Showing posts with label Kavithai. Show all posts
Showing posts with label Kavithai. Show all posts

Sunday, January 4, 2015

பூ காய் கனி (ஒரு பார்வை)

பூ காய் கனி (ஒரு பார்வை)

January 2, 2015 at 12:21pm
நண்பர் மாயவரத்தான் ரமேஷ்குமார் ஒரு பதிவில் காய் கனி என்று ஒரு கேள்வி பதில் புதிர் மாதிரி குறிப்பிட்டிருந்தார், நேற்றோ இன்றோ. 

அதன் தொடர்பில் சிந்தனை சென்றதன் பின் விளைவு இது. இந்த மனுஷனுக்கு ரொம்பவே 'கனிஞ்சிடுச்சோ' 'வெம்பிடுச்சோ'ன்னெல்லாம் ஆராயப்படாது, பிரிஞ்சிதா மக்கழே!! 

பூ பிஞ்சு காய் கனி 

காய் கனி என்றால் பின் வரும் பாடல்கள் நமக்கு நினைவில் வரும். 

அன்னை திரைப்படத்தில் பானுமதிம்மா பாடிய இந்தப் பாடல் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இது ஒரு அருமையான தாலாட்டுப் பாடல், பெரும் புகழ் பெற்றது. 

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று 
பூவாமல் காய்க்காமல் விழுந்த மரம் ஒன்று..........



பலே பாண்டியா படத்தில்:
அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் வெண்ணிலவே....





தேன் தேன் என்றும் சில பாடல்கள் உண்டு.
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்........என்று எத்தனை விதமான தேன் சுவைகள் இந்தப் பாடலில். 

பூ காய் கனி என்று இதிலுள்ள நுண்ணியல்களை ஆராய்ந்தால்?

பூ பூவாகவே இருந்து காயாகாமல் இருந்தால் பூமாலையாகும் பாக்கியம் எத்துணைப் பூக்களுக்குக் கிட்டும்? பூமாலை ஆகாவிடினும் பூவாகவே இறைவனுக்கு அர்ப்பணம் ஆகும் பூக்கள் எத்தனை? 
சிலவகைப் பூக்களுக்குத்தான் காய் கனி எனப் பரிணாம வளர்ச்சி தடைப்பட்டு நேரடியாய் பூஜைப் பொருளாய் ஆகும் பாக்கியம் உண்டு. 

பூ காயாகி கனியாகாமல் காயாகவே இருந்துவிட்டால், அதன் பயன்?
சில வகைக் காய்களுக்குத்தான் தேன்சுவை தரும் கனியாகும் பரிணாமம் வாய்த்துள்ளது. எல்லாக் காய்களுமே கனியாகுமா? கனியாகும் பரிணாமம் இயற்கையில் இல்லையில் அது காயின் குற்றமா?

காய் காயாகவே இல்லாமல் கனியாகும் பரிணாமமும் வாய்க்கப் பெற்றாலும், எத்துனைக் கனிகளுக்கு இறைப் பணியில் ஓர் அங்கமாகும் வாய்ப்பு உள்ளது? அவ்வண்ணம் கனியாகாமலேயே காய்ப்பருவத்தே பயன் தரும் காய்கள் பல உண்டு. காயோ கனியோ எந்தச் சுவையிலும் இனிமை தருவது கொய்யா. 

சில வகைக் கனிகளுக்கே கனியும் தன்மை வரை பயன் தரக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. 

எத்துனைக் கனிகள் இருந்தாலும், காயான பருவத்தே கனிச்சுவை, தேன்சுவை பெற்று தேன்காயாக தேங்காயாக பரிணாமம் பெறுவது தென்னைக்கு மட்டுமே வாய்த்துள்ளது. 

தேன் சுவை சேர்ந்து செவ்விள நீர் தரும் தருவாயிலேயே தேங்காயாகும் பரிணாமும் எத்துனைத் தேங்காய்களுக்கு வாய்த்துள்ளது? இருப்பினும்  தேங்காயோ செவ்விளநீர் தரும் இளநியோ ஏதோ ஒரு ரூபத்தில் இறைப்பணியில் அங்கம் பெறுகிறது. இளநீர் அபிஷேகத்திற்கும், தேங்காய் பூஜைப் பொருளாகவும் ஆகிறது. 

