Since 23rd Feb 2015 from my Facebook wall:
(ரியாத்) பத்தா ஃபைவ் பில்டிங்க்ஸ் எனும் வர்த்தக வளாகத்திற்கு வெளியே '(ஒ)லேயா/தல்லா, (ஒ)லேயா/தல்லா, ரவ்தா மலாஸ், ரவ்தா மலாஸ், மத்தார் அல் மத்தார், மத்தார்/சுல்மேனியா எனும் பல்வேறு கோஸ்டர்களின் கூவல்களுக்கிடையே நடந்தால் நடைபாதை ஓரம், 60 அல்லது 65 வயது மதிக்கத்தக்க அரபிப் பெரியவர் பல்துலக்கும் குச்சிகள் (அரபிப் பெயர் மறந்துவிட்டது), அகர் பத்திகள் என்று சிறு சிறு பொருட்களை கடைவிரித்து தனது அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு விற்றால்தான் காசு எனும் நிலை.
சற்றுத் தள்ளி ஒரு 50 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கையில் ஒன்று, அருகில் ஒன்று (இன்னமும் இந்த உலகத்தைப் பார்க்காத ஜீவன் வயிற்றில் ஒன்றுகூட இருக்கலாம்) என அக்கம்பக்கத்தில் வைத்துக்கொண்டு ஏழ்மையின் உச்சத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு.............
(டெஹ்ரான்) மேற்சொன்ன அதே காட்சிகள், என்ன பெரியவர் சிறியவர் என வித்தியாசமில்லாமல் பல்குத்தும் குச்சிகளையோ பல்தேய்க்கும் குச்சிகளையோ ஹேங்கி எனும் காட்டன் கர்ச்சீப்புக்களையோ டிஷ்யூ பேப்பர்களையோ விற்றுக்கொண்டு கூடவே சற்றுத் தள்ளி 15, 20, 25 அல்லது 30 வயதுப் பெண்டிர் அன்றைய கிராக்கி ஏதாவது சிக்குமா என்று தெருவோரம் காத்திருக்கும் நிகழ்வுகள்.............
(சிங்கப்பூர்) ப்ரத்யேக உணவகத்தில் சென்று அருந்தினால் 1.50 அல்லது 1.80 வெள்ளி தே எனும் தேனீரோ அல்லது காப்பி எனும் காப்பித்தண்ணியோ அல்லது பால் கலவாத தே அலியாவோ, தே ஓவோ, எனில் சற்றுத் தள்ளி உள்ள ஹாக்கர் சென்டர் சென்றால் முன்னர் 80 காசுக்கும் 90 காசுக்கும் விற்ற அதே பானங்கள் இன்று 1.20 அல்லது 1.30 சில இடங்களில் 1.50.
கோமள விலாஸில் சென்றால் முன்னர் 5 வெள்ளிக்குக் கிட்டிய தளி எனும் தென்னிந்திய அளவுச் சாப்பாடு இன்று 8 வெள்ளி. அதுவே ஹாக்கர் சென்டரில் மலாய் அல்லது சீன உணவகத்தில் ஒரு கறிச்சோறு அல்லது ஒரு வெஜிடபிள் கலந்த சோறு 3 வெள்ளிக்கு. ஒரு வேளை ஒரு நபருக்கு வயிறாரும். நம்ம சென்னை அம்மா உணவகம் நினைவில் வரும்.
வார நாட்களில் எப்படியோ கூட்டம் தெரியாது, சனி ஞாயிறுகளில் காலை வெட் மார்க்கெட் எனும் காய்கறிச் சந்தைக்குப் போகும் வழியில் திடீரென்று முளைத்திருக்கும் ஒரு வரிசை. என்னடாவென்று பார்த்தால் 20 முதல் 90 வயது வரை வயது வித்தியாசமின்றி, சிலர் வீல்சேரில் அமர்ந்துகொண்டு காத்திருப்பர் வரிசைக்கிரமமாக. என்னவெனில் சிங்கப்பூர் பூல்ஸ் எனும் அங்கீகரிக்கப்பட்ட லாட்டரிச்சீட்டு நிறுவனம்.
நமக்கு விடியாதா, ஆயிரமோ இருபதாயிரமோ ஐம்பதாயிரமோ லட்சமோ மில்லியனோ எதாவது லாட்டரி அதிருஷ்டப் ப்ரைஸ் அடித்து நம் குடும்பம் விடியாதா என்று விடுமுறை நாளின் ஓய்வையும் மறந்து காசு கட்டக் காத்திருக்கும் சாமானியர்களின் கூட்டமும் எதிர்பார்ப்பும் ஏக்கங்களும்..........
இதற்கு மாறாக ஆப்பிள் ஐஃபோன் அல்லது ஏதாவது புதியதொரு லேட்டஸ்ட் பொருள் சந்தைக்கு வரும் நாளை எதிர் நோக்கி அந்த நாளின் முதல் நாள் இரவு 10 அல்லது 12 மணியிலிருந்தே கடை வாசலில் ஷாப்பிங் சென்டரில் காலை 10 மணிக்கு திறக்க இருக்கும் கடை வாசலில் கை நிறைய டாலருடனோ கடன் அட்டைகளின் தயவிலோ புதுப் பொருளை உடனே 'தான் தான் முதலில் அனுபவிக்கணும், வாங்கியே ஆகணும் என்கிற ஆவலில் அல்லது வெறியில், அதற்கு 6 மாதம் முன்பு வந்த வேறொரு சந்தைப்பொருளை வீசிக்கடாசிவிட்டு சந்தைப்பொருளாதாரத்தின் விழுமியங்களை அவதானிக்கும் வேறொரு வர்க்கம்...................
வேறொரு ரயில் நிலையத்தில் தோபி காட்டிலோ சிரங்கூன் அல்லது க்ளெமன்டி ரயில் எம் ஆர் டி நிலையத்திலோ 80 வயது சீனப் பெரியவரோ மூதாட்டியோ அகர்பத்திகள், டிஷ்யூ பேப்பர்கள் இவற்றை விற்று அன்றைய பொழுதை கழிக்கும் உழைப்பை நம்பி வாழும் மக்கள்...................
ஒரு சாமானியனின் பார்வையில் எத்தனை எத்தனை ஹேஷ்யங்கள், எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள்? காலச்சக்கரம் சுழல்கிறது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாய்!!
எல்லாருக்கும்தான் பொழுது வழமைபோல் விடிகிறது
No comments:
Post a Comment