Wednesday, December 31, 2014

இதுதாண்டா வாழ்க்கை!!

இதுதாண்டா வாழ்க்கை!!

October 28, 2014 at 4:47am
வாழ்க்கைன்னா என்ன?

அவரவர் சூழலுக்கும் வாழ்ந்த வாழும் வளர்ச்சி நிலைக்கும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்ப மாறுபடும், மாறிக்கொண்டே இருக்கும் (மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்கிற மாதிரி).

சுருக்கமாச் சொன்னா, பதினேழு பதினெட்டு ஒருத்தன் நியாயமாய்ச் செய்ய நினைத்தது ஆசைப்பட்டது சமூக பொருளாதார சூழலில் இயலாமையால் கைவிடப்பட்டு தன்னுடைய 50 55 வயதில் தன் பிள்ளைக்கு அதே வாய்ப்பை வேறு ஒரு சூழலில் அமைத்துக்கொடுக்க நினைக்கும், அதற்காக அனைத்து ப்ரயத்தனங்களையும் எத்தனித்து ததிங்கிணத்தோம் போடுவதுதான் வாழ்க்கை!! 

இதில் அன்று பெய்த மழையில் முளைத்த காளான்போல் வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வளர்ந்தவன் புத்திசாலி, 

வாய்த்த வாய்ப்பைத் தவற விட்டவன் அபாக்கியசாலி.

வாய்ப்பு வந்தும் தவறவிட்டவன் துரதிருஷ்டசாலி. 

வாய்ப்பு வந்து பற்றிக்கொண்டு பலமைல் தூரம் பயணித்தவன் வெற்றி வாகை சூடியவன் சாமர்த்தியசாலி.

வாய்ப்பும் கிட்டி வெற்றியும் பெற்று தானும் வளர்ந்து தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் கைதூக்கி விடுபவன் கருணையுள்ளம் கொண்ட புத்திசாலி மற்றும் பரோபகாரி. 

வாய்ப்பு வந்து வெற்றியும் பெற்று கற்றதும் பெற்றதும் மறந்து அல்லது துறந்து வாழ்ந்து கெட்டவன் துர்பாக்கியசாலி (வாழத் தெரியாதவன் விளங்காதவன்னும் சொல்லலாம்)

கிடைத்தது ஒரு வாழ்க்கை, அதை வாழ்ந்து பாரடா என்று துணிச்சலுடன் பீடு நடை போடுபவன் தைரியசாலி!!

இந்த மாதிரி பல அனுபவங்கள், தியாகங்கள், விட்டுக்கொடுத்தல்கள், சில நேரம் கோபதாபங்கள், சில நேரம் பிடிவாதம்!!

சில பல நேரம் வரட்டு வேதாந்தம் அல்லது சித்தாந்தம் பேசி பொழுதை வீணடித்து தானும் வளராமல் தன்னைச் சுற்றியுள்ளவரையும் கவனியாமல் வாழ்க்கையைத் தொலைப்பவன் என்னத்தச் சொல்ல!!

யார் என்ன சொன்னால் என்ன, என் வழி தனிவழி என்று வாளாவிருப்பவன் ஊரோடும் ஒட்டாமல் அதே நேரம் யாரோடும் விலகாமல் தான் தன் குடும்பம் தன் பாதை என்று இருப்பவன் அவனையும் நான் விட்டுவிட முடியாது!!

வெற்றி பெறுகிறோமோ இல்லையோ வாழும் வகை தொகை தெரிந்து தானும் வாழ்ந்து சுற்றம் உற்றத்தையும் கைதூக்கி அரவணைத்துப் போய் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்பவன் கொடுத்துவைத்தவன்!! 

இதில் நாம் ஒவ்வொருவரும் எந்த வகை நம் மனசாட்சிக்கே தெரியும்!! 

என்ன, இதையெல்லாம் வாழ்க்கையில் நாம் உணரும் நேரம் பெருமூச்சு விட்டு ஆயாசப்படுத்திக்கொள்வதற்குள் ஓடியிருக்கும் ஒரு 30 40 வருஷம்!! பணவீக்கம், பொருளாதார முன்னேற்றம், சமூக மாற்றம் உளவியல் மனவியல் தாக்கங்கள் இவற்றைக் கண்ணுற்று நாம் சுதாரித்துக்கொள்வதற்குள் சிலருக்கு காலனின் அழைப்பு வந்திருக்கும்!! சிலருக்கு அந்த வசந்த அழைப்பு வந்து தள்ளிப்போயிருக்கும்!! 

இதுதாண்டா வாழ்க்கை!! இதைக் கடப்பதற்குள் எத்தனை ஏச்சுக்கள், பேச்சுக்கள், ஏக்கங்கள், நிராசையாய்ப் போன ஆசைகள், நிறைவேறாத கனவுகள், முற்றுப்பெறாத முயற்சிகள், முற்றுப்பெற்றதா இல்லையா எனவே அறியவியலாத குழப்பச் சூழல்கள் அஹா, வாழ்க்கை எனும் ஓடம், அதில் ஏறி வந்த பாடம், ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல!!

ஓடிக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை!! ஓடாமல் ஒரு நிமிஷம் நின்று பாருங்கள், அப்போது தெரியும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் மறுபக்கம்!! அதுவும்தான் வாழ்க்கை!!   

No comments:

Post a Comment