யதார்த்தமே உன் விலையென்ன?
நம்மில் பலருக்கு எந்த வயதில் எதெதற்கு முக்கியத்துவம் கொடுக்கணும்? எதெதைத் தள்ளணும் அல்லது கொள்ளனும்னு புரியறதேயில்லே.
கூட்டுக் குடும்பம் என்று இருந்த நாட்களில் பெரியோர் சொல்வது கண்டிப்பாய் (சிலவமயம்) தண்டிப்பாய்க் கூட இருக்கும். வேறு வழியின்றி அத்தகைய கண்டிப்புச் சூழலில் வளர்ந்து கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் அலைந்து திரிந்து குட்டிக்கரணம்போட்டு களவும் கற்று (சிலர்) களவு சபலம் இத்யாதி விஷயங்களில் ஆட்பட்டோ ஆட்படாமலேயோ ஒழுக்கத்தின் வேர்களை உணர்ந்து திருந்தியவர்கள், அதன்பொருட்டு வாழ்க்கையில் மேலே சென்றவர்கள் பாக்கியசாலிகள்.
வாழ்வின் ஆரம்பக் காலத்தில் (முதல் 20) பெற்றோரின் அரவணைப்பும் அன்பான கவனிப்பும், அந்த அன்பினூடே வளர்சூழலில் வளர்ந்தவர்கள் தெய்வத்தின் அருள் பெற்றவர்கள்.
முதல் 20ல் நாம் வாய்க்கும் வாழ்க்கை அடுத்த 20ல் நம்மை நெறிப்படுத்தும் அல்லது தீயதை நோக்கிச் செலுத்தும். இரண்டையும் தாண்டி வந்துவிட்டால் தான், தன் குடும்பம், தன் குழந்தைகள் என்று வந்துவிட்டால் மனிதனுக்கு பொறுப்புணர்வும் ஒழுக்கமும் தானாகவே வரும். வரணும், வந்தால் வரம்!! வராவிடில் முன் ஜென்ம சாபம்தான்!! சந்தேகமே வேண்டாம்.
3ம் 20ல் வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்வோம், அடுத்த தலைமுறை நம்மை முன்மாதிரியாய்க் கொண்டே வளரும். முதல் 40ல் நமக்கேற்பட்ட அனுபவங்களின் விழுமியங்களே படிமானங்களே பின் 40ல் நாம் நம் அடுத்த தலைமுறைக்கு எதைத் தருகிறோம் அல்லது காண்பிக்கிறோம் என்பதின் சூட்சுமம்.
எப்பேற்பட்ட அனுபவமும் அந்தந்த வயதில் அவரவருக்கு யதார்த்தம்தான். யதார்த்தத்தை வாழ்வியலின் மகத்துவத்தை உணர சிலருக்கு ஒரு பிறவியே பத்தாது. சிலர் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டும் பிறவிப்பயனை ஊழ்வினையின் பலனை அனுபவித்தே சுகம் என்றால் என்னவென்றே அறியாமல் மாண்டவர் உண்டு.
முன் 40ல் நமக்குக் கிட்டாதது நம் குழந்தைகளுக்கு யதார்த்தமாக நாம் தந்துவிடும் பார்வையில் குறிக்கோள் என்று இல்லாமலே வாழ்ந்தாலும் தானாகவே நிகழும் ஒரு நிகழ்வாகவே அந்த டிரான்சிஷன் நடந்தேறும்.
அப்படித் தானாகவே கிடைக்கும் நல்லதுகளை அதுதான் யதார்த்தம் என்று கொள்ளும் இளம் தலைமுறை அவர்தம் மத்திம வயதில் (2ம் இருபது) கெட்டது என்ன என்று தெரியாமலே சொல்லிக் கொடுக்காமலே வளரும் சூழல் இங்கு பெரும்பான்மை.
அதீதமாய் அன்பு காட்டுகிறோம் என்கிற பெயரில் இன்றைய நடுத்தர வயதினர் செய்திருக்கக்கூடிய தவறுகள் (தவறு என்று உணராமலேயே) இயல்பாய் அப்படி அவர்கள் தம் வாழ்க்கையை கடந்திருப்பர்.
ஆனால் சில பல நேரங்களில் அந்த அறியாத் தவறுகள் நம்மை நம் வாழ்வின் பிற்பகுதியில் (பின் 40ல்) தாக்கும், தாக்கும்போது முன்னிருபதில் வாங்கிய அடிகள் நம்மை மீண்டும் ஒரு முறை 'மலரும் நினைவுகளை'க் கிளறும்.
நம்மில் சிலர் (பலர் என்று சொல்ல ஆசை, ஆனால் உண்மை நிலைக்கு மரியாதை தரணுமே, அதுவும்தானே யதார்த்தம்தானே) மேற்சொன்ன அனுபவங்களைத் தாண்டியிருப்பார்கள்.
பின் 40ல் இதையெல்லாம் தாங்கிக்கொண்டு மனித உறவுகளின் மாண்பினையும் நீட்சியையும் அந்தந்த சூழலில் அதனதன் பரிமாணம் (பரிணாமம்?) அறிந்து நல்வழியில் செல்வதும் அல்லதில் செல்வதும் அவரவர் பகுத்தறிவு காட்டும் பாதை. எல்லாம் அவன் செயல்!!
No comments:
Post a Comment