Wednesday, September 14, 2011

சேஷப்பய்யரும் அல்லக்கை மகாத்மியமும்!!

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஏதோ ஒரு கட்டுரையில் யாரோ 

ஒருவர் பன்னாட்டு அறிஞர் பெர்னாட்ஷா இந்தக் கருத்தை 

கூறியிருந்தார். அதற்கு வாசகர் ஒருவர் அவர் பெர்னாட்ஷா 

இல்லை, ஷேக்ஸ்பியர் என்று மறுதலித்திருந்தார்.  வேறொருவர் 

சேக்ஸ்பியரா சேஷப்பய்யரா என்று எதிர்கேள்வி கேட்டிருந்தார். 

இதென்னடா புதுப்பெயராய் இருக்கிறதே என்று யோசித்தேன். 

ஓஹோ, ஷேக்ஸ்பியர்தான் சேக்ஸ்பியராகி 

சேஷப்பய்யராகிவிட்டாரா என்று தோன்றியது. நாம்தான் 

மாற்றியோசிப்பதில் வித்தகராயிற்றே என்று இதே ரீதியில் நமது 

கற்பனையைச் செலுத்தியதில்:

ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ' நாடகம் நினைவில் வருகிறது. 

ஒதெல்லொ? 

ஒத்து அல்லோ? ஒத்தை அல்லோ? ஒத்தை பிராமணன் அல்லோ? 

ஒற்றை பிராமணன் அல்லோ?

முன்காலத்தில் தமிழ் நாட்டு கிராமங்கள், சிற்றூர்களில் ஒரு 

வழக்கம் உண்டு. பிராமணர்கள் பெருவாரியாக  வாழ்ந்த 

அக்கிரஹாரத் தெருக்களில் வீட்டுக்கொரு முதியவர், 

பெரும்பாலும் பாட்டிகள் வயதான காலத்தில் வீட்டு முன் 

திண்ணையில் அமர்ந்திருப்பார்கள். வயது மூப்பின் காரணமாக 

அவர் ஓய்வெடுக்கவும், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் வந்து குசலம் 

விசாரிக்கவும் வம்பு பேசவும் அது ஒரு வாய்ப்பாகக் கூட 

இருந்ததுண்டு. சில சமயங்களில் அந்தப் பாட்டிகளே வம்பு 

வழக்குகளுக்குக் காரணமாக இருந்ததுமுண்டு; அல்லது வம்பு 

வழக்குகளுக்கு நியாயம் சொல்லி சண்டைக்காரர்களைச் சேர்த்து 

வைத்த சம்பவங்களுமுண்டு. 

அந்த வீட்டு நடுவயது அம்மணிகள் ‍ அந்தப் பாட்டியின் அடுத்தத் 

தலைமுறை மகள்களோ மருமகள்களோ வீட்டுவேலைகளைக் 

கவனித்துக்கொள்வார்கள். இந்தப் பாட்டிகள் பெருவாரியாக 

சிறுவயதிலேயே பால்ய விவாகம் செய்து ஏதோ சூழ்னிலைகளில் 

கணவனை இழந்த கைம்பெண்களாகவே பெரும்பான்மையாக 

இருந்தனர். 

அந்த வீட்டு ஆண்கள் அந்தணர்கள் பெரும்பாலும் தன் 

வேலைகளைக் கவனிக்கவோ வேறு சொந்த வேலைகளைப் 

பார்க்க வெளியே செல்ல வாசலுக்கு வரும்போது இந்தப் 

பாட்டிகள்தான் சகுனம் பார்த்துச் சொல்வார்கள். 

வாசலில் தெருவில் போவோர் வருவோர் இந்தப் பாட்டிகளிடம் 

குசலம் நலம் விசாரித்துச் செல்வார்கள், இவர்களூம் அவ்வண்ணம் 

போவோரிடம் அரட்டை இத்யாதி செய்து பொழுதுபோக்குவதுண்டு. 

ஆண்கள் வெளியே செல்லும்போது யாராவது எதிரே வருவதைக் 

கவனித்து வருபவரின் பின்புலத்தை மனதில் கொண்டு, 'டேய் 

சபேசா, சுமங்கலி வரா, நல்ல சகுனம்தான், போகிற காரியம் 

நல்லபடியா நடக்கும், கிளம்பு!!' என்பார்கள். 

