[பராசக்தி
திரைப்படத்தில் வரும் நீதிமன்றக் காட்சியில்
சிவாஜி கணேசன் அவர்களின் வசன
நடையில் இதைப் படித்து, மகிழ்ந்து,
ஆருத்ரா தரிசனத்தன்று நம் வீடுகளில் சமைத்து
அரனுக்குப் படைத்து நாமும் 'களி'ப்புறுவோமே அவ்வண்ணம் களிப்புற 'கூட்டு'ப் பிரார்த்தனை
போல் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விசாரணை மடலை
படித்து மகிழலாம். உளமாற மனத்தில் தோன்றும் இனிப்புப்
பொங்கலை உவகையுடன் அனுபவிக்கலாம். இதை அறிய எக்காலத்திலும்
வக்காலத்து ஸ்டாம்ப் தேவையில்லை, வாய்தா,
முன் ஜாமீன், பின் ஜாமீன்
என்று அலையாய் அலைய வேண்டியதில்லை,
ஜஸ்ட் என்சாய் மை டியர்
மக்காஸ்!!]
இந்த நானிலத்தில் உள்ள நீதிமன்றங்கள் பல
வித வழக்குகளைச் சந்தித்திருக்கலாம். . குற்றப்பத்திரிக்கை, வழக்கு, விசாரணை, வாய்தா,
தீர்ப்பு பின்னர் அப்பீல் என்று
பற்பல நடைமுறைகளுக்குப் பின் நியாயமான தீர்ப்புக்கள்
வந்திருக்கலாம், சிலவகைத் தீர்ப்புக்கள் வாங்கப்பட்டிருக்கலாம்,
சில வகைத் தீர்ப்புக்களும் விசாரணைகளும்
குற்றவாளியின் வீடு தேடிக்கூட வந்திருக்கலாம்.
இந்த நானிலம் இது மாதிரி
பல விசித்திரங்களைக் கண்டதுண்டு.
சுதந்திரம்
பெற்று கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆகியும் இந்த
வழக்கு மாதிரி ஒரு வழக்கு
உலகில் எந்த நாட்டிலும் வந்திருக்காது,
வரக்கூடாது, வரவேண்டும் என யாரும் ஆசைப்படவே
தேவையில்லை.
எங்களை மாதிரி சிலரின் மீது
இந்தச் சமூகம் ஒரு குற்றச்சாட்டை
வைக்கிறது. இந்த இளைய சமூகம்,
ஏன் இளையர்கள் மட்டுமல்ல, நடுவயது அல்லது பணிக்கால
ஓய்வு பெற்றவர்களும் கூட, ஆண் பெண்,
பெரியவர் சிறியவர் வித்தியாசமில்லாமல் அனைவரும்
இணைய உலா, முக நூல்
உலா, முக நூல் வாசம்
என்று வாழ்க்கையைத் தொலைப்பதாய் ஒரு பெரிய குற்றச்சாட்டு
இந்த நீதி மன்றத்தில் வந்திருக்கிறது.
இவர்கள்
தரும் குற்றச்சாட்டின் சாராம்சம் இதுதான்:
1) பணிக்
காலத்தில் முக நூல் வாசம்
செய்பவர்கள் பணியைக் கவனிக்காமல் இணைய
உலகிலேயே காலம் கழிக்கிறார்கள், பணி
நிமித்தம் கருத்தொருமித்து தொழிலைக் கவனிப்பதில்லை
2) கல்லூரியிலோ
பள்ளிப்பருவத்திலோ உள்ளவர்கள் வகுப்பறையில் ரகசியமாய் தங்கள் கைப்பேசியில் கிசுகிசு
என்று தங்களுக்குள்ளேயே லைக் என்ன, கமென்ட்
என்ன, ஷேரிங் என்ன என்று
களிப்புறுவதாய் ஒரு குற்றச்சாட்டு.
