Not shared in any other social medium except that I might haved shared to 'elite' select friends and audience in private. This is purely my personal blog page, mind it.
முன்குறிப்பு / டிஸ்கிளைமர்
/ பொறுப்புத் தகர்ப்பு
இந்தக் கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் பரிபூர்ணமாகக்
கற்பனையே. யாரையும் எவரையும் குறிப்பிடுவனவல்ல. எந்த ஊரில் நடந்தது அல்லது நடக்கிறது
என்கிற விஷயமெல்லாம் தேவையில்லை. முழுவதும் கற்பனையில் வந்த ஒரு கதைக்கோப்பு.
செல்லத்துரை என்பவரின் பார்வையில் ஒரு கதைசொல்லியாய் இந்தக் கதை
பகிரப்படுகிறது, அவ்வளவுதான்.
தமிழ் நாட்டின் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு கிராமத்தில் நடக்கும்
நிகழ்வுகளின் கோர்வை. எந்த ஊரில் நடந்தது அல்லது நடக்கிறது என்கிற விஷயமெல்லாம் தேவையில்லை.
முழுவதும் கற்பனையில் வந்த ஒரு கதைக்கோப்பு
இந்தக் கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் பரிபூர்ணமாகக்
கற்பனையே. யாரையும் எவரையும் குறிப்பிடுவனவல்ல.
கதைசொல்லியின் பார்வையில் சுமார் 2010 வாக்கில் இருந்தாலும்,
இரு குடும்பங்களுக்கிடையே கிட்டத்தட்ட 300 வருடங்களாக இருந்து வந்த குடும்பப் பகையை
அடியொட்டி இந்தக் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் ஒரு பெரியவரின் மாட்சிமை கருதிய தனிப்பட்ட தகுதியின்
அடிப்படையில் அவரது பின்னணி, சமூகத்தில் அவருக்கிருந்த அந்தஸ்து, கௌரவம், அவர்மேல்
மக்கள் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை விஸ்வாசம் முதலான காரணிகளால் அவரால் முன்னெடுத்து
வைக்கப்பட்ட ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் இந்தப் பகை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது
எனலாம். காரணம், அவரது தேசப்பற்று, சுதந்திரப் போராட்ட காலங்களில் அவருக்கு இருந்த
தனிப்பட்ட செல்வாக்கு, மகாத்மா காந்தி, இராஜாஜி, காமராஜர் மாதிரி பெருந்தலைவர்களுடன்
அவருக்கிருந்த தொடர்பு, அவரிடம் ஒரு அப்பழுக்கில்லாத நேர்மை இருந்ததால் யாரும் அவரை
விரோதித்துக்கொள்ள மாட்டனர்.
ஒரு விதத்தில் பார்த்தால் இந்தக் கதையின் ஹீரோ அவர்தான், இருந்தாலும்,
அவர் ஒரு பாத்திரமாக மட்டுமே இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளார். கதைசொல்லியின் பார்வையில்
விவரிக்கப்படுவதால் உண்மை ஹீரோ ஹீரோயின் என்று யாருமே இதில் குறிப்பிட முடியாது. அதுவல்ல
இந்த கதைக் கருவின் மாட்சிமை. நன்றாக திரைக்கதை எழுதி இதனை மெருகேற்றினால் அருமையான
ஒரு படைப்பாக இது வரும், சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் என்பது படைப்பாளரின் பார்வையில்
திண்ணம். மேலும் தொடருங்கள்.
இந்தப் 'பொறுப்புத்தகர்ப்பு' ஆங்கிலத்திலும் இங்கே விளக்கப்பட்டிருக்கிறது.
அதில் கடைசியிலிருந்து மூன்றாவது பத்தியில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் 'அறிவுடைமை' என்பது
என்ன, அதன் அர்த்தம் அல்லது தாத்பர்யம் என்ன, அறிவுடையோர் என்போர் யார், அவர்கள் எப்படி
தம் வாழ்வியல் முறைகளினால் பேசா மடந்தையாய் சில நேரம் இருந்து எங்கு பேச வேண்டுமோ அங்கு
மட்டுமே பேசி தம்மையும் தம் மாண்பையும் வெளிப்படுத்துவர், அதுபோலொரு குணாதிசயத்தை சித்தரிக்கவே
இந்தக் கதைக் கரு எனலாம்.
சிங்கை சிவாஸ் (எ) சோலையூரான் Singai
Sivas (aka) Solaiyooran
PREFACE / DISCLAIMER
As per Chellathurai, the story-teller’s analogy, background theme etc.,
revolves around a 300-year rivalry between two families in a remote Tamil Nadu
village (somewhere beyond Madurai, Tirunelveli Tuticorin Belt). Story-teller
reveals certain historic anecdotes with his eventual style of narration to his
younger son.
As per his narration, it goes around 2010 or beyond years, but story
theme goes back to at least 300 years of inter-familial rivalry and dispute
where historically both were fighting for their respectful rights and dignity
to display their worth in the society. Considerably there has been a ‘TRUCE’
initiated by one of the group where both groups duly obliged his words, purely
out of respect for his revered status in the society at large, given his
pre-independence India functioning in multiple roles associating himself with
the likes of Chakravarthi Rajagopalachari, Subramaniya Bharathi, Mahatma
Gandhi, Kamarajar and so on. That’s the crux of this story.
Characterization, Events, episodes, communal dimensions or proverbial
dialogue sequences ARE purely imaginary and the author DOES NOT TAKE sides, views
for OR against any segment of the society. Any resemblance, to historic or
contemporary societal events or struggles that have had occurred in the history
of India, is purely imaginary and as visualized by the author. It’s NOT the
intention of the author to hurt anyone’s sentiments by this story.
Except a few words that come at the end of the story (prior to
conclusive paragraphs), form the crux of this write-up, where most of the story
is JUST an imagination to enhance or expand those words into a storyline. Thus the knot has been well-knit around
there, by itself.
What is a knot by the way? NOT = ‘Nothing’. It’s but NOTHING but a ‘SWEET NOTHING’
that’s life as a philosophy. ‘K’ denotes
‘knowledge’ or ‘wisdom’, when pronouncing ‘knowledge’ the first syllable ‘K’ is
not explicitly pronounced, right? Thus,
‘K’ becomes silent implying knowledgeable people would never speak except where
it is required, they maintain a remarkably high caliber silence but they speak
by their life, leading a life that’s exemplary to the society, period.
If this theme is evolved into a cinematic screen play of a full movie,
it can win hearts and accolades for its message it sends across as a social
reform that would have far-reaching impact in the society, from the purview of
the Author, period. Read on!!
That’s a honest disclaimer indeed!! சிங்கை சிவாஸ் (எ) சோலையூரான் Singai
Sivas (aka) Solaiyooran
============================================================================
திருந்த
வேண்டிய தீர்ப்புக்கள்
(அல்லது)
திருத்த
முடியாத தீர்ப்புக்கள்
[எது வேண்டுமானாலும்
தலைப்பு இருக்கலாம்!!]
“ஏலே, வெள்ளைத்துரை
(செல்லத்துரையின் கடைசி தம்பி), போயி பெரியய்யா வூட்டு தெருவாசல் முன்னால 10 முட்டை
ரெண்டு ஆட்டுக்கிடா நல்ல செனைப் பன்னியா மூணு
எல்லாத்தையும் வெட்டிப் போட்டுட்டு விடியறதுக்குள்ள வந்துடு. அவுங்க வீட்டு மாமி வந்து
சாணி தெளிச்சு கோலம் போடறதுக்குள்ள நம்மளோட மரியாதைய காட்டிட்டு வந்துடுடா. பெரியவரு
வர்றாரு இன்னைக்கு, பார்க்கப் போகணும்”.
