Disclaimer :
This is purely my imaginary version on the so-called and probable Defense argument by Messrs. Raja and Kanimozhi on the infamous 2G scam, visualizing a scenario if they are called into a media conversation to be telecast live and what could be their argument in defense ? No offense meant to anyone in the public scene.
----------------------------------------------------------------------------------------------------------------------
பெருவாரியான வாசகர்களின் தொடர்ந்த வேண்டுகோளுக்கிணங்க, இதோ பாரீர், படிப்பீர், கண்டு களிப்பீர், கூடவே ஏதாகிலும் சிற்றுண்டி உண்டெங்கில் அதனையும் உண்டு களிப்பீர் (பீர் என்கிற உற்சாக பானம் வேண்டி என்னிடம் விண்ணப்பம் போடாதீர்)!!
'எப்பூடி, நானும் அரசியல் வியாதியாக ஒரு தக்கிணியூண்டு தகுதி எனக்கு வாய்த்துவிட்டதா?' அதைப்பற்றி பின்னர் சாவதானமாக விவாதிக்கலாம்.
இதோ, துக்ளக் வாசக சிகாமணிகள் நெடு நாள் விண்ணப்பித்து வந்ததால் மேற்சொன்ன கற்பனைக்கட்டுரை (சத்யாவின் பாணியில்):
நம் செம்மொழியாம் தமிழ்மொழிக்கு கோவையில் தம் குடும்பப் பாரம்பரியக் கோவையுடன் விழாக்கண்ட பாவை, எம் திராவிட மகா சிங்கங்களின் ஒரே தானைத்தலைவர், முத்தமிழ்வித்தகர், தம் செந்தமிழால் இந்தக் காசினியில் வாழும் முப்பதுமுக்கோடி தமிழருக்கெல்லாம் அருமருந்தாய் தமிழுக்குத் தொண்டாற்றும் எம் தலைவர், அவர்தம் அருந்தவப் புதல்வி மற்றும் அருமை வாரிசு, சோழ தேசம் கண்ட எம் ஆருயிர் ஆரணங்கு, தம் தெள்ளுதமிழால் தமிழுக்கு விழாவெடுத்த கனிமொழி நாச்சியார் 'ஏதோ இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை என்றெல்லாம் சொல்கிறார்கள்' அவரே திராவிட இயக்கத்தின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவரா, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவரா என்றும் குழப்பமான கேள்விகளுக்குள் நாம் புக விரும்பவில்லை, அதற்கேதும் இப்போதும் தேவையும் வரவில்லை. அவர்மேல் ஒரு ஆரவாரமான குற்றச்சாட்டை அனியாயமாய் சுமத்தி கிட்டத்தட்ட 6 மாதங்களை அவரை இந்த நானிலத்தின் தலைநகராம்
தில்லியில் திகாரில் அடைத்துவிட்டார்கள். திருக்குவளை நாயகன் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வி, எங்கள் ஆருயிர்ச் சகோதரியை எள்ளளவேனும் ஈவிரக்கமின்றி ஒரு சிறு குற்றச்சாட்டை
அவர்மேல் சுமத்தி அவரை உள்ளே அனுப்பி ஒரு கூட்டம் இங்கே ஆர்ப்பரிக்கிறது.
முன்னோட்டம்
அப்படி என்ன அவர் பெரும்பிழை செய்துவிட்டார்?
தம் இயக்கத்தின் ஆருயிர்த் தொண்டன், தம் தலைவனின் ஆற்றொனாப் பேரியக்கத்தின் ஒரு அங்கமாக, அங்கத்தினராக, இந்த நானிலத்தின் நாடாளுமன்றத்தில் தம் தொகுதியான பெரம்பலூர்
தமிழர்தம் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்தின் மக்களவையின் அங்கத்தினராக இருந்தார், அவர்தம் ஆருயிர்க் கழகத்தோழர், அருமை இளவல் இராசா அவர்கள். தானும்
அதே நாடாளுமன்றத்தின் மேலவை என்றறியப்படும் மேலோர் அவைக்கு திராவிட இயக்கத்தின் நேரடி உறுப்பினராக மேலவைத் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு நம் சகோதரியும்
அங்கே ஒரு பாராளுமன்ற அங்கத்தினராக வீற்றிருந்தார்.
