Wednesday, December 31, 2014

சீரியஸ் அல்ல, சிரிக்க மட்டும்!! Just for Laugh!!

Posted and shared via Email to Lata Swaminathan, Ramamirtham Mama and Soma Somasundaram (only) since  19.12.2014 

[அன்புடையீர், முழுவதும் நகைச்சுவைக்காக மட்டுமே!! இடுக்கண் வருங்கால் நகுக, கடுக்கண் தொலைந்தாலும் நகுக என்று சொல்லாமல் சொல்லிய மாண்பமை வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு பொய்க்கலாமோ, அங்ஙணம் இது மிகைப்படுத்தப்படாமல் நகைச்சுவையெனும் உள்ளீட்டின் முன்னிட்டு தங்கள் முன் பகிரப்படுகிறது. குற்றம் குறை, சொற்குற்றம், பொருட்குற்றம் பொறுத்தருள்க!!]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரையொட்டிய உத்தரமேற்கு ப்ராந்தியம் தானே மாவட்டம் விரார் அருகிலுள்ள வசை மாநகரில் வாழும், (தமிழ் நாடு சிவகங்கை மாவட்டம், கோனாப்பேட்டைச் சேர்ந்தவரும், தஞ்சை ஜில்லா கும்பகோணம் மாநகராட்சிக்கு அருகில் சோழபுரம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவரும் ஆகிய  ரிடையர்ட் பள்ளி ஆசிரியர் ஆர். கே. ஸார் ஜேஷ்ட குமாரன் சிரஞ்சீவி ஸ்வாமினாதன் அவர்கள் சமூகத்திற்கும்,

மேற்குறிப்பிட்ட வசை மாநகரில் வாழ்பவரும், மயிலாடுதுறை தாலுக்கா, குத்தாலம் வட்டம், கதிராமாங்கலம் பகுதியைச் சார்ந்தவரும் ஆகிய என் ஆருயிர் நண்பர் திரு. என். ராமாமிர்தம் அவர்களின் சமூகத்திற்கும்,

தஞ்சை ஜில்லா கும்பகோணம் மாநகர் கல்லூரைப் பூர்விகமாகவும், குடந்தை நகரில் பிறந்து தவழ்ந்து வளர்ந்து விளையாடி பள்ளிப்பருவம் கல்லூரிப்பருவம் கடந்து பற்பல ப்ராந்தியங்கள் தேசங்கள் காடு மலை ஏரி குளம் தாண்டி தற்சமயம் சிங்கை எனும் சிங்கப்பூரில் குடியேறி வாழ்ந்துவரும் அடியேன், கல்லூர் (லேட்) 'வரேன்' சுந்தரசேய்யர் அவர்களின் த்ருதிய குமாரன், சிவசங்கரனின் மேலான விண்ணப்பம் தங்கள் மேலான பார்வைக்கு!!

என்னோட சகதர்மிணி பண்ற அழிச்சாட்டியம் தாங்கமுடியலேட்டேளா?

25 வருஷமாச்சு, சில்வர் ஜூப்ளி என்னென்னமோ பாத்தாச்சும், என்னென்னமோ பண்ணிப்பாத்தாச்சு, இந்த மனுஷன் என்ன அடிச்சாலும் அசர மாட்டேன்றானேன்னு நினைச்சாளோ என்னவோ?

நாலு வருஷம் முன்னால தம் ஆருயிர்த் தமக்கை மற்றும் மாமன் முறைவரும் அவர்தம் கணவர் (என்னுடைய ஆருயிர்ச் சகோதரரும் கூட) இருவரும் சிங்கை மலேயா சுற்றிப்பார்க்க வந்தபோது ஒரு சிறு அழிச்சாட்டியம் செய்து என்னை வசியமாக்கி தன் வசப்படுத்த திட்டமிட்டார் போலும். என்ன மாயமோ நடந்தது அன்று (22.1.11 அன்றும் 23.1.11 அன்றும்).

