Sunday, July 19, 2015

செல்வமே!! செல்வமே!!

From my Facebook wall since 28th May 2015:

ஒரு சாமியாரிடம் ஜோஸ்யமோ குறியோ எதிர்காலம் குறித்த ஆரூடமோ கேட்கச் சென்ற பெண்ணுடன் ஒரு உரையாடல் (கற்பனைதானுங்கோவ்!!):

[பொழுது போகாமல் ஏதோ ஒரு சேனல் என்று மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு சேனலில் வந்த காட்சியினை அடுத்து தோன்றிய கற்பனை. இதில் வரும் பெயர்கள் கொண்ட நபர்கள் தங்களைச் சொல்வதாகவோ தங்கள் பெயர்களை கிண்டல் நையாண்டி செய்வதாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம், நேர்மையான டிஸ்கி!!]
========================================================
பெண்: சாமி, என்னை ஆசீர்வதிக்கணும்

சாமியார்: ஆயுஷ்மான் பவ!! தீர்க்க சுமங்கலி பவ!!

பெண்: சாமி, எனக்கு என்ன கேட்கறது எப்படிச் சொல்றதுன்னே தெரியலை

சாமியார்: சொல்லுங்கம்மா, என்ன கேட்கணும்? தயங்காம கேளுங்க. இங்க வந்திருக்கறவங்கள்ளாம் ஏதேதோ பிரச்சினை அது இது என்றுதான் வந்திருக்கிறார்கள். ஏதாவது தனியாக கேட்கணும்னா இவர்களை யெல்லாம் அனுப்பிவிட்டு உங்களை அப்புறமா பார்க்கிறேன். ஒரு ரெண்டு மணி நேரம் காத்திருந்தால் போதும். 

பெண்: அதுக்கில்லை சாமி, உங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். ரொம்ப நாளா வந்து ஆசீர்வாதம் வாங்கணும்னுதான், இது வரை சமயம் வாய்க்கலை, இன்றுதான் நேரம் கிட்டியது. 

சாமியார்: சரி, சங்கோஜப்படாம கேளுங்கோ. 

பெண்: அது வந்து, ரொம்ப நாளா எங்க குடும்பத்துல லட்சுமி கடாட்சமே இல்லை, மாற்றி மாற்றி ஏதாவது பிரச்சினை, கையிலே காசே தங்க மாட்டேன் என்கிறது. நீங்கதான் ஒரு நல்லாசி சொல்லணும். 

சாமியார் (கண்மூடி தியானம் செய்து சோழி உருட்டிப் பார்த்து சில நொடிகள் கழித்து): ஈஸ்வரோ ரக்ஷது!! நீங்கள் ரொம்பக் குழம்பியிருக்கீங்கம்மா, அப்படி ஒன்றும் பிரச்சினை இருக்கற மாதிரி எனக்குத் தெரியலையே. சொல்லப்போனா.............

பெண் (இடை மறித்து): மன்னிக்கணும் சாமி. பொருளாதாரப் பிரச்சினை கடன் மேல் கடன் எங்களை ரொம்பவே வாட்டுது, என்ன பண்றதுன்னே தெரியலை. 

சாமியார்: புரிகிறது அம்மணி. இருந்தாலும் நான் என்ன சொல்ல வர்ரேன்னா................

பெ: இல்லை சாமி, எங்கள் கஷ்டம் சொல்லி மாளாது, நீங்க எங்க வீட்டுக்கு வந்து ஒரு முறை பாதம் வைத்து ஆசிகள் கூறினால் எல்லாம் சரியாயிடும்னு தோணறது. 

சா: அது சரிம்மா, நான் அங்க வர்றது இருக்கட்டும், நீங்க இங்க இப்ப என்னை வந்து ஏதோ கேட்கணும், நான் ஏதோ சொல்வேன்னுதானே காத்திருக்கிறீங்க. என்னைப் பேசவே விடாம நீங்களே பேசறேளே?

பெ: இல்லை, இல்லை, சாமி, மன்னிச்சுக்கோங்க, எனக்கு இருந்த டென்ஷன்ல என்ன கேக்கறது பேசறதுன்னே தெரியலை. 

சா: சரி, புரியறது. சிறிது நான் பேச அவகாசம் கொடுங்கோ. கூடவே நான் கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கோ போதும். நான் கேட்கக் கேட்க நீங்க பதில் சொல்லச் சொல்ல உங்களுக்கே புரியும், பிரச்சினை எது, தீர்வு எது என்று. 