3) படிப்பு
அல்லது தொழில் நிமித்தம் பயணிக்கும்
தருவாயில் கூட பேருந்துகளிலோ புகையிரத
வண்டிகளிலோ சிற்றுந்து பேருந்து சீருந்து, முக்காலுந்து
(ஆட்டோ) பகிர் ஆட்டோ என்று
பல வித மார்க்கங்களில்
பயணிக்கும்போதும் முக நூல் அல்லது
ட்விட்டர் வாசம் என்று பலர்
தங்கள் நேரத்தை விரயம் செய்வதாய்
ஒரு குற்றச்சாட்டு.
4) அலுவலகப்
பணிமுடிந்து அனுதினமும் கூடு திரும்பும் அதாவது
வீடு திரும்பும் மக்கள் வீட்டிலும் இதையே
ஒரு லாப் டாப்பிலோ ஸ்மார்ட்
போனிலோ டெஸ்க் டாப்பிலோ இதே
நிலையில் இந்தப் பிணி பிடித்து
இவர்களை ஆட்டுவிக்கிறதாம், மனைவி/கணவன் அல்லது
வீட்டிலுள்ள பெரியோர் / பிள்ளைகளுடன் பேசுவதில் கூட திராணியில்லாமல் அக்கறையில்லாமல்
இருக்கிறார்களாம்.
5) பிள்ளைகள்
வீட்டுப்பாடம் செய்யும்போது அவர்களுக்கு வரும் சந்தேகங்களைத் தீர்க்க
உதவாமல் அனவரதமும் சதா சர்வ காலமும்
முக நூல் டிவிட்டர் வாட்ஸப்
என்று அதிலேயே உலவுவதால் பிள்ளைகளின்
கல்விமேல் அக்கறையின்மை வருகிறதாம்.
6) கணவன்
மனைவி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே வாட்ஸப்பில்தானாம்; பிள்ளை தகப்பனிடம் தனக்குத்
தேவைப்படும் விஷயங்களை கோரிக்கை வைக்க முக
நூலில் இன்பாக்ஸில் வந்துதான் அப்ளிகேஷன் போட வேண்டியிருக்கிறதாம்;
7) வேலைக்கு
என்று போகாமல் இல்லத்தரசியாய் வாழும்
குடும்பத்திற்காக தன்னையே தியாகச் செம்மலாய்
அர்ப்பணிக்கும் அம்மணியும் முட்டாள் பெட்டியின் முன்னரோ
இணையத்திலோ வாட்சப்பிலோ ட்விட்டரிலோ முக நூலிலோ லயித்துவிடுவதால்
வீடு திரும்பும் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ செய்ய வேண்டிய உதவிகளை
செய்ய இயலவில்லையாம்; வீட்டிலுள்ள முதியோர்களை மருத்துவ ரீதியாகவோ ஓய்விற்காகவோ
அவர்களிடம் அனுசரணையாக மனைவியோ கணவனோ கவனிப்பதில்லையாம்.
அப்படி ஒரு முதியோர் சமூகம்
வீடுகளில் இன்றைய தினம் இருக்கிறார்களே
என்பதே அரிதாய் விட்டது, பற்பல
முதியோர் இல்லங்களில் கூடும் கூட்டமும் அங்கு
பலர் படும் முதுமை சார்ந்த
தனிமை சார்ந்த மனக் குழுப்பங்கள்
அதிகரிக்கின்றனவாம்.
இப்படி பலபேர் பற்பல குற்றச்சாட்டுக்களாய்
அடுக்கிக்கொண்டே போகிறார்கள். நான் எனக்குத் தெரிந்ததை
மேலே பட்டியலிட்டிருக்கிறேன். இங்கு கூடியுள்ள மற்ற
நண்பர்களைக் கேட்டால் கதை கதையாய்
சொல்வார்கள்.
இப்படி ஒரு வழக்கு வர
என்ன காரணம்? இப்படி ஒரு
இழி நிலை இங்கு வர
இந்தச் சமூகம் என்ன பாவம்
செய்தது?