அல்லது, ஒரு அமங்கலிப் பெண் (கணவனை இழந்த கைம்பெண்) 

வந்தால், 'டேய் குப்பு, இப்போ போக வேண்டாம், உள்ளே போய் 

சிறிது தண்ணியோ நீர்மோரோ அருந்திவிட்டு பின் புறப்படு' 

என்பார்கள். கைம்பெண்கள் துர்ப்பாக்கியசாலிகள் என்று ஒரு 

பக்கம் பச்சாத்தாபமும் அனுதாபத்துடனும் பார்க்கப்பட்ட அந்தக் 

காலத்திலேயே அவர்கள் சுப காரியங்களில் கலந்து கொள்வதை 

இப்பெரியவர்கள் அனுமதிப்பதில்லை.

அதே நோக்கத்தில் நல்ல காரியத்திற்கு வெளியே செல்பவர்கள் 

அமங்கலிப் பெண் எதிரே வருவதை கெட்ட சகுனமாகவே 

கருதினர். 

அது மாதிரி திருமணமான ஆண்கள் தம்பதியாக வந்தாலோ 

தனியாக வந்தாலோ சுப சகுனமாகப் பார்க்கப்பட்டது. அதுவே, 

அது மாதிரி ஒற்றை பிராம்மணர் (அந்தணர்) வந்தால் கெட்ட 

சகுனமாகவும் கருதப்பட்டது. இதில் ஒரு தப்பான கண்ணோட்டம் 

எனக்குத் தெரிகிறது. 

பெரும்பாலும், திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் இருவராக 

வந்தால் சுப சகுனமாகவும் தனியாக ஒருவர் வந்தால் கெட்ட 

சகுனமாகவும் பார்க்கப்பட்டது. 
இது தவறு என்று எனக்குப்படுகிறது. இதில் ஒரு தெளிவு 

மக்களுக்கு இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. 

எப்படி கணவனை இழந்த கைம்பெண் வந்தால் அசுப சகுனமாகக் 

கருதினார்களோ, அது போல மனைவியை இழந்த ஆண் தனியே 

வரும்போதுதான் 'ஒற்றை பிராமணன்' வருகிறான் என்று கெட்ட 

சகுனமாகக் கருதினார்கள் என்று புரியும். 

இதைத்தான் பெரும்பாலும் தவறாகப் பலர் 

புரிந்துகொண்டுவிட்டார்கள், தனியாக ஒரு பிராம்மணர் வந்தால் 

கெட்ட சகுனமாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காலத்தில் 

பிராம்மணர்கள் உத்தமமானவர்கள், உலக க்ஷேமத்திற்காக 

வேள்விகளும் யாகங்களும் செய்யப் பணிக்கப்பட்டவர்கள், 

அதற்காகவே சிறிய வயதிலேயே குறைந்த பட்சம் இரண்டு 

வேதமோ, மூன்று வேதமோ நான்கு வேதங்களையுமோ 

கற்றுணர்ந்து தங்கள் வாழ்வையே லோக க்ஷேமத்திற்காக 

அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்று நம்பிக்கையுடன் 

பார்க்கப்பட்டவர்கள். அதனாலேயே அரசாங்கத்தினரும், 

ராஜவம்சத்தினரும் அந்தணர்களுக்கு சிறப்பு மரியாதை 

செய்ததுண்டு. 

இரண்டு வேதங்களைப் படித்துக் கற்றுணர்ந்த பண்டிதர்களை 

'த்விவேதி' என்றும், மூன்று வேதங்களை அறிந்த பண்டிதர்களை 

'த்ரிவேதி' என்றும் நான்கு வேதங்களையும் 

கரைத்துக்குடித்தவர்கள், மகா பண்டிதர்கள், விற்பன்னர்கள் என்று 

'சதுர்வேதி' என்றும் முற்காலத்தில் சொல்வார்கள். இதை 

அடியொட்டித்தான் வட நாட்டில் (உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற 

மானிலங்களில் காசி, கயா, அலகாபாத் போன்ற வடப் 

பிராந்தியங்களில்) பலர் பெயருக்கு முன் த்விவேதி, த்ரிவேதி, 

சதுர்வேதி என்று அறியப்பட்டனர். தென்னிந்தியாவில் அப்படி 

அவர்கள் அறியப்பட்டதில்லை. பெரும்பாலும் தங்கள் பெயருக்கு 

முன்னால் சைவ வழி வந்தவர்களென்றால் 'அய்யர்' அல்லது 

'ஐயர்' என்றும் வைணவ வழி வந்தவர்களென்றால் 'ஐயங்கார்' 

அல்லது 'அய்யங்கார்' என்றும் சில சமூகங்களில் 'ஷர்மா' 

அல்லது 'சர்மா' என்றும் அறியப்பட்டார்கள். 

