சிவன் கோயில், வில்வ மரம்:சில நினைவுகள்
ஊருக்குக் கட்டக் கடைசியில் உள்ள தெரு அது. அந்த ஊரிலேயே மிக நீளமான தெரு என்றும் சொல்லலாம் (முக்கிய சாலைகளை நீக்கிவிட்டு மக்கள் வசிக்கும் தெருக்களை மட்டும் கணக்கிட்டால்). சுமார் 2 கி.மீ. நீளத்தில் கிட்டத்தட்ட அப்போதெல்லாம் 150 அல்லது 175 வீடுகள் இருந்தன. இப்போது 300 ஆகியிருக்கலாம்.
எல்லாம் அடுத்தடுத்து இருக்கும் ஒரு வீட்டின் முக்கியசுவர் அடுத்த வீட்டின் புறச்சுவர் (தாய்ச்சுவர் என்பர்) என்கிறமாதிரி முதல்வீட்டிலிருந்து கடைசி வரைக்கும் தொடர்வீடுகளாய் இருக்கும், ஆங்காங்கு வரும் இடைச் சந்துகள் மற்றும் காலி மனைகள் மட்டுமே அந்தத் தொடர் வீடுகளை ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்கும்.
ஒவ்வொரு வீடும் குறைந்தபட்சம் 30 அடி அகலம் 200, 220 அடிநீளத்தில் இருக்கும். ஒவ்வொரு வீடும் சுமார் 2 கட்டு வெகுசில 3கட்டு என்று இருக்கும். 2 கட்டு வீடாய் இருந்தால்3ம் கட்டு இருக்கும் இடம் தோட்டமாக இருக்கும். மா, பலா, தென்னை,வாழை, புளிய மரம் கூடவே பூச்செடிகள், நாரத்தை, எலுமிச்சை அல்லது கிடாரங்காய் மரங்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஸ்பெஷல் மரங்கள் இருக்கும், சில வீடுகளில் பின்புறம் வாதாமரம் கூட இருக்கும்.
நாங்கள் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது அந்த வாதா மரத்தின் கொட்டைகள் (வாதாங்காய்) கீழே விழுந்திருப்பதைப் பிரித்து கொட்டை எடுத்து வாதா சாப்பிடுவதில் ஒரு போட்டியே இருக்கும். விடுமுறை காலங்களிலும் மற்றும் தினசரியே காலை நேரங்களில் அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள மல்லிகை, குண்டு மல்லி, பவழமல்லி, டிசம்பர் சீசனில் டிசம்பர்பூ, நந்தியாவட்டைப்பூ, செம்பருத்தி, மஞ்சள் அல்லது செவ்வரளிப் பூச்செடிகள் என்று வகை வகையாய் இருக்கும்.
பூஜைக்காக என்பதால் யார் வீட்டிலும் போய் 'எங்கப்பா பூ எடுத்துண்டு வரச்சொன்னாங்க' என்று சொன்னால் யாரும் ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். 'எடுத்துக்கோடாப்பா',"போறச்சே கேட்டைச் சாத்திண்டு போ" "ஏன்டாப்பா, இன்னைக்கு நிறைய பூ பூத்திருக்கு போலருக்கே, எனக்கு ஏறிப் பறிக்க முடியலேடா, எனக்கும் கொஞ்சம் தர்றியா''ஜாக்கிரதைடா, செவுத்து மேல ஏறாதேடா கொழந்தே ,பாத்து பறிச்சுக்கோ, ஸ்கூல் போகணுமோல்லியோ, ரொம்பநாழி விளையாடாதேள்' என்று அந்தந்த வீட்டிலிலுள்ள தாத்தா பாட்டிமார்கள் வாஞ்சையுடன் இன்ஸ்ட்ரக்சன் கொடுப்பார்கள்.