வெள்ளைத்துரை: சரிண்ணே,
செய்ஞ்சுடறேன். ஆனா, பெரியவங்க வர்றாங்கன்னா பூமாலை, தேங்காய், பழம்னுதானே எடுத்துக்கிட்டு
போய் பார்க்கோணும்னு நீ அடிக்கடி சொல்லுவியே? பெரியவரு வரும்போது முட்டையும் ஆட்டுக்கிடாவும்
பன்னியும் அவிங்க வீட்டு வாசல்ல வெட்டிப் போட்டுட்டு வான்னு சொல்லுறீயே, பழையபடி பஞ்சாயத்து
ஏதும் வந்துடாதா? நீதானே சொல்லுவே, அவங்க குடும்பத்தோட சகவாசம் வம்பு ஒண்ணும் வேண்டாம்னு.
ஏலேய், அது வேற,
இது வேற. அய்யமாரு அவிங்க ஒரு நல்லது கெட்டதுன்னா சாமிக்கு சக்கரைப்பொங்கல், அது இதுன்னு
சமைப்பாங்க, அவங்கல்லாம் கறி மீனு திங்க மாட்டாய்ங்கடா. அதுக்காக நாம நம்ம வழக்கத்தை
விட்டுட முடியுமா?
பெரியவரு நம்மளோட
குல சாமி மாதிரிடா, அவரோட வீட்டுல இப்ப இருக்கற ஆளுங்களுக்கும் நம்மளுக்கும் ஒரு வெவகாரமும்
இல்லேத்தான், ஒத்துக்கறேன். ஆனா, ஒரு காலத்துல அவங்க நம்மள என்ன பாடு படுத்தியிருக்காங்க,
தெரியும்லே, நம்ம அப்பனும் தாத்தனும் சொன்ன கதையெல்லாம் மறந்துட்டியா?
சரிண்ணே (வெள்ளைத்துரை
நகர்கிறார்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(உள்ளே திரும்பி)
செல்லத்துரை:
ஏலே, சம்முவம், எந்திரிலே? வெரசா சொம்புத் தண்ணி
ஊத்திக்கினு உன் தம்பி தங்கைகளையும்
குளிச்சி ரெடியா இருக்கச் சொல்லுலே.
சம்முவம்
(18 வயசு): ம்........போப்பா, அதுக்குள்ற விடிஞ்சிரிச்சா,
மணி என்னாவுது?
செல்லத்துரை:
அது ஆச்சு அஞ்சரை மணி,
கருக்கல்ல எந்திரிச்சி குளிச்சி மத்த வேலையப்
பார்க்கணும்னு எத்தினி தபா சொல்லிருக்கேன்.
ச்சும்மா பெனாத்திக்கிட்டு கெடக்காதலே, அப்பிடியே ஆத்தங்கரைல நம்ம கோவிந்து இருப்பான்,
சாமி கும்பிட்டுக்கிட்டு அவனையும் இட்டாலே, என்ன
செல்லாத்தா, உள்ற இருக்கியா தோட்டத்துல
மாடு கன்னுக்கு தண்ணி காட்டினியா?
செல்லாத்தா:
ஆங்......கூப்ட்டியளா, தோ வாரேன், தண்ணில்லாம்
காட்டியாச்சு, எடத்தைச் சுத்தம் பண்ணியாச்சு.
கோவிந்து வந்தோன்ன பால் கறக்கலாம்.
இது என்ன இன்னிக்கி வெர்சலா
எல்லாரையும் எழுப்பிக்கிட்டு இருக்கீய, என்னா வெவரம்? எதுனா
திருவிழாவுக்கு போப்போறமா?
செல்லத்துரை:
ஏன்டி, முந்தானேத்துலேருந்து படிச்சு படிச்சு சொல்லிக்கிட்டே
இருந்தேன்ல, சொல்லும்போது செவிகொடுத்து கேக்க மாட்டியளோ? எல்லாத்தையும்
ரெவ்வண்டு தடவ சொல்லோணுமா ஒங்களுக்கு?
செல்லாத்தா:
ஏன் இப்பிடி கடுப்படிக்கறீயவ? இன்னோரு
வாட்டி சொன்னாத்தான் என்னா குடி முழுகி
போகுமா?
செல்லத்துரை:
அது கெடக்கட்டும், சொல்றேன் இரு. நம்ம
கோவிந்துப் பய எந்திரிச்சானா, 4 மணிக்கே
கோழி கூவயில போய் குளிச்சு
சாமி கும்பிடப் போவானே, போனானா இல்லையா
இன்னைக்கு? ரெண்டு நாளா ஒடம்பு
நோவுன்னு சொன்னீய அவனுக்கு, இப்ப
சரியா இருக்கானா?
செல்லாத்தா:
அதுஞ்சரிதான், இப்ப பரவால்லே, ரெண்டு
நாள் மொளகுத் தண்ணியும் இஞ்சிச்
சாறும் போட்டு ரசம் வச்சு
கசாயம் மாதிரி அய்யிரு வீட்டுல
குடுப்பாங்களே, அதே மாதிரி எனக்குத்
தெரிஞ்சத வச்சுக் குடுத்தேன், அதுக்கப்புறம்
இப்ப சாதாரணமாத்தான் இருக்கான். நேத்தைக்கு ராவுல கூட குளிக்க
வேண்டாம்டா, ச்சும்மாவே சாமி கும்பிடுடான்னேன், இல்ல
ஆத்தா, குளிச்சுட்டுத்தான் சாமி கும்பிடோனும், அதுக்கப்புறம்தான்
மத்த சோலியெல்லாம் பாக்கோணும்னு அப்பச்சி சொல்லிருக்கு. நான்
குளிக்கறேன்னு சீக்கோடயே ரெண்டு நாளா குளிச்சுட்டு
சாமி கும்பிட்டுடுத்தான் கஞ்சி குடிச்சான்.
செல்லத்துரை:
அதென்னவோ ஆத்தா, அவன் பொறந்தன்னிலேருந்தே
இப்படித்தான், ரொம்பவே பிடிவாதமா இருக்கான்.
ஆளுதான்
25 வயசு வளர்ந்திருக்கானே (அது என்ன 25 இருக்குமா
இன்னும் 10 வருஷம் கூடவே இருக்குமாடி?)
ஒழிய அவன் மனசுல 10 இல்லே 12 வயசுக்கு மேல
வளரவே இல்லையேடி? அது என்ன ஒரு
பொறப்போ? அதைக் கட்டிக்கிட்டு நாமளும்
வாழுறோம்? (அங்கலாக்கிறார்).
அது சரி, நீ என்ன
கேட்டே, ஆங், இன்னைக்கு நம்ம
அக்ரஹாரத்து பெரிய வீட்டுல பெரிய
பெரியவர் லண்டன்லேருந்து வாராறாம்ல, அதான் நாம ஒரு
எட்டுப் போய் சாரிச்சிட்டு வரலாமேன்னு
நாம ரெண்டுபேரும் போலாம்னு சொன்னேனே இராத்திரி, மறந்துட்டியா?