பூவோ காயோ கனியோ ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கும் உடனுறை மிருகங்களுக்கும் உணவுப் பொருளாக அல்லது பின்னர் ஏதோ ஒரு ரூபத்தில் பழச்சாறு, எஸன்ஸ் என்று இவை ஒரு வடிவம் பெற்று மனிதகுலத்துக்கு உதவுகின்றன. 

பூ காய் கனி பற்றிப் பார்த்தாயிற்று. 

பூ பிஞ்சாகி அடுத்த கட்டம் பரிணாமம் பெறாமலேயே அதன் வளர்ச்சி நின்றுவிடும் ஒரு சில உயிர்களும் உண்டு. தாவரவகைகளில் சில அப்படிப்பட்டவை. பிஞ்சு என்கிற ஸ்திதியிலேயே மனிதன் மட்டுமல்லாது விலங்குகளுக்கும் பயன்படும் அளவில் அதனதன் இயல்பு வாய்த்துவிடுகிறது (வெள்ளரி பிஞ்சு). 

காய்ப் பருவத்திலேயே பரிணாமம் முற்றுப்பெற்று மருத்துவ ரீதியில் பயன்படும் சில தாவர வகை உண்டு (உ.ம். மணத்தக்காளி, சுண்டை இத்யாதி). 

வெகுசில கனிகளே முற்றிய கனிகளாகும் பருவத்தே பயன்படும் பாக்கியம் பெற்றவை. பெருவாரியாக முற்றிய கனிகள் நேரே குப்பைத் தொட்டிக்குள்தான் போகும். 

அதுபோல்தான் ஒவ்வொரு மனிதனும் பிறந்து வளர்ந்து தத்தம் இயல்புக்கேற்ப வாழ்ந்து பரிணாம வளர்ச்சியில் தமக்கென்று குடும்பம், பிள்ளைப்பேறு என்று வம்சவிருத்தி ஏற்படுகிறது. 

ஒரு சிலரே குடும்பம் பிள்ளைப்பேறு எனும் அடுத்தக்கட்ட வளர்ச்சி கிட்டாமல் தேங்கிவிடுகிறார்கள் / ஒரு நிலையில் தங்கி விடுகிறார்கள். 

இருப்பினும், அவரவர் இயல்புக்கேற்ப அவரவர் வழியில் இந்தச் சமூகத்திற்கு பயன் தரும் பணியைப் பாங்கே செய்கிறார்கள். சிலர் பயந்தரும் பணியையும் செய்வதுண்டு. அதுகண்டு பயந்தாருமுண்டு. 

(சிந்தைனை தொடரும்)

அப்பம் வடை லட்டு!!

அப்பம் வடை லட்டு!!

Posted on my FB wall since 03.01.2015. 

கதை நாயகனுக்கு பெயர் என்று எதுவும்கிடையாது. அவன்!!

அது ஒரு சிற்றூர், கோவைஅருகே ஒரு சிறு ஊர்,கிராமமும் இல்லை நகரும் இல்லை,அதிக வளர்ச்சியில்லா ஊர்.
பிறந்து வளர்ந்த வறுமை அல்லது ஏழ்மைச் சூழலில் கிராமப் புற வளர்ப்பில் சிறு பிராயத்திலிருந்தே அவனுக்கு தனிப்பட்ட ஆசைகள் ஏக்கங்கள் இருந்ததா தெரியாது.

கிட்டத்தட்ட5 அல்லது 6 வயதிருக்கும்போது நோய்வாய்ப்பட்ட அவன் தாய் அவனிடமிருந்து  பிரிந்தார் (இறையடி சேர்ந்தார்). அவனுடன் பிறந்தவர்கள் அவனையும் சேர்த்து  5 பேர் இருந்தும், அவன்தான் கடைக்குட்டி.

ஒவ்வொருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம்.  அவனுக்கும் தந்தைக்கும் இடையே வயது வித்தியாசம்  42க்கும் மேல்.  எனில்,  மற்ற தமையன்மார்களின் வயதை யூகிக்கலாம்.