ஊக்க மருந்தோ செயற்கைக் குளிர்பானங்களோ இன்னபிற பழச்சாறுகளின் துணையின்றி சற்றே நினைவாற்றலும் சமயோசிதமும் பிறழ்ந்து நான் அங்கலாய்ப்பில் ஆழ்ந்திருந்த வேளையில் அதனை ஒரு மார்க்கமாகப் பயன்படுத்திக்கொண்டு என்னை அப்படியே நாடு கடத்தி சென்னைக்கு இட்டுச்சென்று அடுத்த வாரத்திலேயே பற்பல சிகிச்சைகள் என்கிற முகமன் மொழிகளில் ஆட்படுத்தி ஒரு சிறு ஸ்ப்ரிங் மூலம் சுமார். ரூ. 4 இலக்கம் (அன்றைய சந்தை மதிப்பு) பொருட்செலவில், அதுவும் என் கணக்கில் என்னை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார். அந்த இன்ப(துன்ப) அதிர்ச்சியிலிருந்தும் பின்னர் தொடர்ந்து சுமார் ரூ.2000 மாதாந்திரத் தவணையில் ஆங்கிலத்தில் .எம்.ஸி. என்பார்களே (ஆனுவல் மெயின்டனஸ் கான்ட்ராக்ட் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்புச் செய்ய பொருந்தும் ஒரு நாமகரணம்) ஏதோ ஒரு பெயரைச் சொல்லி இன்று வரை என் காலட்சேபம் ஏதோ ஓடிக்கொண்டுள்ளது. இடையே எனது வாழ்க்கையில் தொழிலில்லாத் தொழிற்புரட்சி (வேலையின்மை), பொருளாதாரப் புரட்சி இன்ன பிற சங்கடங்களை நான் சந்திக்க நேர்ந்தது. இவற்றைச் சமாளிக்க நான் கண்டம் பல தாண்டி பொருளீட்ட முற்பட்டேன். அய்யகோ, என் சொல்வேன்?
என் முயற்சிகள் சரியான பலனளிக்காமல் நான் மீண்டும் தாயகம் திரும்பி சில கால முயற்சிக்குப்பின் சிங்கை வந்து இப்போதுதான் ஒரு ஆறு மாத காலமாகிறது. சற்றே தொய்வுக்குப்பின் மீண்டும் பொருளீட்டும் வாய்ப்பு கிட்டி காலட்சேபத்தை சரியாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன் என்று சற்றே நான் அயர்வாய் இருந்தவேளையில்........................................!!

நடந்தது என்ன?

எனது நடவடிக்கைகள் எங்கே போகிறேன் எங்கே வருகிறேன் எப்போது வீடு திரும்பி வருகிறேன் என்று என்னைக் கண்காணிக்க ஒரு உபகரணம் சுமார் ரூ.50000 மதிப்பில் வீட்டில் வாங்கிவைக்க உத்தேசித்து அதற்காக என்னை நேரடியாக அணுக இயலாததால் மருத்துவ ரீதியாக எனக்குள்ள சில பலவீனங்களை பயன்படுத்தி மருத்துவ ரீதியாக என்னை அட்டாக் பண்ணும் நோக்கில் சுமார் ரூ. 10 இலக்கம் பெறுமானமுள்ள வைத்தியப் பொருட்செலவில் ஒரு சிறு பாட்டரி சைஸ் உபகரணத்தை எனது இருதயத்திற்கு சற்றே மேலே பொருத்தும் வழிமுறையைக் கண்டறிந்து (இதனால் அந்த 50000 மற்றொரு உபகரணத்தில் விலையில் ஒரு சிறு தள்ளுபடி கிட்டும் என்கிற லாப நோக்கிலும் கூட) சில தினங்களுக்கு முன் புனர் நிர்மாணம் மற்றும் பழுதுபார்ப்பு (பிளான்ட் மெயின்டனன்ஸ்) என்கிற செலவின வகையில், அதுவும் என் கணக்கில், பொருத்த ஆயத்தம் செய்து வெற்றியும் கண்டுவிட்டார்.