செல்லாத்தா:
மறக்கலே, இன்னைக்குதான்னு சரியா மனசுல வாங்கிக்கலே.,
சொன்னீங்க சரி. அது இருக்கட்டும்,
அவரைப் பாக்க நாம ரெண்டு
பேரும் மட்டும் போனாப் பத்தாதா,
புள்ளைங்கள ஏன் இட்டுக்கினு போவோணும்,
அதுவும் இந்த காலங்காலையிலே?
செல்லத்துரை:
அதுக்கில்லேடி, அவரு ஊரை விட்டுப்
போய் ஒரு 40 வருஷம் இருக்குமா,
இத்தினி வருஷம் கழிச்சு தலை
சாயறதுக்குள்ள நம்மூரு திருவிழாவ ஒருவாட்டி
பாக்கணும்னு ஆசைப்பட்டாரு, அதான் பேராண்டியோட வர்றாருன்னு
நம்ம பெரிய வீட்டு சின்னவர்
மவன் வரதராசு அவரு மச்சான்
கோவிந்தராசு ஐயாக்கிட்ட சொன்னத கேட்டதா நம்ம
சின்னவன் செவலைக்காளை சொன்னான்லே?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
சம்முவம்
(என்கிற சண்முகம்) கொல்லையிலிருந்து குளித்து முடித்து தலைசீவிக்கிட்டு
சட்டையை போட்டுக்கோண்டே லுங்கியோடு வருகிறான்).
எலே சம்முவம், தம்பி தங்கையெல்லாம் எந்திரிச்சாச்சா? ரெடியா?
இன்னும் ஒரு மணி கழிச்சு
கெளம்பி கோயிலுக்கு போயிட்டு நம்ம வீரனையும்
கருப்பனையும் கும்பிட்டுட்டு பெரிய வீட்டுக்கு போவோனும்ல? இன்னிக்கு
சிறிசுக ரெண்டையும் ஸ்கோலுக்கு லீவு போடச் சொல்லுலே.
சம்முவம்:
சரிப்பா. அது சரிப்பா, பெரியய்யா
வர்றாருன்னு ஆத்தாக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தியே, அவரு எப்பிடி இருப்பாரு?
இப்ப இருக்கற பெரிய வீட்டு
சின்னவரு மாதிரியே கெடா மீசையும்
வீராப்பும் தெனாவாட்டுமா இருப்பாரா? அவுருக்கு இன்னா வயசு இருக்கும்பா?
அவரு ஊரைவிட்டு போகையில எப்பிடியும் 55 ஓ
58ஓ இருக்கும், திடீர்னு எதோ நோவு
வந்து, அதான்டா நெஞ்சுக்கிட்டே கையை
வைச்சுக்கிட்டு நம்ம சிவாஜி கணேசன்
பல படத்துல சாய்ஞ்சுடாவாரே,
அதுக்கு என்ன பேரு? ஆங்,
ஆர்ட் அட்டாக்கா, (ஹார்ட் அட்டாக்) அது
இதுன்னு அவரோட சீமைத் தம்பி
அவரைக் கூட்டிக்கிட்டு போயிட்டாரு. அவரு சம்சாரம் அவரு
40 வயசுல இருக்கும்போதே பாம்பு கடிச்சு செத்துப்
போயிட்டதாவும் அதுக்கப்புறம் அவரு ரெண்டாம் கல்யாணம்
ஏதும் கட்டலேன்னும் எங்க அப்பன் சொல்லிருக்காரு.
அவருக்கு புள்ளை குட்டியும் இல்லே,
அவருக்கு எல்லாமே அவரோட ஒடம்
பொறப்புத்தான். அந்த சீமைத் தம்பி
அவிங்க அப்பாருக்கிட்ட கோச்சுக்கிட்டு இந்த ஊரு நாட்டாமை
பஞ்சாயத்து வயல் கன்னி எதுவும்
பிடிக்காம, முக்கியமா இந்த நம்ம ரெண்டு
குடும்பத்துக்கும் ரொம்ப நாளா (வருஷமா)
பல தலைமுறையாப் பகை
வேறு இருந்துச்சா, அப்பவே பெரியவரோட கடைக்குட்டித்தம்பி
அவரு, ரொம்ப நாளு கழிஞ்சு
அவங்க அம்மாவுக்கு அவரு பொறந்ததாச் சொல்லுவாய்ங்க.
சின்ன வயசுலயே இந்த வம்பு
அடிதடி இதெல்லாம் வேணான்னுட்டு ஒதுங்கிப் போயிட்டாரு.
அவருதான்
பெரியவரை ஒடம்புக்கு நோவுன்னதும் வந்து கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு.
அதுக்கு அப்புறம் அவரு இந்தப்
பக்கமே வர்லே, அது கெடக்கும்
ஒரு 40 வருஷம் ஆயிருக்கும், அப்ப
நீயே கூட்டிப் பாத்துக்கயேன் அவரு
வயசு இன்னான்னுவே.
சம்முவம்: : அட
ஏன்ப்பா பின்ன நம்ப ரெண்டு
குடும்பத்துக்கும் இன்னமும் சண்டைங்கிறியே, சமீபமா
ஒண்ணும் நடந்ததா யாரும் சொல்லலியே,
நானும் பாக்கலியே? நீயும் ஓஞ்சோலியத்தான பாக்குற?
இல்லேடா,
பெரியவரு ஒடம்பு தெடமா இருந்தவரைக்கும்,
நல்லாத்தான் இருந்தாரு. அவரோட ஆகிருதியான ஒடம்பு,
தெகிரியம், சுத்துப்பட்டு எல்லா ஊர்லயும் கிராமத்துலயும்
அவருக்கு ஒரு கலெக்டர் கணக்கா
ஒரு மருவாதிலே.
அவரு ரொம்பப் படிக்கலைன்னாலும், அவரோட
நிர்வாகம், காடு கன்னில எறங்கி
அவர் வேலை செய்றது, சுத்துப்பட்டு
ஊர்ல என்ன வெவகாரம்னாலும் களத்துல
எறங்கி அவர் நின்னார்னா ஒரு
பய அவரை எதுத்துப்
பேச மாட்டான். அவரு
மட்டும் அய்யரா இல்லாம ஒரு
தேவராவோ கள்ளராவோ இருந்திருந்தா இந்த
ஜில்லாவுலயே அவரை சாய்க்க ஒருத்தரு
இல்லேடா.
சம்முவம்: : அப்ப
ஏம்ப்பா அந்த பங்களா வீட்டுக்கும்
நமக்கும் அப்படி ஒரு பகை? நம்ம
வீட்டுல யாராச்சும் அவரோட பரம எதிரிங்கற
மாதிரி எதாவது உண்டா?
செல்லத்துரை: அதை
ஏன் கேக்கறே போ, சம்முவம்,
அவரு பால்யத்துல சின்னவரை விட ரொம்பவே
வீர்யமும் தெகிரியமும் வீராப்புமாத்தான் இருந்ததா என் தாத்தா
சொல்லிருக்காரு. எங்க அப்பன், அதான்
ஓன் தாத்தன் கூட எப்பப்
பாத்தாலும் மல்லுக்கட்டிக்கிட்டே நிப்பாரு, ஓன் தம்பி செந்தில்
இப்ப 5ம் கிளாஸ் படிக்கிறானா, அவனை மாதிரி நான்
இருக்கும்போது ரெண்டு பேரும் தெருல
கட்டிப் பிடிச்சு உருளல, அதான்
கொறைச்சல். அப்பிடி ரெண்டு பேருக்கும்
(பெரியவருக்கும் என் அப்பனுக்கும்) ஒரு
பங்காளிப் பகை கணக்கா ஒரு
போட்டி எப்பவுமே இருந்துச்சுலே.
