காயமே இது பொய்யடா, காற்றடைத்த
பையடா!!
சட்டி சுட்டதடா கைவிட்டதடா, எல்லாம்
விழலுக்கிழைத்த நீராய்ப் போனதடா!!
ஆறு மனமே ஆறு, அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு!!
ராம் அந்தக் குடும்பத்தின் கடைசி
ஆண் வாரிசு.
12 பேர்
அண்ணன் தம்பிகளாய் ஜனித்ததில் பிறக்காமலேயே கருவிலேயே இயற்கையாய் அழிந்தவர்கள் 4 பேர்.
4 ஆண் 4
பெண் என்று பிறந்ததில் 3 பெண்
1 ஆண் குழந்தைகள் 9 மாசம், 1.5 வருஷம் அதிக பட்சம்
2 வருஷம் என்று எதேதோ காரணங்களால்
உயிரிழந்தார்கள். பிறந்தவர்களில் ராம் வரிசை எண்
7. பிறந்து நீண்ட காலம் வாழ்ந்தவர்களில்
அவன் வரிசை எண் 4.
12பேரை சுமந்த வயிற்றுக்கு குடும்பத்தின்
ஏழ்மை காரணமாய் (வறுமையில்லை, வறுமை வேறு ஏழ்மை
வேறு!!) தக்க புரதச் சத்து
இல்லாமை கூட இருக்கலாம், அந்தக்
குழந்தைகளை பராமரித்து வளர்க்க.
தாய்க்கோ
தகப்பனுக்கோ அதிகம் படிப்பறிவு இல்லை.
நிலம் நீச்சு என்று பிதுரார்ஜிதச்
சொத்து எதுவும் இல்லை. தகப்பனின்
சொல்ப வருமானம்தான்.
தகப்பன்
ஆனவன் அவன் உடன்பிறந்த கடைசி
இரு தம்பி தங்கைகளை அவர்தம்
2 அல்லது 1.5 வயசிலிருந்து ஆளாக்கி திருமண பந்தம்
என்று கால ஓட்டத்தில் தியாகியாய்
வாழ்கிறான்.
அந்த இரண்டு குழந்தைகளின் வளர்ப்பில்
கூட, தனக்கும் 12 குழந்தைகள் உருவாகி காலப்போக்கில் தன்னையே
அந்தக் குடும்பத்திற்காக (மூத்த மருமகளாக) கரைத்த
உத்தமி அவள்.
அந்தத் தகப்பன் சத்தியம் தவறாதவன்,
தன் வரையில் நாணயம், நா
நயம், நேர்மை, தான் உண்டு,
தன் தொழில் உண்டு என்று
இருந்தவன், சற்று முன்கோபி அவ்வளவுதான்.
தங்கிய நால்வரில் மூத்தவன் படிப்பிற்காக தன்
சம்பாதித்த காசில் அவனை பட்டதாரி
ஆக்கவே அந்தத் தகப்பனுக்கு நாக்கு
தள்ளுகிறது.
தங்கிய ஒரே ஒரு பெண்
குழந்தையும் போலியோ அட்டாக்கினால் பிறவியிலேயே
இரண்டு கால்களும் நடக்க இயலாதவள்.
தாயானவள்
மூத்தவன் படிப்பு முடிக்கும் முன்பேயே
நோய்வாய்ப்பட்டு என்ன நோய் என்று
அறியப்படாமலேயே இயற்கை எய்தினாள். அப்போது
ராமுக்கு வயது 8.
அந்த ஒரே அக்காதான் ராமுக்கு
தாய் தமக்கை எல்லாமுமே. விவரம்
தெரிந்த நாளிலிருந்தே ராமுக்கு அவன் தாய்
முகம் அதிகம் நினைவில்லை. ஒரு
சில சந்தர்ப்பங்களில் பழைய புகைப்படங்களில் காட்டி
அடையாளம் சொல்லப்பட்ட நபருடன் சில இடங்களுக்கு
சென்ற மலரும் நினைவுகள், குழந்தைப்
பருவத்து நினைவுகளோடே அவன் வளர்கிறான். கல்வி
கேள்விகளில் நல்ல தேர்ச்சி பெறுகிறான்.
மூத்தவனுக்கு
எப்படியோ ஒரு வேலை கிடைக்கிறது,
திருமணம் ஆகிறது, அவனும் தன்
வாழ்வில் தன் வழியில் செல்கிறான்.
நடுவில்
உள்ளவன் படிப்பு முடித்து கல்லூரிப்
படிப்பை ஓராண்டிற்கு மேல் படிக்க வைக்க
அவன் தகப்பனால் இயலவில்லை. வேறு வழியின்றி அவனும்
வேலைக்கு செல்லத் தலைப்படுகிறான்.
காலம் ஓடுகிறது. ரெண்டாமவனுக்கு திருமணத்திற்கு முன்பே வளைகுடாவுக்கு செல்லும்
வாய்ப்பு கிடைக்கிறது, செல்கிறான்.
கூடவே கடைசித் தம்பி படிக்க
தன்னாலான உதவியைச் செய்கிறான்.
கடைசித்தம்பியான
ராம் +2 படிக்க அரசு ஸ்காலர்ஷிப்
(கடனுதவி) கிடைக்கிறது, அதன் மூலம் பெற்று
தேர்ச்சி பெறுகிறான். அந்தக் காலத்தை ஒட்டிய
மேலதிக தொழிற் பயிற்சி பெறுகிறான்,
ஒரு மேய்ப்பனின் மந்தையில் ஓடும் அனைத்து ஆடுகளும்
ஒரு மாதிரி தானே போகும்.
கூட்டத்தோடு கோவிந்தா போடுவது மாதிரி.
ராம் கல்லூரியில் படிக்க வசதியில்லை, மார்க்
இருந்தும். தகப்பன் மூலம் உதவி
பெற வழியில்லை, ரெண்டாமவன் உதவிக்கு வருகிறான். 3 வருடம்
ஓடுகிறது. ராம் படித்துக்கொண்டே ஒரு
அலுவலகத்தில் பணி புரிந்துகொண்டே துறை
சார்ந்த பயிற்சி பெறுகிறான்.
