Thursday, June 11, 2020

இலுமினாட்டியும் இருமின்னாட்டியும் தும்மினாப்டியும்!!

இலுமினாட்டியும் இருமினாட்டியும் தும்மினாப்டியும்!!

(எச்சரிக்கை/பொறுப்புத் துறப்பு: இது முற்றிலும் என் சொந்தக் கற்பனையே. உயிரோடு வாழ்ந்து மறைந்த, இன்னமும் வாழ்ந்து நம் உயிரை வாங்கும், எந்த ஒரு அகில உலகப் பெரும்புள்ளி வர்த்தக ஜாம்பவான், விஞ்ஞானி அல்லது மருத்துவ உலக ஆபத்பாந்தவான் அல்லது நாடாளும் மன்னர், சர்வாதிகாரி, எதேச்சாதிகாரி அல்லது ஜன நாயகக் காவலர் யாரையும் குறிப்பிடுவன அல்ல, அல்ல!!

எந்த ஒரு ஒப்பீட்டளவிலான மாடலிங் பார்வையாளர் மனதில் தோன்றினால் அது தற்செயலானதே!!

எதுனாச்சும் தவிசு இருந்தால் நேரில் எங்ஙனயாச்சும் சந்திக்கச் சொல்லோ சிங்கிள் சாயா, கட்டஞ்சாயா, கும்மோணம் டிகிரி காப்பி, கரும்புச் சாறு இதிலொன்றாவதில் மத்யஸ்தம் வெச்சுப்போம்!!)

ஒரு காலத்தில் அகில உலகையே ஆட்டிப் படைக்கும் வர்த்தக உலக ஜாம்பவான்கள் என ஒரு சில இலுமினாட்டிகளையும் அவர்கள் பெரும்பாலும் இரகசியமாய் அப்பப்போ பேசிப்பாங்கன்னும் அவுக சொல்லித்தான் உலக நாடுகள் அம்புட்டும் இயங்குது, ஐ. நா. சபை, உலக வர்த்தக சபை, உலக வங்கி இன்ன பிற சர்வதேச ஸ்தாபனங்களும் அன்னார் கண்ஜாடையில் மட்டுமே இயங்குது என்றும் பலவிதமான நோய்கள், இயற்கைச் சீற்றங்கள், செயற்கையாய் நடந்தேறிய இயற்கைச் சூறாவளி, ஆழிப் பேரலை, புயல், புதுப்புது நோய்கள் வருமுன்,வந்தபின் நமக்கு தரப்படக்கூடிய வேக்ஸீன் ( நோய்த்தடுப்பு ஊசி அல்லது சொட்டு மருந்து) அது இது என உலகில் எங்கே என்னென்ன நல்லது கெட்டது நடந்தாலும் இந்த இலுமினாட்டிங்க ஒப்புதல் இல்லாமல் நடக்காது எனச் சொல்லப்படுவதாய் நீ குழாயில் அப்பப்போ யாராவது நமக்கெல்லாம் படம் காட்டிட்டே வந்திருக்கிறார்கள் என்பது உண்மை. அவர்கள் 'சொல்வதெல்லாம்/சொன்னதெல்லாம்' உண்மையா நம்பள்க்கி தெள்ளி லேது!!

2000க்கு முன்பு இந்த இலுமினாட்டிக் கூட்டம் அப்பப்போ தெரிந்தெடுக்கும் அப்போதைய வர்த்த உலக ஜாம்பவான்கள், விஞ்ஞானிகள், மருத்துவ உலக சாதனையாளர்கள் அவர்தம் பரஸ்பர 'ஒத்திசைவிலேயே, ஒத்தசைவிலேயே' பூமித்தாய் இயங்கினார் என்றுதான் அவர்கள் இன்னமும் நமக்குச் சொல்லவில்லை. போகட்டும்.

அப்பப்போ எந்த எச்சிக்யூட்டிவ் ஸ்டியரிங் கமிட்டி மெம்பர்கள் மாறுவது போல, மேற்சொன்ன விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அவர்கள் கண்ணசைவில் இயங்கும் நாடாளுபவர்களும் மாற வேண்டுமே? மாறித்தானே ஆகவேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா?

அவ்வாறு புதியதாய் இந்த கூட்டத்தில் வர்த்தக சாம்ராஜ்யத்தின் பிரதி நிதி ஒருவர் நமக்கெல்லாம் நன்கு அறியப்பட்டவர். நம்ம அம்புட்டுப் பேர் கையிலும் அலுவலகத்திலும் வீட்லயும் ஆளுக்கொரு ஜன்னலைக் கொடுத்தவர், கூடவே எதுனாச்சும் எளுதணுமா இந்த வெச்சுக்கோ என வோர்ட், கூடவே புள்ளி விவரம் அலசி ஆராயணுமா, வெச்சுக்கோ குறுக்கும் நெடுக்கும் கோடுபோட்ட கட்டம் போட்ட ஷீட். அம்புட்டையும் யாருக்காவது வெளக்கிச் சொல்லணுமா இந்தா புடி ப்ரசன்டேஷனுக்கு ஒரு பவர் புள்ளி. அம்புட்டையும் நீயே ஒரு செயலூக்கியாய் செய்து பார்க்கணுமா, நிகர லாப நட்டம் அறியணுமா? இந்த வெச்சுக்கோ ப்ராஜெக்ட்ஸ்.

