Sunday, January 4, 2015

அப்பம் வடை லட்டு!!

அப்பம் வடை லட்டு!!

Posted on my FB wall since 03.01.2015. 

கதை நாயகனுக்கு பெயர் என்று எதுவும்கிடையாது. அவன்!!

அது ஒரு சிற்றூர், கோவைஅருகே ஒரு சிறு ஊர்,கிராமமும் இல்லை நகரும் இல்லை,அதிக வளர்ச்சியில்லா ஊர்.
பிறந்து வளர்ந்த வறுமை அல்லது ஏழ்மைச் சூழலில் கிராமப் புற வளர்ப்பில் சிறு பிராயத்திலிருந்தே அவனுக்கு தனிப்பட்ட ஆசைகள் ஏக்கங்கள் இருந்ததா தெரியாது.

கிட்டத்தட்ட5 அல்லது 6 வயதிருக்கும்போது நோய்வாய்ப்பட்ட அவன் தாய் அவனிடமிருந்து  பிரிந்தார் (இறையடி சேர்ந்தார்). அவனுடன் பிறந்தவர்கள் அவனையும் சேர்த்து  5 பேர் இருந்தும், அவன்தான் கடைக்குட்டி.

ஒவ்வொருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம்.  அவனுக்கும் தந்தைக்கும் இடையே வயது வித்தியாசம்  42க்கும் மேல்.  எனில்,  மற்ற தமையன்மார்களின் வயதை யூகிக்கலாம்.

அவன் தந்தை கிராமப்புறங்களுக்கே உரிய  'தான் உண்டு, தன் வேலைஉண்டு' என்று ஒரு பண்ணையில்  வேலை பார்த்து வந்தார்.  கஷ்டப்பட்டுத்தான்  ஒவ்வொருவரையும் வளர்த்தார். சில பல காரணங்களால்  அவனது  தமையன்மார்கள் பள்ளிப்பருவம் முடிந்தபின் தத்தம் தொழில் அல்லது  வளர்ச்சியில் கவனம் செலுத்தி ஊர்  நாட்டை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டிருந்தனர். ஒரு சமயத்தில் அவன்  தனித்து  விடப்பட்டான்,  வீட்டில் தந்தை மட்டும்தான்.

தந்தைதான்  தானே சமைத்துப் போட்டு குழந்தைகளை வளர்த்தார்.  அவனைப் பொருத்தவரை அக்கம் பக்கம் உள்ள  வீடுகளில் வாழூம் அக்காக்கள், சமவயது  அல்லது தங்கை எனச் சொல்லத்தக்க  பெண்களின் பரிச்சயம் அவனுக்கு. அவர்களும் தத்தம் வீடுகளில் செய்யும்  பட்சணங்கள் அவனுக்கு அவ்வப்போது கொடுப்பதுண்டு.  அந்த அளவில் மட்டுமே பட்சணங்களுக்கும்  அவனுக்கும் உள்ள பரிச்சயம்.

வீட்டில்  அவனுக்கு எப்போதுமே மோர் சாதம் அல்லது  தயிர் சாதம் ரொம்பப் பிடிக்கும்  அவனுக்கு.  எப்போதாவது  தந்தை வேலை முடிந்து வீட்டுக்கு  வரும்போது வடை வாங்கி  வருவார்.


சிறு பிராயத்தில் கிராமத்தில் கோயில் திருவிழா, இதர  வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் விருந்துக்கு அழைப்பார்கள். அவனும் சென்றிருக்கிறான். விருந்துகளில்  அப்பம் வடை எப்போதுமே இருப்பதுண்டு.

ஏனோ தெரியலை, அவன் எப்போது  பார்த்தாலும் அப்பம் சாப்பிடுவது அவனுக்குப்  பிடித்தது. அதன் மென்மையான இனிப்புச்சுவை அவனை ஈர்த்தது.  சில  விருந்துகளில் லட்டு, பணியாரம், மைசூர்பாக் என்கிற பல்வகை இருக்கும்,  மற்றவை என்னவோ அவனை ஈர்த்ததில்லை.

அவனும் படிப்பில் அப்படி ஒன்றும் பெரிய  அப்பாடக்கர் எல்லாம் இல்லை. ஏனோதானோ என்று சராசரி மார்க்  வாங்கி படித்து முடித்தான்.