தெரியாமல்தான்
கேட்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பாக
சில கேள்விகளை நான் முன்வைக்கிறேன். இந்த
நீதிமன்றம் இதற்கு தக்க காரணங்களை
ஏனோ தானோ என்றில்லாமல் அவையடக்கத்துடன்
சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாட்சிமை
புரிந்து ஜன நாயக வழிமுறைக்குள்
விளக்கம் தருமா இந்த நீதி
மன்றம்? பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க முறையில் நீதி
வழங்க வேண்டும் இந்த நீதி
மன்றம்.
ஏனய்யா,
காலம் காலமாய் இந்தச் சமூகம்
எப்படி வாழ்ந்து வந்தது?
உழுபவன்
தன் நிலத்திலோ குத்தகைக்கு எடுத்த நிலத்திலோ அதிகாலை
கதிரவன் உதித்தது முதல் உச்சிவரைக்கும்
பின் சிறிது பசியாறி இளைப்பாறி
கதிரவன் தலை சாயும் வேளை
வரை உழைப்பு உழைப்பு என்றுதானே
தன் பொழுதை ஓட்டினான் முற்காலத்தில்?
வயல்வெளியில் மண்ணில் வேலை செய்பவனின்
நிலை அது.
ஒரு தொழிலகத்திலோ தொழிற்சாலையிலோ பட்டறையிலோ அது சுய தொழிலாக
இருக்கலாம், வேறு ஒரு முதலாளிக்கு
பணிபுரிவனாக இருக்கலாம், அரசு சார்ந்த அல்லது
சாராத நிறுவனமாக இருக்கலாம். ஒவ்வொரு தொழிலாளியும் காலை
7 அல்லது 8 மணிக்குப் போய் மாலை 6மணிக்கோ
9 மணிக்கோ தத்தம் பணி நிமித்தம்
ஆவன செய்து முடித்து அவையடக்கத்துடன் வீடு திரும்பி பெண்டு
பிள்ளைகளைக் கவனித்து அவர்தம் தேவைக்காக
உழைத்தவர்கள் வாழ்ந்த பூமி இது.
உடல் உழைப்பு இல்லாமல் மூளையை
உபயோகித்து தத்தம் வழியில் பணிபார்த்த
மக்களைக் கொண்ட சமூகமும் இங்கு
உண்டு. அவர்களும் தத்தம் பணிகளை செவ்வனே
சிவனே என்று ஆற்றியிருக்கிறார்கள், ஆற்றி வந்திருக்கிறார்கள்.
உடல் உழைப்பும் இல்லை, மூளை உழைப்பும்
இல்லை, அப்பன் ஆத்தா, முப்பாட்டன்
சேர்த்து வைத்த சொத்து பத்து
இருந்ததால் அவைகளை அனுபவிக்கும் பாத்தியதை,
யோக்கியதை, பாக்கியம் பெற்றவர்களும் இங்கு உண்டு. அவர்கள்
என்ன செய்தார்கள்? தத்தம்
விருப்பத்திற்கேற்ப கதை கட்டுரை எழுதுவது,
பத்திரிகை வாசிப்பது, ஆலயம் தொழுவது, ஆலயத்
திருப்பணி செய்வது, இவை எதுவுமே
இல்லையெனில் வீடு வாசல்களில் மூதாதையர்
கட்டிவைத்த திண்ணைகள் ஆயிரம் இருந்தன. அந்தத்
திண்ணைகள் வேஸ்ட் ஆகாமல் காலாட்டிக்கொண்டே
வெந்ததைத் தின்று விதிவழி வாழ்ந்த
மூடர்களும் உண்டு, அப்படியே சீட்டாடுதல்,
சீட்டுக்கச்சேரி என்று காலம் காலமாய்
அப்பன் தாத்தன் முப்பாட்டன் சேர்த்து
வைத்திருந்த சொத்துக்களை அழித்த புண்ணியவான்கள் இங்கு
பலர் உண்டு.
