Sunday, July 19, 2015

குரு ஏறுமுகம்(அல்லது) குரு மேலெழுந்தபோது.....................விமர்சனம்

A film review, as shared on my Facebook wall, since 8th February 2015

Movie (English): Jupiter Ascending

குரு ஏறுமுகம்(அல்லது) குரு மேலெழுந்தபோது.....................விமர்சனம்

எனக்கும்  விஞ்ஞானத்திற்கும் ஸ்னானப் ப்ராப்தி கூடகிடையாது. 10ம் கிளாஸோடு சயின்ஸுக்கு  நான் மூட்டை கட்டியாச்சு.

எனக்குத் தெரிந்ததெல்லாம் நவக்கிரகங்கள், அதற்காக நான் சொல்லும்  ஸ்தோத்திரங்கள் அதுமட்டுமே. 

கொஞ்சம் கொஞ்சம் ஜோதிட அறிவு (அதுவும் வாசகனாய் சஞ்சிகைகளில்  வாரபலன், மாத பலன் வருடபலன் என்று படித்த அனுபவமும்  கூடவே எண்ணியல் பெயரியல் என்று சொல்லப்படும் நேமாலஜி, நியூமராலஜி எனஅறியப்படும் சில வகைச் சங்கதிகள்  நண்பன் சேகரின் உதவியால் ஓரளவுக்கு  ஜோதிட இலாகாவில் எனக்குப் பரிச்சயம், அம்புட்டுத்தேன்.

குரு = ஜீபிடர் (ஜீபிடர் தியேட்டர்  இல்லீங்னா!!)
சுக்கிரன்= வீனஸ்  (வீனஸ்  தியேட்டர் இல்லீங்னா!!)
செவ்வாய்= மார்ஸ்  (குழந்தைகள்  திங்கற மார்ஸ் இல்லேங்கோ!!)
சனி = சாடர்ன்
ராகு அல்லது கேது 

(யுரேனஸ்,  நெப்டியூன் இரண்டில் எது ராகு எது கேது என்றே இன்னமும்  எனக்குப் புரியலை) இதுல நடுவுல  சில பல நூற்றாண்டுகள் புளூட்டோ எனும் ஒரு கிரகம் இருந்ததாகவும், அதற்கு கெரக தோஷம் பிடித்து  பின்னர் விட்டு அமெரிக்கன் ப்ரெசிடென்ட்  இம்பீச்மென்ட் (கிளின்டன்) வரலாறு மாதிரி புளூட்டோவுக்கு  கெரக நிலைத் தகுதி விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது மட்டுமே எனக்குத் தெரியும்.

சாட்டனிக்  வெர்ஸஸ் (சாத்தானின் சூத்திரங்கள் (?) என்று சல்மான் ருஷ்டி  புத்தகம் எழுதி வாங்கிக் கட்டிக்கொண்டது, அவர் தலைக்கு அயோதுல்லா கொமேனியும்  சவுதி முதலான அரபு நாடுகள்  வைத்துள்ள விலையும் அதனால் அவர்  லண்டனிலேயே பொழுதைக் கழிக்கிறார்; ஒருமுறை  ஏதோ ஒரு புத்தக விழாவுக்கு  ருஷ்டி டெல்லி அல்லது ஜெய்ப்பூர்  வருவதாக இருந்தது, பின்னர் அரசியல் மீடியா  கலாட்டாவில் அவர் வரவேயில்லை எனநினைவு).

இந்த விவரங்கள் கூட பத்திரிக்கை வாசிக்கும்  பழக்கம் இருப்பதால் விஞ்ஞான வளர்ச்சி பற்றிய  எனது சிற்றறிவு.

இந்தப் பூமி என்பது அண்டம்  பேரண்டம் என்றெல்லாம் சயின்ஸ் வகுப்பில் மேற்படிப்பு  விஞ்ஞானத்தை குறிப்பாக பிசிக்ஸ் என்னும் இயற்பியலை  ப்ரத்தியேகமாக படித்தவர்களுக்கு புரியும். 

அண்டம் என்றதும் ரைமிங்கா தோணும் பிண்டம் தெரியும். பித்ரு காரியங்களில் திவசம் முதலான சம்பிரதாயங்களில் முன்னோர்களுக்கு நாம் வைக்கும் / கொடுக்கும் / அர்ப்பணிக்கும் (தர்ப்பணம் மூலமாய்) பித்ரு பிண்டம் மட்டுமே நான் அறிந்தது. 