சம்முவம்: ஏம்ப்பா,
அப்ப ஏன் அவரு லண்டன்
போனாரு? இங்கிட்டு இருக்கற எல்லா வயல்
நிலம் நீச்சும் அவரோடதுதான்னு சொல்லிக்கிறாய்ங்களே,
நெசமாவாப்பா?
செல்லத்துரை: ஆமாம்டா,
அது ஒரு 300 வருஷக் கதைடா. சொன்னா
ஒனக்கு வெளங்குமான்னு தெரியலே. அதைப்
பத்தி அப்பறமா சொல்றேன், வெவரமா.
இப்பத்தான் கொஞ்ச நாளா ஒரு
10 15
வருஷமா எல்லாம் அடங்கியிருக்கு, நீ
வேற எதுனாச்சும் தெரிஞ்சுகிட்டு அந்தப் பெரிய வீட்டுச்
சிறிசுங்ககிட்ட வம்பு வழக்கு வச்சுக்காதேடா.
சம்முவம்:
ஏம்ப்பா, அப்பிடிச் சொல்றே? அப்பிடி என்னப்பா
அவிங்க வீட்டுக்கும் நம்ம வீட்டுக்கும் ஆவாம
போச்சு? அந்த சின்னவரு பேரன்
சுப்புணி கூட ஸ்கோல்ல என்னையும்
தம்பியையும் பார்த்தா ஒரு வெடைக்
கோழி கணக்கா திமிரிக்கிட்டேதான் திரியறான்.
சம்முவம்: நீ
கூட சின்னவரை நேருக்கு நேரா
பாத்தா கொஞ்சம் ஒதுங்கித்தானே போறே?
ஒனக்கும் அவருக்கும் ஆவாதா? இல்லே வேற
ஏதானும் பஞ்சாயத்தா?
(Flashback rolls over in his continued voice)
இல்லேடா,
எனக்கும் அவருக்கும் ஒரு பஞ்சாயத்தும் இல்லேடா,
அதான் சொன்னேனே ஒரு 300 வருஷ
பகை ரெண்டு குடும்பத்துக்கும். காலம்
காலமா அவிங்க இந்த ஊர்ல
வெவசாயம், நெல்லு, நாத்து, கந்தாயம்,
மூணுபோகம் வெதை நெல்லு, போக்கியம்னு
ச்சும்மா ஏக்கர் கணக்கா வச்சுக்கிட்டு
இருந்தவங்க, வாழ்ந்த குடும்பம்டா அது.
அவுக
வீட்டுல இப்ப வர்றாரே பெரியவரு
அவரு ஒருத்தருதான் ஸ்கோலுக்குப் போய் படிக்கலே, வெள்ளைக்காரன்
காலத்துலயே படிக்காத மேதைன்னு அவரைச்
சொல்வாங்களாம்.
அவரோட சாதி சனம் செல
பேரு நிலம் நீச்சுன்னு இருந்திருக்காய்ங்க,
செல பேரு பட்டாளத்துக்குப் போயிட்டாங்க.
சில பேரு பட்டணத்துலயும் நம்ம
டவுன் ஸ்கோல்லயும் படிச்சுட்டு டாக்டரு, வக்கீல், ஜட்ஜ்,
அப்பறம் இந்தக் கணக்கு வழக்கெல்லாம்
தாக்கீது பண்ணி பஞ்சாயத்து பண்ணிவைப்பாங்களே,
நம்ம மணியக்காரரு முன்னெல்லாம் அதைத்தானே பண்ணிக்கிட்டிருந்தாரு அதுக்கு என்ன பேருவே?
சம்முவம்: ஆடிட்டருன்னு
சொல்வாங்களே, அதாப்பா?
ஆமான்டா,
அதான், ஆடிட்டரு அப்படி அவிங்க
குடும்பம் ரொம்பவே கௌரவமான படிச்சவங்க
குடும்பம். அது இப்ப ஒரு
100 வருஷம் இருக்கும்.
முன்னாடில்லாம்
யார்றா படிக்கப் போறா? எல்லாம்
திண்ணைப் பள்ளிக்கூடம்தான். வெள்ளைக்காரன் காலத்துல. எல்லாருக்கும் அனுபவம்தான்ல. அவங்க
பரம்பரை பரம்பரையாய் ஏக்கர் கணக்குல நெலம்
நீச்சுன்னு இருந்து, நம்மள மாதிரி
ஆளுகள்ளாம் வெவச்சாயம், கூலி வேலை, மாடு
கன்னி மேய்க்கறது, எடுபிடி வேலை பாக்கறது,
அடியாளு அது இதுன்னு சினிமாலே
நாட்டாமை சின்னக் கவுண்டர் படத்துல
கூட வரும்லே, அதுமாதிரித்தேன் ரெண்டு
குடும்பத்து சகவாசமும். நல்லாத்தான் போய்க்கிட்டிருந்திச்சு.
என்னோட தாத்தனோட அப்பனுக்கும் இந்தப்
பெரியவரு இப்ப லண்டன்லேருந்து வர்றாருல்லே
அவரோட தாத்தனுக்கும் ஒரு காலத்துல பெரிய
வில்லங்கமான வெவகாரத்துல வீர்யமான பஞ்சாயத்துலே.
சம்முவம்: அவரோட
தம்பிதான் சீமைக்கு போயிட்டதா சொன்னியே,
பின்னே நாமல்லாம் இப்ப பாக்குற காணுற
சின்னவரு யாரு? அவரோட சனம்
இல்லையா?
சின்னவரு,
பெரியவரோட
பெரியப்பா புள்ளைடா.
ரெண்டு பேரோட அப்பாக்களூம் சொந்த
அண்ணன் தம்பிங்க. ராமாயணத்துல ராமன் லக்ஷ்மணன்னு சொல்வாய்ங்க
பாரு, அதுமாதிரி அண்ணன் தம்பிக்குள்ள அவ்ளோ
ஒத்துமை. பங்காளிங்க அப்படி ஒரு பங்காளிங்க,
அவுங்களுக்கு அடிதடின்னு ஒருத்தருகூட சொன்னது கூட கெடையாது.
ஒருத்தரை இன்னொருத்தரு எந்தக் காலத்துலயும் விட்டுக்கொடுக்க
மாட்டாங்க. பெரியவரு நில்லுன்னா சின்னவரு
நிப்பாரு, அடிடான்னு வெட்டிட்டு தலையோட வருவாரு சின்னவரு.
தன்னோட சொந்தத் தம்பி இங்கிட்டு
இருக்கற பஞ்சாயத்து எல்லாம் பிடிக்காம சீமைக்கு
போனதும் பெரியவருக்கு சின்னவருதான் எல்லாமே.
சின்னவரோட
மச்சான் என்ர அப்பாகூட ஒண்ணாத்தான்
படிச்சாரு. என்ர அப்பாவுக்கு படிப்பு
வரலே. அப்பத்திலேருந்தே வயல்ல வேலை, லேத்துல
வேலை செய்யறது, இரும்படிக்கறது அப்பிடியே ஒன்ற தாத்தன் காலத்தை
ஓட்டிட்டாரு. ரெண்டு பேருக்கும் ஒண்ணும்
பெரிசா பகைன்னெல்லாம் இருந்ததுல்லேவே.