மேற்சொன்னவர்கள்
எல்லாம் தத்தம் ஓய்வு நேரத்தை
எப்படிச் செலவழித்தார்கள்?
வார விடுமுறை நாட்களிலோ தினசரி
மாலை வேளைகளிலோ நேரம் மிச்சமிருந்தால் ஆலயம்
சென்றார்கள், கடற்கரை ஆற்றங்கரை சென்றார்கள்,
பொருளாதார வசதியுள்ளவர்கள் பல ஊர் சுற்றிப்பார்த்தார்கள்,
இன்னும் வசதி பெற்றோர் விமானமோ
கப்பலிலோ பற்பல உலக நாடுகள்
சென்றார்கள், அப்படி ஊர் சுற்றி
தத்தம் அனுபவங்களை தாங்கள் பெற்ற இன்பத்தை
இந்த வையகத்திலுள்ள பிறர் அறியும் வண்ணம்
'இதயம் பேசுகிறது' மணியன் மாதிரியோ, மெரீனா
என்கிற பரணிதரன் பாணியிலோ பயணக்கட்டுரைகளாகவோ
ஆன்மீகச் சுற்றுலாவாகவோ பா.கே.ப
என்று அந்துமணி பாணியிலோ எழுதி
நமக்கெல்லாம் அந்த உலக அனுபவங்களை
தந்தார்கள், சிலர் அந்தப் பாணியில்
இன்றும் அப்படி இணையத்தில் தருகிறார்கள்.
இன்றைய சமூகத்தைப் பார்த்து மேலே சொன்ன
குற்றச்சாட்டுகளை வைக்கும் பெரியோரே!! சமூகமே!!
இந்த முக நூல், வாட்சப்,
ட்விட்டர், லாப் டாப், டெஸ்க்
டாப், ஸ்மார்ட் போன், ஐ
போன், ப்ளாக்பெர்ரி என்று பற்பல சாதனங்கள்
ஊடுமுறைகள் உபகரணங்கள் வேண்டும் என்று நாங்களா
கேட்டோம்?
நாங்கள்
பாட்டுக்கு அப்பன் தாத்தன் வழியில்
எங்கள் வேலையைத் தானே பார்த்திருப்போம்?
எங்கள் ஆலயங்களில் இருக்கும் கூட்டம் அது சார்ந்த
கேளிக்கைகள், வணிக வசதிகள், அது
சார்ந்த தொழில் முறை நெறிமுறைகள்,
சமுதாயக் கோட்பாடுகள், பயிலரங்குகள் என்று நாங்கள் எங்கள்
வழியில்தானய்யா எங்கள் பொழுதை ஓட்டி
வந்தோம்?
இந்தக் காலனி ஆதிக்கம் பின்னர்
வந்த தொழில் நுட்ப வளர்ச்சி,
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி
என்று காலம் காலமாய் வந்த
மாற்றங்களின் வளர்ச்சி அதன் பொருட்டு
இந்தச் சமூகமும் நாடும் கண்டு
வந்த மாற்றம், மாற்றம் செய்கிறோம்
புரட்சி செய்கிறோம் என்கிற பெயரில் முன்னேறுகிறோம்
என்கிற பம்மாத்தில் எங்களை இந்த இழி
நிலைக்குத் தள்ளியவர் யார்? அந்தக் கூட்டம்
ஒரு பக்கம் தன் பாங்க்
பாலன்ஸை ஏற்றிக்கொண்டேதானே இருந்தது? இருக்கிறது? இனியும் மேன்மேலும் அப்படித்தானே
அந்தக் கொள்ளைக்கூட்டம் தத்தம் வயிறு வளர்க்கும்?