சில வீடுகளில் பூப் பறிக்கிறேன் என்கிற சாக்கில் மாமரத்தில் நைஸாக ஏறி மாங்காயோ கொய்யாக்காயோ பறிப்பதுண்டு. யாராவது பார்த்துவிட்டால் வாண்டுகளாக நண்பர்கள் தங்களுக்குள் 'ஏய், பாட்டி பாக்குதுடா, டவுசருக்குள்ள வச்சுக்கோடா, இல்லேன்னா அப்பாட்ட சொல்லி டின்னு கட்டிடிவாங்கடா' என்று எங்களுக்குள்ளேயே ரகசியம் பேசிக் கொள்வோம்.
அதில் வெங்கு மாமா வீட்டுத் தோட்டத்தில் மேலே சொன்னமாதிரி பூப்பறித்த அனுபவம் ஜாஸ்தி. காவிரிக்கரை ஓரம் ஒரு ஜீவசமாதிக் கோயில் மாதிரி துளசிமாடம் வைத்து ஒரு கோயில் மாதிரி அமைப்பு இருக்கும். எங்களுக்கெல்லாம் அந்த வயதில் அதன் முக்கியத்துவம் தெரியாது. வருடத்தில் சில நாட்களில் அக்ரஹாரத்தில் சில வீடுகளிலிருந்து அங்கு உள்ளே சில பூஜை புனஸ்காரங்கள் நடக்கும். அதுமாதிரி ஒரு கோயிலை அடுத்துதான் வெங்கு மாமா தோட்டம் இருக்கும்.அதற்குள் சென்று போய் பூப்பறிக்கும் ஆவலே எங்களுக்கு அலாதிதான். வெங்கு மாமாவின் கடைசிப் பையன் சங்கர் வாண்டு எங்கள் செட் வேற. கேக்கணுமா?
தினம் காலையில் லூட்டிதான். ஒருவீட்டின் வாசலில் குண்டுமல்லி அழகாகப் பூத்திருக்கும். அதற்கடுத்து நாலைந்து வீடு தள்ளியுள்ள வீட்டில் முகப்பில் உள்ள பவழமல்லி மரம் பூப்பூத்து கண்ணைப் பறிக்கும் அழகில் இருக்கும். அந்த வீட்டுப் பாட்டி (முத்தம்மா) சில சமயம் திட்டுவார் 'போங்கடா, பூப்பறிக்க வந்துட்டேளாக்கும், நாங்களே இன்னும் எங்களுக்கே பறிச்சுக்கலை, அதுக்குள்ள என்ன' என்று அந்தப்பாட்டி சிலசமயம் திட்டுவார். சிலசமயம் காலையில் வேறு வேலையாய் நாம் அந்த வீட்டை க்ராஸ் செய்து போகும்போது ச்சும்மாவே எங்களைச் சீண்டுவார் 'ஏன்டா அம்பி, இன்னைக்கி பூப் பறிக்கலையா, உங்கப்பா இன்னிக்கு ஊர்ல இல்லையா, அதான் பூ பறிக்கலையா' என்று அங்கலாய்ப்பார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாய் இருக்கும். அதெப்படி இந்த பாட்டி சில சமயம் திட்டுகிறார், சில சமயம் வாஞ்சையுடன் கேட்கிறார் என்று தோன்றும்.
அவர் வீட்டில் பூக்கும் அந்தப் பவழமல்லிக்கு அந்தத் தெருவே ரசிக்கும். யாராவது உயரமானவர் கிளைகளைப் பற்றி ஒரு உலுக்கு உலுக்குவார். இல்லை நாங்கள் வாண்டுகளே மரத்தில் ஏறியோ ஒரு குச்சியை வைத்துக்கொண்டே உலுக்குவோம், பொலபொலவென்று பவழமல்லி சிதறும். அதை அள்ளுவதில் ஒரு போட்டி எங்களுக்குள். வீட்டுக்கு எடுத்துப்போய் பூ நாரிலோ அல்லது நூற்கண்டு எடுத்து ஊசிமுனையிலோ மாலையாய் தொடுத்துக் கொடுத்தால் சாமி அலமாரி அருகில் வைத்துவிடுவோம். எங்கள் வீட்டில் என் அப்பாவோ அல்லது வீட்டுக்கார மாமியோ (பாட்டி) பூஜை வேளையில் சாமிக்கு அலங்காரமாய் போடுவார்கள்.