காலக்ஸி  வகையறாக்களே மில்லியன் கணக்கில் இருக்கிறது என்கிறார்கள்.  பற்பல காலக்ஸிகள், ஒவ்வொன்றுக்கும் ஒரு சூரியன், சந்திரன்,  சில கிரகங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சந்திரன்கள் இருக்கலாம் கூட. எனக்குப் பரிச்சயமில்லை. ஸ்டார்வார்ஸ், தி மாட்ரிக்ஸ் என்று  சயின்ஸ் ஃப்க்சன் தெரிந்தவர்களுக்கு இது பற்றி வெளங்கும்.
  
எனக்கு எப்பவுமே இந்த ஆங்கிலத்  திரைப்படங்கள் பார்க்கவே மனம் ஒப்பாது. ரெவ்யூ  பார்த்து நல்ல ரிசல்ட் ரேட்டிங்  எல்லாம் ஒக்கேவான்னு நில ஆர்ஜிதம் பண்றமாதிரி நல்ல விமர்சன ஊர்ஜிதம்  பண்ணிக்கொண்டுதான் பார்ப்பேன்.

என்னதான்  ஆங்கிலம் தமிழ் இந்திப் பன்மொழிப்புலமை இருப்பினும், இந்த ஆங்கில ஆக்சென்ட்  படுத்தும் பாடு, ஒரு சில  காட்சிகளில் அவர்களின் வார்த்தைப் பிரயோகம், காட்சியமைப்பு, தொழில் நுட்ப கிராபிக்ஸ்  இத்யாதி தில்லாலங்கடிகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒன்று, வசனங்களைக் கோட்டை விட்டிருப்பேன். வசனத்தைக் கவனித்தால் தொழில் நுட்பம் அல்லது  காட்சிகள், நடிப்பு இத்யாதிகளைக் கோட்டைவிட்டிருப்பேன்.

சில சமயம் தோன்றும், என்னக்கண்றாவிடா இது!! ஒவ்வொரு படத்தையும்  ரெண்டு ரெண்டு தடவை பார்த்தால்தான்  புரியும்போல இருக்கேன்னு? சில சமயம் இப்படிக்கூட  தோணும் 'தெரியாத்தனமா 100ம் இரு நூறும்  டிக்கெட் கொடுத்து உள்ளே வந்துட்டமோ,  ரெண்டு ரெண்டரை மணி நேரம்  எப்படிப் பொழுது போகுமோ?  ஒரு எழவும் புரியலேன்னு  எரிச்சலாய்த் தோணும். கோபம் கோபமாய்  வரும்.

இந்த ஹாலிவுட் படங்கள் அதுவும்  விஞ்ஞான வளர்ச்சி, ஃபிக்சன், ஆக்சன் த்ரில்லர் என்று  ரக வாரியாய் ரசிகர்கள்  உண்டு. எனக்கு அப்படியெல்லாம் இல்லை,  ரிவ்யூ நன்றாய் இருக்கிறதா, போனோமா,பார்த்தோமா என்றுதான் இன்று வரை எனது  ஆங்கிலப் படம் பார்த்த அனுபவம்.

சொன்னால்  நம்ப மாட்டீர்கள். படிக்கிற காலங்களில் படம்  பார்க்கறதே அபூர்வம். அதுவும் கும்பகோணம் மாதிரி  ஊர்களில் காலைக் காட்சி மட்டும்  எப்பவாவது ஜேம்ஸ் பாண்ட், ப்ரூஸ்லி  படங்கள் பார்த்ததுண்டு. அதுவும் நான் முதன்முதல் பார்த்த ஜேம்ஸ் பாண்ட்   படம் 'தி ப்ளூ லகூன்'.  ப்ரூஸ்லி  வரிசையில் '36 சேம்பர் ஆஃப் ஷாவோலின்'   'ஷாவோலின் டெம்பிள்' இது மாதிரிதான்.

நேற்று ஒரு புதிய படம்,  அதுவும் வந்த சில நாட்களிலேயே  தெரியாத் தனமாய் உள்ளே ஏதோ  ஓர் ஆர்வக்கோளாறில் போய் அமர்ந்தேன். 15 நிமிடம்  கூடத் தாண்டியிருக்காது. எழுந்து போய் விடலாமா   என்றிருந்தது.