அவன் தந்தை கிராமப்புறங்களுக்கே உரிய  'தான் உண்டு, தன் வேலைஉண்டு' என்று ஒரு பண்ணையில்  வேலை பார்த்து வந்தார்.  கஷ்டப்பட்டுத்தான்  ஒவ்வொருவரையும் வளர்த்தார். சில பல காரணங்களால்  அவனது  தமையன்மார்கள் பள்ளிப்பருவம் முடிந்தபின் தத்தம் தொழில் அல்லது  வளர்ச்சியில் கவனம் செலுத்தி ஊர்  நாட்டை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டிருந்தனர். ஒரு சமயத்தில் அவன்  தனித்து  விடப்பட்டான்,  வீட்டில் தந்தை மட்டும்தான்.

தந்தைதான்  தானே சமைத்துப் போட்டு குழந்தைகளை வளர்த்தார்.  அவனைப் பொருத்தவரை அக்கம் பக்கம் உள்ள  வீடுகளில் வாழூம் அக்காக்கள், சமவயது  அல்லது தங்கை எனச் சொல்லத்தக்க  பெண்களின் பரிச்சயம் அவனுக்கு. அவர்களும் தத்தம் வீடுகளில் செய்யும்  பட்சணங்கள் அவனுக்கு அவ்வப்போது கொடுப்பதுண்டு.  அந்த அளவில் மட்டுமே பட்சணங்களுக்கும்  அவனுக்கும் உள்ள பரிச்சயம்.

வீட்டில்  அவனுக்கு எப்போதுமே மோர் சாதம் அல்லது  தயிர் சாதம் ரொம்பப் பிடிக்கும்  அவனுக்கு.  எப்போதாவது  தந்தை வேலை முடிந்து வீட்டுக்கு  வரும்போது வடை வாங்கி  வருவார்.


சிறு பிராயத்தில் கிராமத்தில் கோயில் திருவிழா, இதர  வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் விருந்துக்கு அழைப்பார்கள். அவனும் சென்றிருக்கிறான். விருந்துகளில்  அப்பம் வடை எப்போதுமே இருப்பதுண்டு.

ஏனோ தெரியலை, அவன் எப்போது  பார்த்தாலும் அப்பம் சாப்பிடுவது அவனுக்குப்  பிடித்தது. அதன் மென்மையான இனிப்புச்சுவை அவனை ஈர்த்தது.  சில  விருந்துகளில் லட்டு, பணியாரம், மைசூர்பாக் என்கிற பல்வகை இருக்கும்,  மற்றவை என்னவோ அவனை ஈர்த்ததில்லை.

அவனும் படிப்பில் அப்படி ஒன்றும் பெரிய  அப்பாடக்கர் எல்லாம் இல்லை. ஏனோதானோ என்று சராசரி மார்க்  வாங்கி படித்து முடித்தான்.

தந்தை மட்டுமே ஊரில் இருந்ததால்,  தொடக்கத்தில் கல்லூரிப் படிப்பு மாலை நேர வகுப்புத்தான்அவனுக்கு வாய்த்தது. சராசரி ரேஞ்சில் இருந்ததால்  மற்ற சம வயது பள்ளிக்கால நண்பர்களைப்போல் முறையான கல்லூரிப் படிப்பு படிக்க அவனுக்கு அதிருஷ்டம் இல்லை.

மாலை நேர வகுப்பு என்பதால்  பக்கத்து கிராமத்தில் இருந்த பட்டறையில் வேலைக்குச்  சேர்ந்தான். குடும்பச் சூழல் காரணமாய் அவன்  தந்தையும் பொருளாதாரக் காரணங்களுக்காக அவன் படிப்பை ஒருபக்கம் பார்த்துக் கொண்டே வேலை பார்க்கும் அவனது  யோசனைக்கு மறுப்புச் சொல்லவில்லை.

அவன் தந்தை சுபாவத்தில் அதிகம்  பேசமாட்டார். அவர் உண்டு  அவர் வேலை உண்டு என்று இருந்தவர். அவருக்கும்  பெரிய நட்பு வட்டம் என்று  யாரும் இருந்ததில்லை. உறவின் முறை விருந்தினர்கள்  என்று யாரும் வீட்டுக்கு வந்து போகும் வழக்கமும் அதிகமில்லை. அவனது தாய் மாமன், வயதில் ரொம்பவே மூத்தவர், எப்போதாவது  வருவார், ஓரிரு நாட்கள் இருப்பார்,  சென்று விடுவார்.