காலம் விரைவாக ஓடுகிறது. ஒரே
தமக்கையானவள் நோய்வாய்ப்படுகிறாள், அகால மரணமும் அடைகிறாள்
இளம் பிராயத்தில் திருமணம் என்கிற பந்தத்திற்குள்
செல்லும் வாய்ப்பு கிட்டாமலேயே. (இருந்திருந்தால்
அவளுக்கு திருமணம் லயித்திருக்குமா, தெரியாது!!)
ராம் தன் துறையில் மேல்
படிப்பு தானே படிக்கிறான், ரெண்டாமவனின்
தயவிலும் தன் சேமிப்பிலும். காலப்போக்கில்
இருவருக்கும் அடுத்தடுத்து திருமணம் நடக்கிறது.
ரெண்டாமவன்
முதலிலேயே வளைகுடாவில் இருந்ததால் இவனும் வளைகுடாவுக்கு செல்கிறான்,
உள் நாட்டில் வந்த வாய்ப்புக்களை
தூக்கிப் போட்டுவிட்டு. உள் நாட்டு வாய்ப்பை
ஏற்கணும் என்று தந்தை சொல்கிறார்,
உள்ளமும் அதையே நாடுகிறது, ஆனால்
உற்றம் சுற்றம் கொண்டவள் கூறிய
அறிவுரையைத் தலைக்கேற்றி அவனும் வளைகுடா செல்கிறான்.
குழந்தைகள்
பிறக்கின்றன இரு குடும்பத்திற்கும். அவர்கள்
ஒருங்கே படிக்கிறார்கள், வாழ்வில் செட்டிலானதாய் நினைக்கிறார்கள்.
சேமிப்பில் வீடு வாசல் சேர்கிறது.
சகோதரர்கள்
இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டே தம் வாழ்க்கையில் தத்தம்
தொழிலில் முன்னேறுகிறார்கள்.
உடன் பிறந்தோர் இருவரும் தத்தம் குடும்பத்தை
பேணிக்காக்க அல்லும் பகலும் நேர்மையாய்
நாணயமாய் சீராய் குடி கூத்து
அது இது என்று கயமை
பாராமல், தகப்பன் காட்டிய நேர்
வழியில் குடும்பத்திற்காக இரத்தம் சிந்தி உழைக்கிறார்கள்.
ஒரு காலக்கட்டத்தில் வளைகுடாவில் தொடர்ந்து படிக்க வைக்க இயலாது என்கிற
நிலைமை புரிகிறது. குடும்பங்களை மட்டும் தாய் நாட்டிற்கு
அனுப்பி விட்டு சகோதரர்கள் இருவரும்
தொடர்ந்து உழைக்கின்றனர்.
ராம் சிறு வயதிலிருந்தே தாயின்
மேற்பார்வையில் வளரும் பேறு இல்லாததால்
தனியே வளர்கிறான், உற்றம் சுற்றம் என்று
ஆதரவு இல்லை, உடன் பிறந்தோர்
தவிர.
அக்கம் பக்கம் பார்த்து 'என்ன
நடக்கிறது? மனித வாழ்வில் ஒவ்வொருவரும்
எப்படி இருக்கிறார்கள், அவரவருடைய தகுதி என்ன, குடும்பச்
சூழல் என்ன, வாழ்வில் யார்
எப்படி தத்தம் குடும்பத்தை நடாத்துகிறார்கள்'
என்று அவதானித்து தன்னை மனத்தளவில் செப்பனிட்டுக்கொள்கிறான்.
கொள்கையளவில்
இதை இதைச் செய்யணும் என்கிற
குறிக்கோள் ஏதும் பெரிதாய் இல்லாவிட்டாலும்,
'தான் வளரும்போது எப்படியெல்லாம் வாழக்கூடாது, எந்தெந்த நெகடிவ் சிந்தனைகள்
தனக்கு மனத்தளவில் இருக்கக்கூடாது' என்கிற தெளிவு அவனுக்கு
இளம் பிராயத்திலேயே ஏற்படுகிறது.
'என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் அடுத்தவன் பாக்கெட்டில் கைவைக்கக் கூடாது, அடுத்தவன் பெண்டாட்டிக்கு
ஆசைப்படக்கூடாது, குடி சிகரெட் அது
இது வீணே அழியக் கூடாது,
நேர்மையாய் வாழ்வில் செல்ல வேண்டும்'
என்பது ஒன்று மட்டும் அவனது
கோட்பாடு.
ஒரு கொள்கைவீரனாய் தனக்கென்று ஒரு குறிக்கோள் இல்லாவிட்டாலும்
ஆற்றின் போக்கில் செல்லும் மரக்கட்டை
போலே சகோதரனுடன் பயணிக்கிறான், வாழ்க்கைப் பாடம் கற்கிறான்.
கற்றதை விளம்புகிறான் தக்க சமயத்தில் தக்க
தருணத்தில் அடுத்த தலைமுறையிடம் அனுபவம்
பகிர்கிறான்.
காலம் உருண்டோடுகிறது.
குழந்தைகள்
ஒவ்வொருவராய் கடைத்தேறி அவரவர் வழியில் விருப்பப்பட்டதை
படிக்கிறார்கள், இள நிலை முது
நிலை என்கிற பட்டம் படிக்கிறார்கள்.
(கடனோ உடனோ வாங்கி தகப்பன்கள்
தம் கடமையை ஆற்றுகிறார்கள் என்பது
சொல்லத்தேவையில்லை).
இடையே ரெண்டாம் தலைமுறை சகோதரர்களில்
இளையவனாகிய ராம் தொழிலில் புதியன
கற்று தன்னை மெருகேற்றிக் கொள்கிறான்,
அதன் பலனாய் தொழில் நிமித்தம்
பலவாறு பிராந்தியங்களூக்கும் பல நாடுகளுக்கும் திக்
விஜயம் செய்யும் வாய்ப்பு பெறுகிறான்.
தன் உழைப்பினால் முன்னேறுகிறான்.
இரு குடும்பத்திலும் ரெவ்வண்டு வாரிசுகள். நால்வரில் ஒருவர் மட்டுமே பெண்
வாரிசு. அதாவது எடுத்துக்கொண்ட கதைக்கோளத்தின்படி
மூன்றாம் தலைமுறை வாரிசு.