ஆனா, ரெண்டு குடும்பத்துக்கும் கிட்டத்தட்ட
4 அல்லது 5 தலைமுறையா வேற ஒரு விஷயத்துல
ஆவுறதுல்லே, கௌரவப் பிரச்சினை. அதைச்
சொன்னா ஒனக்கு இப்போ வெளங்குமான்னு
தெரியலே.
சம்முவம்:
சொல்லுங்கப்பா,
தெரிஞ்சுக்கறேன்.
(செந்தில்
10 வயது) வருகிறான். சம்முவண்ணே, நான் ஸ்கோலுக்கு ரெடியாகணும்,
எதோ அப்பச்சி கூப்பிட்டுச்சுனு சொன்னியே,
நிக்கவா, போகவா?
சம்முவம்:
இருடா, இன்னிக்கு நீ ஸ்கோலுக்கு லீவு
போட்டுடு. தங்கச்சி செவந்தியையும் அனுப்பாதே.
பக்கத்து வீட்டு வள்ளிக்கிட்ட சொல்லி
அவளுக்கும் ஒனக்கும் 'வீட்டுல விருந்தாளி, இன்னிக்கு
ஒரு நாளைக்கு லீவு'ன்னு
சொல்லி விட்டுரு.
சரிண்ணே,
நான் பின்னாடி கொஞ்சம் வீட்டுப்
பாடம் எழுதணும், எழுதிட்டு நாஷ்தா துன்னுட்டு அங்கேயே
இருக்கேன்.
சம்முவம்: சரிடா,
அப்பிடியே ஆத்தங்கரைக்கு போயி நம்ம கோவிந்து
பூசை முடிச்சிட்டானா, வெரசா வரச்சொல்லு.
செல்லத்துரை
தொடர்கிறார் (மகனிடம்).
எங்கடா விட்டேன்? 100 வருஷம் முன்னாடின்னு சொன்னீங்கப்பா?
ஆங், நம்ம ஆளு ஒருத்தன்
அப்பவே ரொம்பவே அடியாள் கணக்கா
இருப்பான், நல்ல ஆகிருதியா இருப்பான்,
தெகிரியத்திலயும் அடிதடி வம்பு எல்லாத்துலயும்
நல்லா பெரியய்யா மாதிரியே இருப்பான். நம்ம
சாதி சனம் காலம் காலமா
இப்பிடியே இருக்கறது அவனுக்குப் பிடிக்கலே.
அவனுக்கு
அந்த வீட்டுல ஒரு பொண்ணோட
வயசுக்கு ஏத்த பழக்கம் இருந்துச்சுன்னு
சொல்வாய்ங்க (புரிஞ்சுக்கடா). அதுவும் இவனோட வீரம்,
தெகிரியம் இதெல்லாம் பார்த்து இவன் மேலே
ஒரு கண்ணு வச்சிருந்திருக்கு. அந்தப்
பொண்ணு அப்பவே அந்தக் காலத்துலயே
பி.ஏ. வரைக்கும்
படிச்சிருக்காம். கலெக்டருக்கு படிக்கப் போறதா பேச்சு.
கூடவே, நம்மாளு என்ன கேட்டிருக்கான்,
அந்த வீட்டுல இந்தப் பெரியய்யா
அப்ப ரொம்பச் சின்ன வயசு,
5 இல்லே 6தான் இருக்கும்டா அவருக்கு
அப்ப.
ஆனா அப்ப பெரியவங்க இருந்தாங்கள்ள
அதுல ஆருக்கிட்டயோ 'ஐயா கூலி இப்பல்லாம்
பத்தலே, மானம் அப்பப்ப பொத்துக்கிது,
அப்பப்ப காய்ஞ்சு போகுது, வெள்ளாமை
சரியா இல்லாததால வெளைச்சலும் இல்லே, எங்களுக்கு கூலி
கட்டலே'ன்னு சொல்லிருக்கான்.
அந்தப் பெரியவரு அன்னைக்கு என்ன
சொல்லிருக்காரு: தெரியும்லெ, நானும் வெச்சுக்கிட்டா வஞ்சம்
பண்றேன்? நீயே சொல்றே மானம்
(வானம்) பொய்யாயிடுச்சுன்னு, வெளச்சல் இல்லேன்னு, புரியுதுடா.
அடுத்த போகம் வித்து காசாகும்ல,
அப்ப எல்லாத்துக்கும் சேர்த்துப் போட்டுத் தர்றேன், கவலைப்படாதே.
சரிங்க ந்னு போயிருந்தா இந்த
பஞ்சாயத்து இவ்ளோ பெரிசா வந்திருக்காது,
அதுக்கப்புறம் என்னென்னல்லாமோ நடந்து போச்சுடா.
சுமார்
50 வருஷம், அந்த வெடைக்கோழி மாதிரி
நம்மாளு முட்டி மோதிக்கிட்டு இருப்பானே,
அதானே கூலி சேர்த்துக் குடுன்னு
கேட்டான அவன் என்ன பண்ணினான்
அந்தப் பொண்ணை இழுத்திண்டு பட்டாளத்துக்கிட்ட
எங்கியோ போய்ட்டான்?
கலெக்டர்
படிக்க வைக்கணும்னு இருந்த செக்கச் செவேல்னு
இருந்த பொண்ணை காணோம், அவனையும்
காணோம்னா அவிங்க சாதி சனம்
ச்சும்மா இருக்குமா? அவங்கள்ளயே
அடிதடிக்கு பேர் போனவங்க ஒரு
கோஷ்டி, நம்மள்ள ரெண்டு கோஷ்டின்னு
அதுக்கு அப்பறம் மாத்தி மாத்தி
சண்டைதான், ஒரே வெட்டுக்குத்து பஞ்சாயத்துதான்.
கூலித் தகராறு வேற அப்பப்ப
வருமா, கோர்ட்ல தாக்கீது போட்டு
வெளையுற நிலம் விவசாயிக்கித்தான் சொந்தம்னு
தீர்ப்பாயி ஹைக்கோர்ட்டிலயும் நம்மளுக்கு சாதகாமாயி இன்னிக்கு அவங்களுக்கு சமமா நம்மளும் ஏக்கர்
கணக்குல சொத்து வச்சிருக்கோம்ல.
என்ன, நடுவுல ரெண்டு வம்சத்துலயும்
ஒரு 50 கொலை விழுந்திருக்குனு நெனைக்கிறேன்.
சம்முவம்: என்னது 50 கொலையா? அய்யமாரு
கொலையெல்லாம் பண்ணுவாங்களாப்பா? அவிங்க படிச்சவங்க, கவுரமானவங்க
அப்படி இப்படின்னு சொன்னியேப்பா?
ஆமாம்லே,
நான் பொறக்கறதுக்கு முன்னாடி வரைக்கும் அப்பிடித்தான்
நெலைமை. இதுல ரெண்டு குடும்பத்துலருந்தும்
மிலிட்டரி, போலிஸ்னு பதவில இருந்தவங்கள்ளாம்
இன்னைக்கு போயாச்சுலே? ஆரும் உசுரோட இல்லே.