இதனால் அவனுக்கு சுபாவத்தில் ஒருவித தனித் தன்மையும் தனியே இருந்தே பழகி விட்டான்.  நண்பர்களும் பக்கத்து ஊர்களில் கல்லூரிப் படிப்பு என்று சென்று விட்டதாலும்,  இவனும் வேலைக்கும் படிப்புக்கும் இடையே எப்போதாவதுதான் நண்பர்களைச்  சந்திப்பான். இவனது வட்டத்தில் 4 அல்லது 5 நண்பர்கள்தான் இருந்தார்கள்.

இந்தச் சூழலில் இவன் படிப்பை முடிக்கும் முன்பே (3ம் ஆண்டு பட்டப் படிப்பு)  அவன் வேலை பார்த்த பட்டறைக்கு வந்த ஒருவர் இவனது  வேலைத் திறமையைக் கண்டு வியந்து பட்டறை முதலாளியிடம் இவனைத் தன்னுடன் தன் ஊருக்கு அழைத்துச் செல்லலாமா என்று கேட்க, அவரும் ஒன்றும் சொல்லவில்லை. 

வீட்டில்தந்தையிடம் ஆலோசித்துவிட்டு அவனும் அவருடன் வடக்கே கான்பூர் லூதியானா என்று அவர் அழைத்துச் சென்ற ஊர்களுக்குச் சென்றான்.

சென்ற இடங்களிலெல்லாம் முதலாளியைப் பார்க்க வருபவர்கள் கொண்டுவரும் இனிப்புக்கள் பரிசுப் பொருட்கள் இவன் மூலமே வீட்டின் மற்றவர்களுக்கு பரிமாறப்படும். வீட்டின் விசேஷ நடைமுறைகள், நிர்வாகம் என்று அவரது தொழிற்சாலை மற்றும் வீடு என்று அவரிடமே தொழில் கற்றுக்கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டான்.

அது மாதிரி வரும் இனிப்புக்களைப்  பார்க்கும்போது அவற்றில் லட்டு அவனுக்கு பார்க்கப் பிடித்திருந்தது. சிறு வயது முதல்அப்பம் மட்டுமே ஒரு இனிப்பாக கருதியிருந்தான். மற்ற வகை கண்டு கொள்ளவே  மாட்டான்.

முதல் முதலில் லட்டு பார்த்தபின் அவனுக்கும் சாப்பிட வேண்டும் என்கிற  ஆவல் மிகும். ஆனால் யாராவது   எதாவது சொல்லி விடுவார்களோ என்று அமைதி காப்பான்.முதலாளி வீட்டில் அவுட் ஹவுஸ்  மாதிரி ஒரு தனியறை அவனுக்கு  தங்குவதற்கு அமைத்துக் கொடுத்தார்.

விருந்தும் கேளிக்கையும் முடிந்து அனைவரும் சென்ற பின் அந்தக் களேபரங்கள் ஓய்ந்தபின் அவர்கள் தரும் ஏதோ ஒரு உணவு, அது ரொட்டியோ  சன்னாவோ (கடலைக்கறி) தன் அறைக்கு எடுத்துச் சென்று இரவு வெகு நேரம் சென்ற பின்னர் சாப்பிடுவான்.

அவனுக்கு வேலை விஷயமாய் கடைத் தெரு அங்காடிகளுக்குச் செல்லும் தருணம் சில வகை பலகாரக் கடைகளில் வகை வகையாய் பற்பல பலகாரங்கள் இருக்கும்.  சில வடக்கத்திய கேக் வகைகள், லட்டு மாதிரி சில இனிப்புக்கள் கார வகைகள் என்று கலந்துகட்டி இருக்கும்.

இவன் சிறு வயதில் ஒரு விருந்தில் கண்ட லட்டும் அதில் இருந்தது.