இந்தச் சதியின் பின்னணியில் யார் யார் இருந்தார், என் அகத்தி சகதர்மிணி மட்டுமே தனிப்பட்ட முறையில் இதைச் செய்தாரா வேறு யார் துணையுடன் இதை நிறைவேற்றியிருக்கக்கூடும் என்று எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கிறது.

இறையருளின் துணையுடன் மேற்சொன்ன சிகிச்சை இனிதே நிறைவேறிவிட்டது. தற்சமயம் நான் 3 வார மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வில் இருக்கிறேன்.

என்னைக் கண்காணிக்க மும்பையிலிருந்து விக்னேஷ் என்னும் ஒரு இளைஞர் வேறு வர இருப்பதாக சற்றுமுன் கிடைத்த உடைப்புச் செய்தி (ப்ரேக்கிங் ந்யூஸ்) சொல்கிறது.

காலம் காலமாய் என்னை அறிந்தோர் அவனியில் பலருண்டு. என் நேர்மை, அறிவும் செறிவும் மனித குல மாண்பில் நான் கண்டுணர்ந்த நற்குணங்களையும் பேணிக்காத்து வந்துள்ளேன் என்று எனது உற்றமும் சுற்றமும் நட்பும் என்னை அறிவார்கள் என்பது திண்ணம்.

கிட்டத்தட்ட 31 வருடப் பொதுவாழ்வில் நான் யாருக்கும் ஒரு தீங்கும் இழைத்ததோ இழைக்க நினைத்ததோ கிடையாது. பொருளீட்டுவதில் நேர்மை, பழகுவதில் இனிமை, நட்பையும் சுற்றத்தையும் பேணுவதில் தன்மை என்கிற நற்பண்புகளை நான் உளமாறப் பேணி வந்துள்ளேன் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை.

மேற்சொன்ன விக்னேஷ் என்னும் சிபிஐ அதிகாரி வேடதாரி,  எனது சிகிச்சைக்குப்பின்னர், நான் ஓய்வெடுக்கும் சூழலில் அவர் இவ்விடம் வரும் பின்னணி என்னை பெரிதும் வியக்க வைக்கிறது.

என்னைச் சுற்றி ஒரு சதிவலை பின்னப்பட்டுள்ளதோ என்று தோன்றுகிறது. இடது கையை மேலே தூக்காதே, இடது கையால் ஒரு பொருளையும் எடுக்காதே, குனியாதே, நிமிராதே, உட்கார்ந்த இடத்திலேயே ரொம்ப நேரம் இருக்காதே, குளிக்கும்போதும் உடை மாற்றும்போதும் கையை மேலே உயர்த்தாதே, ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருக்காதே, வரவேற்பறை மற்றும் படுக்கை அறை தவிர வேறு எங்கும் நடமாடாதே, வீட்டை விட்டுத் தனியே செல்லாதே, உரக்கப் பேசி எனர்ஜியை வேஸ்ட் செய்யாதே, அதற்காக எதுவும் பேசாமல் மௌனமாயும் இருக்காதே, பேஸ்புக் மற்றும் இமெயில் பார்க்க அனுமதி உண்டு ஆனால் பகலில் 1 மணி நேரம், இரவுக்கு முந்தைய பின் மாலையில் 1 மணி நேரம் மட்டுமே அனுமதி உண்டுடிவி இன்ன பிற பொழுதுபோக்குச் சாதனங்களைப் பார்க்காதே, என்று பற்பல நிபந்தனைகளில் என்னைக் கட்டுப்படுத்தி என்னை கிட்டத்தட்ட வீட்டினுள் சிறைக்கைதியாய் ஆக்கிவிட்டாள் என் சகதர்மிணி.

இதைத் தட்டிக்கேட்க யாரும் இல்லையா ஞாயமாரே?




No comments:

Post a Comment