Saturday, August 31, 2024
ஹோம்லெஸ் சங்கடங்கள்
ஹோம்லெஸ் சங்கடங்கள்
பல மேலை நாடுகளிலும் (வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளர்ந்து விட்ட நாடுகளாய் தம்மை சொல்லிக் கொள்ளும் இதர நாடுகள் உள்பட) 'தமக்கென பிரத்தியேகமான வசிப்பிட உரிமை இல்லாதோர், வாடகைக்குக் கூட இடம் பார்த்துக் கொண்டு இருக்க இயலாதோர்' நிலைமை பல நாடுகளின் அரசுகளுக்கு ஒரு பெரிய தலைவலி, நிர்வாகக் குழப்படிகளை அள்ளித் தருகிறது.
அடிப்படையில் யாரிந்த ஹோம்லெஸ் பேர்வழிகள்?
இவர்களை ஹோம்லெஸ் குடிமகன்கள் என அழைக்கிறார்களா தெரியவில்லை. அவர்களுக்கான அடிப்படை அடையாள அட்டை, ரேஷன் முதலான அரசு உதவி அல்லது சலுகைகளைப் பெற ஏதோ ஒரு அடையாள அட்டை தேவைப்படுமே?
ஆப்பிரிக்காவிலிருந்தும், தெற்காசியா, மத்திய கிழக்கில் வளைகுடாப் போர்கள் தொடர்ந்து எங்கேயாவது நடந்து கொண்டேதான் இருக்கிறது,
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக. இஸ்ரேல் அல்லது பாலஸ்தீன குழப்படியை மையமாக வைத்து, அதன் துணைப் பிரச்சினையாய் லெபனான், சிரியா, லிபியா, இராக், இரான், எகிப்து மற்றும் துருக்கியை அடுத்த மத்திய ஆசிய நாடுகளிலிருந்து துருக்கி, ஆஸ்திரியா வழியே ஐரோப்பியாவை நோக்கியோ வட அமெரிக்காவை நோக்கியோ புலம் பெயரும் மக்கள் பல மில்லியன்கள் ஆவர்.
தெற்காசியாவில் குறிப்பாக ஜன நாயக நிலைத்தன்மை இல்லாத, நிலையற்ற அரசு நிர்வாகம், இதர வரலாற்று ரீதியிலான சமூகக் குழப்பங்கள், சோஷியல் சீர்கேடுகள் மலிந்ததால் பிழைப்பைத் தேடி ஆப்பிரிக்க நாடுகள், இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர், ஓரளவு இந்தியாவிலிருந்தும் கூட பலர் வெளியேறி கிடைத்த மார்க்கத்தில் ஆஸ்திரேலியா, ந்யூஜிலாந்து, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பின்லாந்து, நார்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, அமெரிக்கா என்று மக்கள் புலம் பெயர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.
தென் அமெரிக்க (லாட்டீன் அமெரிக்க) நாடுகளிலிருந்தும் கூட, ரஷ்யாவிலிருந்தும் வியட்னாமிலிருந்தும் கூட மெக்ஸிகோ வழி அமெரிக்காவில் தஞ்சம் புகுவோரும் உண்டு. இது ஒரு தனிக் கூட்டம். இந்த ரூட்டில் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைப்போரின் அவலக் கதைகளை பல திரைப்படங்களில் கூட பார்த்துள்ளோம்.
// சிலர் நேரடியாக பாஸ்போர்ட் என ஒன்று இல்லாமல் 'ட்ராவல் டாக்குமென்ட்' என ஒன்றை வைத்துக் கொண்டு அகதிகளாகவோ வந்தேறிகளாகவோ மேற்சொன்ன வளர்ந்த நாடுகளை நோக்கிச் செல்லும் இதர நாட்டுப் பிரஜைகள் கோடிக் கணக்கில் தொடர்ந்து செல்கின்றனர். இந்தியா உள்பட அரசுகள் தரும் பாஸ்போர்ட் என்பதே குடியுரிமைக்கான (சிட்டிசன்ஷிப்) ஆதாரம் இல்லை, பாஸ்போர்ட் ஒரு ட்ராவல் டாக்குமென்ட் மட்டுமே என அரசுகளே சொல்லும் அவலம் கூட இருக்கிறது, அது தனி ட்ராக். ஒரு குடிமகனுக்கு ஒரு அடிப்படை அடையாள அட்டை அனைத்து மட்ட தேவைகளுக்கும் பன்னாட்டு பயணங்களுக்கும் சேர்த்து, வருமான வரி, ட்ரைவிங் லைசென்ஸ் பெற இதர வசதிகளுக்காக ஒரு ப்ரத்யேக அடையாள அட்டை கொடுக்க இயலாத அரசுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இதில் நம் பாரதமும் விதிவிலக்கல்ல.//
