Wednesday, June 3, 2020

சர்வர் சுந்தரம் திரைப்படம் ஒரு மாறுபட்ட திறனாய்வு!!

சர்வர் சுந்தரம் திரைப்படம் ஒரு மாறுபட்ட திறனாய்வு!!
1964ல் வெளி வந்த ஏ.வி.எம் நிறுவனத்தின் 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் நாகேஷ் அவர்களின் வாழ்வில் அவர் நடித்த பல திரைப்படங்களில் நம்மையெல்லாம் மகிழ்வித்த ஒரு நல்ல சித்திரம் என்றால் மிகையல்ல.
சமீபத்தில் அப் படத்தின் கதைக்கோணம் பற்றி யோசித்ததில் இந்தக் கொனஷ்டை கோயிந்து, கோக்குமாக்குக் கோவாலுக்கு வந்த சிந்தனை. பாசிடிவ், நெகடிவ் என இருவேறு அம்சங்களில் ஆராயலாம்.
முதலில் பாசிடிவ் சிந்தனை:
கதைக்களம் நாம் அறிந்ததே, ஒரு சிறு முன்குறிப்பாய் இங்கே.
ஏழை இளைஞன், தந்தையில்லை, தாய் மட்டுமே ஆதரவு. படிப்பறிவும் குறைவு, அந்தக் காலப் பி.யு.சியோ பட்டப்படிப்போ (என்ன படித்தான் நமக்கு நினைவில்லை). ஆனால், பிழைப்பிற்காக ஒரு உணவகத்தில் பணிபுரிகிறான். அவன் முதலாளிக்கு அவனை ரொம்பப் பிடிக்கும், அம்மட்டில் முதலாளிக்கு விஸ்வாசமான ஊழியன்.
வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கும்போது ஓரு நாள் கஸ்டமர்களில் ஒருவராய் வரும் ஒருவர் தன் பழைய பள்ளிக்கால நண்பன். நண்பனுக்கு நண்பன் உதவி என இந்த ஏழை இளைஞனுக்கு அவன் விரூம்பிய நாடக நடிப்பு அதன் மூலம் திரைப்பட நடிப்பு என வாழ்வாதாரம் மேலோங்க ஒரு வாய்ப்பு வருகிறது.
இடையே முன்னர் பணியாற்றிய முதலாளியின் மகள் மீது இந்த இளைஞனுக்கு ஒரு ஆர்வக் கோளாறில் வரும் காதல். எதேச்சையாக, தன் பள்ளிக்கால நண்பனுக்கும் அதே பெண்ணுடன் காதல் என்பது இந்த அப்பாவி இளைஞனுக்கு தெரிய சாத்தியம் அதுவரையில்லை. பிறகு அவன் வாழ்வில் ஜெயித்து காதல் கைகூடியதா இல்லையா என்பது வெள்ளித் திரையில் கண்டோம், களித்தோம், நாகேஷ் எனும் ஒற்றை நாயகனுக்காய் ரசித்தோம்.
திரையில் பார்த்த ஒரு ரூட் பாசிடிவ்தான். வேறென்ன பாசிடிவ் ரூட் இது மாதிரி இளைஞர்களுக்கு சமூகத்தில் வாய்க்கும்?
1. அந்த பள்ளிக்கால நண்பன் யாரும் வரவில்லை. இளைஞனின் உழைப்பு, நேர்மை, விஸ்வாசம் என சுமார் ஓரிரு ஆண்டுகள் அவதானிக்கும் முதலாளி அவன் நிர்வாகத்தில் இன்னொரு உணவகம் திறந்து அவன் பொறுப்பில் அந்த உணவகத்தை நிர்வகிக்கச் செய்யலாம். அதை வைத்து அவன் வாழ்வில் தன் வழியே முன்னேறலாம். இந்த முதலாளி ஒரு கருவிதான் அவன் வளர்ச்சியில். மற்றபடி அவன் வெற்றிக்கு அவனே முன்மாதிரி.
2. இளைஞனின் மேல் நம்பிக்கை வைத்து இவன் போல் ஊரில் இருக்கும் 'தகுதியுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க' அம் மாதிரி இளைஞர்களை அழைத்து தன் நிறுவனங்களில் அவரவர் தகுதிக்கு ஏற்ப வாய்ப்பளிக்கலாம். அதில் முதல் இளைஞன் ஒரு மனித சக்தி மேம்பாடு எனும் ரூட்டில் (ஹ்யூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட்) அம் முதலாளிக்கு ஒரு சோர்ஸாய் இருக்க வாய்ப்பு வருகிறது. அப்படிப்பட்ட ஒரு ஏஜென்சி போல் அந்த இளைஞன் வாழ்க்கையை தொடரலாம்.