பெண்: சரி சாமி, சொல்லுங்க. 

சா: (மறுபடியும் தியானித்து): எனக்கு நல்லாத் தெரியது, உங்கள் குடும்பத்தில் செல்வத்துக்கு குறைச்சலே இல்லை, இன்னும் சொல்லப்போனா துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்று அனைத்தும் ஒருங்கே ஒற்றுமையா ஒரு இடத்துல இருக்கான்னா அது ஒங்க வீட்டுல உங்க குடும்பத்துலன்னு பரிபூரணமாச் சொல்வேன். 

பெண்: என்ன சாமி சொல்றீங்க, அப்ப நான் பொய் சொல்றேனா?

சா: இல்லைம்மா. உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பேர், யார் யார் என்ன பண்றாங்க, அவர்கள் பெயர் கூட சொல்லுங்க. நிதானமா சிறிது யோசித்து, பொறுமையாச் சொல்லுங்க. (உதவியாளரிடம் அவருக்கு, அதாவது அந்தப் பெண்ணிற்கு , சிறிது தண்ணிர் கொடுக்கும்படி கண் ஜாடையாய் குறிப்பால் உணர்த்துகிறார்).


பெண் (சிறிது ஆசுவாசித்து,தண்ணீர் அருந்தியபின்) ): சாமி, எங்கள் குடும்பத்தில் என்னையும் சேர்த்து 14 பேர் இருக்கோம் சாமி. என் மாமியார், மாமனார், மைத்துனர் நாத்தனார், என் குழந்தைகள் ரெண்டு பேர் எல்லாரும் இருக்கிறோம்.

சா: அவர்கள் பெயர், என்ன தொழில் செய்கிறார்கள் என்று வரிசையாகச் சொல்லுங்க.

பெண்: சொல்கிறேன்

1) செல்வ நாயகம், என் மாமனார், ஓய்வு பெற்ற நீதிபதி
2) செல்வாம்பிகை, என் மாமியார், ஓய்வு பெற்ற குடும்ப நல அதிகாரி
3) செல்வம், என் கணவர், விவசாயம் (முழு நேரம்), மூத்தவர்
4) செல்வ கணபதி, எம்.எல்.ஏ (முதல் மைத்துனர்)
5) செல்வ நாயகி, ஐ.ஏ.ஸ். அதிகாரி, டெபுடி கலெக்டர் (முதல் மைத்துனி)
6) செல்வ ரங்கம், குழந்தைகள் நல டாக்டர் (ரெண்டாம் மைத்துனர்)
7) செல்வேந்திரன், விஏஓ & கவுன்சிலர் (மூன்றாம் மைத்துனர், விவசாயத்தில் என் கணவருக்கு உதவியாயும் இருக்கிறார்)
8) ரெங்க நாயகி, ஆடிட்டர் (ரெண்டாம் மைத்துனி)
9) செல்வ துர்கா, சீஃப் வெடரினரி ஸ்பெஷலிஸ்ட் (மூன்றாம் மைத்துனி)
10) அன்புச் செல்வன், ஐ.பி.எஸ் (கடைசி மைத்துனர்)
11) அன்புச் செல்வி, அட்வகேட் (கடைசி மைத்துனி)
12) திருநிறைச்செல்வன், என் மகன் (10 வது படிக்கிறான்)
13) திருநிறைச் செல்வி, என் மகள் (8 வது படிக்கிறாள்)

சாமியார் (சற்றே வியப்புடன், கூடவே அந்த அவையில் கூடியிருந்தவர்களும் வியப்புடன் நோக்குகிறார்கள்): என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா. நான் தான் சொன்னேனேம்மா, உங்கள் குடும்பத்தில் முப்பெரும் தேவியரும் ஆட்சி செய்கிறார்கள், ஒரு குறையும் இருக்க முடியாதே? அது சரிம்மா, உன் பேர் என்னம்மா, நீ வேலைக்குப் போறியா? நீ என்னம்மா படிச்சுருக்க?

பெண்: என் பேர் செல்வி. நான் இந்த ஊர் பஞ்சாயத்து ப்ரெசிடென்ட்டுங்க. 

சாமியார்: மூர்ச்சையாகிறார். 

No comments:

Post a Comment