//இதில் ஒரே ஒரு ஆறுதல், பல நாடுகள் இந்த பாஸ்போர்ட் என்பதை 'அந்தந்த நாடுகளின் குடிமகன்' எனும் அந்தஸ்தை அளிக்க ஒப்புக் கொள்கின்றனவே, அதன் வழி, அந்தந்த நாடுகளில் நிரந்தரவாசி அல்லது சிட்டிசன்ஷிப் மாற்றிக் கொள்ளும் சம்பிரதாயச் சடங்குகளுக்கும் இது உதவுகிறது என்பதே மானிடனாய் இப் புவியில் நம் ஒவ்வொருவரும் செய்த கலியுகப் பெரும்பேறு என்றால் மிகையல்லை. இல்லையேல், இந்த பரந்துபட்ட பூமியில் எங்கு வசித்தாலும் வாழ்ந்தாலும் புலம் பெயர்ந்தாலும் 800 கோடி ஜனத்தொகையில் நாம் ஒவ்வொருவருமே 'விரும்பத்தகாத விருந்தாளி' எனும் வந்தேறிதான். இது வேற ட்ராக்ல விவாதப் பொருளாய் மாற்றிவிடும் என்பதால் இத்தோடு இதை முடிக்கிறேன். //
அந்தந்த நாடுகளில் இவர்களுக்கு வாழ்வாதார உரிமை, மனித உரிமை, வசிப்பிட உரிமை, தொழில் ஏதாவது தெரிந்தால் அந்தத் தொழில் வழி ஒரு நிரந்தர வசிப்பிடம், பின்னர் அது தரும் பாதுகாப்பில் கிட்டக் கூடிய தார்மீக உரிமைகள் அந்தந்த அரசுகள் தரும் சலுகைகள் பெறுகின்றனர். இதில் கல்வி, உணவு, மருத்துவம் முக்கியமான பங்கை ஏற்கிறது. இச் செலவினங்கள் அந்தந்த அரசுகளின் கஜானாவிற்கு 50 விழுக்காட்டிற்கும் மேல் பட்ஜெட்டில் துண்டு அல்ல ஒரு பத்தாறு வேட்டியாய், ஒன்பது கெஜப் புடவையாய் அங்கவஸ்திரத்துடன் கூடிய அங்கியாய் நிற்கிறது.
இது போல ஒரு தொழில் சார்ந்து செல்வோர் முறைப்படி விசாக்கள் பெற்றுச் செல்வோரைப் பற்றிய பதிவல்ல இது.
அகதிகளாகவோ போர்ச் சூழல் காரணமாய் வாழ்வாதாரம் இன்றி பஞ்சம் பிழைக்கச் செல்வோர் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களை அனுசரித்து 'அடங்கி நடந்தால்' அந்தந்த அரசுகளும் இவர்களுக்குத் தரும் மனித உரிமை, வாழ்வியல் உரிமைச் சலுகைகளை யாரும் கேள்வி கேட்க இடமில்லை. ஆனால், தத்தம் மதம், இனம், இதர குறியீடுகளைச் சார்ந்த 'பிரத்யேக சலுகை' எதிர்பார்க்கும்போதோ, அல்லது, தொழில் எதுவும் செய்யத் தெரியாமல் தெருவிலேயே படுத்து உறங்கி அந்தந்த உள்ளூர் அரசுகளுக்கும் முனிசிபல் கார்ப்பரேஷன் நிர்வாகத்திற்கும் ஒரு பெரும் தலைவலியாய் தீர்க்க முடியாத பிரச்சினையில் ஆழ்ந்து தாங்களும் அவதியுற்று அந்தந்த நாடுகளின் நிர்வாகத்திற்கும் வேண்டாத ப்ரஜைகளாய் மாறும்போதுதான் பிரச்சினையின் வீர்யம் யாருக்குமே புரியும்.
சமீபத்தில் கனடா சென்றபோது அவதானித்தது இது. இது பொதுவாய் என் தனிப்பட்ட கருத்து மட்டுமே, ஊரோடு ஒத்துப் போகலை என்று எனக்கே தெரியும்.