தந்தை மட்டுமே ஊரில் இருந்ததால்,  தொடக்கத்தில் கல்லூரிப் படிப்பு மாலை நேர வகுப்புத்தான்அவனுக்கு வாய்த்தது. சராசரி ரேஞ்சில் இருந்ததால்  மற்ற சம வயது பள்ளிக்கால நண்பர்களைப்போல் முறையான கல்லூரிப் படிப்பு படிக்க அவனுக்கு அதிருஷ்டம் இல்லை.

மாலை நேர வகுப்பு என்பதால்  பக்கத்து கிராமத்தில் இருந்த பட்டறையில் வேலைக்குச்  சேர்ந்தான். குடும்பச் சூழல் காரணமாய் அவன்  தந்தையும் பொருளாதாரக் காரணங்களுக்காக அவன் படிப்பை ஒருபக்கம் பார்த்துக் கொண்டே வேலை பார்க்கும் அவனது  யோசனைக்கு மறுப்புச் சொல்லவில்லை.

அவன் தந்தை சுபாவத்தில் அதிகம்  பேசமாட்டார். அவர் உண்டு  அவர் வேலை உண்டு என்று இருந்தவர். அவருக்கும்  பெரிய நட்பு வட்டம் என்று  யாரும் இருந்ததில்லை. உறவின் முறை விருந்தினர்கள்  என்று யாரும் வீட்டுக்கு வந்து போகும் வழக்கமும் அதிகமில்லை. அவனது தாய் மாமன், வயதில் ரொம்பவே மூத்தவர், எப்போதாவது  வருவார், ஓரிரு நாட்கள் இருப்பார்,  சென்று விடுவார்.

இதனால் அவனுக்கு சுபாவத்தில் ஒருவித தனித் தன்மையும் தனியே இருந்தே பழகி விட்டான்.  நண்பர்களும் பக்கத்து ஊர்களில் கல்லூரிப் படிப்பு என்று சென்று விட்டதாலும்,  இவனும் வேலைக்கும் படிப்புக்கும் இடையே எப்போதாவதுதான் நண்பர்களைச்  சந்திப்பான். இவனது வட்டத்தில் 4 அல்லது 5 நண்பர்கள்தான் இருந்தார்கள்.

இந்தச் சூழலில் இவன் படிப்பை முடிக்கும் முன்பே (3ம் ஆண்டு பட்டப் படிப்பு)  அவன் வேலை பார்த்த பட்டறைக்கு வந்த ஒருவர் இவனது  வேலைத் திறமையைக் கண்டு வியந்து பட்டறை முதலாளியிடம் இவனைத் தன்னுடன் தன் ஊருக்கு அழைத்துச் செல்லலாமா என்று கேட்க, அவரும் ஒன்றும் சொல்லவில்லை. 

வீட்டில்தந்தையிடம் ஆலோசித்துவிட்டு அவனும் அவருடன் வடக்கே கான்பூர் லூதியானா என்று அவர் அழைத்துச் சென்ற ஊர்களுக்குச் சென்றான்.

சென்ற இடங்களிலெல்லாம் முதலாளியைப் பார்க்க வருபவர்கள் கொண்டுவரும் இனிப்புக்கள் பரிசுப் பொருட்கள் இவன் மூலமே வீட்டின் மற்றவர்களுக்கு பரிமாறப்படும். வீட்டின் விசேஷ நடைமுறைகள், நிர்வாகம் என்று அவரது தொழிற்சாலை மற்றும் வீடு என்று அவரிடமே தொழில் கற்றுக்கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டான்.

அது மாதிரி வரும் இனிப்புக்களைப்  பார்க்கும்போது அவற்றில் லட்டு அவனுக்கு பார்க்கப் பிடித்திருந்தது. சிறு வயது முதல்அப்பம் மட்டுமே ஒரு இனிப்பாக கருதியிருந்தான். மற்ற வகை கண்டு கொள்ளவே  மாட்டான்.

முதல் முதலில் லட்டு பார்த்தபின் அவனுக்கும் சாப்பிட வேண்டும் என்கிற  ஆவல் மிகும். ஆனால் யாராவது   எதாவது சொல்லி விடுவார்களோ என்று அமைதி காப்பான்.முதலாளி வீட்டில் அவுட் ஹவுஸ்  மாதிரி ஒரு தனியறை அவனுக்கு  தங்குவதற்கு அமைத்துக் கொடுத்தார்.