நாங்களாய்
விவசாயம் செய்தோம், அரிசி, கோதுமை, மஞ்சள்,
மிளகு, தென்னை வாழை, பச்சைக்காய்
கறிகள், கனிகள், சுத்தமான குடி
நீர், சுத்தமான காற்று, ஓய்வு
நேரத்தில் கேட்க நல்ல நல்ல
சங்கீதம், இயல், இசை, நாடகம்
என்று கேளிக்கைகளுக்கா பஞ்சம் இந்த நாட்டில்
இருந்தது? தொழில் நுட்ப வளர்ச்சியின்
காரணமாய் இந்தக் கேளிக்கைச் சந்தையில்
சினிமா என்று ஒன்று வந்தது,
வெள்ளித் திரை என்றார்கள், பின்னர் சிலகாலம் கழிந்து
சின்னத்திரை என்றார்கள், இப்படி இணையத் திரை
என்று வந்துவிட்டது. இதில் தத்தம் வழியில்
தொழில்பார்க்க பலருக்கும் வேலை வாய்ப்பும் வந்தது,
அவரவர் வழியில் நியாயமாகவோ அநியாயமாகவோ
நாலு காசு பார்த்து குடும்பத்தை
பிள்ளை குட்டிகளைப் படிக்க வைத்து வளர்த்து
ஆளாக்கி என்று பலர் இந்த
நாட்டில் காலத்தை ஓட்டுகிறார்கள்.
இந்த மாதிரி மாற்றங்களையெல்லாம் நாங்களா
கேட்டோம்?
தொழில் நுட்ப வளர்ச்சி என்கிற
பெயரில் எங்களிடம் காலம் காலமாய் பாரம்பரியமாய்
இருந்த பற்பல நல்ல விஷயங்களை
எங்களிடமிருந்து எங்களை அறியாமலேயே எங்கள்
முன்னோர்களை ஹிப்னாடிசம் செய்ததுபோல் பம்மாத்து வார்த்தைகளைப் பேசி பற்பல புது
விஷயங்களை மாற்றம், புரட்சி என்று
அவர்கள் தலையில் ஏற்றி இன்று
எங்களை எங்கள் பாரம்பரியம் நோக்கியும்
கலாச்சார ரீதியில் எங்களுக்கிருந்த ஏற்றமான,
ஒழுக்கமான விஷயங்களையெல்லாம் எங்களிடமிருந்து அகற்றிவிட்ட கூட்டம் எங்கே போனது?
இன்று இதே தொழில் நுட்பப்
புரட்சியில் எங்களை அறியாமலேயே ரெண்டு
மூன்று தலைமுறையாய் நாங்கள் ஆட்பட்டுவிட்டோம், ஒருவிதமான
கொத்தடிமையாய் இங்கு இதிலேயே நாங்களும்
தள்ளப்பட்டுவிட்டோம். எந்தத் தொழில் நுட்பம்
அன்று எங்கள் மூதாதையரிடம் எவற்றைப்
பறித்ததோ எவற்றை எங்களிடமிருந்து திருடி
அவற்றை இதே தொழில் நுட்பம்
சார்ந்த மாற்றுச் சாதனங்கள் ஊடகங்களின்
வழியே எங்களிடமே எங்கள் சொந்தச் சரக்கையே
எங்கள் பாரம்பரியம் வழி வந்த நல்ல
விஷயங்களையே எங்களுக்கே திரும்பவும் கட்டுச் சோற்றில் தரும்
சாப்பாடுப் பொட்டலம் மாதிரி எங்கள்
உடைமையாய் இருந்ததை எங்களுக்கு எங்கள்
காசை விலையாக்கி எங்கள் உழைப்பை விலையாக்கி
தரும் கயவர்கள் ஒரு புறம்.
இப்படி எல்லாம் இந்தச் சமூகம்
எந்த எந்த நல்ல விஷயங்கள்
சமூகக் கலாசார வேதகால நடைமுறைகள்
என்னவெல்லாம் இங்கு இருந்தன, இந்திய
நாகரிகத்தில் நாம் நம்மில் தன்னுள்ளே
கொண்டிருந்தோம், என்று இதே தொழில்
நுட்பம் வாயிலாய் வந்த ஊடகங்கள்
மூலம்தானே நாங்கள் தெரிந்துகொண்டோம்? பற்பல
வரலாற்று உண்மைகளை எங்களுக்கு இந்த
பின் நவீன தொழில் நுட்ப
வளர்ச்சிதானே காட்டிக்கொடுத்தது?
