Sunday, July 19, 2015

Why confusion, God related ?

Not sure if I have shared this query via Facebook but this has been in my archives since 12th July 2014 (almost more than a year now!!)

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு கேள்வி ஆழ்மனதில் உள்ளது, இது ஒரு நெருடலான கேள்வியும் கூட.

[ஒரு டிஸ்கியைப் போட்டே இதை இக்களத்தில் கேட்கிறேன். யாரையும் எந்த மதத்தினரையும் குறிப்பிடவோ குத்திக்காட்டவோ இதில் என் உத்தேசமில்லை. இதில் ஒரு பக்குவப்பட்ட விவாதமாகத்தான் இதைக் கோருகிறேன். தனிப்பட்ட மதப் பிரச்சாரமாகவோ தனி மனிதத் தாக்குதலாகவோ உள்ள கருத்துக்களும் கமென்டுக்களும் நிராகரிக்கப்படும். ஆக்க பூர்வமான பாஸிடிவ் எண்ணம் கொண்டவர்கள் மட்டும் பதிலளிக்கலாம்).

எனக்கு இறை நம்பிக்கை தாராளமாக இருக்கிறது. 'கடவுள்' என்பது பொய், அப்படி எதுவுமில்லை என்கிற மாயை அது சார்ந்த விவாதங்களுக்குள் நான் புக விரும்பவில்லை. என்போல் உள்ள சக நண்பர்களின் கேள்வியாகக் கூட இது இருக்கலாம். ஒரு தெளிவு வேண்டியே இது கேட்கப்படுகிறது.

ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் சாதாரண தினசரி பூஜை, புனஸ்காரங்கள், பிரார்த்தனைகள் எல்லாம் ஆன்மீகத்தில் ஒரு முதல் படி நிலை; இறைவன், ஆன்மா, நமக்குள் இருக்கும் ஏதோ ஒரு உயர்வான அந்த உந்துசக்திதான் இறைச்சக்தி என்கிற ரீதியில் மனித குலத்தை வாழ்விக்கிறது.  பகவத் கீதையில் சொல்லியுள்ளது போல் பக்தி, கர்மா, கடமை, முன் ஜென்மம், அது தொடர்பான கர்ம வினைகள், இந்த ஜென்மத்தில் அவற்றின் தாக்கம், ஞான யோகம் இன்ன பிற விஷயங்களில் நாம் நம்மை மேன்மேலும் ஒவ்வொரு நிலைக்கு உயர்த்திக்கொள்ள சிறிது சிறிதாக நாம் நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும், 'இவை அனைத்தும் ஒரே பிறவியில் தொடங்கி முடிந்துவிடும் விஷயமில்லை" என்கிற தெளிவு நமக்கு முதலில் வேண்டும்.

என் கேள்வி வேறு.

ஒரு மனிதன் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொண்டு ஒரு ஈடுபாட்டுடன் நம்பிக்கையுடன் ஒரு குருவை நோக்கிப் போகிறான் அல்லது தம் சமூக குடும்ப தெரிவுகள் மூலமாக ஒரு குருவை நோக்கிச் செலுத்தப்படுகிறான்.

எந்த மதம் அல்லது இனக்குழுக்களிலும் நாம் உற்று நோக்கினால் ஆங்காங்கே ப்ரபல்யம் அடைந்துள்ள ஒரு குரு, குருவுக்குச் சமமான ஒருவரைக் காட்டி அவரையோ அவர் காட்டும் மார்க்கத்தையோ பின்பற்ற பரிந்துரைக்கப்படுகிறான்.

சிலர் ராம நாமம், க்ருஷ்ண பக்தி சத்சங்கம், ஷிர்டி ஸாயி அல்லது புட்டபர்த்தி ஸாயி, ராமகிருஷ்ணர், விவேகானந்தர், கர்த்தர், என்று பற்பல மார்க்கங்கள் காட்டப்படுகிறது. ஒவ்வொரு மதத்திற்குள்ளும் பற்பல உட்பிரிவுகள் உண்டு, அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நம்பிக்கை சார்ந்த தனிப்பட்ட குழுக்கள் உண்டு.