சிலசமயம் நண்பர்களுக்குள் போட்டி இருக்கும், "நான் கட்டற மாலை பெரிசா, நீ கட்டற மாலை பெரிசா" என்று.அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளில் எங்கள் சம வயது பெண்களோ அக்காக்களோ தங்கைகளோ கூட இந்தப் போட்டியில் கலந்துகொள்வர்.
முன்னர் சொன்னதுபோல் தெருவின் நீளம் 2 கி.மீ.க்கு மேல் என்பதால் எங்கள் தெருவில் மட்டும் ஒரு விதமாய் பேச்சு வழக்கு இருக்கும். அதாவது ஒரே பெயரில் ரெண்டு மூணு நண்பர்கள் இருந்தாலோ பொதுவாக விளையாடச் சென்றாலோ 'அம்மா, நான் 65லஇருக்கேன். தேடாதே' 'அப்பா, 94ல அவாத்துல ஏதோ பூஜையாம் நாங்கள்ளாம் அங்கதான் இருப்போம்'னு நம்பர் சொல்லித்தான் அடையாளப்படுத்துவோம்.
ஸ்கூல் போயிட்டு 4 அல்லது 4.30 மணிக்கு சாயங்காலம் வந்தால் கை கால் அலம்பிக்கொண்டு டீயோ காப்பியோ ரெடியா இருக்கும்,மண் அடுப்புக்குள் அக்கா போட்டு வைத்திருப்பார். அதைக் குடித்துவிட்டு 'அக்கா நான் கிழக்கே முரளி வீட்டுல விளையாடப் போறேன்'னு குரல் கொடுத்துவிட்டு அய்யா விடு ஜூட்.
சில சமயம் 'டேய், இருடா,இந்த ரேஷன் கடைல கிரோசின் போடறானாம்டா, செத்த வாங்கிண்டு வந்துடுடா' என்று அக்கா சிலாகிப்பார். அக்கா குரல் கொடுத்தவுடனே எதிர் வீட்டு அம்புலு மாமியோ வசந்தா மாமியோ 'ஏன்டா, நீ ரேஷனுக்குப் போறயா, எனக்கும் மண்ணெண்ணெய் வாங்கிண்டு வரியா'ன்னு லைன் கட்டி அக்கம் பக்கம் ரெடியா இருக்கும். எப்படா இவன் வருவான், இவன் தலைல கட்டலாம் என்று மத்தியானமே பேசி வச்சுண்டு இருப்பாளோ தெரியாது.
இதுமாதிரி சின்ன வயசில் பாதி நாட்கள் சனி ஞாயிறு உள்பட ரேஷன் கடையில் க்யூவில் நின்று பொருட்கள் வாங்கி வந்த அனுபவம் தனி. அதுக்கு ஒரு தனிப் பதிவே போடலாம். இப்போ சொல்ல வந்ததே வேற.
தெருவே கிழக்கு மேற்காய் வெகு நீளமாய் இருப்பதால், எங்களுக்குள் பேச்சு இப்பத்தான் இருக்கும்.'சங்கரா, எங்கடா போற' என்றால் மேற்கே போறேன் என்றோ; 'ஏய் அம்பி, கிழக்கத்தானே போறே, எங்காத்து கோண்டுவைப் பாத்தா செத்த வரச் சொல்றயா' அப்படின்னு 75 வீட்டு சம்பத் ஐயங்கார் சொல்வார்.