இப்படி இருக்க, இதே தொழில்
நுட்ப வளர்ச்சி மூலம் வந்த
இந்த இணையம், முக நூல்,
ட்விட்டர், வாட்ஸப், இனி என்னெவெல்லாம்
வருமோ தெரியாது, அதற்கும் இந்தச் சமூகம்
பழகிக்கொள்ளூம், தன்னுள்ளே ஜீரணித்துக்கொண்டு மேன்மேலும் இந்தச் சமூகம் வளரும்,
வளருவது போல் ஒரு மாயை
தோன்றும், ஒரு மாய உலகில்
மீண்டும் தள்ளப் படுவோம், நம்
அடுத்த தலைமுறை நம்மிலும் மேலான
நல்ல விஷயங்களை இந்த ஊடகம் அல்லது
இணைய நாகரிகம் அல்லது இணையக்
கலாச்சாரத்தின் வழி கற்றுக்கொள்ளும்.
எங்களிடம்
மேலே குறிப்பிட்ட அல்லது பட்டியலிடப்படாத குற்றச்சாட்டுக்களை
நீட்டும் வழக்காடு மன்றம் இன்னும்
சில உளவியல் அல்லது மனவியல்
சார்ந்த விஷயங்களை கண்டுணற வேண்டும்.
திரை கடலோடியும் திரவியம் தேடு என்று
ஆன்றோர் வாக்கு உண்டு.
உள்ளூரில்
விலை போகா சரக்கு வெளியூரில்
விலை போகும் என்பார்கள்.
உள்ளூரில்
உள் நாட்டில் விற்க முடியாத
எங்கள் உழைப்பை தொழில் முறை
வித்தைகளை வாழ்க்கையில் பற்பல படிகளில் நாங்கள்
கற்ற வித்தைகளை தொழில் நுட்பங்களை வெளியுலகத்தில்
காண்பித்தால்தான் நாங்கள் எங்களை நிலை
நிறுத்திக்கொள்ள முடியும். எங்கள் குடும்பத்தையும் பிள்ளை
குட்டிகளையும் படிக்க வைக்க முடியும்,
அவர்தம் மேற்படிப்பு என்னும் வளர்ச்சியில் பெற்றோர்
என்கிற ரீதியில் நாங்கள் ஆற்ற
வேண்டிய எங்கள் கடமையை நாங்கள்
செய்ய முடியும்.
பணி நிமித்தம் பலர் குடும்பத்துடன் பல
நாடுகளுக்கும் குடியேறி அங்கு நிரந்தரமாகக்
குடியுரிமை பெற்றோ அல்லது தற்காலிக
வாசம் செய்யும் அனுமதி பெற்றோ
தத்தம் உழைப்பை பற்பல வழிகளில்
பலர் பொருளீட்டி வருகிறார்கள்.
சிலர் தனியாய் பேச்சிலராகவோ திருமணமாகியும்
தனியான பேச்சிலராகவோதான் தத்தம் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.
அவரவர் பழக்க வழக்கப்படி உண்ணும்
உணவுகள் அவர்களுக்கு அங்கெல்லாம் கிடைக்காமல் போகலாம். சுத்தமான வெஜிடேரியன்
என்று சொல்லிக் கொள்ளூம் அன்பர்கள்
நல்ல உணவு வேண்டி வாடகைக்
கார் எடுத்துக்கொண்டு 50 கி.மீ பயணம்
செய்து நல்ல இந்திய உணவு
கிடைக்குமா என்று தேடித் தேடி
அலைந்தவர்கள் உண்டு.