ஒரு ஹாலிவுட் திரைப்படம் வந்து  ரெண்டாவது நாளிலேயே பார்ப்பது இதுதான்  எனக்கு முதல் அனுபவம் கூட.  ஆனால் பல்லைக் கடித்துக்கொண்டு 2 மணிநேரப் படமும் பார்த்து முடித்ததும்  தோன்றியது இதுதான்:

இது ஒரு ஃபேன்டஸி மாதிரிஃபிக்சனோ, சைன்ஸ் ஃபிக்சனோ என்றுஜெனர் (வகையறா) புரியலை.

ஆனால் எனக்கு  மனதில்  பட்டது:

நம் இராமாயண சுந்தர காண்டத்தைஅதுவும் அனுமார் சீதை தேடும்படலம் துவங்கி கணையாழியைக் காண்பித்து இராமபிரானிடம் 'கண்டேன் சீதையை' என்று  தண்டம் சமர்ப்பித்து தன் ப்ரயாண விருத்தாந்தங்கள்வரை ஒரே ஒரு படத்தில்  காட்டணும், அதுவும் அனுமாரின் போர்த் திறமை, விண்ணில் பாய்ந்து பறந்து அவர் சமாளிக்கும் லாகவம், இந்திரஜித், இன்னபிற ராவணக் குமாரர்களை அவர்  போரிட்டு ப்ரம்மாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டு ராவண சபையில் அவர்தம்  விவாதம், ராவணனுக்கு ஹிதோபதேசம் செய்வது, பின்னர் அனுமார்  வாலில் ராட்சசர்கள் தீயிட்டு அதன் பின்விளைவாய் இலங்கை முழுவதும் அவர்  த்வம்சம் செய்யும் காட்சிகள், அனுமாரின்  விஸ்வரூபம், சீதைக்கு அவர் காட்டும்  விஸ்வரூப தரிசனம் என்று பற்பல  காட்சிகள், ஜாம்பவான், அங்கதன், தசமுகன் (சுக்ரீவனின்  மாமா), கிஷ்கிந்தா இராஜ்ஜியத்தில் திராட்சைத் தோட்டத்தில்   வானரர்கள் அடிக்கும் லூட்டி சுக்ரீவன் தொடர்பான  காட்சிகள் இவற்றை ஹாலிவுட் படங்களில்  வர்ற மாதிரி எடுத்தால் நம்ம  ஷங்கர் டைரக்ட் செய்து ஒருபிரம்மாண்டம் வந்தால் எப்படியிருக்கும் என்று  தோன்றியது.

இனி குரு ஏறுமுகம் அல்லதுகுரு மேலெழுந்தபோது.................இந்தத் திரைப்படத்தின் விமர்சனமாய்என் பார்வை:

முதலில்குரு ஏறுமுகம் என்றால் என்ன?

ஜோதிட அல்லது வானசாஸ்திரத்தில் நவக்கிரஹங்களின்  கிரக சஞ்சார நிலை காலத்திற்குக் காலம், மாறுபடும். சில சமயம் சனி  உச்சத்தில் இருக்கும், சில சமயம் குரு  உச்சத்தில் இருக்கும். சில சமயம் ராகு கேது முதலானவை உச்சத்திலோ நீச்சத்திலோ  வக்கிரகதியோ உக்கிரகதியோ எடுக்கும்.

குரு சனி முதலான கிரகங்கள்கூட வக்கிரம் உக்கிரம் என்று  மூடுக்கு ஏற்றவாறு சூரியனைச் சுற்றியோ  இந்த அண்ட சராசரக் கேளிக்கையில்  அவரவர் சக்தி, ப்ரமாணம் இத்யாதிக்கு  ஏற்றாற்போல் சஞ்சாரம் செய்வர்.  அவ்வப்போது அந்தந்தக் கிரகங்களின் பொசிஷனுக்கு ஏற்றவாறு வெளிப்படும் அவர்களின்  சக்தி, அதன் மூலம் பூமி  என்கிற நம் கிரகத்தில் வாழும்  உயிரினங்களுக்கு என்ன பாதிப்பு, அல்ட்ரா வயலெட் அல்லது கதிர் வீச்சின்தன்மை, வீச்சம், வீர்யம், சக்தி  என்று பற்பல காரணிகளால் மனிதர்களாகிய  நமக்கு கோள் சாரத்தின் அடிப்படையிலும்  (கோச்சாரம்  என்பார்கள்) ஒவ்வொரு கிரகங்களின் தங்களுக்குள்ளேயான  நட்பு, பகை, சமகால உச்சம், நீச்சம், எதிர்ப் பார்வை, நேர்ப்பார்வை, 4ம் இடப் பார்வை,  5ம் இடப் பார்வை, யார்யார் சொந்த வீட்டில் இருந்தால்என்ன செய்வார்கள், எதிரி வீட்டில் இருந்தால்  என்ன செய்ய முடியும், நட்பு  வீட்டில் இருந்தால் என்ன செய்ய முடியும்  என்றுதான் ஜோதிடம் நமக்குச் சொல்லிக்  கொடுத்துள்ளது.