விருந்தும் கேளிக்கையும் முடிந்து அனைவரும் சென்ற பின் அந்தக் களேபரங்கள் ஓய்ந்தபின் அவர்கள் தரும் ஏதோ ஒரு உணவு, அது ரொட்டியோ  சன்னாவோ (கடலைக்கறி) தன் அறைக்கு எடுத்துச் சென்று இரவு வெகு நேரம் சென்ற பின்னர் சாப்பிடுவான்.

அவனுக்கு வேலை விஷயமாய் கடைத் தெரு அங்காடிகளுக்குச் செல்லும் தருணம் சில வகை பலகாரக் கடைகளில் வகை வகையாய் பற்பல பலகாரங்கள் இருக்கும்.  சில வடக்கத்திய கேக் வகைகள், லட்டு மாதிரி சில இனிப்புக்கள் கார வகைகள் என்று கலந்துகட்டி இருக்கும்.

இவன் சிறு வயதில் ஒரு விருந்தில் கண்ட லட்டும் அதில் இருந்தது.

கையில் உள்ள காசைக்  கருத்தில் கொண்டு முதன் முறை லட்டு  மட்டும் வாங்கி உண்பான்.

கூடவே இருக்கும் மற்ற இனிப்புக்கள் பலகாரங்களில் மனம் நாட்டமில்லை.

இப்படியே ஒரு 5 வருடம் சென்றது. அதே முதலாளியின் நண்பர் வேறு ஒரு ஊரில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைக்கு  நம்பகமான ஆள் தேவை என்று இவரிடம் கேட்க அவனது முதலாளி இவனைக் கை காட்டினார். இவனும் முதலாளியே போகச் சொல்கிறாரென்று அடுத்த ஊருக்குச் சென்று விட்டான். அது குஜராத் பக்கம் ஒரு சிற்றூர் (சூரத் அருகே).

அது ஒரு டெக்ஸ்டைல்  தொழிற்சாலை. புடவைகள் சுடிதார்கள் என்று தயாரித்து அந்த நிறுவனம் இந்தியாவின் பற்பல  ஊர்களுக்கும் முகவர்கள்  வாயிலாய் விற்று வந்தது.  இவன் அதன் வணிக விற்பனைப் பகுதியில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

அங்கும் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பான் (இவன் தந்தை போலவே). இடையே அவ்வப்போது விடுப்பில் தன் சொந்த ஊர் செல்வான், தந்தையையும் பழைய நண்பர்களையும் பார்த்து வருவான். ஒரு சில நண்பர்கள் தொழில் நிமித்தம் பெங்களூர், மும்பை, தில்லி என்று சென்று விட்டார்கள். தீபாவளி அல்லது பொங்கல் நேரம் மட்டுமே விடுமுறையில் சந்திப்பார்கள்.

சூரத் அருகே பணிபார்த்த நாட்கள் அவன் வாழ்வில் வசந்தம் வந்தது. திருமணமும் நடைபெற்றது. அவன் தந்தை பார்த்து வைத்த குடும்பச் சூழலில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான், பிள்ளை குட்டி என்று அடுத்த 10 ஆண்டுகள் சென்றது.

அவ்வப்போது சிலவகை விருந்துகள் கேளிக்கைகள் என்று கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும்போது அங்கு ஒரு தென்னிந்தியக் குடும்பத்தில் விருந்தில் கலந்துகொண்டான். அங்கு முதன் முதலாய் ரவா லட்டு அவனுக்குப்  பரிச்சயமானது. அதுவரை அதுமாதிரி லட்டு அவன் வாழ்வில் பார்த்ததில்லை, சுவை உணர்ந்ததில்லை. 

அவனுக்குத் தன் சிறு வயது நினைவுகள் வந்து போகும். அப்பமும் வடையும் ஏதோ ஒரு விருந்தில் உண்ட லட்டும் கண் முன்னே தோன்றும். ஏனோ புரியலை. இனிப்பு என்றால் லட்டு அல்லது ரவா லட்டு என்று ஒரு க்ரேஸ், அவனுக்கு ஏற்பட்டது எனலாம்.