ஒங்க ஆத்தா செல்லாத்தாவை நான்
கட்டறதுக்கு முன்னாடி, இந்தப் பெரியவரு ஊரை விட்டுட்டுப் போறதுக்கு
முன்னாடி , நான் ஒரு ரெண்டு
வருஷம் குவைத்துக்கு அதான் அரேபியாவுக்கு டிரைவர்
வேலைக்குக் போயிருந்தேன்டா.
சம்முவம்: இன்னாது? நீ
அரேபியாவுக்கு போனியா? எனக்கு ஆருமே
சொல்லலியேப்பா? ஆத்தாவுக்கு தெரியுமாப்பா?
ஒங்க ஆத்தாவுக்கு நான் அவளைக் கட்டறதுக்கு
முன்னாடி தெரியாதுலே, நாந்தான் சொன்னேன் கண்ணாலத்துக்கு
அப்பாலே ஒரு வாட்டி.
நான் போனது குவைத்துக்கு ஒரு
எண்ணைப் பண்ணைல. அப்பிடி இப்பிடி
பாத்தா நான் மொதல்ல சொன்னேனே
கூலிக்காக மொத மொத வெடச்சுக்கிட்டானே
நம்மாளு, அத மாதிரிதான் அங்கிட்டும்.
என்ன, இங்கே அரசாங்கம் நம்மளுக்கு
சாதகமா தீர்ப்பு சொல்லிடுச்சு. காலம்
அப்படி, சொதந்திரத்துக்கு அப்பறமா சர்க்கார்ல நெறையா
மாத்தம் வந்திச்சு இங்கிட்டு, சட்டம்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறிச்சுல்லே.
அதான்டா நம்ம மாதிரி சாதி
சனம் கீழ் சாதிக்காரங்கள்ளாம் மேலே
மேல வர முடிஞ்சுது. இல்லேன்னா,
நாமளும் 300 வருஷம் முந்தி எப்பிடி
இருந்தோமோ அப்பிடியே இருந்திருப்போம்லே.
சம்முவம்: குவைத்துலருந்து நீ எப்பப்பா
வந்தே? திரும்பிப் போகலியா?
அதை ஏன் கேக்கற போ?
அங்கே டிரைவரு விசா குடுத்துத்தான்
நம்மள கூட்டிப்போறாய்ங்க. உள்ளே போனாத்தான் தெரியும்
என்ன வேலைலாம் பண்ணனும்னு.
நம்மள மாதிரி இந்தியா, லெங்கை
(இலங்கை), பச்சை அதான்டா எல்லைல
நம்மளோட எப்பயும் மோதிக்கிட்டே இருக்கானே
அவன் (பாகிஸ்தான்), அவனோட பங்காளி, அப்பறம்
தூர தேசத்துல சைனாக்காரன் மாதிரியே
இருப்பானே, பில்லி சூன்யமா? (யோசிக்கிறார்)
சம்முவம்: பிலிப்பைன்ஸாப்பா?
ஆமாம்லே,
அதான், அந்தூருக்காரன் எல்லாரும் அங்கே சின்னதுலேருந்து பெரிய
ஆளூங்க வரிக்கும் பெரிசு
ஆபீசரு மாதிரி கழுத்துல நம்ம
கான்வேன்ட் புள்ளைங்க மாதிரி ஒண்ணு கட்டிக்கிட்டு
போவாங்கள்ள, டையா? அது மாதிரி
ஆபீஸ் வேலைன்னு பலதும் உண்டுடா
அங்கே.
ஆனா, அரேபியாக்காரன்கிட்ட கூலிப் பஞ்சாயத்தெல்லாம் பண்ண
முடியாது. அவன் குடுக்கறதுதான். அவனவன்
நெகை நட்டு வீடு அடமானம்
வச்சு அப்பன் ஆத்தா ஒழைப்புல
வந்த காசை எடுத்துக்கிட்டு பாம்பேயிலே
ஏஜென்டுக்கிட்ட குடுத்துட்டு அங்கே போறோம்.
ஏஜென்ட்
என்ன பண்றான்னு எதோ ஒரு பேரைச்
சொல்லி நம்மள அனுப்பிடுறான். அங்கே
நம்மாளுங்க (எல்லாரும்தாம்லே, சாதி செனம் வித்தியாசம்லாம்
அங்கே கெடையாது). வெளி நாட்டுக்காரன் எல்லாரும்
அவிங்களுக்கு ஒண்ணுதான். கூலிக்காரன், கூலிக்காரந்தான்.
சொன்ன வேலையைச் செய்யணும், ரெண்டு
மூணு மாசம் ஒருக்கா கொஞ்சம்
காசை கண்ணுல காட்டுவான். தெனம்
ரெண்டு வேளை சோறும் ரொட்டியும்
கொடுப்பான். அவன் காட்டுற எடத்துல
தங்கிக்கணும்லே.
நான்லாம்
அங்கே பாக்காத வேலையில்லே. நான்
படிக்காத தற்குறில்லே, அதுனால் ஆபீஸ்ல காப்பித்
தண்ணி டீ ஆத்தி எல்லாருக்கும்
குடுக்கறது. அப்பப்ப டிரைவர் வேலை
அது இதுன்னு அது ஒரு
உலகம்டா.
அங்கே போனவன் மீண்டு வந்ததா
சரித்திரம் இல்லைடா. பல பேரு
கடனோ உடனோ வாங்கிக்கிட்டு போறானா,
இங்கே திரும்பி வந்தா வட்டிக்காசு
குடுக்கவே நாக்கு தள்ளிடும். அவனவன்
பொண்டாட்டி புள்ளைக்குட்டிய இங்கிட்டு விட்டுட்டு 3 இல்லேன்னா 5 வருஷத்துக்கு ஒருக்கா வந்துட்டுப் புள்ளை
குட்டிய கொஞ்சிட்டு திரும்பி போவான்.
எனக்கு மொதல்லேருந்தே பிடிக்கலே, கல்யாணம் வேற அப்ப
எனக்கு ஆவலே, ரண்டு வருஷம்
இருந்துட்டு ஒண்ணும் வேலைக்காவாதுன்னு நான்
வந்துட்டு இங்கினியே ஒங்க தாத்தன் பட்டறையிலேயே
வேலை பாத்தேன். அப்பத்தான் ஒங்க ஆத்தாளை கட்டி
வச்சாங்க.
அங்க பாத்த வேலை அனுபவத்துல
அப்பப்ப இங்க கட்டிட வேலை,
சித்தாளு, மேஸ்திரி, கார்ப்பென்ட்ரு அது இதுன்னு ஒண்ணு
விடறதில்லே. காலத்தை ஓட்டிட்டேன்.
ஒவ்வொருத்தன்
ஆடு மேய்க்கிற மாதிரி மாசக் கணக்குன
பாலைவனத்துல ஒட்டகம் மேச்சுக்கிட்டு இருக்கான்டா,
அங்கே, அதான் நம்மாளுங்க.
ஒழுங்கா
இங்கிட்டு நம்ம ஊரிலயே நம்ம
சாதி சனத்துலயே சனத்துக்கூடவே இருந்தாக்கா குடும்பம் புள்ளைங்கன்னு சேர்ந்தே இருக்கலாம். புள்ளைங்க
வளர்றச் சொல்ல பாத்துக்கிட்டே சினிமா
டிராமா பீச்னு அப்பப்ப டவுனுக்கு
போனோமா வந்தோமா, நம்ம வேலையைப்
பாத்தமான்னு இல்லாம எவனோ 1000 பேரு
போறத பாத்துட்டு, அவன் டிவி, துணி
தோக்கற மெஷின் அதான்டா வாஷிங்
மெஷின், பிரிட்ஜு அது இதுன்னு
அனுபவிக்கறாயங்களே, அதை மாதிரி நாமளும்
அனுபவிக்கணும்னு படிச்சவன், படிக்காதவன், வெளங்கறவன், வெளங்காதவன் எல்லாம் ஆட்டு மந்தை
கணக்கா ஒரே தினுசா போறானுங்க,
வர்ராங்க.