இல்லேன்னா நாங்கள்ளாம் ப்ரெண்ட்ஸ் ஒருத்தருக்கொருத்தர் கிட்டிப்புல்லோ, பலிங்கியோ (கோலி) தெருவில் விளையாடும் கிரிக்கெட் (தென்னை மட்டை தான்பேட், ரெண்டு மூணு குச்சிகள்தான் ஸ்டம்ப், சில வீடுகளில் வெள்ளை காவி வர்ணம் அடித்திருப்பார்கள். அவற்றுக்குள் வசதியான இடமாப் பார்த்து ஆடுகளம் அமைச்சுண்டுட்டா அதுதான் ஸ்டம்ப். இப்படி செட் சேர்க்கும் சாக்கில் யார் வீட்டிலோ போய்'மாமா, ரவி இருக்கானா'னு கேட்டால், 'வாடா, உன்னைத்தான் இத்தனை நாழி தேடிண்டிருந்தான், இப்பத்தான் கெழக்கே போயிருப்பன்' குமார் ஆத்துலயோ கணேசனாத்துலயோ போய்ப் பாரு' என்று நண்பனின் அப்பா குரல் கொடுப்பார்.
நண்பர்கள் தரணி, சாமு, மோகன், கிப்ஸ் கண்ணன் (எ) ராமசாமி, கேச்சு (எ) கணேசன், வெங்கட்டா, ரமேஷ், கேதாரி, பெரியசாமி, சந்துரு, சுந்தர் (மருந்துக்கடை), பட்டாபி, பிச்சை, முண்டு (எ) முரளி, அவர் தமையனார் கோண்டு (எ) கோதண்டராமன், பிச்சையின் அண்ணா குமார், கண்டு கணேசன், வாஜ்பாய் குமார், நட்டி (எ) நடராஜன், துபாய் சேட் வீட்டு தமீஸ்கான், காவிரிக்கரை கணேசன், தம்ஸ் என்கிற சுரேஷ், கிரிக்கெட் சுந்தர், கயத்துக்கடை வீட்டு ராஜா, வேம்பாச்சு, சுப்புடு, முரளி, வேணு சகோதரர்கள் என்று எங்கள் சம வயது கோஷ்டி ப்ரபலம் அந்தக் காலத்தில்.
எங்களைத் தேடி வரும் வெளித் தெரு பள்ளி நண்பர்கள் இந்தக் கிழக்கே மேற்கே, 64, 84, 97 என்று பேசும் எங்கள் பேச்சு வழக்கை கிண்டலடிப்பர். எனக்குத் தெரிந்து குடந்தையில் எங்கள் தெருவில் மட்டும்தான் இந்த வழக்கம் இருந்தது எனலாம்.
மேற்குப் பகுதியில் ரெண்டு கோயில்கள் உண்டு.ஒன்று மேலக்கோடியில் இருக்கும் கற்பக வினாயகர் ஆலயம். அங்கு வினாயகர் மட்டும்தான். அதைத்தாண்டி இடது பக்கம் பேக்டரி பக்கம் ஒரு தெரு அல்லது சந்து போகும். வலது பக்கம் ரெண்டடி அகலத்தில் ஒரு சந்து போகும், அது காவிரிக் கரைக்குப் போகும் பாதை. கோயிலுக்குப் பின்புறம் ஒரு பெரிய ஓடை அல்லது குட்டை மாதிரி இருக்கும்,அதன்பின் நல்ல பெரிதாய் ஒரு தென்னந்தோப்பு இருக்கும். அதில் சில மாமரங்கள், பலா மரங்கள், வேப்ப மரங்கள் என்று கலந்து கட்டி எப்போதும் நிழலாய் இருக்கும் அதற்கு நீலாவதித் தோட்டம் என்று பெயர்.அங்கு வாட்ச்மென் மாதிரி ஒரு குடிசைபோட்டு ஒரு தாத்தா, ஒருநடுத்தர வயது அம்மா, அவர்களுக்கு ரெண்டு பெண்கள் என்று ஒரு குடும்பம் வசிக்கும். அவர்கள்தான் அந்தத் தோட்டத்திற்கு காவல்.
