Wednesday, December 31, 2014

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

October 25, 2014 at 11:16pm
தினமும் காலை எழுந்து தேனீர் அருந்தி சிறிது உடற்பயிற்சி செய்தபின் குளித்து தலைதுவட்டி அன்றாட இறை வணக்கத்தை முடித்து காலை உணவு முடிந்தபின் அலுவலகம் செல்லத் துவங்கினேன். 

அருகில் 5 நிமிடத் தொலைவில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் துறைமுக இரயில் நிறுத்தம் (ஹார்பர் ஃப்ரன்ட்) நோக்கிச் செல்லும் பேருந்திற்காகக் காத்திருக்கிறேன். 

வழக்கம்போல் நடக்கும் நேரம் சிறு பிரார்த்தனை உண்டு (நாம ஜெபம் என்றும் கொள்ளலாம்). அன்றும் அதேபோல் நாமா சொல்லிக்கொண்டே கைத்தொலைபேசியில் அன்றைய புதுத்தகவல் தலைப்புச்செய்தி என்று தேடிக்கொண்டிருந்தேன். 

பக்கத்தில் வழக்கமாய் பார்க்கும் அதே நபர்கள் (பரிச்சயம் இல்லையெனினும் அடிக்கடி பார்ப்பதால் ஒரு தலையசைப்பு, ஹலோ இத்யாதியுடன்) பரஸ்ப்ர உபயகுசலோபரி முகபாவனையில் முடிந்தது. 

வேறொரு பேருந்து வந்தது. சிலர் அதனுள் தம்மை நுழைத்துக்கொள்ள எத்தனிக்கையில் ஒருவர் வந்தார், அருகிலுள்ள பாலத்திலிருந்து வேகமாக வந்திருப்பார் போல, சட்டென்று இடித்துவிட்டு பேருந்தினுள் போனார், நான் சுதாரித்துக் கொள்வதற்குள் பேருந்து கிளம்பிவிட்டது. தானியங்கி கதவு மூடிக்கொள்ளுமுன் அந்த நபர் சற்றே தாமதமாக தன் தவற்றை உணர்ந்தவராக சமிக்ஞை மூலம் வருத்தம் தெரிவித்தார். இதெல்லாம் சகஜம்தான் என்று தூரத்தில் வந்த என் பேருந்தினுள் நான் புகுந்தேன். 

ரயில் நிறுத்தம் முன் இறங்கி நிலையத்தினுள் சென்று எனது ப்ளாட்பாரம் வந்து காத்திருந்தேன். அப்போதுதான் ஒரு வண்டி கிளம்பியிருந்தது தெரிந்தது, அதிகமாக பயணிகள் கூட்டமில்லை,அடுத்த செட் மக்கள் தலைகள் தெரிய 3 அல்லது 4 நிமிடம் ஆகும். அடுத்த வண்டி 4 நிமிடங்களில் என்று மின்னியக்கத் தொலைக்காட்சித் திரையில் ஓடியது. 

ரயில் வந்து 10 நிமிடப் பயணத்தில் நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்கி மெதுவாக மற்றொரு பேருந்து பிடிக்க வேண்டி நடந்து கொண்டிருந்தேன். மனதுக்குள் என் நாம ஜெபம் தொடர்ந்தது. 

ரயில் நிலையத்தில் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்குச் செல்ல அன்டர்க்ரவுன்ட் வழிப்பாதையில் நடந்துசென்று அடுத்த பக்கம் வெளியே வந்து பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றேன். 

வழக்கமாய் நான் சொல்லும் சூரிய வணக்கம் குறித்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே மேலே அண்ணாந்து பார்த்தால் கதிரவன் தன் முழுக் கிரணங்களையும் காட்டிக்கொண்டு பளிச்சென்று தெளிவாக முழுவதும் கண்ணுக்குப் புலனாகிறான். எனக்கு ஆச்சரியம்!! 

பல நாட்களாக இந்த பேருந்து நிறுத்தத்தில் நாம் காணும் காட்சி இன்று எப்படி மாறியது? வழக்கமாக நான் மேலே பார்த்து சூரிய வணக்கம் கூறும் கோணத்தில் அடர்ந்த மரங்களின் இடையே கதிரவன் இலைகளின் இடுக்குகள் வழியேதான் கண்ணுக்கு தெரியும்.  அந்தக் கோணத்தில் பார்த்தே பழகிவிட்டது எனக்கு. 