இன்னும்
சிலர் பணிக்காலம் தவிர்த்த பொழுதுபோக்கு விஷயங்களுக்கு
வசதியில்லாமல் திரையரங்கம் என்கிற வசதிகள் இல்லாத
வளைகுடா நாடுகளில் எப்படிப் பொழுது போக்குவதாம்?
இந்த மாதிரி வசதிகள் இருக்கிறது
என்கிற நாடுகளில் கூட, உதாரணம், தென்
கிழக்காசிய நாடுகள் (சிங்கப்பூர், மலேசியா,
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்), தூரக்கிழக்கு நாடுகள் (ஆஸ்திரேலேயா, நியூசிலாந்து,
ஜப்பான்) என்று இந்த மாதிரி
கேளிக்கைக்கோ சுற்றுலா செல்லவோ வசதி
வாய்ப்பு பெற்றோர் எத்தனை பேர்
இருக்கிறார்கள்? 100ல் 10 பேர் இருப்பார்களா?
மீதி 90 பேர் பொழுது போக்க
வழி என்ன?
அமைதியாய்
யாரையும் இடையூறு செய்யாமல் 'என்
வழி தனி வழி' என்று
லாப் டாப் அல்லது டெஸ்க்
டாப் அல்லது ஸ்மார்ட் போன்
என்றுதான் இவர்கள் அதுவே கதி
என்று இருக்க வேண்டியதுதான்.
ஓய்வு நேரத்தில் புத்தகம் படிக்கலாம் என்பீர்கள்.
நூலகம் சென்று படிக்கலாம் என்பீர்கள்.
நடைப் பயிற்சி அல்லது உடற்பெயற்சி
செய்யலாம் என்பீர்கள். ஒரு சராசரி மனிதன்
நடைப் பயிற்சி அல்லது உடற்பயிற்சிக்காக
அதிக பட்சம் ஒரு நாள்
1 மணி நேரம் தருவதே பெரிய
விஷயம் இந்த நாட்களில்.
காலையில்
பணி நிமித்தம் 7 8 மணிக்கு போனால் திரும்பி
வீடு வந்து, தத்தம் இரவு
உணவு தானே சமைத்து உண்டு
பிறகு உடற்பயற்சி சாப்பாட்டுக்கு முன்னரோ பின்னரோ செல்ல
வேண்டும். தினசரி முடியாவிட்டாலும் வார
விடுமுறை நாட்களிலாவது இந்த மாதிரி பயிற்சி
செய்யலாம், ஒப்புக்கொள்கிறோம்.
ஆனால் மிச்சம் இருக்கும் நேரத்தை
நாங்கள் எப்படி ஐயா செலவழிப்பது?
அவனவனுக்கு
ஆயிரம் கவலைகள்? பெண்டாட்டி பிள்ளைகளூடன்
சேர்ந்து இருப்பவர்களுக்கோ பிரிந்திருப்பவர்களுக்கோ (பணி நிமித்தம் நிர்ப்பந்தம்
காரணமாய்) அவரவர் வாழ்க்கையில் கவலைகள்,
கோரிக்கைகள், கடன் நிவாரணத்திற்கு வழியில்லாமல்
யாரையும் கேட்டு நிவாரணம் பெறும்
நிலையில் அடுத்தவனுக்கு இந்த விஷயத்தில் உதவும்
எண்ணம் இருந்தாலும், தன்னை நிவாரணம் செய்யவே
வக்கில்லாமல் பலர் இருக்க அடுத்தவனுக்கு
எவன் உதவ முடியும், ஓரளவுக்கு
மேல்? அவனவனுக்கு ஆயிரம் ப்ரச்னைகள், உளவியல்
மனவியல் காரணங்கள் உள்ளன.
அவன் தன் மனோ விசாரங்களை
விகாரங்களை மறக்க ஒரு ஊடகமாய்
இன்று வசதியாய் இருக்கும் ஒரே
சாதனம் இந்த இணையம்தான், ஓய்வு
நேரத்தில் யார் வீட்டுக்கும் போய்
அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அவனவன்
தன் வழியில் பொழுதுபோக்க ஒரு
வடிகாலாய் இன்று இருப்பது இந்த
இணையம்தான்.