திராவிட இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம், நம் சகோதரியும் அருமை இளவல் இராசா அவர்களும் பின்னவர் பொறுப்பேற்றிருந்த அமைச்சகத்தின் வழக்கமான நிர்வாகத்தில் பெரும் ஆர்வம்
கொண்டு, தொலைத்தொடர்புத்துறையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றும் ஒரு மேலான வாய்ப்பை கண்ணுற்று அலைக்கற்றைகளை வினியோகிக்கும் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக இருவரும் ஒரு நாள்
தம் அமைச்சகத்தில் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இந்த இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வினியோகம் தொடர்பாக எந்த மாதிரி ஒப்பந்தம் மேற்கொண்டால், இந்த தேசம் விழிப்படையும்,
பொருளாதார ரீதியாகவும் தொலைத்தொடர்புத்துறை தொழில் நுட்ப ரீதியாகவும் இந்த தேசம் காலமெல்லாம் போற்றும் ஒரு உன்னத வளர்ச்சியை எட்ட முடியும் ? என்று இருவரும் கூட்டணியாய்
பல நாட்கள் உண்ணும் நேரமும், ஓய்வு ஒழிச்சலின்றி ஊன் உரக்கம் தொலைத்து விவாதித்தார்கள்.
அவ்வப்போது தாகம் தணிக்க தம் பணியாளரிடம் தில்லி நகரில் பொதுவாக வட இந்தியாவில் எல்லோரும் பருகும் ஒரு குளிர் பானம் வேண்டி உதவியாளரை அழைத்தார்கள். இது அன்றாடம்
அனைத்து அலுவலகங்களிலும் நடக்கும் மிகச் சாதாரண நடப்புதான். உதவியாளர் என்ன பானம் வேண்டும்? என்று கேட்டார். நீரா, நீரா என்று சொல்கிறார்களே, அதை இருவருக்கும் கொணருமாறு
அமைச்சர்கள் கோர, உதவியாளர் அலுவல் கதவைத் திறந்து 'ரெண்டு நீரா, குளிர்ச்சியாக!!' என்று குரல் கொடுக்க ஆங்கே அனைவருக்கும் பணிவிடைசெய்து கொண்டிருந்த பணியாளர்கள் பானம்
தயார் செய்ய ஆயத்தம் செய்து கொண்டிருந்த வேளையில், அதே நேரத்தில், அமைச்சரைக்காண அன்றைய தினம் பலர் பார்வையாளர் அரங்கில் காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர், நீரா ராடியா
என்னும் ஒரு பெண்மணியும் கூட. இவரும் தொலைத் தொடர்பு இலாகா சம்பந்தமான வேறு ஒரு அலுவல் காரணமாக அமைச்சரைக்காண காத்திருந்தார்.
அமைச்சரின் உதவியாளர் ' நீரா, நீரா' என்று இருமுறை குரல் கொடுக்க பார்வையாளர் அரங்கில் காத்திருந்த அம்மணி நீரா தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்று குறிப்புணர்ந்து உடனே
அமைச்சரின் அறைக்குள் நுழைந்தார். அமைச்சருக்கும் கனிமொழி அம்மையாருக்கும் யாரிந்தப் பெண்?, தற்சமயம் விவாதத்திற்கிடையே இவரைச் சந்திக்க ஏதும் முன்னேற்பாடு இருக்கிறதா என்று
தத்தம் அலுவல் குறிப்பேட்டை நோக்கினார்கள். அதற்குள் நீரா அம்மையார் தம்மை இருவருக்கும் அறிமுகம் செய்துகொண்டு தாம் வந்த வேலையைக் குறிப்பால் உணர்த்தினார்.
அமைச்சருக்கும் கனிமொழி அம்மையாருக்கும் தாம் அப்போது விவாதித்துக் கொண்டிருந்த துறை தொடர்பான விஷயங்களையே தற்போது வந்த நீரா அம்மையாரும் கோடிகாட்டவே அவர்களும்
நீரா அம்மையாருடன் கலந்துரையாட விழைந்தார்கள். பின்னர் இதுபோல் பன்முறை மேற்சொன்ன அம்மணியும் அமைச்சரும் நம் சகோதரியும் பலமுறை விவாதித்தார்கள்.