பேருந்து வரும் வரை 5 நிமிடமோ 10 நிமிடமோ அப்படித்தான் சாலையின் இருமருங்கிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டோ வரும் போகும் வாகன ஓட்டத்தை கவனித்து வந்திருக்கிறேன். 

சாலையின் நடுவே என்றும் இல்லாத திரு நாளாய் சில பணியாளர்கள் தத்தம் பணியில் மும்முரமாக இருந்தார்கள். அதில் சிலர் இந்தியத் தொழிலாளர்கள், சிலர் பங்களாதேஷ் அல்லது மியான்மர் ஆட்களாய் இருக்கலாம். 

அப்போதுதான் ஒன்றை உணர்ந்தேன். இத்தனை நாட்கள் நாம் பார்த்த இரண்டு மரங்கள் திடீரென்று காணவில்லை, கதிரவன் முழுக் கிரணங்களைக் காட்டி சிரித்த காரணம் இப்போது விளங்கியது. 

சாலை நடுவே இருந்த இரண்டு பெரிய மரங்களைக் காணவில்லை, கிட்டத்தட்ட 30 வருட வயது சொல்ல முடியும் அது மாதிரி மரங்களுக்கு. அவற்றின் பரந்து விரிந்த கிளைகள், அதனூடே இலைகள் அதனூடே ஆங்காங்கே கதிரவனின் ஒளிக்கீற்றுக்கள் இத்தனை நாட்கள் கண்ணுற்று இயல்பாய் சூரிய வணக்க ஸ்தோத்ரம் சொல்லும் உபாயம் கிட்டியது. 

இன்று அதிசயமாய் ஆதவன் முழுவதும் தெரிந்ததன் குழப்பம் நீங்கியது. அந்த மரங்களை நீக்கியதன் பொருட்டே அந்தப் பணியாளர்கள் சாலை நடுவே இருந்த இரண்டு மரங்களின் அடிப்பாகத்தை துப்புரவு செய்து கொண்டிருந்தார்கள். 

இரவோடு இரவாக அல்லது அதிகாலை நேரத்தில் மரங்களை அகற்றி இருக்க வேண்டும். வேறு எங்கோ அந்த மரங்கள் நட்டிருப்பார்கள். சாலை விரிவாக்கம் தொடர்பாக அடிக்கடி இது மாதிரி இந்தச் சிறு நகரில் நடப்பது சாத்தியமே. 

ஆனால் சுமார் இரண்டு மாதங்களாய் தினம் காலை நேரத்தில் பார்த்துப் பார்த்து பழகிய இயற்கைக்காட்சி இப்போதெல்லாம் வேறு மதிரி வெட்ட வெளியின் வெறுமை தாங்கவில்லை. 

இதே மாதிரி சென்னை சாலிக்கிராமம் பகுதியில் சுமார் 15 ஆண்டுகள் முன்பு அவிச்சி பள்ளி முன்பாக சுமார் 4 அல்லது 6 மரங்கள் சாலை நடுவே இருந்தவை நீக்கப்பட்டு சாலை விரிவாக்கம் காரணமாக அவை நீக்கப்பட்ட அன்று யதேச்சையாக அந்தப்பக்கம் வந்தவன் அத்தனை மரங்களையும் காணாமல் வியந்தது நினைவில் ஆடுகிறது. 

முன்பெல்லாம் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் 25ஜி 37ஜி 17எம் என்று எனது பேருந்திற்காகக் காத்திருந்த நாட்கள் நினைவில்.  

தினமும் நாம் பார்த்த நிகழ்வுகள் சட்டென்று சூழல் மாறும்போது மனம் ஒரு வெறுமையை நோக்கி வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு ஏக்கம் தோன்றும். கூடவே மரங்கள் இருந்ததால் இருந்த நிழல் அந்த நிழலின் அருமை இப்போது வெட்ட வெளியில் கதிரவனின் கிரணங்களின் நேரடித் தாக்கம் நம்மை ஆழ்த்தும்போதுதான் நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சொல்வார்களே அதைப் பரிபூர்ணமாய் உணர்கிறேன். 

No comments:

Post a Comment