அவன் மனைவிக்கு இனிப்பு வகைகள் சில செய்யத் தெரியும். இவனும் விரும்பிச் சாப்பிடுவான். ஆனால் சுவையுணர மட்டுமே. இவன் மனதில் அந்த முதன் முறை சாப்பிட்ட லட்டும் பின்னர் திருமணத்திற்கு முன் சாப்பிட்ட ரவா லட்டு மட்டுமே கருத்தில் இருந்தது.  வயது ஏற ஏற குடும்பச் சூழல், குழந்தை வளர்ப்பு, அவர்தம்  படிப்பு என்று எப்படியோ முன்னேறினான்.

இவன் சொந்த ஊருக்கு அருகே இருந்த பெரு நகரம் கோவை. அங்கு நகருக்கு வெளியே ஒரு வளர்ந்து வரும் பகுதியில் ஒரு வீடு வாங்கினான். மனைவி குழந்தைகளை ஆரம்ப காலத்தில் தன்னுடன் சூரத் அருகே  தான் பணிபுரிந்த ஊரில் வைத்துக்கொண்டான், ஆனால் அவனது பொருளாதாரச் சூழல் அவனால் அவர்களை  அங்கு வைத்துக் கொள்ள ஒவ்வாததால் கோவை அருகே குடியேறி  குடும்பத்தை அங்கே செட்டிலாக்கினான்.

அவ்வப்போது  விடுப்பில் வந்து செல்வான். குழந்தைகளும்  அவனிடம் பாசத்துடன் இருந்தார்கள். அவர்தம் படிப்பு இத்யாதி  காரணமாய் இவனது தொழில் ரீதியாய் குடும்பம் பிரிந்துள்ளது என்று குழந்தைகளுக்கு ஓரளவுக்கு  புரிந்தது.

அவனும் கிட்டத்தட்ட 55 வயது வரை சூரத்திலேயே  காலத்தை ஓட்டிவிட்டான். இடைப்பட்ட காலத்தில் விருந்தும் கேளிக்கையும் அவ்வப்போது இருக்கும். சுபாவத்திலேயே லட்டு மீது ஒரு கண் இருந்ததால் அதை மட்டுமே உண்பான், மற்றவற்றில் நாட்டமில்லாததால் தவிர்த்து விடுவான்.

வயதுக்கே உரிய சரீர உபாதைகள், ஆரம்பகட்டசர்க்கரை நோய், கொழுப்புச் சத்து,இரத்தக் கொதிப்பு என்று அவ்வப்போது நோய்வாய்ப்பட்டான். பல காலம் வெளியூர்களிலேயே  இருந்து  விட்டபடியால் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளாமலேயே இருந்து விட்டான்.

மருத்துவர்களும்  ஆரம்பக்கட்ட சர்க்கரை நோய் என்று சொன்னதால் லட்டு இத்யாதி சாப்பிடுவது  தடைப்பட்டது.  அவ்வப்போது  மனைவி செய்து தரும் இனிப்புக்களும்  நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம்.

இயல்பாய்  இருந்த ரவா லட்டு மீதானபாசப் பிணைப்பு அவ்வப்போது அவனுக்கு வந்து  போகும். ஆனால் செய்து தர ஆளில்லை. ஊர் சென்றால்தான் அவன் மனைவி செய்து கொடுத்தால்தான் உண்டு.

தற்போது மருத்துவ ரீதியாக இனிப்புக்கள் தடை செய்யப்பட்டதால் இவனுக்கு ரொம்பவே பிடித்த லட்டு அல்லது ரவா லட்டு ரெண்டுமே இவனுக்கு மறுக்கப்பட்டது.

அவ்வப்போது நினைத்துக் கொள்வான். சிறு வயது முதலே அதிகம் பட்சணங்கள் மீதான ஆர்வமின்றி இருந்தது,  அப்பம் வடை லட்டு மட்டுமே மனதில் இருந்தது.

இப்போது வயது தாண்டிய காலத்தில் இனிப்பே கிட்டப் போகாதே என்று அவனுக்கு மிகப் பிடித்த உணவு  வகைகளும் அவனுக்கு மறுக்கப்பட்டது.