விடுமுறை நாட்களில் மழையில்லாத வெயில் நாட்களில் எங்களுக்கெல்லாம் மெரினா விஜிபி கோல்டன் பீச் நீலாவதித் தோட்டமும் அதற்கும் பின்னே உள்ள செட்டிப்படித்துறைதான். அங்கு விளையாடியது, லூட்டி அடித்த அனுபவங்கள் மற்றும் ஓர் தனிப்பதிவில் வருகிறது.
ரெண்டு கோயில்களில் ஒன்றைத்தான் சொன்னேன். ரெண்டாவது கோயில், தெருவுக்கு நடுவில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு எதிரில் காவிரிக் கரைக்குப் போகும் எட்டாம் திருனாள்படித்துறைக்கு போற வழியில் இருக்கும்.அதற்கு விசாலாட்சி கோயில் என்று பெயர். கோயில் பெரிதாய் பல சன்னதிகள் உண்டு. ஆனால் கிழக்கு வாசல் எப்போதும் ஆள் நடமாட்டம் இல்லாமல் சாத்தியே இருக்கும். தெற்கு வாசல்தான் பிரதான வாசல்.
பண்டிகைக் காலங்களிலும் மார்கழி மாதத்திலும் எங்களைப்போல வாண்டுகள், பாவாடை தாவணி போட்டஅக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லாருக்கும் பொழுதுபோக்கு இந்தக் கோயில்தான். மார்கழி மாதம் வந்துவிட்டால் ஸ்கூல வேற அப்பப்ப லீவ் விட்டுடுவாங்களா? ஜாலிதான்.
ஸ்கூல் நாட்களில் இப்போது மாதிரி 7 மணிக்கு 7.30 மணிக்கு ஓடும் வழக்கம் எல்லாம் கிடையாது. 9 மணிக்குத்தான் கிளம்புவோம். எனவே காலையில் 5 அல்லது 6 மணிக்கு எழுந்தபின் திண்ணையில் உட்கார்ந்து படிக்கிறோம் என்கிற பெயரில் 1 மணி நேரம் போகும். பிறகு இதுமாதிரி அதிகாலை லூட்டிகள் வேற.
மார்கழி மாதம் 4 அல்லது 4.30 மணிக்கெல்லாம் வெங்கு மாமாவின் பையன் சங்கரின் அண்ணா ஜேம் மாமா (ஜெயராமன் என்று பெயர், ஜேம் என்றுதான் அவரை அழைப்பர்) லவுட்ஸ்பீக்கரில் 'மருதமலை மாமணியே முரூகையா' அல்லது 'சுப்ரபாதம்' என்று பாட்டுப் போடுவார். கிட்டத்தட்ட 8 மணிவரை ஏதாவது பாட்டு ஓடிக் கொண்டிருக்கும். 'கற்பூர நாயகியே கனகவல்லியோ''கற்பனை என்றாலும்......' என்று டி எம்எஸ் ஆரம்பித்துவிடுவார். மார்கழியில் திருப்பாவை நிச்சயம் உண்டு (மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்.......).
என் அப்பா தீவிர சிவபக்தர். காலையில் 4.30 அல்லது 5 மணிக்கெல்லாம் குளித்து நித்ய கர்மாக்களையெல்லாம் (சந்தியாவந்தனம்) முடித்துவிட்டு காப்பிக் கச்சேரிக்குப் பின் இந்தக் கோயிலில்தான் 1 மணி நேரமோ என்னவோ ஏதாவது பண்ணிக்கொண்டிருப்பார். ஒரு துடைப்பத்தை வச்சுண்டு பெருக்கியோ செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டோ இருப்பார், இல்லையேல் கையில் ஒரு ஸ்லோகப் புத்தகம் எடுத்துக்கொண்டு விஷ்ணு சகஸ்ர நாமமோ ஐயப்பன் ஸ்லோகமோ ஆஞ்சனேயர் ஸ்லோகமோ படித்துக்கொண்டிருப்பார்.