அந்த புண்ணியவான் ரிடையர் ஆனப்புறம் பொழுதுபோகலேன்னு தன் கஜானாவிலிருந்து இந்த மருத்துவ ஆராய்ச்சி, உலக சமாதானம், உலகாயத நோய்த்தடுப்பு முன்னெடுப்பு என கொஞ்சம் அள்ளி வீசுறாப்லயாம்.
மருத்துவ உலகில் என்னென்ன ஆராய்ச்சி செய்தாலும் அன்னாருக்கு ஒரு கட்டிங், அன்னார்தான் எச்சிக்யூட்டிவ் ஸ்பான்ஸார் என ஒரு மாய உலகம் வேற தனியா போய்க்கிட்டிருக்குன்னு சொல்லிக்கிறாங்க.

இவர் இப்படின்னா, பூமித்தாயின் முதல் குடிமகன்/மகள் ஆதாம் ஏவாள் முதலில் கடிச்சுத் துப்பிய பழம், அதை தன் இலச்சினையாய் கொண்டவர்கள் சும்மா விடுவார்களா? அந்தாளு ஜன்னல் கொடுத்தாப்லயா, நான் தாரேன்னு அவர் ஒண்ணு கொடுத்தாப்ல. அவுகளும் இந்தப் போட்டியில் இருக்காகளா இல்லியா அவுகளுக்கே தெரியாதாம். நமக்கெப்படித் தெரியும்? பின்னே எதுக்குய்யா அவுக பேரைச் சொல்றேன்றீயளா? ச்சும்மனாச்சுக்கும், ல்லுல்லுவாய்க்காட்டிக்கும். 'அ'ன்னு ஒண்ணு இருந்தா போட்டிக்கு 'ஆ'ன்னு ஒண்ணு இருக்கத் தாவல்ல?

இப்போ 2019 புச்சா ஒரு சார்ஸ்2 என அறியப்படும் கொரோனா எனும் கோவிட்19 நாமகரணமிடப்பட்ட வைரஸ்? அது வைரஸா, பாக்டீரியாவான்னு ஒரு பக்கம் சில மெத்தப் படித்த வல்லுனர்கள் சிண்டைப் பிய்ச்சுக்கிட்டு இருக்கும் வேளையில் இந்த கொடிய வஸ்துவுக்கு வேக்ஸீன் எனும் நோய்த்தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக அளவில் பல நாடுகளில் பல தனித் தனியேவும், சில ஒருங்கிணைந்தும் தொடர் ஆராய்ச்சிகள் செய்த வண்ணம் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே.

வேக்ஸீன் வரும்வரை தற்காலிக நிவாரணியாக என்னென்ன பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என அம்புட்டு ஜவாப்தாரிகளும் (அதாங்க விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் நாடாளும் அரசகுலம்) யோசித்ததில்: மலேரியாவிற்கு கொடுக்கப்படும் ஹைட்ரோ க்ளோரோக்வின் எனும் மருந்து தரலாம்; கபசுரக் குடி நீர் தரலாம்; இஞ்சி,மிளகு, எலுமிச்சைச்சாறு கலந்த பானம் தரலாம் என ஆளாளுக்கு ஒவ்வொரு நிவாரணி சொல்றாங்க. பலருக்கு இவை மூலம் நிவாரணமும் ஆகி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

மேற்சொன்ன ஆராய்ச்சிகளுக்கு நடுவே ஜெனிவா, நியூ யார்க், வாஷிங்டன், லண்டன், பெய்ஜிங், மாஸ்கோ, ஜெர்மனி என ஆங்காங்கே கூடிப் பேசும், ஆராய்ச்சிக் குறிப்புகளை அலசி சரி வேற ரூட்ல எதுனாச்சும் தெரியுமா செய்து பார்க்கலாமா என்றும் ஒரு க்ரூப் யோசித்ததில் அதிலும் ஒரு 30 பேர் (சுமாராக) இருக்கும் குழு கூடி ஆராய்ந்ததில் ஒரு ஒட்டுமொத்தப் புரிந்துணர்வுக்கு அவர்கள் வர இயலவில்லை. ஆங்கிலத்தில் சொல்வது போல கன்சென்ஸஸ் வரவில்லையாம். 3 கோஷ்டியாய் அவிங்க அடிச்சுக்காத குறையாக இருக்காகளாம்.