இப்படி தெருவில் அனாதையாய் நிர்க்கதியாய் வாழ்வோர் பசி, பட்டினி இத்யாதி காரணிகள் மட்டுமின்றி, முறையாகத் தொழில் செய்யும் தகுதி இருந்தும் எந்த விதத் தொழிலும் செய்யாமல் வெட்டி வீராப்பாய் இலவசத்தை மட்டுமே நம்பி வாழ்வோர் ஒரு பக்கம், எவனாவது பிச்சை போடமாட்டானா? தான் கடித்துத் தின்ற மிச்சத்தையாவது தூக்கிப் போட மாட்டானா? என்று ஏக்கத்தில் உணவிற்காக ஏங்கும் ஒரு கூட்டம்;
இன்னொரு பக்கம், வேலையின்மை, ஹோம்லெஸ் என்பதையே அடிப்படைத் தகுதியாய் கொண்டு அதனால் வரக் கூடிய தனி மனிதச் சுகாதாரக் கேடு, உடலியல் அல்லது மனவியல் குறைபாடுகளையும் கொண்டு தெருவில் வருவோர் போவோர் சாலையில் நிம்மதியாய் நடக்க இயலாமல் 'ஏதோ ஒரு வினோத சப்தத்தை எழுப்பி' சாலையில் செல்வோரை பயப்படுத்தி அதனால் எதிராளி எவ்விதம் ரியாக்ட் செய்தாலுமே அதன் மூலம் ஒரு வன்முறைக் களியாட்டத்தில் ஈடுபடுவது,
அதன் வழி ஒரு தார்மீக அட்டென்ஷன் சீக்கிங் எனும் கவன ஈர்ப்பைப் பெறுதல், உள்ளூர் அரசுகள், கார்ப்பரேஷன்கள் இவர்களை ஒட்டிய சமூகப் பிரச்சினைகள், சீர்கேடுகளை தீர்க்க எந்தவித தீர்வுகளையும் எடுக்க இயலாத அந்தந்த நாட்டு 'கையாலாகத்தன சட்டங்கள்' இவர்கள் ஒருவிதத்தில் 'வாக்கு வங்கி' அரசியலுக்கு உதவும் 'காரணிகள் எனும் உள்ளீடுகள்' இருப்பதால் எந்த அரசும் இது போன்ற 'ஹோம்லெஸ்' ப்ரஜைகளின் அராஜகச் செயல்பாடுகளால் பாதிக்கப்படும் மற்றபடி தனக்கென மனித உரிமை வாழ்வியல் உரிமை உள்ள 'அந்தந்த நாட்டுப் பிரஜைகள், சுற்றுலாவிற்கென மட்டுமே வரும் வெளி நாட்டினர்' என இதர சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகளுக்கே பங்கம் விளைவிக்கும் சூழல்;
இதெல்லாம் கண்ணுற்றதில் 'என்னடா இது அவலம்? சுத்திப் பார்க்க வந்தது குத்தமாடா?' என்று நமக்கு நாமே திராவிட மாடல் கேள்விகள் கேட்டுக் கொண்டு 'ஒருவிதக் கையாலாகத்தனத்தோடு' விலகி நின்று 'உன்னாலே ஒரு ஆணியும் பிடுங்க முடியாது, பொத்திக்கிட்டு ஒதுங்கிப்போ' என்று நம்மவர்களே நம்மை அறிவிறுத்தும் அவலம் 'தார்மீக ரீதியில் ஒரு பொது ஜனமாய் மானிட வாழ்வியலில் ஒரு சமூகச் சீர்கேடு' என்றால் மிகையல்ல. ' நீ அவனை கவனிக்காதே, கத்தினா கத்திட்டு போகட்டும், ரியாக்ட் பண்ணாதே' என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இவர்கள் இப்படி பஞ்சம் பிழைக்க நேரும் இதர நாடுகளின் உள்ளூர் அரசியல் அராஜகம், ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம், ரௌடித்தனம் இன்ன பிற 'ரதகஜ துரக பதாதி' ஆணவக் குறியீடுகளே இப்படி பற்பல பல கோடி வெளியேறிகளை இதர நாட்டு 'வந்தேறிகளாய்' தள்ளுகிறது. இந்த அவலத்தை ஊக்குவிக்கும் 'ஆழமான மாநிலம்' எனும் உலகளாவிய அரக்கன் நம்மிடையே உலவுகிறான் என்பதும் இப் புவியில் மானிடகுலத்திற்கே ஒரு வெட்கக் கேடு என்பதுவும் கவனிக்கத்தக்க அவமானம், வேதனை, சோதனை, வெட்கக்கேடு.
முடிவாய் என்னதான்யா சொல்ல வர்றே? 'என் ஹோலி இடது பாதம்'.
p.s.: அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியிருப்பவனே, வசிப்பிட உரிமை உள்ளவனே இதையெல்லாம் யோசிக்கிறான், இதர ப்ரஜைகள் இதையெல்லாம் யோசிக்கக் கூட நேரமின்றி 'பஞ்சம், பசி, பிணி, பட்டினி' வாட்டுகிறது பலருக்கு, இதையும் நாம் உணர்ந்தே இருக்கிறோம்.
இதேபோல் ஒரு 'ஹோம்லெஸ்ஸாய்' இருந்து பார், அப்பத் தெரியும் அவன்/அவள்/அதுவின் வலி என்றுதான் இதைப் படிப்போருமே சொல்லக் கூடும்.
இதையெல்லாம் இது போன்ற பற்பல சமூக சோஷியல் அராஜகங்கள் அனார்க்கித்தனமான அயோக்கியத்தனங்களையெல்லாம் அனுசரித்துப் பார்த்தால் பாரத மண்ணில் எதற்குமே பிரயோஜனப்படாத ஒரு அடையாள அட்டையோடு ' நம் வீடு, நம் தொழில், நம் வயிற்றுப்பாடு' என்று வாளாவிருப்பதும் கூட கலியுக அவதாரமாய் நமக்கெல்லாம் ஒரு பெரும்பேறு. நாமெல்லாம் இந்த பாரத மண்ணில் வாழக் கொடுத்து வைத்திருக்கணும் என்றும் கூடவே தோன்றுகிறது.
Scripted by Sivasankaran Sundaresan தட்ஜ் மீ யானி!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment