Monday, July 20, 2015

இந்தியா ஒரு விசித்திரமான நகை முரண்களுக்கான தேசம்

மாத்தி_யோசி_மக்கா!! 

நம் மானிட உடலின் வலதுபக்க செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது இடது பக்க மூளை. 

அதுபோல் இடதுபக்க செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது வலது பக்க மூளை. 

இதை நான் சொல்லவில்லை, மருத்துவ விஞ்ஞானம், மருத்துவம் சார்ந்த விஞ்ஞான விளக்கம் அல்லது விஞ்ஞான ரீதியிலான மருத்துவ விளக்கம். 

இயற்கைக்கு மாற்றாக, பொதுவழியில் சிந்திக்காமல் மாற்றிச் சிந்திப்பதே தன் வழி என்று ஒரு சிந்தனை ஒருவனுக்கு வந்தால், அது இப்படித்தான் இருகுமோ? இது என்ன மாதிரி டிசைன்? 
தொடர்ந்து பொறுமையாக வாசிக்கவும். 
_____________________________________________________________

இராமாயணம் தெரியும், மகாபாரதம் தெரியும், சரி. பூர்வ கதைகள் தெரியும் சரி. அந்தந்தக் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்ட விபரம், ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு காரண காரியங்கள் உண்டு, படைப்பின் நோக்கம் வியாசருக்கு மட்டுமே வெளிச்சம், ஓரளவுக்கு வால்மீகி முனிவருக்கே வெளிச்சம். வால்மீகி முனிவர் இராமாயணத்தை அது நிகழும்போதே எழுதும் பேறு பெற்றார் என்பது வரலாறு, தானும் ஒரு கதாபாத்திரமாக. அதை எழுதத் தூண்டியவர் யாரோ (வியாசரேவா? எனக்குத் தெரியாது, என் சிற்றறிவுக்கு தெரியாது!!)

ஆனால் பற்பல கதாபாத்திரங்கள் இந்த இதிகாசங்களில் புனையப் பெற்றிருந்தாலும் சில பாத்திரங்கள் நம்மை வேற்று சிந்தனையில் செலுத்துகின்றனவே? 

உதாரணம்: சகுனி, காந்தாரி, கர்ணன், தேவகி, திரௌபதி, ஊர்மிளை, லவன்/குசன் சகோதரர்கள், ஓரளவுக்கு சீதை இன்னும் சில பாத்திரங்கள் கூட உண்டு. சட்டென்று நினைவிற்கு வரவில்லை. 

சகுனிக்கு ஒரு நியாயம் இருந்தது, தன் சகோதரிக்காக நியாயம் கேட்க, சபையில் கேட்க திராணியில்லாததால் சதித் திட்டம் தீட்டினான் கௌரவ வம்சத்திற்கு ஆதரவாக இருப்பதுபோல் பாவ்லா காட்டிக்கொண்டு அந்தக் குடும்பத்திற்கு கூட இருந்தே குழி பறித்தான் என்று சொல்லலாம். 

காந்தாரியின் சோகம் யார் அறிவார்? ஒரு மாபெரும் குருவம்சச் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தினியாய் இருந்திருப்பினும், குரு க்ஷேத்திரப் போர் மூண்டு முடிவு தெரியும் வரை, பட்டத்தரசி அவர்தானே? அதை அந்தச் சுக போகத்தை நிம்மதியாய் அனுபவிக்க முடிந்ததா? தன் சகோதரனின் சதியால் 100 பிள்ளைகள் இருந்தும் பெண் உண்டா தெரியாது, ஒரு பிள்ளை கூட கொள்ளி வைக்க மிஞ்சாது என்று அவள் அறிந்தாளா? 

போகட்டும். காந்தாரி அவ்வாறு ஒரு கண்ணில்லாத இளவரசனுக்கு வாக்கப்பட்டுப் போகுமுன் ஒரு நாட்டு இளவரசியாய் அவளுக்கு என்னென்ன கனவுகள் இருந்திருக்கும்? அது நிறைவேறாமல் போனதால் அவளது ஆழ்மன உளவலிகள் என்னென்ன? 

என்னதான் சிற்றப்பனின் அரவணைப்பும் ஆதரவும் கிஷ்கிந்தாவின் இளவரசன் என்கிற அந்தஸ்தும் இருந்தாலும் தன் தந்தையின் தவற்றால் தனக்கு நியாயமாகக் கிட்டியிருக்க வேண்டிய அந்தஸ்தும் அதிகாரமும் கண்முன்னே பரிபோனது அங்கதனின் சோகம்தானே?