பின்னர்தான் இந்த அலைக்கற்றை வினியோகிக்கும் ஒப்பந்தம் தொடர்பாக ஒரு முப்ப்பரிமாணம் கொண்ட கொள்கைரீதியான ஒப்பந்த நடைமுறை ஆலோசிக்கப்பட்டு பிரதமர் அலுவலகம்,
நிதித்துறை, இன்ன பிற சார்புள்ள இலாகாக்களின் அமைச்சர்களிடம் (சட்டத்துறை உள்பட) கூடி விவாதிக்கப்பட்டு, பின்னர் அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை
வினியோகம் பன்னாட்டுத் தொழில் ஆர்வலர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 'முதலில் வருவோருக்கு முதல் முன்னுரிமை' என்கிற அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள், முன்னாள்
ஆட்சியிலிருந்தோர் கடைப்பிடித்த நடைமுறைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
பற்பல பன்னாட்டு தொலைத்தொடர்புத்துறை தொழில் முனைவோர் (உள் நாடு மற்றும் வெளினாட்டு) இந்தத் திட்டத்தில் தம் முதலீட்டைக் கொண்டு வர ஆர்வம் தெரிவித்தார்கள். பின்னர், ஒரு 8
கம்பெனிகளுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மற்றும் இன்னபிற விவகாரங்கள் நாட்டில் அரங்கேறியது. இவைபற்றி நாம் அனாவசியமாக இங்கே கோடிகாட்டத் தேவையில்லை என்று அறிகிறேன், மீடியாவும் நாளேடுகளும் (ஆங்கில, இந்தி
மற்றும் தமிழ் அனைத்து மொழிகளின் வாராந்திர, தினசரி, மாதாந்திர சஞ்சிகைகள் அனைத்தும்) இந்த இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பலவாறு விவாதித்து
விட்டார்கள், தத்தம் கருத்துக்குவியல்களை பெருவாரியாக மக்கள் அரங்கில் அலசி ஆராய்ந்துவிட்டார்கள்.
நாம் இப்போது இங்கே விவாதிக்க இருக்கும் விஷயம், நம் அமைச்சர் இராசா தற்சமயம் கடந்த ஓராண்டாக திகார்ச் சிறையில் வாடிவதங்கி தாங்கொணாத் துயரம் அனுபவித்து வருகிறார். நம்
சகோதரி கனிமொழி அவர்களும் அதுபோலவே சுமார் 7 மாதங்கள் அதே சிறையில் தாங்கொணாத் துயரங்களை அனுபவித்து தற்போது சொந்தப் பிணைபெற்று தினந்தோறும் வழக்காடுமன்றத்தில்
நேரடியாக விசாரணையில் பங்குகொண்டுவருகிறார்.
இருவரும் மக்கள் அரங்கில் வெளிப்படையாக விவாதிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள். சர்வதேசத் தொலைக்காட்சி நிலையத்தாரும் பாரதத்தின் பல்வேறு பிராந்திய மற்றும் தேசியத் தொலைக்காட்சி
நிலையத்தாரும் இந்த விவாத நிகழ்ச்சியை நேரடி ஒலி/ஒளிபரப்புச் செய்ய ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நிர்வகிக்க்கும் சூரியத் தொலைக்காட்சியின் தலைமை மக்கள் தொடர்பாளர் விவாதத்தை துவக்கி வைக்கிறார்:
தொ.கா.ம.தொ: வணக்கம், அமைச்சர் இராசா அவர்களே!! வணக்கம் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களே!!
அமைச்சார் இராசா: வணக்கம்!!
எம்.பி. கனிமொழி: வணக்கம்!!
தொ.கா.ம.தொ: இன்றைய தினம் நாம் இந்த இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் தொடர்பாகவும் அதில் தங்கள் இருவரின் பங்கு தொடர்பாகவும் விவாதிக்க உள்ளோம்.