குரு (ஜூபிடர்) வளர்ச்சிப் பாதையில்  மேல் நோக்கி இருந்தால் அதுதான்  ஏறுமுகம் அல்லது மேலெழுந்தபோது...............எனலாம்.

இதற்கும்  இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம்? என்ன  சொல்கிறார்கள்? என்ன சொல்ல வருகிறார்கள்?

மேலே சொன்ன அண்டம், பேரண்டம்,  பற்பல காலக்சிகளில் ஒரு சிறு புள்ளிதான்  நாம் வாழும் இந்தப் பூமி  எனும் கெரகம். நமக்கு மற்றவையெல்லாம்  கெரகம் (ப்ளானெட்) என்றால் அவர்களுக்கு அங்கு  யாராவது வாழ்ந்தால் அவர்களுக்கும் சிந்திக்கும் திறமை, அவர்களுக்குள்ளேயே இருக்கக்கூடிய போட்டி, சர்ச்சைகள், போட்டிகள்,போர் முதலான சாத்தியக் கூறுகள்,  நாடு பிடிக்கும் மண்ணாசையில் ஒரு அரசனுக்கும் (அரசிக்கும்) மற்றொரு அரசனுக்கும் (அரசிக்கும்) இயற்கையிலேயே கெரக தோஷம் என்கிற வகையில் இருக்கக் கூடிய சண்டைகள்,கோல்ட் வார் (பனிப்போர்) ஒருவர்  மற்றவரை விழுங்கிச் சாப்பிடும் தூக்கிச் சாப்பிடும் ஆர்வக்கோளாறில் விளையும் விபரீதங்கள் என்று  நாம் பலவாறு யூகிக்கலாம், பூமியில்  வல்லரசுகளுக்குள் உள்ள போட்டி, நாடுகளுக்கிடையேபோட்டி, முதல் உலகம், இரண்டாம்உலகம், மூன்றாம் உலகம் இவர்களுக்கிடையே  உள்ள போட்டிகள், மூன்றாம் உலகில் முதல்உலகம் சாதிக்க நினைக்கும் அல்லது  அழிக்க நினைக்கும் கோணங்கள் என்று நாம்  புவியியல் தொடர்பாய் சிந்தித்தால்?   இரண்டோ அதற்கு மேற்பட்ட   ப்ளானட்டுகளில் அவர்கள் பார்வையில் பூமி  என்பது ஒரு ப்ளானட் அல்லது  கெரகம் அல்லது கிரகம்.

இங்கு உள்ள ஜீவராசிகள், வாழ்க்கை  முறைகள், இங்கு நடக்கும் நிகழ்வுகளில்  கெரக சூழல் அல்லது கோள்சாரம் ரீதியாக நடக்கும் நல்லது  கெட்டதுகள், பருவ மாற்றம், காலநேர வர்த்தமான மாற்றங்களினாலும், மேற்சொன்ன கண்டங்கள் தாண்டிய அடக்குமுறை, ஆதிக்க  சக்திகளின் போட்டி போர்க்குணம், இயற்கை  வளம் ஓரிடத்தில் இருந்தால் அவற்றை எப்படி வல்லரசுகள்  தங்கள் காலணிய மனப்போக்கில் அழிக்கவோ  தனதாக்கிக் கொள்ளவோ விழைவார்களோ அதன்   மற்றோர் பரிமாணம்தான் குரு ஏறுமுகம் அல்லது   குரு மேலெழுந்தபோது.......................

ஜூபிடர்  என்பது ஆண் கிரகம் என்றுதான்  நாமெல்லாம் அறிந்துள்ளோம். குரு அல்லது தக்ஷினாமூர்த்தி  என அறியப்படும் கிரகம்கூட ஆண் வகைதான். அல்லதுஅலி வகை எனலாம், சிவசக்தி  ஸ்வரூபம் என்று கொண்டால்).

வீனஸ் பெண் கிரகம், சூரியன்  சந்திரன் ஆகியவை கூட ஆண்கிரகங்களே.