வாட்ஸப் வடகறி என அன்பாய் நம்மில் பலரால் அறியப்படும் வடைகளில் ஒன்று, இரண்டு, மூன்று என ஒன்றானவன் இரண்டில் மூன்றானவன் என தமிழ் மூதாட்டி ஔவை சொன்னது போல் 'ஒருங்கிணைவோம் வா' என அவுக பேசி முடிவெடுக்க இயலவில்லை போல. ஒரு கோஷ்டி நாம தினம் குடிக்கிற டீத் தண்ணி இருக்கே, அதோட நதி மூலம் ரிஷி மூலம் இலை இருக்கே அதில் ஏதோ ஒரு கெமிக்கல் அல்லது கனிமம் இருக்காமே அது கொரோனா மாதிரி வைரஸை சமாளிக்க நல்லது என்று சொல்லிக்கினாங்கோ. மொழ நீளத்துக்கு ஒரு ஆராய்ச்சி அறிக்கையும் வந்துச்சு. வாட்ஸப் வடகறிகளில் ஒண்ணு ஆச்சா?

டீ இலையெல்லாம் கெடியாது, நாங்க ஒத்துக்க மாட்டோம், காப்பித் தண்ணி ஒண்ணு இருக்கே, அதுல இருக்குற கனிமம் அதுதான் இந்த கொரோனாவுக்கு நல்லது என ரெண்டாவது கோஷ்டி அதே அறிக்கையில் எங்கெல்லாம் டீத்தண்ணி சம்பந்தமாய் எழுதியிருக்கோ அதில் காப்பித் தண்ணிதான் ஒசத்தி, அதைக் கொடுங்க என வாட்ஸப் வடகறி ரெண்டாவது, ஆச்சா?

ஊடால 3வது கோஷ்டி இவுக என்ன பேசுறாங்க ஒண்ணியும் வெளங்கல்லியேன்னு மீட்டிங் ரூமுக்கு அப்பால போய் 'தம்'அடிக்க போனாங்களா? அவுக சும்மா இல்லாம, அதே அறிக்கையில் 'டீத் தண்ணியும் கெடியாது, காப்பித் தண்ணியும் கெடியாது. நாங்க பொழுது போகாமல் மண்டை காய நிக்கிறப்போ ஊதித் தள்றோமே நிக்கோடின் எனும் சிகரெட் அதுல இருக்கு பலான பலான மேட்டரு, அதுகண்டி அதே மொழ நீள அறிக்கையில் டீ, காப்பி சம்பந்த எழுத்தை நீக்கிட்டு ' நிக்கோட்டின்' பழகிக்கோங்க, கொரோனாவோடு குடும்பமே நடத்தலாம் என 3வதுவாட்ஸப் வடகறி வந்தாச்சு, ஆச்சா? (இன்னாது இன்னும் நீ முடிக்கலியான்றீயளா?)

எழுந்து போயிடாதீங்க, வேற ஒரு ஊர்ல வேற ஒரு ஆபீஸ் லேபரட்டரில வேற ஒரு ஆராய்ச்சி செய்தாகளாம். இது வைரஸும் இல்லை, பாக்டீரியாவும் இல்லை, இது அதுக்குள்ளே ஒரு நல்ல வைட்டமின் புரதம் அம்புட்டும் வெச்சிருக்கு. அதுனால கொரோனா ஒரு கொடிய விலங்கு அல்லது பூச்சி மாதிரி சீப்பாய் எடை போட வேண்டாம், ஆப்பிள் ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, பப்பாளில்லாம் கொடுக்கறாப்போல கொரோனா புரதச் சத்து கொண்ட ஒரு புதிய வகை பழம் ஒண்ணு நாங்க இட்டாந்திருக்கோம், இனிமேட்டுக்கு இதையே வளரும் பிள்ளைகளுக்கும் வாழ்ந்து கெட்ட முதியோர்களுக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் கொடுக்கலாம். கொரோனா 21ம் நூற்றாண்டின் அரு மருந்து இல்லை, அரிய வகை புத்தம் புது டெம்ப்ளேட் பழமாக்கும், ஔவைக்குக் கிட்டிய நெல்லிக்கனி போல் இது நம்ம கொரோனாக்கனி. ஒவ்வொரு வீட்டிலும் இந்தச் செடி வளர்க்கணும் இதைக் காயாகவும் தின்னலாம், பழமாகவும் எடுத்துக்கலாம். விருப்பப்பட்டால் ஜூஸ் பிழிஞ்சு பழச்சாறாய் கூட அருந்தலாம்.

கொரோனாவாவது கோவிடாவது, அவனவன் போய் புள்ளைக் குட்டிய படிக்க வைங்க!! ஆக வேண்டிய சோலியப் பாருங்க எனச் சொல்லி அகில உலக மகா ஜாம்பவான்கள் அடுத்த 5 வது வாட்ஸப் வடகறி இட்டாராங்கோ!! உஷார்!! முடிஞ்சா அந்தப் பழத்தின் கூட வாங்க பழகலாம்!!

கொரோனா நல்லது!! விரோதிக்காண்டாம்!!

No comments:

Post a Comment