குழந்தைகளில்
நாலாமவன் இப்போதுதான் பள்ளிப் படிப்பை முடிக்கும்
முன், இரு சகோதரர்களுக்கும் (இரண்டாம்
தலைமுறை தகப்பன்கள்) அடுத்தடுத்து காலம் தன் வேட்கையை
காட்டுகிறது. இதய நோய் இன்ன
பிற உடல் உபாதைகள். வயதுக்கே
உரிய பிரச்சினைகள்.
தம் குழந்தைகள் படித்து முடித்து வேலைக்கு
போகத் தலைப்பட்டபின் மூத்தவன் (அதாவது முன் தலைமுரை
மூவரில் ரெண்டாமவன்) விருப்ப ஓய்வு பெறுகிறான்,
தாய் நாடு திரும்புகிறான்.
ராம் தனக்கேற்பட்ட உடல் நிலை பாதிப்பில்
பார்த்த வேலை இழக்கிறான், அடுத்த
வேலை கிடைக்க கால அவகாசம்
எடுக்கிறது. இருக்கிற கடன்கள் கடமைகளை
ஆற்ற சேமிப்பு சிறிது சிறிதாய்
கரைகிறது.
கால ஓட்டத்தில் மூன்றாம் தலைமுறை குழந்தைகளில்
மூவர் மட்டும் வேலைக்கு செல்ல,
நாலாமவன் மட்டும் பள்ளிப்படிப்பை முடித்து
கல்லூரிக்கு செல்ல ஆயத்தமாகிறான்.
ராம், அந்த நாலாமவனின் தந்தை,
தன்னால் இயன்றவரை தன் ஒரே
மகனின் கல்லூரிப் படிப்புக்கு உதவி செய்ய தான்
என்ன செய்ய முடியுமோ அதைச்
செய்ய தலைப்படுகிறான். தன் தொழிலில் கவனமாய்
இருந்தும் உடல் நிலை அவ்வப்போது
தரும் உபாதைகளால் கிடைக்கும் ஒவ்வொரு வேலையும் சிறிது
காலமே நிலைக்கிறது, வருமானம் குறைகிறது. சேமிப்பு
வீணே கரைகிறது.
முன்பு வாங்கிய சொத்துக்கள் ஒவ்வொன்றாய்
விற்கிறான், இருக்கும் மிச்சத்தையும் கட்டிக்காக்க பிரம்மப் ப்ரயத்தனப்படுகிறான்.
ராமின் வாரிசு, மூத்தவள் கல்லூரிப்
படிப்புக்கு தனக்குத் தானே கடனுதவி
பெற்று படிக்கிறாள், தகப்பனின் சுமையை குறைக்கிறாள்.
படிப்பு
முடித்தபின் தொழிலில் படிப்படியாய் முன்னேறி
தான் வாங்கிய கடனை தானே
அடைக்கிறாள் சிறிது காலத்டிலேயே. சிக்கனமாய்
தன் வாழ்வியலை அடியொற்றி.
இடையே மனத்தளவில் ராமுக்கும் மூத்தவளுக்கும் சிலபல காலமாய் ஒருவித
பிணக்கு இருந்து வந்திருக்கிறது. பல
ஆண்டுகள் ராம் தனியே வாழ்ந்து
அனைத்து மார்க்கங்களிலும் 'தன்னந்தனியே' இருந்து வந்ததால் (சிறு
வயது முதல்) ராம் குடும்பத்துக்கு
தன் கடமையை செய்தாலும், அதில்
குறைவைக்கவில்லை. எனினும் ராம் சற்றே
வெளிப்படையாய் விஸ்ராந்தியாய் பேசுபவனாய் நட்பு வட்டத்தில் இருந்தாலும்,
யாரும் அவனை அணுகி ஆலோசனை
கேட்டால் கருணை மழை பொழிவது
போல் தன் அனுபவ அறிவைக்
கொண்டு எல்லாருக்கும் உதவிகரமாய் வாழ்ந்து வந்துள்ளான்.
அவனது குணாதிசயம், தான் உண்டு, தன்
வேலை உண்டு, கூடவே தன்னைச்
சுற்றியுள்ளவர்களை பேணிக் காக்க வேண்டும்,
அண்டியவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். ஒரு லிபரல் டிமாக்ரடிக்,
நிச்சயமாய் அல்டிமேட் கன்சர்வேட்டிவ் அல்ல, வாழ்ந்து வந்திருக்கிறான்.
அடுத்தவர் விஷயங்களில் தலைகொடுக்க மாட்டான், உதவி கேட்டால் ஒழிய.
அக்கப்போர் அறவே பிடிக்காது, வீண்
வம்புக்கு போக மாட்டான், தன்
வரையில் எது நியாயம் எது
தர்மம் என்று படுகிறதோ அதன்
வழியில் தன் வாழ்வை வாழ்ந்து
வருபவன்.
ராம் வாழ்க்கையில் குழந்தைகள் மீதும் அந்தக் குழந்தைகள்
மீதும் சகோதரனின் குழந்தைகள் மீதும் எந்த அளவுக்கு
பாசமும் நேசமும் அன்பும் வைத்துள்ளான்
என்பது அனைவருக்கும் தெரியும். சகோதரர்களில் மூத்தவன் தேவைப்பட்டால் ராமிடம்
ஆலோசனை கேட்பதுண்டு. ராமும் சிலவமயம் மூத்தவனின்
ஆலோசனையில் வாழ்வியல் நடைமுறைகளை பார்த்தவன், அனுசரித்தவன் தான்.
தான் பட்ட இளமைப் பிராயத்துக்
கஷ்டங்கள் தன் குழந்தைகள் படக்
கூடாது, தனக்கேற்பட்ட 'கல்வி கேள்வி தேர்ச்சி'
அதன் தாக்கம் சிறு வயதிலேயே
அவன் ஆழ்மனதில் வேரூன்றி விட்டது. சரியான
தொழிற்கல்வி (இஞ்ஜினியரிங் மருத்துவம் இன்ன பிற தகுதிகள்
இல்லை, சராசரியாய் அந்தந்தக் காலத்தில் படிக்கும் பி.ஏ. பி.எஸ்.ஸி, பி.காம் தான் படிக்க
முடிந்தது) எனவே தம் குழந்தைகளை
அவரவர் விருப்ப்ப்பட்டதை படிக்க வைக்கணும், சொத்து
சேர்க்கிறோமோ இல்லையோ படிப்பு என்கிற
ஒரு தகுதியை தம் பிள்ளைகளுக்கு
தரணும், அதுதான் அவர்களுக்கு பிற்காலத்தில்
உதவும் என்கிற சித்தாந்தத்தில்தான் ரெண்டாம்
தலைமுறை சகோதரர்களாகிய ராமும் அவனது சகோதரனும்
வாழ்ந்தனர்.