யோசிச்சுப்
பாத்தா, நம்மாளு முன்னாடி கூலிக்காக
ஏதோ பண்ணப் போக அவிங்களும்
வீராய்ப்புக்கு வெட்டுக் குத்துன்னு எறங்கப்
போக காலம் எங்கியோ போய்
நம்மள இப்படி வச்சுருக்குலே.
ஒன்னோட சித்தப்பன் சீனிச்சாமி அவன் ஏன் இப்பிடி
கோமா பிடிச்ச மாதிரி இருக்கான்லே?
தெரியுமா? வெட்டிப் போட்ட கத்திரிக்கா
மாதிரி கெடக்கானே, அவனுக்கு பசின்னா தெரியுமா?
அழத் தெரியுமா? சிரிக்கத் தெரியுமா? சினிமா டிராமான்னா என்னென்னு
தெரியுமா? அப்பிடியே அவனு கெடைக்கன்டா அது
இருக்கும் ஒரு 30 வருஷம். அவனுக்கு
எமன் எப்ப வருவான்னே தெரிலேடா.
நான் குவைத்துல பாத்ததெல்லாம் நெனைச்சா எனக்கே கொலை
நடுங்கிடுச்சுலே. இங்க கூலிக்காகத்தான் நாமள்ளாம்
வெடைச்சோம் ஒரு காலத்துல.
காசு முன்னே பின்னே குடுத்தாலும்,
பங்களா வீட்டுல நம்மள மதிச்சு
வெளியாட்களை எறக்காம நம்ம சாதி
சனத்துக்கேத்தான் அவிங்க 300 வருஷமா வேலை குடுத்துக்கிட்டு
இருந்தாங்க, இன்னைக்கும் நம்மாளுங்க அவிங்க கம்பெனி, வயல்ல
போய் வேலை செய்றாங்கத்தான், இந்தச்
சேப்புச் சட்டைக்காரங்க தயவுல நம்மள மாதிரி
ஒழைக்கிற சனங்ளுக்கு ஒழுங்கா கூலியும் வருதுல்ல.
ஆனா குவைத்துல கூலிக்காக வெடைச்சா ஏஜென்டை கூப்பிட்டு
சொல்வான் அவன் நம்மள திருப்பி
அனுப்பிடுவான், ஒண்ணும் அங்கண வாலாட்ட
முடியாதுல்லே.
சம்முவம்: புரியுதுப்பா. ஆனா நம்ம
கோவிந்து பத்தி ஒரு கதை
சொல்றாய்ங்களே அது என்னப்பா?
அதுவா, அது ஒரு தனிக்கதைடா.
இப்ப வர்றாரே பெரியவரு, அவருதான்டா
அவனை 2 வயசுல தத்து எடுத்து
வளர்த்தாரு. 7 இல்லேன்னா 8 வயசு வரைக்கும் அவருதான்
பாத்துக்கிட்டாரு.
நம்ம பக்கத்து ஊர்ல தாயம்மா
கெழவி ஒருத்தி இருந்தா. அவளுக்கு
செவ்வந்தின்னு ஒரு பொண்ணு இருந்துச்சு.
அந்தப் பொண்ணு எவன் கூடயோ
போயிட்டு சீரழிஞ்சு புள்ளைக் கொழந்தை பொறந்து
ஆஸ்பத்திரிலயே போயிடிச்சு. நல்லா கண்ணும் கருத்துமா
கொழந்தை பொறந்துச்சு, தாயம்மா கெழவிக்கி அப்பவே
70க்கு மேலே வயசு இருக்கும்லே. பெரியவருக்கிட்ட
வந்து எதுனாச்சும் ஒதவி பண்ணுங்கய்யான்னு கேட்டுச்சாம்,
பெரியவரும் கவலைப்படாதே, எனக்கும் கொழந்தை இல்லே
ரொம்ப நாளா, என் பொஞ்சாதியும்
போயிட்டா, நானே இந்தப் புள்ளைய
வளர்க்கிறேன்னு தூக்கிக்கிட்டு வந்துட்டாரு. அந்தக் கெழவிக்கும் எதோ
சீவனத்துக்கு காசும் நெலமும் கொடுத்துட்டாரு.
அசலூருலேருந்து
சாதி சனம் எதுனே தெரியாத
கொழந்தைய கொண்டாந்துட்டாருனு பெரியவரு மேலே அவரு
சாதி சனத்துக்கு கோவம். அவர்க்கிட்டே ஞாயம்
கேக்க முடியுமா? தர்க்கம் பண்ண முடியுமா?
பெரியவரு
லண்டன் போறதுக்கு முன்னால சின்னவரு கிட்ட
சொல்லி இந்தக் கொழந்தையை ஆரு
வளர்க்கிறாங்களோ அவங்களுக்கு கணிசமா நெலம் நீச்சு
ஒரு மச்சு வீடும் எழுதி
வச்சுடறேன்னும் அவனை காலம் காலத்துக்கும்
வச்சு காப்பாத்தினா போது, படிக்க வைக்கணும்னும்
சொல்லிட்டு போயிட்டாரு.
என்ற அப்பன் தான் அதை
எடுத்து வளர்த்தாரு. எங்கூடவே என் தம்பி
மாதிரி கோவிந்து வளர்ந்தான். பெரியவரு
சீமைக்கு போறதுக்கு முன்னாடி அவங்க சனத்துல
7 வயசுல ஒரு சடங்கு பண்ணுவாங்கலே,
செல்லாத்தா அதுக்கு என்ன பேருடி,
சாவித்திரி மந்திரமா?
செல்லாத்தா : இல்லீங்க,
காயத்திரி மந்திரம்.
அதான், காயத்திரி மந்திரம் சடங்கெல்லாம் நல்லாத்தான்
பண்ணினாரு. அவரு கூடவே ஏன்
கூட்டிக்கிட்டு போகலேன்னு எனக்கு தெரியாதுலே. கூட்டிக்கிட்டு
போகணும்னா பாஸ்போர்ட் அது இதுன்னு சரி
பண்ணனும்லே, அவரு தம்பி அதுக்கெல்லாம்
ஒத்துக்கலே போல இருக்கு.
அதான் பெரியவரு இந்த மாதிரி
ஒரு ஏற்பாடு பண்ணினாரு. கோவிந்து
நம்மளோடயே என் தம்பி மாதிரியே
வளர்ந்தான்டா. வயசுல எப்பிடியும் ஒரு
25 வருஷம் என்ன விட சின்னவன்,
சொன்ன வேலையை செய்வான், ரயிலுக்கு
போய் ஆளை கூட்டியான்னா கூட்டி
வருவான். அறுப்பு அறுத்து கூலி
வேலை அது இதுன்னு எல்லாம்
சீராய்த்தான் செஞ்சான்.
சம்முவம்: கோவிந்த ஏன்ப்பா
ஸ்கோல்ல படிக்க வைக்கலே?
அதை ஏன் கேக்குற போ.