பொதுவாக சில மார்க்கங்களில் கடவுளாகவோ இறைச்சக்திக்கு நிகராகவோ மதிக்கப்படும் ஒருவர் (உருவம் எனவும் கொள்ளலாம், விவாதத்திற்காக!!) பொதுவாகச் சொல்வது:

"என்னை நம்பு, என்னை மட்டும் நம்பு, என் மீது முழு நம்பிக்கை வை, என்னைத் தவிர யாரையும் எதையும் கொள்ளாதே, உன் கவனத்தை என்னிடத்தில் மட்டும் காட்டி உன் பக்தியை நம்பிக்கையை என் மீது வைத்தால் நான் உனக்கு நல்வழி காட்டுகிறேன்"

இதைத்தான் அநேகமாக எல்லா மார்க்கத்திலும் எல்லா குருமார்களும் சொல்கிறார்கள். அப்படிச் செல்லும் பக்தனுக்கு ஒரு நிறைவு எப்போது ஏற்படும்? தான் கோரிய பலனோ தான் கோரிய நல்ல விளைவோ நடந்தால்தான் அவன் திருப்தியடைகிறான். சிரத்தையுடன் பல நாட்கள் வருடங்கள் கடந்தும் சிலருக்கு நல்வழிக்கான பாதை தென்படுவதில்லை. அவன் தன் வாழ்க்கையில் உருப்படியாக உய்யும் உபாயம் கிட்டாமல் அவன் வேறு குருவையோ உருவத்தையோ நோக்கித் தள்ளப்படுகிறான். நிறைவான முழு பக்தியுடன் ஒரு குருவை உருவத்தை நோக்கி அவன் இத்தனை நாட்கள் பிரார்த்தனையும் நம்பிக்கையுடன் வணங்கிவந்திருக்கிறான். அந்த நம்பிக்கை உடைந்து வேறு மாற்று உருவத்தை நோக்கி அவன் தலைப்பட்டாலே அவனது இத்தனை நாள் பக்தி அல்லது நம்பிக்கை கேள்விக்க்குள்ளாகிறது.

ஒரூ தெளிவில்லாத குழப்ப நிலையில்தான் அவன் மாற்று யோசனையில் இறங்கும் நிர்பந்தம் நேருகிறது. அதிலும் அவன் எத்தனைதான் நம்பிக்கை வைத்தாலும், அவனுக்கு தான் கோரிய பலன் கிட்டாவிடில் இன்னும் எவ்வளவு முறை அவன் மாறிக்கொண்டே இருப்பான் அல்லது மாற்றிக்கொண்டே இருப்பான்? இதற்கு ஏது எல்லை? சாகும்வரை அவன் குழப்பம் தெளிய வழியில்லை என்றாகிறது.

ஏன் எல்லா குருமார்களும் அல்லது உருவத்தை சார்ந்த வழிபாடு செய்பவர்களூம் 'தான், தனது, தம்மை மட்டுமே நம்பு' என்று கோருகிறார்கள்?


பக்தி, நம்பிக்கையில் ஒருமுகப்பட்டு மனிதன் கடவுளை நம்ப வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருந்தாலும், சராசரி மனிதன் ஞானி அல்லது துறவி அளவுக்கு பக்குவத்துடன் இதை அணுகுவது நடைமுறைச் சாத்தியமில்லை.

ஏன் அப்படி ஒரு குழப்பம் உண்டாகிறது?

பின் குறிப்பு: இதைப்படி, அதைப்படி என்று பரிந்துரைகள் வரவேற்கிறேன், இருப்பினும், எதைப்படித்தாலும் தெளிவு கிட்டுமா என் கேள்விக்கு? எதைப் படித்தாலும், மேற்சொன்ன சூழ்நிலை தவிர்க்க இயலாதே?


















No comments:

Post a Comment