அமைச்சர்: ஒரு சிறு திருத்தம், இந்த விஷயத்தில் எங்கள் பங்கு என்று ஒன்றும் கிடையாது.
எம்.பி.: ஆமாம், அவர் சொல்வது சரியே, எங்கள் பங்கு என்று ஒன்றும் ஏதும் கிடையாது, அதை முதலிலேயே தெளிவுபடுத்த விழைகிறோம்.
தொ.கா.ம.தொ: இல்லை இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை, இந்த ஒப்பந்தம் தொடர்பாக தாங்கள் இருவரும் ஆற்றிய பணிகளைத்தான் உங்கள் பங்கு என்றேன்.
அமைச்சர் மற்றும் எம்.பி.: ஓ!! சரி சரி!!
தொ.கா.ம.தொ: இந்த விவகாரம் மீது பெருவாரியாக மக்கள் அரங்கில் விவாதிக்கப்பட்டுவிட்டது; உங்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு தற்சமயம் இது நீதிமன்ற விவாதத்தில்
இருப்பதால், விசாரணை முடியும்வரை வழக்கின் போக்கை நாம் முன்னே அறிய இயலாதாகையால், நான் கேட்கும் கேள்விகளுக்கு தாங்கள் இருவரும் தயைகூர்ந்து நீதிமன்ற அவமதிப்பு ஏற்படும்
வண்ணம் பதில் தர வேண்டாம் என்று முதலிலேயே கூறிவிடுகிறேன். எமது கேள்விகளும் அதற்கேற்றவாறே தயாரித்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைச்சர் மற்றும் எம்.பி.: சரி!! புரிகிறது!! (ஒரு இறுக்கமான புன்முறுவலுடன்!!).
தொ.கா.ம.தொ: இந்த ஒப்பந்தங்களில் இறுதி முடிவெடுக்கும் நிலைக்கு நீங்கள் செல்லுமுன், அது தொடர்பான கேள்விகளுக்கு முன் ஒரு கேள்வி. இந்த நீரா ராடியா என்பவர் யார்? அவருக்கும்
உங்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது?
அமைச்சர்: அதுதான் எங்களுக்கும் வியப்பாக உள்ளது. துறை ரீதியாக அவரை எங்களுக்கு முன்கூட்டியே அறிமுகமில்லை, பரிச்சயமில்லை.
எம்.பி.: ஆமாம், எனக்குக் கூட அதிகமாக அவரிடம் அறிமுகமில்லை.
தொ.கா.ம.தொ: (ஆச்சரியத்துடன்) எப்படி? அவர்தான் உங்களிடம் தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் பலமுறை விவாதித்துள்ளதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணையில் சொல்லியுள்ளாரே?
நீங்கள் சொல்வது பார்த்தால், ஒரே குழப்பமாக இருக்கிறதே?
அமைச்சர்: எங்களூக்கும் அதுதான் குழப்பம்தான்.
எம்.பி.: ஆமாம், அவர் எங்களூடன் பேசியதும் பழகியதும் உண்மைதான்.
தொ.கா.ம.தொ: அப்படியென்றால், மேன்மேலும் குழப்பமாக உள்ளதே? அவரை முன்பின் அறிமுகமே இல்லை என்கிறீர்கள், பின் பேசினோம் என்கிறீர்கள், கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?
எம்.பி.: நான் சொல்கிறேன். ஒரு நாள் நானும் அமைச்சரும் இந்தத் துறையின் வளர்ச்சி தொடர்பாக அமைச்சரின் அலுவலகத்தில் விவாதித்துக் கொண்டிருந்தோம். இடையே சிற்றுண்டி இடைவேளை
நேரத்தில் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அமைச்சரின் உதவியாளர் 'காபி, தேனீர், அல்லது குளிர்பானம் ஏதும் வேண்டுமா?' என்று கேட்டார். நாங்கள் வழக்கமாக காபியோ தேனீரோ தான்
அருந்துவோம். அன்று சற்று வித்தியாசமாக நம் மதுரையில் கிடைக்கும் 'ஜிகர் தண்டா' மாதிரி ஏதாவது கிடைக்குமா? என்று உதவியாளரிடம் கேட்டோம். அவர்தான் 'அப்படி ஏதும் இங்கே
கிடைக்காது மேடம்!! நீங்கள் சொல்வது தென் இந்தியாவில் கிடைக்குமோ என்னவோ? ஒருவேளை நீங்கள் வட இந்தியாவில் கிடைக்குமே, நீரா என்கிற குளிர் பானம்? புகை வண்டி நிலையங்களில்
சாதாரணமாக கிடைக்குமே, அதுவா? என்று கேட்டார். நாங்களூம், சரி, நீரா கொண்டு வாருங்கள் என்று சொன்னோம். அவரும் வெளியே சிற்றுண்டி வினியோகிக்கும் நிறுவனத்திற்கு 'நீரா, நீரா' என்று
குரல் கொடுத்தார்.