கையில் உள்ள காசைக்  கருத்தில் கொண்டு முதன் முறை லட்டு  மட்டும் வாங்கி உண்பான்.

கூடவே இருக்கும் மற்ற இனிப்புக்கள் பலகாரங்களில் மனம் நாட்டமில்லை.

இப்படியே ஒரு 5 வருடம் சென்றது. அதே முதலாளியின் நண்பர் வேறு ஒரு ஊரில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைக்கு  நம்பகமான ஆள் தேவை என்று இவரிடம் கேட்க அவனது முதலாளி இவனைக் கை காட்டினார். இவனும் முதலாளியே போகச் சொல்கிறாரென்று அடுத்த ஊருக்குச் சென்று விட்டான். அது குஜராத் பக்கம் ஒரு சிற்றூர் (சூரத் அருகே).

அது ஒரு டெக்ஸ்டைல்  தொழிற்சாலை. புடவைகள் சுடிதார்கள் என்று தயாரித்து அந்த நிறுவனம் இந்தியாவின் பற்பல  ஊர்களுக்கும் முகவர்கள்  வாயிலாய் விற்று வந்தது.  இவன் அதன் வணிக விற்பனைப் பகுதியில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

அங்கும் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பான் (இவன் தந்தை போலவே). இடையே அவ்வப்போது விடுப்பில் தன் சொந்த ஊர் செல்வான், தந்தையையும் பழைய நண்பர்களையும் பார்த்து வருவான். ஒரு சில நண்பர்கள் தொழில் நிமித்தம் பெங்களூர், மும்பை, தில்லி என்று சென்று விட்டார்கள். தீபாவளி அல்லது பொங்கல் நேரம் மட்டுமே விடுமுறையில் சந்திப்பார்கள்.

சூரத் அருகே பணிபார்த்த நாட்கள் அவன் வாழ்வில் வசந்தம் வந்தது. திருமணமும் நடைபெற்றது. அவன் தந்தை பார்த்து வைத்த குடும்பச் சூழலில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான், பிள்ளை குட்டி என்று அடுத்த 10 ஆண்டுகள் சென்றது.

அவ்வப்போது சிலவகை விருந்துகள் கேளிக்கைகள் என்று கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும்போது அங்கு ஒரு தென்னிந்தியக் குடும்பத்தில் விருந்தில் கலந்துகொண்டான். அங்கு முதன் முதலாய் ரவா லட்டு அவனுக்குப்  பரிச்சயமானது. அதுவரை அதுமாதிரி லட்டு அவன் வாழ்வில் பார்த்ததில்லை, சுவை உணர்ந்ததில்லை. 

அவனுக்குத் தன் சிறு வயது நினைவுகள் வந்து போகும். அப்பமும் வடையும் ஏதோ ஒரு விருந்தில் உண்ட லட்டும் கண் முன்னே தோன்றும். ஏனோ புரியலை. இனிப்பு என்றால் லட்டு அல்லது ரவா லட்டு என்று ஒரு க்ரேஸ், அவனுக்கு ஏற்பட்டது எனலாம்.

அவன் மனைவிக்கு இனிப்பு வகைகள் சில செய்யத் தெரியும். இவனும் விரும்பிச் சாப்பிடுவான். ஆனால் சுவையுணர மட்டுமே. இவன் மனதில் அந்த முதன் முறை சாப்பிட்ட லட்டும் பின்னர் திருமணத்திற்கு முன் சாப்பிட்ட ரவா லட்டு மட்டுமே கருத்தில் இருந்தது.  வயது ஏற ஏற குடும்பச் சூழல், குழந்தை வளர்ப்பு, அவர்தம்  படிப்பு என்று எப்படியோ முன்னேறினான்.

இவன் சொந்த ஊருக்கு அருகே இருந்த பெரு நகரம் கோவை. அங்கு நகருக்கு வெளியே ஒரு வளர்ந்து வரும் பகுதியில் ஒரு வீடு வாங்கினான். மனைவி குழந்தைகளை ஆரம்ப காலத்தில் தன்னுடன் சூரத் அருகே  தான் பணிபுரிந்த ஊரில் வைத்துக்கொண்டான், ஆனால் அவனது பொருளாதாரச் சூழல் அவனால் அவர்களை  அங்கு வைத்துக் கொள்ள ஒவ்வாததால் கோவை அருகே குடியேறி  குடும்பத்தை அங்கே செட்டிலாக்கினான்.