ராகு கேதுவுக்கு ஆண் பெண் பேதமில்லை.  பாம்பு உடல் மற்றும் தலைமனித ரூபத்தில் இருப்பது ஒரு ராகுவோ  கேதுவோ எனக் கொண்டால் மனித  உடலும் பாம்பைத் தலை ரூபமாகக்  கொண்டது மற்றது. இதிலேயே எதுராகு, எது கேது என்பதே  நம்மில் பலருக்குத் தெரியாது, புரியாது என்பது வேறு  விஷயம்.

நாயகி ஜீபிடர் ஜோன்ஸ்  பூமியில் ஏதோ ஒருஅமெரிக்க நகரில் வாழும் சாதாரணக்  குடிமகள், ஒரு வீட்டில் பணிப்பெண்.  வீடுகூட்டி டாய்லெட் சுத்தம் செய்து  எடுபிடி வேலை செய்து வீட்டைப்  பராமரிக்கும் ஒரு பெண். அவ்வளவே.

பூமியில்  வாழும் பற்பல ஜீவராசிகளுக்கு தெரியாத  வெளங்காத விஷயம், இங்கு மட்டுமல்ல  பல கிரகங்களிலும் (அறிக,  ப்ளானட்டுகளிலும்) நடந்தேறும் பற்பல சங்கதிகள், வேற்றுக்  கிரகங்களிலிருந்து அலேயின் ரூபத்தில் இங்கும்  அங்கும்  வந்து  விதை விதைத்து நம்மில் பல  மாற்றங்களை காலப்போக்கில் அவர்கள் விரும்பியவாறு இங்கு  நடத்திக்கொள்ளும் விந்தை என்பது ஒருஅறிமுக (வி)யூகம்.

டார்வினின்  பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளில் வருவதுபோல (அதேதான் என்று சொல்ல  இயலாது) ஒருவித பர்ஃபெக்சன் வரும்வரை  இந்த அலேயின்கள் மேலே மேலே உள்ள  ஏதோ ஒரு அப்ரசாக்ஸ் என்கிற  டைனாஸ்டிக்கு (ஆட்சியாளர்கள், பெருந்தனக்காரர்கள், நம் இதிகாச புராணரீதியில் சொன்னால் மன்னராட்சியின் விழுதுகள்,  பரம்பரை மன்னர்களின் அடிவருடிகள், சுருங்கச் சொன்னால் திவான்கள், ஆமாம் ஸாமிகள் எனலாம்) விசுவாசமாய் இருக்கக்கூடிய இந்த அலேயின்கள் அவ்வப்போது  பூமிக்கு வந்து தங்கள் நினைத்தவாறு  விதை  விதைத்து நம்மில் பல குழப்பங்களை  விதைத்து அதனால் விளையும் அவர்களுக்குச்  சாதகமான அறுவடைகளை மேலே கொண்டு சென்று  தங்கள் மன்னர்களுக்கு சமர்ப்பிக்கும் ஒரு வித வேற்றுக் கிரக அடிமைகள் அவ்வளவே.

இந்த அப்ரசாக்ஸ் எனும் ஒரு டைனாஸ்டியின்  ஆட்சியாளர் இறக்கும் போது அவர்தம்  வாரிசுகள் பாலெம், கல்லிக், டைட்டஸ்  இவர்களுக்கு வாரிசுப்போர் மூள்கிறது. ஆட்சி அதிகாரமும் கஜானாவும்  யாருக்கு என்கிற யதார்த்தமான போட்டி.

அப்போது  அவர்களுக்குத் தெரிய வருகிறது. புவியில்  வாழும் ஜீபிடர் ஜோன்ஸ் இவர்களின்  வம்சாவளி என்றும் அவளும் ஒரு  வாரிசு என்றும் அவளுக்கு தன் பூர்விகமும் தான் ஒரு வம்சாவளி வாரிசும் என்பதும் தான் இந்தப் பூமியில் வாழ்வதும் கூட ஏன் எனத்  தெரியாத ஒரு பணிப்பெண். அண்டை  அயல் வீடுகளில் வீடு கூட்டி வாழும்  துப்புரவுத் தொழிலாளி என்பது அவள்  அறிந்த தகவல்.