ஒரு பத்து நிமிடங்களுக்குபின் ஒரு மாது எங்களை நோக்கி 'உள்ளே வரலாமா?' என்று அமைச்சக வாயிற்கதவருகே காத்திருந்தார்.
நாங்களூம் சற்று நேரம் எங்களுக்குள்ளே 'தற்சமயம் ஏதும் பார்வையாளரைச் சந்திக்கும் முன் கூட்டியே உத்தேசித்துள்ள 'அப்பாயின்ட்மெண்ட்' பார்க்க அமைச்சரின் குறிப்புக்க்ளைப்
பார்த்துக்கொண்டே அந்த மாதுவை உள்ளே வர அழைத்தோம்.
அவரே தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார், தாம் நீரா ராடியா என்றும் தமது நிறுவனம் சார்பாகவும் இந்த இலாகா தொடர்பாகவும் அமைச்சருடன் ஒரு விவாதம் வேண்டிக் காத்திருப்பதாகவும்,
சொன்னார்.
அப்போதுதான் எங்களுக்கு நடந்த குழப்பத்தின் வீச்சு புரிந்தது. நாங்கள் சிற்றுண்டிக்குபின் அருந்த வேண்டி உதவியாளர் குரல் கொடுக்க, தற்செயலாக அங்கு வெளியே பார்வையாளர் அரங்கில்
காத்திருந்த நீரா அம்மையார் உள்ளே வர நேரிட்டது என்றும் எங்களுக்குப் புரிந்தது.
அவரோ உள்ளே வந்துவிட்டார், சரி, அமைச்சருடன் பேசட்டுமே என்று நான் சற்றே விலகி சற்றுத் தள்ளியிருந்த மேஜையில் அமர்ந்துகொண்டேன். அமைச்சர்தான் 'என்னையும் அவர்களின்
விவாதத்தில் கலந்துகொள்வதில் தனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை, நீரா அவர்களுக்கு ஆட்சேபமுண்டா என்று அவரிடமும் கலந்துகொண்டு பின் நாங்கள் மூவரும் அவர் வந்த விஷயத்தைப்
பற்றி பேச ஆரம்பித்தோம். இப்படித்தான் எங்களின் அறிமுகம் ஏற்பட்டது.
தொ.கா.ம.தொ.: ஓ!! அப்படியா? இப்போது என் குழப்பம் விலகியது. பின் என்னவாயிற்று? இந்த அலைக்கற்றை விவகாரத்திற்கும் நீரா ராடியா உள்ளே வர நேர்ந்த அந்த விஷயத்திற்கும் என்ன
தொடர்பு? இப்படி பின்னாளில் நீதிமன்றத்திலும் சிபிஐ விசாரணை வருமளவுக்கு அப்படி என்ன தொடர்பு?