அவ்வப்போது  விடுப்பில் வந்து செல்வான். குழந்தைகளும்  அவனிடம் பாசத்துடன் இருந்தார்கள். அவர்தம் படிப்பு இத்யாதி  காரணமாய் இவனது தொழில் ரீதியாய் குடும்பம் பிரிந்துள்ளது என்று குழந்தைகளுக்கு ஓரளவுக்கு  புரிந்தது.

அவனும் கிட்டத்தட்ட 55 வயது வரை சூரத்திலேயே  காலத்தை ஓட்டிவிட்டான். இடைப்பட்ட காலத்தில் விருந்தும் கேளிக்கையும் அவ்வப்போது இருக்கும். சுபாவத்திலேயே லட்டு மீது ஒரு கண் இருந்ததால் அதை மட்டுமே உண்பான், மற்றவற்றில் நாட்டமில்லாததால் தவிர்த்து விடுவான்.

வயதுக்கே உரிய சரீர உபாதைகள், ஆரம்பகட்டசர்க்கரை நோய், கொழுப்புச் சத்து,இரத்தக் கொதிப்பு என்று அவ்வப்போது நோய்வாய்ப்பட்டான். பல காலம் வெளியூர்களிலேயே  இருந்து  விட்டபடியால் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளாமலேயே இருந்து விட்டான்.

மருத்துவர்களும்  ஆரம்பக்கட்ட சர்க்கரை நோய் என்று சொன்னதால் லட்டு இத்யாதி சாப்பிடுவது  தடைப்பட்டது.  அவ்வப்போது  மனைவி செய்து தரும் இனிப்புக்களும்  நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம்.

இயல்பாய்  இருந்த ரவா லட்டு மீதானபாசப் பிணைப்பு அவ்வப்போது அவனுக்கு வந்து  போகும். ஆனால் செய்து தர ஆளில்லை. ஊர் சென்றால்தான் அவன் மனைவி செய்து கொடுத்தால்தான் உண்டு.

தற்போது மருத்துவ ரீதியாக இனிப்புக்கள் தடை செய்யப்பட்டதால் இவனுக்கு ரொம்பவே பிடித்த லட்டு அல்லது ரவா லட்டு ரெண்டுமே இவனுக்கு மறுக்கப்பட்டது.

அவ்வப்போது நினைத்துக் கொள்வான். சிறு வயது முதலே அதிகம் பட்சணங்கள் மீதான ஆர்வமின்றி இருந்தது,  அப்பம் வடை லட்டு மட்டுமே மனதில் இருந்தது.

இப்போது வயது தாண்டிய காலத்தில் இனிப்பே கிட்டப் போகாதே என்று அவனுக்கு மிகப் பிடித்த உணவு  வகைகளும் அவனுக்கு மறுக்கப்பட்டது.

ஏனோ ஒருவித ஏக்கம் அவனுக்குள்.  சம்பாதித்த காலத்தில் அவன் நினைத்திருந்தால் எந்தவித இனிப்புக்களையும் சாப்பிட்டிருக்கலாம். லட்டு லட்டு என்று  ஒரே பார்வையில் இருந்தவனுக்கு இந்த வயதில் வேறு  பட்சணங்கள் யாராவது கொடுத்தாலும் எதிலுமே  நாட்டமின்றி முன்னர், தான் விரும்பிச்  சாப்பிட்ட லட்டு மற்றும் ரவா லட்டு மட்டுமே அவன் கண்ணில்  நிற்கும்.

அவனுக்கு ஏன் லட்டும் ரவா லட்டும் பிடித்தது?

நினைவுக்கு தெரிந்தவரையில் அப்பம் வடை மட்டுமே பரிச்சயப்பட்டு இருந்தவனுக்கு முதன் முதலில் லட்டுச் சுவை கிட்டியதும் அதன் மணம், நிறம், சாப்பிடும்போது நாவில் ஊறும் சுவை, சுவையுடன் கூடிய ஏதோ ஒரு உன்னதம் அவனுக்கு ஏதோ ஒரு திருப்தியைத் தந்தது. அதுவே அவனுக்குப் போதுமானதாய் இருந்தது, எனவே இயற்கையிலேயே லட்டு மீது ஒரு அதீதப் பிரியம் அவனுக்கு ஏற்பட்டது. 