இடையே ராமின் வாரிசு, மூத்தவளுக்கு
ஒரு உளப்பூர்வமான ஏக்கம் இருந்துவந்திருக்கிறது. 'ராம் ஒரு
தகப்பனாக தன்னைக் கவனிக்கவில்லை, தன்னிடம்
ராமுக்கு அன்பு இல்லை' என்று
ஒரு தவறான அபிப்பிராயம் இருக்கிறது.
இது ராமுக்கு வெளிப்படையாய் சொல்லப்பட
அவளுக்கு வயது 20க்கு மேல்தான்
வாய்ப்பு கிட்டுகிறது. இந்த ஏக்கம் தாய்க்கு
முன்னரே தெரிய வந்திருக்கிறது. கணவனின்
போக்கு அறிந்து இதை அவனிடம்
சொல்லாமலேயே காலம் தாழ்த்தி வந்திருக்கிறாள்.
கணவன் குணம் தெரியும், இந்தக்
குடும்பத்திற்காக அவன் படும் பாடு
தெரியும், இதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்று
அவள் நிதானித்திருக்கலாம், ஒரு வேளை. கணவன்
பார்வைக்கு அந்த ஏக்கத்தின் தாக்கம்
வர கால அவகாசம்
எடுத்துக்கொண்டது / எடுத்துக்கொள்ளப்பட்டது.
குடும்பத்தில்
நடப்பதை அவதானிக்கிறாள். தகப்பனின்
குணாதிசயம் அறிந்தவள், 20வயது வரை அவன்
ஒரு ஐடியல் தகப்பனாய் அறியப்பட்டவன்,
பறைசாற்றப்பட்டவன். இது மாதிரி ஒரு
ஐடியல் பெற்றோர் அமைய கொடுத்து
வைத்திருக்கணும் என்று உற்றம் சுற்றம்
நட்பு வட்டத்தில் பொறாமைக் கண் கூட
பட்டிருக்கலாம்.
தக்க சமயத்தில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தன்
உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகிறாள், மாற்றுக் கோணத்தில்.
எந்தத் தகப்பனுக்குமே தம் குழந்தை அப்படி
வளரணும் இப்படி வளரணும் என்று
ஒரு கட்டுக்கோப்பான பாரம்பரியம் சார்ந்த சமூகக் கட்டுப்பாடுகள்
சார்ந்த ஒழுங்குமுறை இருக்குமே? ராமுக்கு இந்தச் சமூகக்
கட்டுப்பாடுகள் தெரியும், எந்த விதத்திலும் அவரவர்
வாழ்வியல் உரிமைகளில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
என்பதை அமல்படுத்துவதில் அவரவர் உரிமையில் தலையிடக்
கூடாது, மூடத்தனமான பழக்க வழக்கங்கள் சனாதனாதி
விஷயங்களில் அவனுக்கு ஈடுபாடு இருந்தும்
அவனே அவற்றை கடைப்பிடித்தானா என்றால்
பெரிய கேள்விக்குறி. அவனுக்கு 40 வயது வரும்போதுதன் அவனே
தன்னை மெருகேற்றிக்கொண்டு தன் வழியில் குடும்பத்
தலைவனாய் பொறுப்பாய் அவற்றை ஒழுக்கக் கோட்பாடுகளாய்
வாழ்வில் ஏற்றுக்கொண்டான்.
அதே சமயம், சனாதனாதி விஷயங்களை
அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று
அவன் விருப்பப்பட்டு அவர்களிடத்தில் திணிக்க அவன் மனம்
ஒப்பவில்லை. காரணம், தானே பற்பல
தடைகள் தடைக்கற்கள் சோதனைகள் வேதனைகள் உள
மனச் சிக்கல்களைத் தாண்டித்தானே இன்று இந்த நிலைக்கு
வந்திருக்கிறோம், என்று குழந்தைகளிடம் விட்டுப்
பிடிப்போம், எதையுமே திணித்தால் வேலைக்கு
ஆகாது என்று காலப்போக்கில் அவர்களே
உணர்வார்கள் (தான் உணர்ந்தது மாதிரி
என்று) வாளாவிருந்துவிட்டான்.
தாயும் தன் வரையில் ஒழுங்காய்
இந்தக் குடும்பத்திற்கு உழைத்தாள், உழைக்கிறாள். கணவன் பொருளீட்ட தேசம்
தேசமாய் செல்கிறானே என்று குடும்பத்தை செவ்வனே
பராமரிக்கிறாள்.
அவ்வப்போது
பெற்றோருக்கு இடையே அனைத்துக் குடும்பங்களிலும்
நடக்கும் சாதாரண குடும்பச் சச்சரவுகளை
அவதானிக்கிறாள், மகள்.
எல்லாத்
தோழிகள் தோழர்கள் போல் தன்
தந்தை தன்னுடன் சரியாய் வெளிப்படையாய்
பேசுவதில்லை என்று அவளுக்குள் ஒரு
ஏக்கம், ஆனால் அவன் ஒரு
தலைவனாய் தனக்குத் தெரிந்த அளவில்
தன் கடமையை ஆற்றுகிறான் என்கிற
தெளிவும் இருக்கிறது.
அந்தச் சச்சரவுகளை 'வரம்பு அல்லது ஒழுங்குமுறை
விதி மீறல்களாய்' (அன் எதிக்கல்) அவள்
பார்க்கிறாள். அவள் வாழ்ந்த பார்த்த
அவதானித்த மேற்கத்திய நாகரிகச் சமூகம் அப்படி.
அவன் வாழ்ந்த பார்த்த அவதானித்த
ஆசிய இந்திய அரபுப் பிராந்திய
சமூகம் ஒரு வகை. அவன்
வரையில் அவன் ஒரு சனாதனாதியல்ல.