அமைச்சர்: நாங்கள் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு எப்படி செய்யலாம், நாட்டிற்கும் அமைச்சகத்திற்கும் எப்படி சேவை செய்யலாம் என்று விவாதித்துக்கொண்டிருந்த நேரம், அவர்
தம் கோரிக்கையை விளக்கியபோதுதான் அவர் வந்ததன் பின்னணியும் எங்கள் விவாதத்தின் பின்னணியும் தற்செயலாக ஒத்துப்போக எங்கள் மூவரின் கலந்துரையாடல் ஒரு தெளிவுக்கு எங்களை
இட்டுச் சென்றது. பின், அமைச்சக சகாக்களிடம் (சட்டம், உள்துறை, தொலைத்தொடர்புத் துறை, டிராய், நிதித்துறை மற்றும் பிரதமர் அலுவலகம்) விவாதித்து அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக
ஒரு தெளிவான நிர்வாக நடைமுறையையும் யார் யாருக்கு எந்த எந்த நிறுவனங்களுக்கு எந்த விகிதாசாரத்தில் அவர்தம் விண்ணப்பப் படிவம் மற்றும் ஒப்பந்தப் புள்ளி கோரிக்கையின்
அடிப்படையில் 'முதலில் வருபவருக்க்கு முன்னுரிமை' என்று முந்தைய அரசு கொணர்ந்த பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டது.
தொ.கா.ம.தொ: உங்கள் இருவருக்கும் பொதுவானது இக்கேள்வி. உங்கள் மீது கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் நீங்கள் அறிவீர்கள், உங்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளின் பின்னணியும்
வழக்கின் போக்கும் நீங்கள் அறிவீர்கள். நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளையே நானும் இங்கே மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை. இது மக்கள் மன்றத்தில் நேரடியாக
விவாதிக்கப்படுவதால், மக்களுக்கு உண்மை நிலவர்ம் தெரிய வேண்டும், உங்கள் தரப்பில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றும் தெளிவாகவும் அதே நேரத்தில் சுருக்கமாகவும் சொல்லலாம்.
முதலில் அமைச்சர் பேசுங்கள்.
அமைச்சர்: நன்றி. நானும் சற்று யோசித்தேன், நீங்கள் கேட்கும் கேள்வி எப்படியெல்லாம் இருக்கும், வழக்கு நிலுவையில் இருக்கும்போது நாங்கள் எப்படி உங்கள் கேள்விகளை எதிர்கொள்வது என்று
எங்களுக்கும் ஒரு தயக்கம் உண்டு. நீங்கள் தற்போது எங்கள் தரப்பில் நாங்கள் சொல்லவேண்டியதைக் கூற வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
இந்த வழக்கின் பின்னணிக்குப் போகுமுன், 1992க்குப் பின் அப்போதைய காங்கிரஸ் அரசு, அதன் பிரதமர் திரு. நரசிம்மராவ், அப்போதைய நிதி அமைச்சரும் இன்றைய பிரதமருமான திரு.
மன்மோகன்சிங், அப்போதைய அரசில் அங்கம் வகித்த மறைந்த திரு. மாறன் அவர்கள், திரு சிதம்பரம் அவர்கள் இவர்களின் பொருளாதார, வணிகம் மற்றும் நிதித்துறை அனுபவங்கள் நமக்கெல்லாம்
நிறையப் படிப்பினைகளையும் ஆலோசனைகளையும் கொடுத்து வந்துள்ளன.
முந்தைய பாஜக அரசில் மறைந்த திரு. பிரமோத் மஹாஜன் இந்தத் துறைக்குப் பொறுப்பாக இருந்தபோது அவர் எடுத்த முடிவுகளும் அன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளையும் நான்
உங்களுக்கு நினைவுறுத்த விழைகிறேன். நாங்கள் இன்று எடுத்துள்ள நிர்வாக ரீதியிலான முடிவுகள் அவரது முந்தைய வழிகாட்டுதல் மற்றும் வழிமுறைகளை ஒட்டியே எடுக்கப்பட்டன என்று
முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கும் முன்பு இப்பதவியில் இருந்த எங்க்ள் கழகத்தின் முன்னோடி, திரு. தயாநிதி மாறன் அவர்களின் நிர்வாக ரீதியிலான முடிவுகள், அரசாணைகளையும்
நான் குறிப்பிட விரும்புகிறேன்.
கூடவே வேறு ஒரு கோணத்தில் இந்தப் பிரச்சினையை நான் பார்க்கிறேன்.