காலையில் கோயில் திறந்ததுதான் தாமதம். அப்பா கோயில் குருக்களுடன் பேசிக்கொண்டே சிற்சில வேலைகளை செய்ய ஆரம்பித்துவிடுவார். கோயில் தோட்டத்தில் உள்ள பூக்களைப் பறிப்பார், இல்லை காவிரிக்கரையில் காலையில் குளிக்கச் சென்ற போது வழியில் பறித்த பூக்களைத் தொடுத்துக் கொண்டிருப்பார். அன்றைய காலை பூஜைக்கு அப்பா கட்டித் தரும் மாலை நிச்சயம் இருக்கும். அல்லது குறைந்தது அப்பா திரட்டித் தந்த உதிரிப்பூக்கள் இருக்கும்.
அப்போதெல்லாம் அந்தக் கோயில் அவ்வளவாய் கட்டிடவசதி இருக்காது. ப்ராகாரம் முழுதும் கற்கள் அல்லது குண்டும் குழியுமாய் இருந்தது, போகப் போக தெருவாசிகள் ஒன்று கூடி ஆஸ்திக சமாஜம் என்று துவங்கி காலப்போக்கில் சிமென்ட்தரை, ப்ராகாரம் என்று திருப்பணி செய்து இன்று அந்தக் கோயில் ஜகத்ஜோதியாய் ஜொலிக்கிறது.
இப்போ நாங்களெல்லாம் சென்னையில் குடியேறிவிட்டாலும் எப்போது குடந்தை போனாலும் இந்த ரெண்டு கோயிலுக்கும் போய் வருவோம்.சில சமயம் நாங்கள் தெருவுக்குள் போகும் நேரம் கோயில் நடை சாத்தியிருக்கும். சில சமயம் சாயங்காலமாய் தரிசனத்திற்குச் செல்வதுண்டு.
முன்பெல்லாம் ப்ரதோஷம் வந்துவிட்டால் கோயில் களைகட்டும், தெருவிலுள்ள அனைத்துப் பெண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என்று ப்ரதோஷ கால தரிசனத்துக்கு கூட்டம் ஜமாய்க்கும். குருக்கள் மாமா பசங்க ரெண்டு பேரும் எங்கள் வயதினர்தான். ஒருவர் அம்பி (சோமாஸ்கந்தன்) சற்று மூத்தவர், இளையவர் கேச்சு என்கிற கணேசன். எனக்கு கிளாஸ்மேட் கூட (சேம் செட்). ஒரே பள்ளியில் வேறு வேறு வகுப்பு.
ப்ரதோஷ அலங்காரம், அபிஷேகம் என்று தெருவாசிகள் கொண்டு தரும் பூஜைப் பொருட்கள்,தேங்காய் பழம் கொண்ட பூஜைத்தட்டுகள், சொம்பு சொம்பாய் பால் (அபிஷேகத்திற்கு) என்று ப்ரதோஷ தினம் களை கட்டும். ப்ரதோஷம் முடிந்து ப்ரசாத வினியோகத்தில் வரும் காப்பரிசிக்குத்தான் வாண்டுகள் கூட்டம் மொய்க்கும் (அடியேன் உள்பட). மார்கழி மாதமெனில் அதிகாலை பஜனை கோஷ்டி இருக்கும். அதிகாலையில் மாவிலையில் வைத்துத் தரும் பொங்கலுக்கு ஏக டிமான்ட். வாராவாரம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ராகுகாலத்தில் துர்க்கைக்கு பூஜை அபிஷேகம் என்று பெண்கள் கூட்டம் களை கட்டும். இதெல்லாம் தனிப்பதிவாய் போட்டாலும் தகும்.