காலத்தின் போக்கையறிந்து கண்ணியமாய் தன்னை மெருகேற்றிக்கொண்டு 'எப்போது
எதை எந்தச் சந்தர்ப்பத்தில் எப்படி
அணுகவேண்டுமோ அப்படி அணுகணும்' என்கிற
தெளிவு அவனிடத்தில் உண்டு.
சிறு வயதுமுதலே 'குழந்தைகளை அதிகம் சனாதனாதி வழியில்
கண்டிக்கும் தண்டித்து வளர்க்கும் மனப்போக்கு' இரு சகோதரர்களுக்கும் இருந்ததில்லை.
காலத்திற்கேற்ற விட்டுக்கொடுத்தல், அனுசரித்தல், சகிப்புத்தன்மை, குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு
தக்க சமயத்தில் தட்டிவைக்கும் மனப்பாங்குதான் இருவருக்குமே. ஒழுங்குமுறை மாறும்போது தலையிட்டுக்கொள்ளலாம் என்கிற பெருந்தன்மையான போக்கு
என்று சொல்லலாம், இதை ஒரு லிபரல்
டெமாக்ரடிக் செட்டப் என்று தான்
சொல்ல முடியும். கன்சர்வேடிவிசமும் ஆட்டோக்கிரட்டிக் (யதேச்சாதிகாரம்) குணாதிசயங்கள் இங்கு வேலைக்கு ஆகாது
என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
அப்படி கன்சர்வேட்டிவ் அல்லது யதேச்சாதிகாரம் வெளியே
காட்டினால் அடுத்த தலைமுறை இளையவர்கள்
கேட்பார்கள் என்பது அரிதினும் அரிது.
அவர்கள் பார்க்கும் அனுபவிக்கும் தொழில் நுட்பம் சார்ந்த
மாய உலகம் வேறு. இந்த
மாய உலகத்தில் வாழ்ந்துகொண்டே சனாதன வழிகளில் செல்லவும்
இயலாமல், மாற்றங்களை ஓரளவுக்கு ஜீரணித்துக்கொண்டு தன் வரையில் நியாயமாய்
வாழ்பவர்கள் அந்த இரு தம்பதிகளூம்
(பெற்றோர்களூம்).
கொஞ்சம்
சீரியஸாய் பேசினால் 'உன் பழைய சங்கதிகளை
உன்னுடனே வைத்துக்கொள், எங்கள் கோட்பாடு பிரயத்தனங்கள்
உங்களுக்கு புரியாது, நாங்கள் பார்க்கும் உலகம்
இது, எங்கள் மேல் பழைய
வழியில் எதையும் திணிக்க வேண்டாம்'
என்று அவற்றை திணிக்காமலேயே ஒரு
வாதம் விவாதப் பொருளாய் இருந்ததுண்டு.
எனவே ராம் அவனைப் பொறுத்தவரையில்
தன் தொழிலில் கவனம் செலுத்தினான், தன் பொருளாதார நிலைமை அவற்றில் உள்ள சங்கடங்களை கஷ்டங்களை
நிவர்த்திசெய்யும் போக்கில் தொழிலில் கவனம் வைத்தான். குடும்பத்தை கவனிக்காமல் இல்லை, தலைவி தன் வழியில்
நிர்வாகப் பொறுப்பை எடுத்துக்கொண்டிருக்கிறாளே என்று பொருளீட்டும் வழியில் தன் கவனத்தை
வைத்திருந்தான்.
காலம் செல்லச் செல்ல
இந்த தந்தை மகளுக்கு இடையே இருந்த உளவியல் சார்ந்த ஏக்கங்கள் வேறு வழிகளில் தன் கோரப்
பார்வையை வீச்சினை வீர்யத்தை காட்டியது.
ஆழ்மனதில் தகப்பன்மேல்
பாசமும் அன்பும் வைத்திருப்பவள், அதே அளவுக்கு அவனும் தன் முதல் குழந்தையான தன் மேல்
பாசமும் அன்பும் வைத்துள்ளவன், வெளிப்படையாய் சொல்லாதவன், தன் அன்றாட நடவடிக்கைகளில்
அதை வெளிக்காட்டாதவன், அவ்வளவே.
இது அவளுக்கு நன்றாகத்
தெரியும்.
ஆனால் சமயம் கிட்டும்போதெல்லாம்
தன் நீண்ட நாள் ஏக்கத்தை உள்ளக்கிடக்கையின் சாராம்சத்தை நேரடியாய் ஒரு பொருள் பற்றி
விவாதிக்கும்போதோ அல்லது ஒரு பொதுப் பொருளை விவாதிக்கும்போது அல்லது ஒரு குடும்ப விஷயத்தைப்
பற்றி தாய் தந்தையருடன் பேசிக்கொண்டிருக்கும்போதோ அவள் வெளிப்படுத்தும் அமில வார்த்தைகள் ராமினால் ஜீரணிக்க முடியவில்லை.
அவள் பார்த்த மேற்கத்திய நாகரிகம் தந்த தாக்கம் அந்த கலாசாரத்தில் உள்ளீடாய் வரும்
மானே தேனே பொன்மானே வசனங்கள் அமிலமழையாய் பொழியும். 10 நிமிடம் பேசினால் படீரென்று
கதவைச் சாத்திக்கொண்டு ஓடும் அல்லது காட்சியில் ஒரு அங்கமாய் இருக்காமல் விவாதத்தின்
அல்லது பேச்சின் இடையே தன்னை வெளிப்படுத்திக்கொண்டு நீங்கிவிடும் ஒரு மனப்போக்கு காலப்போக்கில்
அவளுள்ளே ஊறிவிட்டது.
ஆரம்பக் கட்டத்தில்
'குழந்தை தெரியாமல் பேசுகிறாள், காலப்போக்கில் சரியாகிவிடும்' என்று ராம் அவளை கண்டிக்க
உத்தேசித்ததில்லை. ஒழுக்கம் சார்ந்த புத்திமதிகள் சொல்லணும் என்று அவனுக்கு தோன்றியதில்லை.