தொலைத்தொடர்புத்துறையில் முன்னோடியாக திட்டங்களை வகுத்து பல ஆண்டுகள் முன்பு திரு. சாம் பிட்ரோடா முதலான முன்னோடிகள், அறிஞர்கள் வகுத்த பாதையையும் அவர்கள் போட்ட
அடிச்சுவட்டில்தான் பின்வந்த பல்வேறு அமைச்சுகளும்,தத்தம் முடிவுகளை வகுத்தன, அரசாணைகள் வந்தன. உங்களுக்கே தெரியும். முன்போல் செல்போன் கட்டணம் ஒரு நிமிடத்திற்கு 10 ரூபாய், 8
ரூபாய் என்றிருந்த காலம் கூட உண்டு. அப்போதெல்லாம் இந்தத் தொழில் நுட்பம் இந்த நாட்டிற்குப் புதிது. இந்தத் துறையில் தொழில் முனைவோரும் மிகக் குறைவு. அரசுத் துறையில் டி.ஓ.டி.
என்று இன்று கூறப்படும் இன்னாளைய பி.எஸ்.என்.எல். மற்றும் வி.எஸ்.என்.எல். இரண்டும் தான் இந்த சேவையை அன்று வழங்கி வந்தன.
அப்போது அலைக்கற்றை ஒதுக்கீடு இப்படியெல்லாம் இந்த அளவுக்கு வணிக அளவில் வியாபாரம் செய்ய முடியும், அலைக்கற்றை என்று ஒன்று இருந்ததாகவே பலருக்குத் தெரியாது; இந்தத்
தொழில் நுட்பம் வளர வளரத்தான் இந்தத் துறையில் பலர் முதலீடு செய்யத் தலைப்பட்டார்கள்.
படிப்படியாக ரூ.10, ரூ.8 என்றிருந்த மணிக்கணக்கிலான கட்டண சேவை இதற்கு முந்தைய ஆட்சியில் கழகத் தோழர் தயாநிதி அவர்களின் காலத்தில் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் கட்டணம்
என்று அவரது முற்போக்கான வழிமுறைகளில் நடைமுறைக்கு வந்தது. பாரதம் முழுக்க எல்லோரும் ஒரு ரூபாயில் தொலைபேசியில் பேசலாம் என்பதையே அவர்தான் ஒரு மகத்தான திட்டம்
மூலம் அறிமுகப்படுத்தி மக்களுக்கு ஒரு பெரும் சேவை புரிந்தார்.
அவருக்குப் பின் நான் பதவியேற்றபோது, இன்னமும் மலிவான கட்டணத்தில் ஏன் நாம் இந்தச் சேவையை விரிவுபடுத்தக் கூடாது என்று ஆலோசித்தபோதுதான் எனக்கு நிர்வாக ரீதியாக
ஆலோசனை தர கழகத்திலிருந்து தோழி கனிமொழியும் பிறகு நீரா ராடியா அம்மையாரும் பேருதவி நல்கினார்கள். எனது நோக்கம், ஒரு காலத்தில் முழுக்க முழுக்க இலவசமாகவே இச்
சேவையை நாம் மக்களுக்கு வழங்கவேண்டும். தற்சமயம் இருக்கும் ஒரு ரூபாய்க் கட்டணத்தை 20 பைசாவாகக் குறைத்து வழங்கவேண்டும் என்று நான் விரும்பினேன். அதனால்தான் பல்வேறு
நிறுவனங்களுடன் தொழில் முனைவோருடன் ஆலோசித்தேன்.
அத்தகைய ஆலோசனைகளின் வெளிப்பாட்டில் வந்ததுதான் இந்த அலைக்கற்றை ஏலம் தொடர்பான அரசின் முடிவும் பின் வந்த அரசாணைகளும்.
தொ.கா.ம.தொ: ஒரு துணைக் கேள்வி. திரு. தயா நிதி அவர்களின் ஆட்சிக்காலத்தில் சுமார் 232 பிரத்தியேக கனெக்ஷன்கள் சன் டிவி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது என்றும் இது சட்ட
விரோதமானது என்றும் கூறப்படும் குற்றச்சாட்டைப் பற்றி நீங்க்ள் கூற விரும்புவது?
அமைச்சர்: அதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை.