அப்படி மதிக்கப்பட்ட பிராம்மணர் ஒருவர் எதிரே வந்தால் அது 

எப்படி அசுப சகுனமாக இருந்திருக்க முடியும்? என்வே கணவனை 

இழந்த கைம்பெண் எப்படி கெட்ட சகுனமாகப் பார்க்கப்பட்டாரோ, 

அது போலவே மனைவியை இழந்த ஆணையும் கெட்ட 

சகுனமாகவே பார்த்திருக்கக் கூடும் என்று லாஜிக்கலாக எனக்குத் 

தோன்றுகிறது.  

அது போகட்டும். சொல்ல வந்தது வேறு. 

அந்தக் காலங்களில் பெரும் பணக்காரர்களுக்கு நம்பிக்கையான ஊழியராக, கணக்கராக, நிர்வாக அதிகாரியாக இருந்தவர்கள் பெரும்பாலும் 40 வயதைக் கடந்த மனைவியை இழந்த ஆணாகத்தான் இருந்தனர். அந்த நபருக்கு குடும்பம், பிள்ளை குட்டிகள் என்று ஒரு பெரிய குடும்பம் இருந்த சூழ்னிலையும் உண்டு. சில நேரங்களில் சிலர் வாரிசுகள் இல்லாத தனி ஆளாக இருந்திருக்கிறார்கள். 

இந்த மாதிரி நபர்கள் அந்தப் பணக்காரர்களின் பெருவாரியான வேலைகளை ஒரு தனியதிகாரி அந்தஸ்தில் திறம்பட நிர்வகித்தும் உள்ளார்கள். இந்த மாதிரி ஆட்கள் அந்தப் பணக்காரர்களின் வலது கரம் போல் கருதப்பட்டார்கள், இவர்களை மீறி பணக்காரரின் உள்வட்டத்திற்குள் யாரும் நெருங்கக்கூட முடியாது, அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் உள்பட. அந்த அளவுக்கு நம்பிக்கையான கையாட்களாக இவர்கள் பார்க்கப்பட்டார்கள். 

பிராமண சமூகம் மட்டுமல்ல, மற்ற சமூகத்தினரிலும் பெருவாரியாக பணக்காரர்கள் பண்ணையாராகவும் ஊர் மிராசுதாராகவும் மணியக்காரராகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் தனியதிகாரி எல்லா சாதியிலும் உண்டு. 

அந்தக் கையாட்கள் கையாள் என்கிற ரீதியில் பார்க்கப்பட்டார்கள். சில நேரங்களில் சில பணக்காரர்கள் கெட்ட சகவாசத்தினாலோ தனக்கே உரிய கெட்ட நடத்தை ரீதியாகவோ நல்லதும் கெட்டதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுண்டு. அப்போதெல்லாம், இந்த கையாட்கள்தான் முன்னிருந்து இவர்களின் பாதுகாவலராக இருப்பார்கள்.  

பொதுவாக எந்த ஒரு திருமணமான ஆணுக்கும் அவர்தம் மனைவிதான் வலதுகரம் போல் செயல்படுவார்,இருப்பார், தார்மீக ரீதியில். அந்த மனைவியை வலக்கரத்தை இழந்தவரை கைஅல்லாதவர் என்ற அர்த்தத்தில் பார்த்தால் கைஅல்லன், அல்லக்கை என்றும் பொருள் கொள்ளலாம். 

காலப்போக்கில் இந்த சமூகத்தில் எல்லாப் பெருந்தனக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஒரு தனி அதிகாரி போல் ஒருவர் அல்லக்கையாக ஒருவர் இருப்பார். 

இப்போது புரிகிறதா இக்கட்டுரைத் தொகுப்பின் உள்ளர்த்தம்?

அல்லக்கைகள் என்று பெரும்பாலும் அறியப்படுபவர்கள் தங்கள் தலைவர் எங்கே போனாலும் கூடவே போய் அவருக்கு நல்லது கெட்டது என்று எது நடந்தாலும் கூடவே பாதுகாவலராக அரணாக இருப்பார்கள். இதுதான் அல்லக்கை மகாத்மியம் என்று நான் கருதுகிறேன்.  

No comments:

Post a Comment