பிற்காலத்தில் கால ஓட்டத்தில் ரவா லட்டும் அதன் சுவையும் பரிச்சயம் ஆனது லட்டின் சுவையை விடக் கூடுதலாக இன்னும் ஏதோ ஒன்றில் அவனை லயிக்க வைத்தது. 

லட்டு சாப்பிடும்போது நாவில் ஊறும் சுவை மனத்தளவில் ஒரு தாக்கத்தையும்  திருப்தியையும் உண்டாக்கியது எனில், ரவா லட்டு சாப்பிடும்போது அது துளித் துளியாக நாவில் கரையும்போது  அதன் மாவுப் பகுதி சிறிது நேரம் சென்றே கரையும், சுவைக்கும் போதே அதன் நறுமணம் கூடவே ஒருவிதமான விவரிக்க முடியாத இன்பம் அவனுக்கு தோன்றும்.   அந்த வகை இன்பத்தை அவன் வாழ் நாளில் அது வரை அனுபவித்ததில்லை. அவன் நினைத்திருந்தால் பல்வகை இனிப்புக்களைச் சுவைத்து வெவ்வேறு சுவைகளையும் நறுமணங்களையும் அனுபவித்திருக்க முடியும். 

ஆனால் அவனளவில் ஒருவித 'போதும்' என்கிற ஸ்வபாவத்திலேயே இருந்த மனோபாவம் அவனை லட்டு மற்றும் ரவா லட்டுடனே அவனைக் கட்டிப்போட்டு விட்டது. லட்டு பிடிக்குமா ரவா லட்டு பிடிக்குமா என்று அவனிடம் கேட்டால் ரெண்டுமேதான் பிடிக்கும் என்று அவன் சொல்லுவான். ஆனால் ஆழ் மனதில் அவனுக்கு ரவா லட்டு மேல் ஒருவிதத் தனிப் பாசப் பிணைப்பு வந்துவிட்டது. 

பிடித்த  ரெண்டுமே கிடைக்காததால் இனி கிடைக்கும் எதுவுமே  அவனுக்கு பிடிக்காமல் போயிற்று.

யாராவது  விருந்து அது இது என்று அழைத்தாலும், அதிகம் நாட்டமின்றி தனியே  இருந்துவிடுவான், தவிர்த்து விடுவான்.

இப்படியேஅவன் இறுதிக்  காலம் வரை ஓட்ட வேண்டியதுதான்  என்று தனிமையில் மேற்கூரையைப் பார்த்துக்கொண்டு தான் உண்டு, தன்வேலை உண்டு என்று குஜராத்தில்  சூரத் அருகேயே இருந்துவிட்டான். அவன்  குடும்பமும் கோவையில்.

அவனது (ரவா)  லட்டு ஞாபகமே அவனைத்  தின்று கொண்டிருந்தது!!

Wednesday, December 31, 2014

அவன் அவள் அகல்

அவன் அவள் அகல்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
அவன் அவளின் அகல்
அவள் அவனின் அகல்
அவனியில் அவனின்றி அவள் அகலேல்
அவனியில் அவளின்றி அவன் அகலேல்
அவன் அகலின் அவள் ஆவாள் அகல்
அவள் அகலின் அவன் ஆவான் அகல்
அகலின்றி அவள் அவனில் அகல்
அகலின்றி அவன் அவளில் அகல்
அவளால் அவன் அகலான்
அவனால் அவள் அகலாள்
அகலால் அவள் அகலின் அவன் அகலான்
அகலால் அவன் அகலின் அவள் அகலாள்
அவளின்றி அவன் அகலேன்
அவனின்றி அவள் அகலேள்
அகலும் (நேரம்) அவள் அவனில் அகல்
அகலும் (நேரம்) அவன் அவளில் அகல்
அவளின் அகல் அவன்
அவனின் அகல் அவள்