அந்தக் கோயிலில் அப்பா 30 or 32 வருஷங்கள் முன்பு செய்த ஒரு விஷயம் எங்களுக்கு இப்போதுதான் தெரியும். தினமும் பூப்பறிப்பது, சுத்தம் செய்வது அது இது என்று பிஸியாய் இருப்பார், அதன் பின்னர் ரெண்டாம் முறை காவிரிக்கு சென்று ஸ்னானம் முடித்து மாத்யானிகம் பூஜை எல்லாம் முடித்து 9 மணிக்கு அலுவலகம் போய்விடுவார். அதன் பின்னர்தான் நான் ஸ்கூல் போவேன்.
சில சமயங்களில் காலையில் என்னை கோயிலுக்கு அவருக்கு உதவியாய் இருக்க அழைத்துப் போனதுண்டு. நானும் கோயில் கிணற்றிலிருந்தோ மோட்டார் போடாத கைக்குழாயிலிருந்தோ தண்ணீர் பிடித்துத் தருவேன். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற உதவியதுண்டு.
சமீபத்தில்(2013 Feb/March) குடந்தை போனபோது அன்று ஒரு ப்ரதோஷ தினம் வேறு. வெங்குமாமா வீட்டு சங்கர் இப்போது ஸ்கூல் சவாரி அது இது என்று பிசியாய் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர். எப்போது ஊர் போனாலும் சங்கர்தான் எனக்கு சாரதி. நான் வந்துவிட்டாலே அவரும் தன் வேலைகளுக்கு நடுவே ரெகுலர் சவாரிகளுக்கு நடுவே என் பயணத்திட்டம் வகுத்து சுவாமிமலை உப்பிலியப்பன்கோயில் பட்டீஸ்வரம், சூரியனார் கோயில் என்று கோயில் வலம் வருவோம்.
அன்றும் சுவாமிமலையில் யதேச்சையாய் ப்ரதோஷ தரிசனம் கிட்டியது. நான், என் மனைவி, என்தமையன் அவர்தம் மனைவி என்று நால்வரும் சங்கரிடம் 'டயம் இருக்குமா, விசாலாட்சி கோயில் போகணுமே' என்று கேட்டோம். தாராளமா என்று சொல்லி தெருவுக்குள் நுழைந்தால் அம்பி அன்றைய ப்ரதோஷ பூஜைகள் முடித்து சற்று ஓய்வாய் அமர்ந்திருந்தார்.
இரவு7.30 மணிக்கு மேல் இருக்கும் என்று நினைவு. ப்ரதோஷம் 5.30 அல்லது 6.30 க்குள் முடிந்திருக்குமே. நாங்கள் சுவாமிமலையில் தரிசனம் செய்யும்போதே 6 மணி ஆகிவிட்டது என நினைவு.
விசாலாட்சி கோயிலில் அம்பியுடன் பேசிக்கொண்டே இருந்ததில் ஸ்வாமி தரிசனம் செய்யும்போதே கேச்சுவும் வந்துவிட்டார். கோயிலில் வேறு ஒருசன்னதியில் பக்தர் ஒருவருக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் போலும்.
கேச்சுவைப்பார்த்தே கிட்டத்தட்ட 20 30 வருடங்கள் இருக்கலாம். அவர் நாகப்பட்டினம் உத்யோகத்துக்கு சென்றார், நான் சென்னை மும்பை வெளி நாடு என்று அலைந்ததில் இருவரும் சந்திப்பதே அபூர்வமாகிவிட்டது.
அன்று கேச்சுவைப் பார்த்ததில் ஒரு அலாதியான மலரும் நினைவுகள் எங்களிடையே இருந்தது.
பேசிக்கொண்டே ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டே இருந்ததில் அம்பிக் குருக்கள்தான் சொன்னார், கோயில் இப்போது எப்படி வளர்ந்துள்ளது, அதில் அவர்தம் மலரும் நினைவுகளாய் சில விஷயங்கள் பகிர்ந்துகொண்டார்.