கிருஷ்ணர் துவாரகையின் வேந்தர், ஓரளவுக்கு துவாரகையை ஆண்டாரா, அண்ணன் பலராமரிடம் பொறுப்ப்பை தந்துவிட்டு தன் வேலையை குரு பாண்டவ வம்ச போராட்டத்தில் தலைகொடுத்தாரே, அவரது தாய் தேவகியின் உள மன வலி என்ன? வசுதேவர் தேவகி பின்னாளில் அரியணை ஏகினர், என்றாலும், அதுவரை பெற்ற பிள்ளையை சகோதரனின் (கம்சன்) பார்வையிலிருந்து காக்கும் வழி தெரியாமல் பெற்ற பிள்ளையை (பின்னாளில்) பார்க்கும் பேறு பெற்றிருந்தாலும் ஒரு தாய்‍ பிள்ளை உறவெனும் பந்த பாசத்தின் ஆணிவேர் அதன் சௌலப்யங்கள் சௌஜன்யங்கள் அந்தத் தாய்க்கு தன் வாழ் நாளில் கிட்டியதா, யசோதைக்குத் தானே அந்தப் பேறு வாய்த்தது? 

தமக்கை சீதைதான் கொண்டவனுடன் செல்லும் ஈடுபாட்டினால் ஆரண்யம் சென்றாள், கொண்டவனின் கடமை தந்தைசொல் கேட்டு அவர் எடுத்த முடுவை அமல்படுத்த. 

ஆனால் தங்கை ஊர்மிளையின் உள மன வலி? யார் தருவார் இந்த விளக்கம்? இராமனுக்காவது பின்னாளில் எதோ ஒரு நாளில் தன் குழந்தைகள் லவன் குசன் இருவரையும் அடையாளம் காண ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது? இலக்குவன் ஊர்மிளை குழந்தைகள், சத்ருக்னன் மற்றும் பரதனின் வாரிசுகளைப் பற்றிய கதைகள் புனையப்பட்டதுண்டா? மக்களில் பலபேருக்கு அந்தக் கதைகள் சென்றதுண்டா?

அனுமன் தேடிச் சென்ற ஒரு விடயத்தில் பற்பல ராம காதைகள் உள்ளதாகவும், நமக்குத் தெரிந்து இராமாயணம் சிலவைதான் நமக்கு காலம் காலமாகச் சொல்லப்பட்டதாய் அறிகிறோம். 

சம்பூர்ண இராமாயணம் சொல்லும் கதைப்படி சீதையின் உறைவிடம் இலங்கைதானே, இராவணின் மகளாக? எதோ ஒரு காரணத்தால் இராவணன் அந்த மகவை தொலைக்க (தற்காப்புக்காக வேண்டியோ என்னவோ), அது பின்னாளில் சனகன் கையில் கிடைக்க மிதிலா இளவரசியாய் அவள் இராமன் கைப்பற்றியதும் பின்னாளில் அதே இராவணனின் பால் சிறைப்பட்டதும் (அசோகவனத்தில்) ஒரு வேறு கதை. அது உண்மையெனில் அந்தச் சீதையின் ஒரிஜினல் அம்மா யார்? அவளது உளவலி என்ன? யார் அறிவார்?

இராமாயணமும் மகாபாரதமுமே கட்டுக்கதை என்கின்றனர், ஒருசாரார். இந்தக் கட்டுக்கதைகளுக்குள் எத்தனை எத்தனையோ கிளைக்கதைகள். கிட்டத்தட்ட ஒன்று இரண்டு அல்ல பற்பல இராமாயணங்கள் உண்டு, யுகங்கள் தூறும் பல்வகை இராமாயணக் காதைகள் உன்டு என்கின்றனரே, எது உண்மை?

இதிகாசங்கள் போகட்டும். 

சம காலத்தில் இந்திய வரலாற்றில் கூறப்பட்ட சில கதைகளுக்கு வருவோம். 

தேச விடுதலைக்காக பாடுபட்டு தன்னுயிர் ஈந்த மகாத்மா தன் தேசத்திற்காக கொடுத்த நேரம் கூட தன் குடும்பத்திற்காகத் தரவில்லை. விடுதலை கிட்டியபின்னும் அவர்தம் வாரிசுகளில் சிலர் தாய் நாடு திரும்பாமல் ஆப்பிரிக்க மண்ணில் செட்டிலாகி இன்னமும் அங்கேயே வாழ்ந்து வருவதாக படிக்கிறோமே? 

முதுமைக் காலத்தில் சத்தியத்தின் பாற்கொண்ட வேட்கையில் பற்பல சுய சோதனைகள் மேற்கொண்டதாக அந்த மகாத்மேவே தன் சுய சரிதையில் கூறியுள்ளாரே? தன் குடும்பத்திற்கு ஏதாவது செய்யணும் என்கிற யோசனை கூடவா அவருக்கு வரவில்லை, அந்த மாமேதைக்கு, தியாகச் செம்மலுக்கு, என்ன இது சோதனை கலந்த வேதனை? 