புத்திமதிகள் சொன்னால் இந்தக் காலத்தில் குழந்தைகள் கேட்கிறார்களா, கொஞ்சம் விபரீதமாய்
போய்விடுமோ என்று அவதானித்து தன்னை அடக்கிக்கொண்டு ராம் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தானும்
சிற்சில வார்த்தைகளை கோபத்தில் வெளிப்படுத்தியதுண்டு.
அவனும் அவன் தந்தை போலவே
முன்கோபி. அவன் வாரிசு வேறு
எப்படி இருக்க முடியும்? 4, 8, 16, 32 என்றுதானே இதன்
பரிணாமம் பரிமாணம் தலைமுறை தலைமுறையாய்
வளரும்? வளர்ந்தது.
காலம் செல்லச்செல்ல அவனது உடல் நிலை
மேலும் மோசமாகி இதய நோய்
வலுக்கிறது. முதல் அறுவை சிகிச்சை
செய்த பலன் தெரியும் முன்பே
இரண்டாவது சிகிச்சை செய்யும் அளவுக்கு
வளர்கிறது.
தாயானவள்
நடப்பவற்றை அவதானிக்கிறவள் கணவனிடம் அவ்வப்போது சொல்கிறாள்
'அவளிடம் விட்டுப் பிடிக்கணும், நான்
பார்த்துக்கொள்கிறேன்' என்று அவனை சமாதானப்படுத்தி
வருகிறாள். அவனும் விட்டுப் பிடிக்கிறான். கணவனின்
உடல் நிலை கண்டுணர்ந்து தன்
வரையில் அவளும் எத்தனிக்கிறாள், மகளை
ஒருவாறு சரிக்கட்டுகிறாள். ஒவ்வொரு சம்பவம் நிகழும்போதும்
இருவரையும் சமாதானப்படுத்துவாள், மகளும் தன் தவற்றை,
அமில வார்த்தைகளின் தாக்கம் தகப்பனை வாட்டுகிறது
என்று உணர்ந்து மன்னிப்பு கேட்பாள்,
பிறகு வேதாளம் முருங்கை மரம்
ஏறும், தாயானவள் என்ன செய்வது
என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிப்பாள், சிலசமயம்.
யார் பக்கம் பேசுவது, யார்
பக்கம் தண்டிப்பது என்று தெரியாமல் அவள்
திணறுவாள். தகப்பனுக்கோ தன் கடமை தெரியும்,
தன் ஒழுக்க நிலை வயது
உடல் நிலை சார்ந்த நிர்ப்பந்தங்கள்,
தனக்குத் தானே விழைந்து கொண்ட
கோட்பாடுகளின் வழி நடப்பவன், அதிகம்
பேசாமல் அதே சமயம் பேசும்
சமயம் கண்ணியமாய் இருக்கணும் என்று வாழ்பவன்.
ஆனால் சற்றே நெருப்பின் பொறி
தட்டிவிட்டால் அவனும் பொங்கியெழுந்துவிடுவான். அவனது வார்த்தைகளூம்
அனலாய் கக்கும். பரஸ்பரம் இந்த
உள மனச் சிக்கல்கள்
உளவியல் ரீதியாய் வளர்ந்து வந்திருக்கிறது.
ராம் ஒரு தகப்பனாய் தனி
மனிதனாய் தன்னை அவதானித்ததில், தான்
இந்தக் குடும்பத்திற்காய் உழைத்ததில் வேறு எந்தவிதக் கெட்டப்
பழக்கத்திற்கும் ஆட்படாமல் தன்னை தன் இரத்தம்
சிந்தி உழைக்கும் குடும்பத்தில் தனக்கு இப்படி ஒரு
அமில மழையாய் மகளானவள் பொழிகிறாளே
என்கிற தாக்கம், பதிலுக்கு சில
பல சந்தர்ப்பங்களில் வாக்குவாதம்
முற்றி நாகரிகத்தின் எல்லைக்கோடே தெரியாமல் வாதப் பிரதிவாதங்கள் வளரும்.
தாயானவள்
அவனது குணம் அறிந்தவள், அடிப்படையில்
நல்லவன், ஆனால் மகளுக்கு சார்புடையதாய்
அவள் நிலைப்பாடு. அவளைப் பொறுத்தவரையில் தகப்பனுக்கு
சிரமம் தராமல் தன் கல்லூரிப்
படிப்பை தன் வழியில் படித்து
(கடனுதவி பெற்று) தானே அந்தக்
கடனையும் அடைத்து மகள் வளர்ந்துவிட்டாள்,
வாழ்க்கையில் தன்னைச் சமாளித்து நிற்கும்
பேறு பெற்றுவிட்டாள், அவளிடன் தகப்பன் தன்
கோபத்தையோ உக்ரத்தையோ காட்டத் தகுதியில்லாதவன் என்கிற
நிலைப்பாடு அவளுக்கு.
கூடவே, சமீப சில ஆண்டுகளில்
நிலையான உத்தியோகம் இல்லாமல் வருகிற வருமானமும்
பற்றாக்குறையாய் சேமிப்பு ஒவ்வொன்றும் கண்முன்னே
கரைவது அவளுக்கு ஒரு தாக்கம்,
மனத்தளவில். இருக்காதே பின்னே, தான் கேட்காமலேயே
கணவன் ஆகப்பட்டவன் சீராய் செழுத்தியாய் சொத்தும்
பொருளும் சேர்த்தவன், தன் முகம் கோணாமல்
வாழ்ந்து காட்டியவன், இன்று வருமானத்திற்கு வழியின்றி
நிலையான தொழில் இன்றி தவிக்கும்போது
சேமிப்பின் ஒவ்வொரு பகுதியும் வெளியேறும்போது
அவள் பித்துப் பிடித்ததுபோல் தவிக்கிறாள்.
கூடவே மகளுடனேயான தகப்பனின் உளவியல் போர்.
இதையெல்லாம்
பார்த்துக்கொண்டு நடப்பதை அவதானித்துக்கொண்டு அவனது
ஒரே மகன் கையாலாகாதவனாய் தன்
படிப்பில் கவனம் செலுத்தணும் என்கிற
ஒரே குறிக்கோளோடு மகன்.
மகனைப் படிக்க வைக்க தலையை
அடைமானம் வைத்தாவது செய்துவிடனும் என்கிற கோட்பாட்டோடு குடும்பத்
தலைவன்.
