஒருவித வங்கிச் சேவை என்கிற சேவிதங்களில் வருவதால், அப்படித்தான் ஒப்பிட வேண்டியுள்ளது.

பித்துக் குறிக்க வாரீயளா? ட்விட்டர்னா என்னா?

ட்விட்டர்னா என்னா? பித்துக் குறிக்க வாரீயளா?

Twitter Twitter என்கிறார்களே, Twitter என்றால் என்ன?
What can you do in Twitter ?
Twitter-ல் எழுதுவதை ட்விட் என்று சொல்லுவதா? ட்வீட்  என்று சொல்வதா? Is it to Twit or Tweet in Twitter?
Twitter-ல் எதை எழுதுவது? எதை எழுதக்கூடாது, ஏதாவது வரைமுறை அல்லது வரையறை உள்ளதா?

பொதுவாக இது மாதிரி வலைத்தளங்களைப் பயன்படுத்துவது எதையும் யாரையும் பற்றி அவதுறாகவோ ஆபாசமாகவோ, எதையாவது எழுதி விட்டு பின்னைர்
வீட்டுக்கு ஆட்டோகிராபுக்காக யாரும் வராவிட்டாலும் ஆட்டோ வராத வரை கண்ணியமாக நம் மனதில் பட்டதை எழுதலாம் என்று மேலெழுந்தவாரியாகத் தெரிகிறது.

எனக்கு இந்த மாதிரி Twitter, Facebook, LinkedIn, Orkut போன்ற வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் சற்றே தயக்கம் மற்றும் முன்கருத்தாக்கம் (own perception) உண்டு (அது சரியா தவறா என்பது பிறகு). இது மாதிரி சமுக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் சொல்வது, உலகளவில் சமுகத்தில் உள்ளவர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள இந்த வலைத்தளங்கள் உதவுவதாக கூறுவார்கள், அனால் எனக்கு ஒன்று புரியவில்லை.  எனக்குத் தெரிந்தவரை சில பல பத்தாண்டுகளாகவே (பலர் சொல்லக்கூடும் இது பத்தாண்டிகளாக இல்லை, சில பல நூறாண்டுகள் என்றே சொல்லலாம் என்று).  நடப்பு நடைமுறை துரிதகதி அல்லது எந்திரகதி வாழ்க்கை முறையில் (Fast-track as well as mechanical lifestyle) யாரும் தன வீட்டுக்குள்ளேயே அல்லது தனது அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுடனேயே பேச்சு வார்த்தை மற்றும் தொடர்பு வைத்துக்கொள்வது இல்லை, அது உறவினராகட்டும் நண்பர்களாகட்டும்.  பிறகு எப்படி எங்கேயோ கண்காணாத தேசத்தில், ஊரில் உள்ளவரோடு தொடர்பு அல்லது அளவளாவுவது சாத்தியம்?  கேட்டல் உலகம் உங்கள் கையில் உள்ளது, உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது என்கிறார்கள்.

கிராமங்களே கேட்பாரில்லாமல் போய்விட்டது, எல்லாம் நகரமயமாகி விட்டது. கிராமவாசியையோ கிராமத்திற்கே உரிய வாழ்க்கைமுறையையோ இப்பொழுது யாரும் சீண்டுவதாக அல்லது வழக்கத்தில் வைத்துள்ளதாகத் தெரியவில்லை. பக்கத்து வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது என்ன என்றே தெரியாமல்தான் இன்று பலபேர் வாழ்க்கை ஓடுகிறது. பக்கத்து வீட்டுக்காரன் செத்தால்கூட எட்டிபார்த்து ஒரு நாலு வார்த்தை ஆறுதலாகவும் பிரிவாகவும் பேச இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு நேரம் இல்லை. இதற்கு இந்தக் கட்டுரையாளனும் விதிவிலக்கில்லை.

எல்லோர் வாழ்க்கையும் காலையில் துவங்கி இரவு உறங்கும் வரை அப்படியாகி விட்டது.  யாருக்கும் தன் குடும்பம், தன் தொழில் அல்லது உத்தியோகம்செலவிட, தன் முன்னேற்றம் இத்யாதிக்கு நேரம் செலவிடவே போதவில்லை. அண்டை வீட்டுக்காரன் அசலானகிவிட்டான், அசலான் நகலனாகும் வேளையில், சமூக வலைத்தலத்தின் மூலம் ஒருவன் எப்படி சுமுகமான தகவல் தொடர்பினை வைத்துக்கொள்வது? யோசிக்கவேண்டிய விஷயம்தான்.

சரி, Twitter-ல் ஒரு இடம் (ID) துண்டு நம் பெயரில் போடலாம் என்று முடிவு செய்து, என்ன பெயரில் போடலாம் - சொந்தப்பெயரிலா? இணை அல்லது துணைப் பெயரிலா? தமிழனுக்குதான் இணை துணை வைத்துக்கொள்வதில் ஒரு அலாதி சுகம் உண்டே? நம் பெயரில் போடலாம் என்று பெயர் கொடுத்தால் அதே பெயரில் வேறு யாரோ முன்னரே பதிவாக்கிவிட்டர்கள்.

சரி, Twitter-ல் என்ன மொழியில் எழுதலாம் - எல்லோருக்கும் உகந்த ஆங்கிலத்திலா? நமக்குத்தெரிந்த தாய் மொழியாம் செம்மொழியான தமிழிலா? இல்லை, தமிங்கிலத்திலா? சரி, பிரதானமாக தமிழிலும் ஆங்காங்கே தேவைக்கேற்றவாறு ஆங்கிலத்திலும் என்று வைத்துக்கொண்டாலும், எதைப் பற்றி எழுதுவது? பலரது ட்விட்டரில் கண்டவாறு : 'இன்று சீக்கிரமே எழுந்துவிட்டேன், இன்று அங்கே போனேன், அதைச் செய்தேன், இதைச் செய்தேன், அவரைப்பார்த்தேன், தூங்கினேன்'  என்றெல்லாம் எழுதுவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?

ஒரு வேளை இன்றைய கால கட்டத்தில் நடக்கும் நாட்டு நடப்புகளைப்பற்றி நமது கருத்தை, விமரிசனத்தை எழுதலாமா - மேதகு எழுத்தாளர் ஞாநி அவர்கள் பாணியில் ஒரு பாராட்டு (சொட்டு), குட்டு, திட்டு அல்லது செல்லமாக ஒரு தட்டு இப்படி எதை எழுதுவது? அடடா, இப்பவே கண்ணைக் கட்டுதே, சரி நமது வலை முன்னோர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து அதை அடியொட்டியோ வேறு மாதிரியாகவோ எழுதுவது எந்த அளவுக்கு 'காப்பி' அடிக்காதவாறு நம் கருத்தை தகவல்தொகுப்பாக எழுதலாமா?

போதும்டா சாமி என்று சும்மா இருக்கலாமா? பின், இவ்வளவு தூரம் யோசித்தபின் இதையாவது கிறுக்கி வைத்தால், அதற்கு நம் நேயர்களின் விமரிசனம் என்னவாக இருக்கும்? எதையாவது எக்குத் தப்பாக எழுதி வைத்தால் விட்டுக்கு ஆட்டோவோ தள்ளுவண்டியோ அனுப்புவார்களோ?


இது வலைப்பூவில் ஒரு அரங்கேற்றம்தான், முன்னோட்டம்தான்.
இன்னும் வரும்.