மகாத்மாவை அடியொட்டி தேச விடுதலையில் பங்கேற்ற எண்ணற் தியாகிகளில் சிலர் நம் தமிழ் மண்ணில் இருந்தும் சென்றதுண்டு. வ.உ.சி. அவர்களின் இறுதிக்காலம் அனைவரும் அறிந்ததே. அவர்தம் வாரிசுகள் மலேயா மண்ணில் செட்டிலானது யாருக்காவது தெரியுமா? சிதம்பரனார் அவர்களிடம் இல்லாத சொத்துக்களா? 

மகாகவி பாரதி, தீர்க்கதரிசி, அவர் அன்று சொன்னது பலவும் இன்றும் நடக்கிறதே, உண்மையாய் காண்கிறோமே? அவருக்கு பின்னாளில் (சுதந்திரத்திற்கு பிந்தைய) அரசு மூலம் கிடைத்த மரியாதை, வெகுமதிகள் அவர்தம் குடும்பத்திற்கு எந்தவகையில் உதவியது? செல்லம்மா பாரதியின் சோகம் யாருக்குத் தெரியும்? புரியும்?

இதைப் படிப்பவர்கள் கேட்கலாம், இதையெல்லாம் உன்னைப்போல் கேட்டுவிட்டார்கள், பகுத் அறிவு இருக்கிறதே என்று நீதான் இன்று புதிதாய் கேட்பதாய் சிலாகிக்காதே என்று என்னை கை நீட்டி வாயமர்த்தலாம் (என்னைப்போன்றோர் வாயை அடைக்கலாம்). 

அடைக்கலம் செல்ல இன்றி பற்பல தியாகிகள் அவர்தம் குடும்பத்தினர் பட்ட / படும் அவதி யாருக்குத் தெரியும்?

பாரதியின் ஆதர்சத் தோழர் சுப்பிரமணிய சிவாவின் குடும்பம் பற்றி யாருக்குத் தெரியும்? அவர்கள் என்ன ஆனார்கள்?

எனக்குத் தோன்றுகிறது. நியாயமா இல்லையா புரியலை, தெரியலை. வெள்ளந்தியாய் கேட்கத் தோன்றுகிறது. தவறு இருந்தால் மன்னிக்கவும். 

சீரிய சிந்தனையாளர்கள் அறிவுசார் கொள்கைவாதிகள் தேசப்பற்று மிக்கவர்கள் குடும்ப அளவில் ஒரு தலைவனாகத் தோற்றுவிட்டார்களோ? காந்தி, பாரதி, சிவா, சிதம்பரனார் உள்பட?

அல்லது, மாற்று யோசனையில் பார்த்தால் சொந்த வாழ்க்கையில் தோற்றவர்கள்தான் சீரிய சிந்தனையாளர்களாய் அறிவு ஜீவிகளாய் பரிமளித்திருக்கிறார்களா? தேச விடுதலைக்காலம் ஒன்றுமட்டுமல்ல, இன்றைய சமகாலத்திலும் இதற்கு நாம் எடுத்துக்காட்டு கூறலாம். 

கம்யூனிஸ்டுத் தலைவர் ஜீவா, தோழர் நல்லக்கண்ணு இன்னும் பலர் லிஸ்டில் வருவர். 

பெருந்தனக்காரர்களாய் வாழ்ந்து, தேசப்பற்றும் கூடவே இருந்து, அப்படியே வாழுந்து மடிந்தவர்கள் விதிவிலக்கு ஆகலாம். 

ஏழையாய் இருந்து வறுமையில் வாடி குலம் தழைக்க ஏதும் செய்யவியலாத கையறு நிலையில் வாழ்ந்து தேச விடுதலைக்காக இரத்தம் சிந்தி உயிர் நீத்த தியாகிகள் விதிவிலக்கா?

அவர்கள் காலம் போனபின் அவர்தம் படைப்புக்கள் தேச உடைமையாக்கப்பட்டு எதோ ஒரு சன்மானம் பின்னாளைய அரசுகளால் வழங்கப்பட்டிருக்கலாம், அது எந்த அளவுக்கு அந்தந்தக் குடும்பங்களின் வாரிசுகளின் வளர்ச்சியில் வளர்சிதை மாற்றத்தில் உதவியிருக்க முடியும்?

இந்தியா ஒரு விசித்திரமான நகை முரண்களுக்கான தேசம். 

No comments:

Post a Comment