அப்போதுதான்  ஜெனடிக்கலி மாடிஃபைடு என்று சொல்லப்படும் கிரகங்களின்  ஊடே சஞ்சாரிக்கும் கேயின் வைஸ்  ஜூபிடரைக் கண்டு கொண்டு அவர்தம் ரகசியம் அறிந்தவனாய்  அவளது டி என் ஏ  அல்லது ஜெனடிக் கையொப்பம் மேலே  சொன்ன அப்ரசாக்ஸ் வாரிசுகளின் டி என் ஏயுடன் ஒத்துப்போகிறது என்கிறதை உணர்ந்து அவளிடம்  இந்தத் தகவலை ஒரு நல்லநாளில் சுப மூகூர்த்தம் பார்க்காமல்  சொல்லுகிறான்.  

பாலெம் இந்த ஜூபிடர் ஜோன்ஸின்  தலைக்கு ஒரு கோடியோ பத்துகோடியோ ஒரு பெரிய விலை  (எங்கிருந்தாலும் கொண்டுவா, அவன் தலை அல்லது  உடல் எனக்கு வேண்டும் என்கிறமாதிரி) வைக்கப்பட்டுள்ள விபரமும் கேயின் வைஸுக்கு  தெரிந்துள்ளதால், அவளைக் காப்பாற்றும் ஒருபொறுப்பும் வைஸுக்கு இருக்கிறது.

ஜூபிடரை  மேலெழும்பி வேற்றுக் கிரகத்துக்கு வைஸ்இட்டுச் செல்கிறான், அவள் சந்திக்கும் பிரச்சினைகள்,  அவளுக்காக அங்கு காத்திருக்கும் சங்கடங்கள், இடையே ஜீபிடர் வைஸ் மீது  காதல் கொள்கிறாள், அந்தச் சங்கடங்களிலிருந்து ஜூபிடர்  எப்படி தப்பிக்கிறாள், வைஸ் எப்படியெல்லாம் அவளைக்  காப்பாற்றுகிறான், மீண்டும் அவளை பூமிக்கே  கொண்டு வருகிறான் என்பதுதான் மீதிக் கதை.

மொத்தமும்  சொல்லிவிட்டால் படம் பார்க்கும் ஆர்வம்  உங்களுக்குப் போய்விடும். மற்றவை வெள்ளித் திரையில்  திரையரங்கில் மல்டிப்ளெக்ஸில் சவுண்டு டி டிஎஸ் வசதி உள்ள அரங்கில்  காண்க.


 எல்லாம் சொன்னே சரி, விமர்சனம் எங்கேய்யா என்று கேட்கிறீர்களா? விஷயத்துக்கு வராமல் முடிப்பேனா?

ஸ்டார் வார்ஸ், மாட்ரிக்ஸ் இத்யாதி ஃபிக்சன்கள் அதிகம் பார்த்ததில்லை. இன்றைய இளைய தலைமுறையும் எனக்கு உடனடிப் பிந்தைய சகோதரர்களும் பார்த்திருக்கக் கூடிய அல்லது வியந்திருக்கக் கூடிய விஷயங்கள் அனேகம் இருக்கும்.

இந்த நடுவயது தாண்டிய கோமாளி விமர்சனம் செய்தால் நாடு தாங்குமா?

நெட்டில் படித்த ஒரு சில விஷயங்கள் (விமர்சனம் என்கிற வகையில்) எனக்குக் கண்ணில் பட்டதும் எனக்கு என் கோணத்தில் பார்த்ததும் என் பார்வைக்கு ஓரளவுக்கு ஒத்துப்போன ரெவ்யூ வேண்டுமானால் இங்கு சமர்ப்பிக்கிறேன். இது ஒருவித சார்பு நிலை அல்லது எதிர் நிலை கொண்ட கோணமாகக் கூட இருக்கலாம். அவரவர் பார்வையில் சாதக பாதகங்கள் இருக்கலாம்.

இதுமாதிரி ஃபேன்டஸி அல்லது சயின்ஸ் ஃபிக்சன் படங்களை முன்னே பின்னே பார்க்காத சூழலில் விமர்சிப்பது எனக்கு அபூர்வமும், ஆர்வக் கோளாறும் கூட. எனவே என் கருத்து என்பது இங்கு அவசியமில்லை.

கூடவே விமர்சனம் என்கிற ரீதியில் ஒரு படைப்பின் முழுக் கதையையும் சொல்லிவிடுவதும் அபத்தம் என்பது எனக்கு தெரியும். எனவேதான் சிற்சில முன்னுரைகளோடு என் பின்னணியை விளக்கி தீமை (கருத்துக்கோர்வை) மட்டும் மேலே சொல்லியுள்ளேன்.

மற்றவை இந்த லிங்க்கில் அறிக.


No comments:

Post a Comment