என்ற அப்பனுக்குள்ள உள்ளூக்குள்ள ஒரு வெசயம் உறுத்திக்கிட்டே
இருந்துருக்குது. வெளில ஆருக்கிட்டயும் சொல்லலே.
அவரு சாவறதுக்கு தலை சாயறதுக்கு ஒரு
நாள் முன்னாடி என் மடில
தலை வச்சுக்கிட்டு சொல்றாரு :
(செல்லத்துரையின்
அப்பா சாகும் தறுவாயில்) : ஏலே
செல்லத்துரை, அந்தப் பெரியவரு நம்ம
குல சாமிடா, அவரு அந்த
கோவிந்து வை படிக்க வச்சுக் காப்பாத்தணும்னு நெலம் நீச்சு இந்த
பங்களா கொச்சு வீடு எல்லாம்
கொடுத்தாரு. கெரயம் பண்ணிக் கொடுத்துப்
போயிட்டாரு.
எனக்கு வயசுக்கு ஏத்த கிறுக்குடா,
காலம் காலமா, நம்மள ஒரு
கட்டுக்குள்ளயே மேலே வளர விடாமே
வச்சுருந்தாங்கல்லே, அதுனால கோவிந்துவ நான்
ஸ்கோலுக்கு அனுப்பல்லேடா.
பெரியவரு
அவிங்க வழக்கப்படி படிக்க வச்சிருந்தாக்கா இன்னைக்கு
அவனும் ஒரு நல்ல கவுரதியான
வேலைக்கு போயிருப்பான். நாந்தான்
காசுக்கு ஆசைப்பட்டு அவனைப் படிக்க வெக்காமயே
மூணாப்போ நாலாப்போட நிறுத்திட்டேன். அந்த மந்திரம் ஒண்ணு
தவிர வேற ஒண்ணும் அவன்
தலைய ஏறல. அப்பிடியே வளர்ந்துட்டான்.
ஆள்தான் வளர்ந்தானே தவிர மனசுல மூளைல
வளர்ச்சியில்லாம அதே நெலைல இருந்துட்டான்.
(செல்லத்துரையின் அப்பா அழுகிறார், அந்தப்
பாவம் தம்மைச் சும்மா விடாது
என்கிற குற்ற உணர்ச்சியில்).
என்னோட செயலால கடவுள் எனக்கு
வேற ஒரு தண்டனை கொடுத்துடான்டா.
பணம் காசுக்கு ஆசைப்பட்டு கிறுக்குத்தனமா
நான் இருந்ததுக்கு ஒன் தம்பி சீனிச்சாமிய
ஆண்டவன் எப்படி வச்சுட்டான் பாருலே,
இப்பிடி காய்ஞ்சு போன வத்திப்போன
ஒடம்போட அவனும் எத்தினிக்காலம்தான் இருக்கப்
போறானோ, தெரியலடே? நீதான்டா கோவிந்தையும் சீனிச்சாமியயும்
காலத்துக்கும் பாத்துக்கணும்.
அந்தப் பெரியவரு இனிமே வருவாரான்னு
தெரியலே, ஆனா, ஒரு வேளை
வந்தாக்கா வெவரம் ஒண்ணும் சொல்ல
வேண்டாம், எங்க எப்பன் ஒங்கக்கிட்ட
மன்னிப்பு கேட்கச் சொன்னாருன்னு மட்டும்
சொல்லி அவரு கால்ல விழுந்துடா.
அவரு பெரிய மனசுக்காரரு, மன்னிப்பாருடா.
"
செல்லத்துரை: அப்பிடின்னு
சொல்லிட்டு ஒங்க தாத்தன் போய்ச்
சேர்ந்துட்டாருலே.
எனக்கும்
மனசாட்சின்னு இருக்குல்லே. அதான் கோவிந்துவை நல்லா
பாத்துக்கணும்னு செல்லாத்தாக்கிட்டே சொல்லி வச்சிருக்கேன். கோவிந்து
மனசு நோகும்படி ஆச்சுன்னா ஒங்க சித்தப்பன் கதி
வேற யாருக்கு வேணாலும் வர்லாம்லே.
அதான் இப்ப 10 வருஷமா ஒரு
வெவகாரம் ஒண்ணும் இல்லாம ரெண்டு
குடும்பமும் அவங்க அவங்க வேலையைப்
பார்க்குறாங்க.
2004 ல சுனாமி வந்துச்சுல்ல, அந்த
வருஷம் டிவி பொட்டில (அதான்
நம்ம பஞ்சாயத்து ஆபீஸ்ல கூட வச்சிருப்பாங்களே?)
அதுல லண்டன்லேருந்து பெரியவரு பேசினதா ஒரு
பேட்டி வச்சாங்க.
அவருக்கு
லண்டன்லயும் போன இடத்துல கவுரதியும்
அங்கீகாரமும் அவரு தம்பி மூலமா
கெடைச்சுச்சாம். 2004 சுனாமி வந்த போது
நம்மளோட நல்லது கெட்டது எல்லாம்
விசாரிச்சாராம். அப்ப நம்மளோட ரெண்டு
குடும்பத்தோட நிலைமை எப்பிடி இருக்குன்னு
கேட்டிருக்காரு. "என் தலை சாயறதுக்குள்ள
ஒரு தடவையாச்சும் ஊருக்குப் போகணும், கோயில் திருவிழா
பாக்கணும்னு ஆசையா இருக்கு'ன்னு
சொன்னாராம்.
அவரோட சீமைத் தம்பி புள்ளை
அந்த ஊரு மிலிட்டரில வேலை
பாக்குறாராம், பஞ்சாபோ டில்லியோ ஒரு
வடக்கத்திக்காரி பொண்ணைக் கட்டிருக்காராம், அவங்க
ரெண்டு பேரும் பெரியவரும் இப்ப
பேரப் புள்ளைங்க கூட வர்றாங்க.
அதான் அவருக்கு மரியாதை பண்ணனும்னு
நாமல்லாம் போப்போறோம். போறோம், கால்ல குடும்பத்தோட
வுழுறோம், வந்துர்றோம். பெரியவர்க்கிட்டே தனியா பேசற சந்தர்ப்பம்
வந்துச்சுன்னா பேசுவோம், இல்லேன்னா அத்தோட திரும்பிடுவோம்.
ஆனா, இந்த கோழி, ஆடு,
பன்னி எல்லாம் ஏன் வெக்கச்
சொன்னேன்? பெரியவரு வரும்போது நாட்டாமை
பெரியவங்க முன்னாடி எதாவது வெட்டு
குத்து வந்துடக் கூடாதுல்ல? அவருக்கிட்ட நம்ம சரி சமமா
நின்னு பேசணும்னா, நம்மளோட பேச்சு சபைல
எடுபடணும்லே, அதுக்குத்தான் அதை பண்ணச் சொல்லி
ஒங்க சித்தப்பன்கிட்டே சொல்லிருக்கேன். வெளங்குதாலே? அவிங்களுக்கு அவிங்க கௌரவம் முக்கியம்னா
நம்மளுக்கு நம்ம கௌரவம் முக்கியம்லே,
என்ன நாஞ்சொல்றது?
கெளம்புங்க,
கெளம்புங்க, இன்னும் ஒரு மணி
நேரத்துக்குள்ள கோயிலுக்குப் போயிட்டு சாமி கும்பிட்டு
அங்கிட்டு போவோணும்லே!!
(முற்றும்)