3. இளைஞனின் உழைப்பை அனுசரித்து அவன் கல்வித் தகுதி என்னென்ன என்பதை உணர்ந்து தன் இதர நிறுவனங்கள் (அதாவது சூப்பர் மார்க்கெட், ஃபார்மஸி, என்ன உண்டோ) அங்கே அந்த இளைஞனைப் பொறுப்பில் அமர்த்தலாம். காலப் போக்கில் அவன் வளர்ச்சியை அனுசரித்து தன் மகளையே கூட அவனுக்கே மணமுடித்து வைக்கலாம். அதன் மூலம் அவனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பும் கூடுதல் பொறுப்பும் வரும் இல்லையா?
கவனிக்க, இதுவரை, அந்த இளைஞனின் சமூகப் பின்னணி, சாதி, மத, இனக் குறியீடுகள் லிஸ்ட்லயே இல்லை. ஆனால், நம்ம பாணி 20ம் நூற்றாண்டின் திரைப்படங்கள், வாழ்வியல் அச்சு அசல் நிகழ்வுகள் காட்டும் நெகடிவ் ரூட்டில் யோசித்தால்:
அவர் முதலாளி என்பதால் அனேகமாய் அவர் சமூகத்தில் முற்பட்டோர் வகுப்பாய் இருக்கவே சாத்தியம் அனேகம். அவரே ஒரு பிற்பட்டோர் சமூகத்தில் இருந்து வந்த முதலாளி, சாதி சமூகக் கடப்பாடுகளைத் தாண்டி வந்தவர் என இருந்தாலுமே கூட அவருக்கும் இந்த சாதி மத இனப் பாகுபாடுகளின் தாக்கம் குடும்ப அளவிலாவது, தன் நெருங்கிய வட்டாரத்திலாவது இருக்காதா என்ன? அவர் என்ன தேவலோகத்தில் இருந்து வந்தவரா என்ன? சராசரி மனிதக் கூட்டத்தில் அவரும் ஒரு அங்கம்தானே?
ஆக, ஆக, என்ன சொல்ல வர்றோம்னா, அந்த முதலாளி ஒரு ஆதிக்க சமூக அங்கம். இளைஞன் ஒரு கீழ் மத்திய அல்லது வறுமைக்கோட்டில் உலாவும் ஆதிக்க சாதியல்லாத சமூக அங்கம் எனக் கொள்வோம்.
என்னென்ன வாய்ப்புகள் அவனுக்கு காத்திருக்கலாம்?
1. முதலாளியும் இளைஞனும் ஒரே மத,இன, சாதியாய் இருந்தால் மேலே பாசிடிவ் சங்கதிகளில் சொன்ன ஏதோ ஒன்று சாத்தியமாகி இருக்கலாம்.
2. இளைஞன் அதே மதம், ஆனால் வேறு சாதி, சற்றே கீழ்மட்ட அங்கம் எனில் அவனது உழைப்பு, விஸ்வாசம் பார்த்து தொழிலில் முன்னேற அவனை பயன்படுத்திக் கொள்வது மட்டுமே முதலாளியின் சிந்தனை. மற்றபடி அவன் யாரோ இவர் யாரோ. இது கூட சரிதான். வாழ்க்கை என்பதே கொடுக்கல் வாங்கல்தானே?
3. இளைஞன் சாதி, மத, இனக் கடப்பாடுகளில் தீவிர சிந்தனை உள்ளவன் எனில் என்ன செய்யலாம்? தொழிலில் முன்னேற வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முதலாளியை முறைத்துக் கொள்ளாமல் தன் வழியில் இருந்தால் சரி. ஆனால், சாதி, மத, இன குறியீடுகள் காட்டும் 'மனோ விகாரங்கள்' தலைக்கேறினால்?
4. முதலாளிக்கு என்னென்ன பிசினஸ் இருக்கு? அதில் தான் என்னென்ன எங்கெங்கே நுழைந்தால் தனக்கோ தன் சாதி, மத, இனக் குழுவுக்கு சாதகமாய் இருக்கும்? சாதகமாய் இல்லாத பட்சம், வாழ்வாதாரத்திற்காக அவரிடம் அணுகி நிலை நிறுத்திக் கொண்ட பின்னர், சொந்தக் காலில் நிற்கும் தகுதி வந்தாச்சு எனும் சுயப் புரிதல் வந்தபின், தன் சாதி, இன, மதக் கடப்பாடுகளின் வழி வரும் சிந்தனை அவனிடம் ஒரு மாற்று யோசனை(களை) விதைக்காதா? அவன் தான் வீரியமான சிந்தனைக்காரன் ஆச்சுதுங்களே?
5. சாதகமாய் இல்லாத அம்சங்களை சாத்தியமாக்கி சாதக பாதகம் உணர்ந்து காய் நகர்த்து 'அரசியல் சித்து விளையாட்டு' அதில் இறங்கினால், முதலாளியின் அடிப்படையையே அசைக்கலாமே? விஸ்வாஸமாவது ஈர வெங்காயமாவது?
எவ்வளவு பார்த்திருப்போம், இச் சமூகத்தில் ரியலாகவும் திரைக்கதைகள் வழியும்?
அப்போ, நீதி, நேர்மை, நியாயம், உழைப்பு, விஸ்வாசம் எல்லாம்? அடப் போங்கய்யா!!

No comments:

Post a Comment