தலைவனிடம்
தலைவியே ' நீ பிள்ளை குட்டிகளை
படிக்க வைக்க வக்கில்லாதவன், திக்கற்றவன்'
என்று ஏகடியம் பேசுகிறாள்.
மகள் தலைவனிடம் ' நீ ஒரு பச்சோந்தி,
சந்தர்ப்பவாதி, நீ வாழ்வில் செய்த
ஒவ்வொரு செயலிலும் ஒரு உள் நோக்கம்
இருக்கிறது, நீ ஒரு நேர்மையாளனாய்
உன்னை காட்டிக்கொண்டு வாழ்ந்தாய், அதெல்லாம் பொய், வெளி வேஷம்.
நீ ஒரு பிறவிக்
கிராதகன் அல்லது பிறவிக் குற்றவாளி' 'உன்
ஒழுங்கீனம் பொருளாதார நிலைப்பாடுகள், அவற்றை நிர்வகிப்பதில் உன்
வண்டவாளம் தெரிகிறது'
'என்னைப்
பொறுத்தவரையில் நீ தகப்பனேயல்ல' (முன்பு
சில ஆண்டுகள் வரை இவன்
ஒரு ஐடியல் தகப்பனாய் பறை
சாற்றப்பட்டவன்)
'என்னைப்
பொறுத்தவரை நீ செய்ய நினைக்கும்
எந்த ஒரு நல்லதொரு பொறுப்பான
நிகழ்வும் நீ செய்ய வேண்டாம்,
என் வழியில் நான் போய்க்கொள்கிறேன்,
உன்னை என் தகப்பன் என்று
சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுகிறேன்' 'என் வழியில் தலையிடாதே'
என்கிறாள்.
தகப்பன்
சில விஷயங்களை தன்னை வெளிப்படையாய் காரண
காரியங்களுடன் விளக்கி தன் நிலை
விளக்கம் அளிக்க முயன்றால் அவள்
சொல்கிறாள் ' நீ என்ன சொன்னாலும்
நான் கேட்கும் நிலையில்லை, நீ
ஒரு சப்பைக்கட்டு காரணம் பொய்யாய் ஜோடித்து
சொல்வாய், உன் பிலாக்கணங்களை நீயே
வைத்துக்கொள்' என்கிறாள்.
பிறிதொரு
சந்தர்ப்பத்தில், விஷயம் இத்தனை வீர்யமாய்
போனதும், தாய் கணவனிடம் சொல்கிறாள்
'அவளுக்கு ஒருவித ஏ.டி.எச்.டி. எதோ
ஒன்று' கோளாறு இருக்கிறது. அதனால்தான்
மூட் மாறும்போதெல்லாம் இப்படி முன்னுக்குப் பின்
முரணாய் நடந்துகொள்கிறாள், அதற்கு அவள் ஒரு
முறையான கவுன்சிலிங் பெற்று வருகிறாள். அவளுக்கு
இந்த பிரச்சினை வந்ததே ஜீன் தானோ
என்று தோன்றுகிறது'.
'காலம் காலமாய் நீ(ங்கள்)
உங்கள் குணாதிசயத்தை அவதானித்தால் சொல்கிறேன் உங்களுக்கும் இது சிறு வயதிலிருந்தே
இருந்திருக்கின்றது, அதனை அன்றே பார்த்து
மருத்துவம் அல்லது கவுன்சிலிங் உங்களுக்கு
சொல்ல வழிகாட்ட யாரும் இருந்திருக்கவில்லை.
உங்கள் பிரச்சினை ரெண்டு பேருக்குமே இதுதான்.
அதனால்தான் நீங்கள் ஒருவருக்கொருவர் அடிப்படையில்
ஆழ்மனதில் அன்பு இருந்தும் அதை
வெளிக்காட்டாமல் வெளியில் நேரடியாய் சந்தித்து
பேசிக்கொள்ளூம் மனப் பக்குவம் இல்லாமல்
சில சமயங்களில் அமில மழையாய் பொழிகிறீர்கள்.
நீங்கள் உங்களையும் அது மாதிரி கவுன்சிலிங்கிற்கு
போக வேண்டும்' என்கிறாள்.
தகப்பன்
ஆடிப்போய் நிற்கிறான். இது என்னடா இது
கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய
கதையாய் தனக்கு இருக்கிற உடல்
உபாதைகள் போதாதா? இனியொரு கன்சல்டேஷனா?
சைக்கோதெரப்பியோ
சைக்கொமெட்ரிக் அனாலிஸிஸ் செய்துகொள்ளும் அளவுக்கு தனக்கு தன்
பிரச்சினை அவனுக்கு புரியலையா?
அவன் அளவில் தெளிவாய் இருக்கிறான்,
தொழிலில் கவனம் செலுத்துகிறான், அடுத்த
வேலை பார்க்கும் முயற்சியில் சற்றும் தளராமல் இருக்கிறான். தனக்கிருக்கிற
பொருளாதாரச் சிக்கல்களை நிவர்த்திக்கும் வழிவகைகளை ஆராய்ந்துவருகிறான்.
இப்போது
யாரிடமும் எதையுமே பேசும் தகுதியை
இழந்து நிற்கிறான். தனிமையில் வாடுகிறான், மனைவியிடம் கூட வெளிப்படையா தன்
நிலைமையைச் சொல்லி அழுதும் கெஞ்சியும்
விஞ்சியும் பார்த்துவிட்டான். ஒன்றும் சரிப்பட்டு வருகிறமாதிரி
தெரியலை.
எதைப் பேசினாலும் யாரிடமும் அது ஒரு தவறான
கண்ணோட்டத்துடனேயே எடுத்துக்கொள்ளப்படுகிறது, எதற்கு வாய் திறக்கணும்
என்று தனியே கிடந்து மாய்ந்து
போகிறான்.
ராமுக்கு
இப்போது ஒரு உத்தேசம் தோன்றுகிறது.
யாரிடமும் பேச விருப்பமில்லை, இந்தக்
குடும்பத்திற்கு தான் செய்தது போதும்,
தன்னைப் புரிந்து கொள்ளாதவர்களுடன், மனைவி
உள்பட, வாழ்வதே வீண் என்று
உணர்ந்து உடனடியாய் தன் பொறுப்புக்களை முடித்துக்கொண்டு
ஒரு இல்லற சன்னியாசியாய் தன்னந்தனியே
வாழ்வது என்கிற நிலைப்பாட்டுக்கு ராம்
வந்துவிட்டான்.
