Sunday, September 25, 2011

ஜன நாயகம் ஒரு கேலிக்கூத்து!!


ஜன நாயகம் பண நாயகத்தின் முன் மண்டியிட்டுத் தலைவணங்கி பிண நாயகமாகி பல காலமாகி விட்டது!! பிணங்களின் கூட்டம்தான் அங்கே புதுதில்லி தலைமைச் செயலகத்திலும் ஆங்காங்கே உள்ள பிராந்தியத் தலைமையிடங்களிலும் கோலோச்சுகிறது. நாட்பட்டப் பிணங்களை பிணவறைகளிலிருந்து அவ்வப்போது ஆய்வுக்காக வெளிக்கொணர்வார்கள்; வாடை முற்றியதை ஏதோ ஒரு சடங்கு செய்து புறந்தள்ளுவதும் உண்டு.

அந்தப் பிணவறைகளில் ஒரு முறை வெளியே சென்ற பிணம் மீண்டும் வருவதில்லை, இறைவனின் கருணைப்பார்வையால் அது நடந்ததில்லை. ஆனால்,இங்கே இந்த பண நாயகக் கருணைப்பார்வை கொண்ட பிணங்கள் மீண்டும் மீண்டும் உலா வருகின்றனவே, இவற்றை ஆய்வுக்காக இல்லாவிட்டாலும், ஓய்வுக்காக வெளியேற்றும் நாள் என்று வரும்?
இந்த பிணங்களை எப்போது நாம் பாதாளச் சாக்கடைக்குள் தள்ளப்போகிறோம்?

ஓ, ஒன்று புரிகிறது. எந்த சமூகத்திலும் நாட்டிலும் துப்புரவாளர்களைப் போற்றுவதில்லை, கொண்டாடுவதில்லை, தீபாவளி பொங்கல் இன்ன பிற பண்டிகை நிமித்தம் அவ்வப்போது சிறிய அன்பளிப்பு தருவது தவிர!! அதனால் தானோ அந்த மாபெரும் துப்புறவுப் பணிக்காக வர வேண்டிய துப்புரவாளர் இன்னமும் நேரம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாரோ?

கனியன் பூங்குன்றனாரோ யாரோ ஒருவர் சொன்னது:
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்!!"

இதை இந்தப் பிணங்கள் சற்றே மாற்றிப்புரிந்துகொண்டுள்ளார்கள். அதனாலேயே, 'யாவரும் உற்றார் உறவினரே, யாவரிடமும் (கையூட்டுக்) கேளீர்!!' என்று அங்கிங்கெணாதபடி எங்கும் கையூட்டுப் பெறும் பரிணாமத்தை தத்தம் வர்ணாசிரமக் கடமையாகச் செய்கிறார்கள். இவர்களுக்கு கைப்பூட்டுப் போடும் நாள் எந்த நாளோ?

No comments:

Post a Comment