அப்போதுதான் கிழக்கு வாசல் திறந்து காட்டினார், அங்கு கிட்டத்தட்ட 20 or 30 அடி உயர வில்வமரம் இருந்தது. வயதுக்கே உரிய கிழடு தட்டிமரம் பழைமை மாறா வாசமுடன் நெடிந்துயர்ந்து இருந்தது.
அம்பியும் கணேசனும் சொன்னதிலிருந்து புரிந்தது. இந்த வில்வ மரத்தை சிறு கன்றாய் காவிரிக்கரையிலிருந்து கொண்டு வந்து துர்க்கை சன்னதிக்கு எதிரில் 30 வருஷம் முன்பு என் அப்பாதான் வைத்தாராம், தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றி வந்திருக்கிறார் (மற்ற செடிகளுக்கு ஊற்றும்போது நானும் இதற்கு தண்ணீர் ஊற்றியிருக்கலாம், எனக்கு நினைவில்லை).
காலப்போக்கில் கோயில் திருப்பணி காரணமாய் ரெண்டு மூன்று கும்பாபிஷேகம் நடந்து இருக்கிறது. திருப்பணியின் ஒரு அங்கமாக ப்ராகாரத்தில் தளம் அமைக்கும் பணியில் இந்த வில்வமரமும் வேறு சில பூச்செடிகளும் கிழக்கு வாசலுக்கு மாற்றியிருக்கிறார்கள்.
எங்கள் அப்பா இயற்கையெய்தி 4.5 வருடம்ஆகிறது. அவர் எப்போதும் அந்தக் கோயிலில்தான் இருப்பார், தன் ஓய்வு நேரத்தில் மாலை வேளைகளில் ஏதோ ஒரு பாராயணம் படித்துக்கொண்டேயிருப்பார்.
அப்பா வைத்து வளர்த்த அந்தவில்வ மரம் இன்றும் அங்கு இருக்கிறது. அதைக் காணும்போது எனக்கும் என் தமையனாருக்கும் அது ஆனந்தக் கண்ணீரா நெகிழ்ச்சியில் வந்த கண்ணீரா, இறைவனே அறிவான்.
அப்பா ஊரிலேயே இருந்துவிட்டார், எப்போதாவதுதான் சென்னையில் எங்கள் வீட்டில் சிலவருடங்கள் இருந்தார். நாங்கள் இருவரும் வெளியூர் வெளி நாட்டு வேலை என்று போய்விட்டதாலும் சென்னையில் செட்டிலாகி விட்டதாலும் அவருக்கே பிடித்த மாதிரி குடந்தைதான் வாசம் இறுதிவரை. கடைசிக்காலத்தில் 86 வயதில் 6 மாதம் சென்னையில் இருந்தார். (அவரைக் கடைசியாய் சென்னைக்கு நானும் என் மகனும் ஆம்புலன்சில் ஒரு தைப்பொங்கலன்று அழைத்துக்கொண்டு சென்னை வந்தோம், அது தனிக்கதை, தனி அனுபவம்). அதன்பின் அவர் கும்பகோணத்துக்குத் திரும்பவேயில்லை.
கற்பக வினாயகர் கோயில், நீலாவதித்தோட்டம், செட்டிப் படித்துறை, ஒழுங்குபடித்துறை, 8ம் திருனாள் படித்துறை, வெங்குமாமாவின் தோட்டம், 84ம் வீட்டின் பவழமல்லி மற்றும் மஞ்சள் அரளி, ஹாஜியார் வீட்டு வாசல் குண்டுமல்லிப்பூ வாசம், விசாலாட்சி கோயில் அனுபவங்கள், சாஸ்தாஆஸ்ரம அனுபவங்கள் எல்லாம் கலந்த பலமலரும் நினைவுகள் (தொடரும்).
எங்கள் சோலையப்பன் தெரு மலரும் நினைவுகள் இனியும் வரும்.

No comments:
Post a Comment