சமய சந்தர்ப்பங்கள் நிர்ப்பந்தித்தால் இந்தக் குடும்பத்திற்கும் தனக்கும்
எந்த வித சம்பந்தமும் இல்லை
என்று சட்ட பூர்வமாய் பிரிந்துவிடால்,
ஒரு செட்டில்மென்ட் மூலம் என்று கூட
அவன் மனதில் தோன்றுகிறது. வாழும்
காலம் அமைதியாய் நிம்மதி நாடி வாழணும்
என்று அவன் தலைப்பட்டுவிட்டான்.
அவனைப் பொறுத்தமட்டில் குடி அது இது
என்று தன்னை மாற்று வழியில்
சகித்துக்கொண்டு சீரழியும் போக்கு அறியாதவன். மார்க்கம்
தெரியும் ஆனால் அவற்றை கைக்கொள்ள
நினைக்காதவன். அறம் அறிந்தவன், தர்ம
நெறி அறிந்தவன், அறச் சீற்றம் அவனை
வாட்டுகிறது.
ஒரு வித தன்னிரக்கம் 'தனக்கேன்
இந்த இழி நிலை? இது
என்ன கர்ம வினையா? புத்திர
சோகம் அது இது என்கிறார்களே,
அவற்றில் இதுவும் ஒன்றா மனிதன்
வாழ்வில் அனுபவிக்க?' என்று அல்லாடுகிறான்.
சில பல சந்தர்ப்பங்களில் முன்னுக்குப்
பின் முரணான சிந்தனை வயப்படுகிறான்
ராம்.
இடையே நல் உறக்கம் தொலைத்தான்,
இஷ்டப்படி படுக்கிறான், உண்கிறான், அலைகிறான், உண்கிறான், படுக்கிறான். நட்ட நடு ராத்திரியில்
பொழுதை விட்டத்தை நோக்கியே கழிக்கிறான்.
ஒரு நிலையான உத்தியோகம், வருமானம்
கிட்டிவிட்டால் அவன் பொருளாதாரக் கஷ்டங்களிலிருந்து
வெளி வந்துவிடுவான் ஓரிரு
ஆண்டுகளில்.
ஆனால் மனைவி மகளுடன் ஏற்பட்ட
உள மனச் சிக்கல்களுக்கு
மருந்து?
தீயினாற்
சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற்
சுட்ட வடு.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என் நோற்றான் கொல்எனும் சொல்.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
அறவழியில்
வாழ்ந்தவன், வாழ்பவன், இனியும் அப்படித்தான் வாழணும்,
தர்ம வழியில் நெறிமுறைகளில் செல்லணும்
என்று இருப்பவனுக்கு இது ஒரு படிப்பினை,
வாழ்வியல் பாடம் அவனது 50களில்.
காலம் காலமாய் அவனை அறிந்த
உளப்பூர்வமான நட்புக் கூட்டம் அவனிடத்தில்
உண்டு. அந்த நட்புக்களிடம் கூட
தன்னை தன் பிரச்சினைகளை வெளிப்படுத்திக்கொள்ள
விருப்பமின்றி இருக்கிறான்.
தன் குடும்பத்தினரை விட்டுப் பிடித்து அவர்கள்
வழியில் சென்று தன்னை முன்னிறுத்தாமல்
தன் சித்தாந்தங்களை வலியுறுத்தாமல் அவன் போக்கில் வாழ்ந்து
வந்தான். அவன் அளவில் அவன்
மேற்கொண்ட வழிமுறைகள் சரி என்றுதான் இத்தனை
காலமும் இருந்துவந்தான். அவனுக்கு இந்த இழி
நிலை? இந்த இடியாப்பச் சிக்கல்களிலிருந்து
வெளிவருவது எப்படி? வெளி வந்தாலும்
அது ஒரு நிரந்தரமான தீர்வாகுமா?
மீண்டும் மீண்டும் இதே வழிமுறைகளில்
தான் சமாதானம் என்கிற ஒரு
வட்டத்திற்குள் தள்ளப்பட்டு வெளிக்கொணரப் பட்டு பின் தள்ளப்பட்டு
இன்று 'இயலாமை' என்கிற மாயைக்குள்
சிக்கியிருக்கிறான்.
சில பல தருணங்களில் தன்
குழப்பங்களை சொன்னபோது சில நண்பர்கள் 'சரிதான்
ராம், எல்லாம் எல்லா வீட்டிலும்
அப்படித்தான், மகள்தானே, சரியாகிவிடுவாள், விட்டுவிடு, எதையும் போட்டு மனத்தைக்
குழப்பிக்கொள்ளாதே, இறைவனிடத்தில் விட்டுவிடு, அவன் பார்த்துக்கொள்வான்' என்கிற
த்வனியில்தான் வார்த்தைகள் வரும், வருகின்றன, எனவே
யாரிடமும் எதைச் சொல்லவும் பகிரவும்
அவனுக்கு விருப்பமில்லை.
இனி அவன் ராமின் எதிர்காலம்
என்ன? அவன் குடும்பம் தலைக்கேறி
இந்த உள மனச் சிக்கல்களிருந்து
வெளிவருமா? மனத்தளவில்
அவன் தெளிவாய் இருக்கிறான். இனி
காலம் முழுவதும் மகள் முன்னே நின்று
ஒரு வார்த்தை தான் பேசுவதில்லை,
முக்கியமான விஷயங்களைத் தவிர தன்னை தனிமையில்
விட்டுவிடுமாறு மனைவி மக்களிடம் சொல்லிவிட்டான்.
3 மாத அவகாசம் தனக்குத் தானே
எடுத்துக்கொண்டு தன்னை சுதாரித்துக்கொள்ள எத்தனப்பட்டுவிட்டான்.
காலம் அவனை மாற்றுமா? காலம்
அவனை அவன் குடும்பத்தை மீண்டும்
நல்வழியில் செலுத்துமா? காலம் பதில் சொல்லும்!!
No comments:
Post a Comment