ஏனோ ஒருவித ஏக்கம் அவனுக்குள்.  சம்பாதித்த காலத்தில் அவன் நினைத்திருந்தால் எந்தவித இனிப்புக்களையும் சாப்பிட்டிருக்கலாம். லட்டு லட்டு என்று  ஒரே பார்வையில் இருந்தவனுக்கு இந்த வயதில் வேறு  பட்சணங்கள் யாராவது கொடுத்தாலும் எதிலுமே  நாட்டமின்றி முன்னர், தான் விரும்பிச்  சாப்பிட்ட லட்டு மற்றும் ரவா லட்டு மட்டுமே அவன் கண்ணில்  நிற்கும்.

அவனுக்கு ஏன் லட்டும் ரவா லட்டும் பிடித்தது?

நினைவுக்கு தெரிந்தவரையில் அப்பம் வடை மட்டுமே பரிச்சயப்பட்டு இருந்தவனுக்கு முதன் முதலில் லட்டுச் சுவை கிட்டியதும் அதன் மணம், நிறம், சாப்பிடும்போது நாவில் ஊறும் சுவை, சுவையுடன் கூடிய ஏதோ ஒரு உன்னதம் அவனுக்கு ஏதோ ஒரு திருப்தியைத் தந்தது. அதுவே அவனுக்குப் போதுமானதாய் இருந்தது, எனவே இயற்கையிலேயே லட்டு மீது ஒரு அதீதப் பிரியம் அவனுக்கு ஏற்பட்டது. 

பிற்காலத்தில் கால ஓட்டத்தில் ரவா லட்டும் அதன் சுவையும் பரிச்சயம் ஆனது லட்டின் சுவையை விடக் கூடுதலாக இன்னும் ஏதோ ஒன்றில் அவனை லயிக்க வைத்தது. 

லட்டு சாப்பிடும்போது நாவில் ஊறும் சுவை மனத்தளவில் ஒரு தாக்கத்தையும்  திருப்தியையும் உண்டாக்கியது எனில், ரவா லட்டு சாப்பிடும்போது அது துளித் துளியாக நாவில் கரையும்போது  அதன் மாவுப் பகுதி சிறிது நேரம் சென்றே கரையும், சுவைக்கும் போதே அதன் நறுமணம் கூடவே ஒருவிதமான விவரிக்க முடியாத இன்பம் அவனுக்கு தோன்றும்.   அந்த வகை இன்பத்தை அவன் வாழ் நாளில் அது வரை அனுபவித்ததில்லை. அவன் நினைத்திருந்தால் பல்வகை இனிப்புக்களைச் சுவைத்து வெவ்வேறு சுவைகளையும் நறுமணங்களையும் அனுபவித்திருக்க முடியும். 

ஆனால் அவனளவில் ஒருவித 'போதும்' என்கிற ஸ்வபாவத்திலேயே இருந்த மனோபாவம் அவனை லட்டு மற்றும் ரவா லட்டுடனே அவனைக் கட்டிப்போட்டு விட்டது. லட்டு பிடிக்குமா ரவா லட்டு பிடிக்குமா என்று அவனிடம் கேட்டால் ரெண்டுமேதான் பிடிக்கும் என்று அவன் சொல்லுவான். ஆனால் ஆழ் மனதில் அவனுக்கு ரவா லட்டு மேல் ஒருவிதத் தனிப் பாசப் பிணைப்பு வந்துவிட்டது. 

பிடித்த  ரெண்டுமே கிடைக்காததால் இனி கிடைக்கும் எதுவுமே  அவனுக்கு பிடிக்காமல் போயிற்று.

யாராவது  விருந்து அது இது என்று அழைத்தாலும், அதிகம் நாட்டமின்றி தனியே  இருந்துவிடுவான், தவிர்த்து விடுவான்.

இப்படியேஅவன் இறுதிக்  காலம் வரை ஓட்ட வேண்டியதுதான்  என்று தனிமையில் மேற்கூரையைப் பார்த்துக்கொண்டு தான் உண்டு, தன்வேலை உண்டு என்று குஜராத்தில்  சூரத் அருகேயே இருந்துவிட்டான். அவன்  குடும்பமும் கோவையில்.

அவனது (ரவா)  லட்டு ஞாபகமே அவனைத்  தின்று கொண்டிருந்தது!!

No comments:

Post a Comment