232 கனெக்ஷன்கள் மூலம் சன் டிவி தங்கள் தனிப்பட்ட வருவாய்க்கு அவர்கள் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லையே? சன் டைரக்ட் அல்லது டி.டி.எச் (டைரக்ட் டு ஹோம்) என்கிற
சேவைக்காகத்தானே அந்த கனெக்ஷன்கள் பயன்படுத்தப்பட்டன. மக்களுக்குக் குறைந்த செலவில் நேரடியான தொலைக்காட்சி சேவை வழங்கவே அவை பயன்பட்டன.
ஒரு கனெக்ஷனுக்கு சுமாராக 1000 ரூபாய் அடிப்படைக்கட்டணம் என்றால் கூட, சுமார் 10000 நேரடி டி.டி.எச். தொடர்புகள் அளிக்கப்பட்டதாகவே வைத்துக் கொள்வோம் (குறைந்த பட்ச
அனுமானத்தில்). நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள் அதன் மூலம் வந்திருக்கக்கூடிய வருவாய் எவ்வளவு என்று? கிட்டத்தட்ட 232 கோடி வருவாய் சன் டிவிக்கும் அதன் மூலம் சன் டிவி
அரசுக்கு ஈட்டித்தரும் வருவாய்.
இதுபோல் பல தொலைக்காட்சிச் சேவை நிறுவனங்கள் இதே சேவையை அளித்துவருகின்றன. நீங்களே யூகிக்கலாம், அரசுக்கு எங்க்ள் திட்டம் மூலம் எவ்வளவு வருமானம் என்று?
இப்படியெல்லாம் நாங்கள் திட்டமிட்டு ஒரு திட்டத்தை அமல்படுத்தினோம். தேவையே இல்லாமல் மத்தியத் தணிக்கை ஆய்வாளர்களும் தத்தம் கணக்கீடுகள் (கால்குலேஷன்) போட்டு எங்கள் மீது
ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சொல்கிறார்கள். அதனால்தான் நாங்கள் முதலிலிருந்தே சொல்லி வருகிறோம், நாங்கள் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்று.
எம்.பி.: ஆமாம், நான் கூட தேவையில்லாமல் இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு வழக்கு, கைது என்று ஒரே களேபரமாகிவிட்டது.
தொ.கா.ம.தொ: நீரா ராடியா திரு. டாடா அவர்களின் கம்பெனி தொடர்பாக உங்களை பார்க்க வந்ததாகவும் திரு. டாடாவுக்கும் இந்த ஒதுக்கீடுகளின் பின்னணியில் பங்கிருக்க வாய்ப்புண்டு என்று
மீடியாவில் ஒரு கண்ணோட்டம் உள்ளதே?
எம்.பி.: ஐயையோ? இப்படியெல்லாமா அபாண்டமாகப் பழிபோடுவார்கள்? திரு. டாடாவை நாங்கள் சந்தித்ததோ பேசியதோ இல்லை. ஒரே ஒரு முறை நானும் நீரா ராடியாவும் தற்செயலாக புது
டில்லி விமான நிலைய வளாகத்தில் சந்தித்துக்கொண்டோம். அவர் மும்பாய் செல்லும் விமானத்திற்காக காத்திருந்தார், அதே சமயம் நாங்கள் சென்னை விமானத்திற்காக காத்திருந்தோம். சிறிது
நேரம் சிற்றுண்டி அருந்திவிட்டு பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது மிகத் தற்செயலாக வேறு ஒரு விமானத்தைப் பிடிக்க அவ்விடம் வந்த திரு டாடாவை நீரா ராடியா எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். எங்கள் விமானத்திற்கான அழைப்பு வரவே
அவ்வண்ணமே நாங்கள் அவர்கள் இருவருக்கும் 'ச்சும்மா டாட்டா' காண்பித்துவிட்டு சென்றுவிட்டோம். வேறு ஒன்றும் இல்லை.
தொ.கா.ம.தொ: (மூர்ச்சையாகிறார்).
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 'தடங்கலுக்கு வருந்துகிறோம். இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சி அடுத்த சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்புத் தொட்ரும்' என்று கார்ட் போடுகிறார்கள்.