பொது அறிவை வளர்க்கவும் பொழுதுபோக்கவும்
தொழில் சார்ந்த கல்வி வளர்ச்சிக்கும்
இந்த இணையம் தான் உதவுகிறது.
அந்த மட்டில் இந்த லாப்
டாப் எங்களை மாதிரி ஆட்களுக்கு
ஒரு வரப் பிரசாதமாய் 'லாபம்'
'தாபம்' என்கிற மாதிரி லாப்
டாப் என்று எங்களின் லப்
டப் களை நிர்ணயிக்கும் ஒரு
காரணியாய் சீராய் எங்கள் வாழ்க்கையை
ஓட்ட ஒரு லாபகரமான டாப்பான
சாதனமாய் பொழுது போக்கு அம்சமாய்
இந்த லாப் டாப் ஸ்மார்ட்டாய்
எங்களை எங்கள் அப்பன் தாத்தன்
'போன' வழியே எங்கள் காலத்தை
ஓட்ட ஒரு மாற்றுச் சக்தியாய்
எங்களுக்கு இருக்கிறது என்று கூறி இந்த
விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாய் சமர்ப்பித்துக் கொள்கிறேன்
(கொள்கிறோம்).
காலம் காலமாய் நாங்கள் வாழ்ந்து
வந்த வழிமுறைகளை மாற்றி எங்களை மாற்றியவர்களை
இந்த நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கிறதா?
அப்படியெல்லாம்
எங்கள் முன்னோரை மாற்றியதோடல்லாமல் எங்களையும்
இந்தப் புதைகுழியில் தள்ளிக் கொத்தடிமையாய் எங்களை
வைத்திருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறதே,
அவர்களை நோக்கி எங்கள் கேள்விகளுக்கான
விடைகளை இந்த நீதிமன்றம் கேட்டுப்
பெறுமா?
எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நாங்கள் சந்திக்கும் பற்பல
இடையூறுகள் சங்கடங்கள், வெளியில் சொல்ல முடியா
ஏக்கங்கள் அதன் தாக்கங்களை இந்த
நீதிமன்றம் கருத்துக் கேட்டிருக்கிறதா?
இப்படி ஒரு புதிய தலைமுறை
உருவாகக் காரணமான சமூகத்தை இந்த
நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது? இந்த
நீதிமன்றத்தில் இருப்பவர்கள் கூட இந்தச் சமூகத்தில்
ஒருவர்தான், பாதிக்கப்பட்ட எங்களையும் சேர்த்து. இப்படியெல்லாம் இந்த நாட்டில் ஒரு
மாற்றம், விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழ நேரடியாகவோ மறைமுகமாகவோ
ஒரு பார்வையாளராகவோ கையாலாகாத்தனத்துடன் ஆட்சியாளர்களை இந்த நீதிமன்றம் குற்றம்
சாட்டுமா?
புதுப்புது
யுக்திகள் சாதனங்கள் வருகின்றனவே, இவற்றை இந்தச் சமூகத்தில்
செலுத்திய ஒரு பன்னாட்டு வர்த்தகக்
கூட்டம் இங்கு கடை விரித்து
எங்களை எங்கள் உடைமைகளை நேரடியாகவோ
மறைமுகமாகவோ அடிமைப்படுத்தி வைத்துள்ளதே, அவர்களை இந்த நீதி
மன்றம் விசாரணைக்கு உட்படுத்துமா?
இப்படி எத்தனையோ எத்தனையோ பதில்
கேள்விகள் எங்களுக்கும் கேட்கத் தெரியும்.
அவற்றுக்கெல்லாம்
விடைதருமா இந்த நீதிமன்றம்?
பொருளாதார
வசதிகளுக்காக திரைகடலோடி திரவியம் தேட நாங்கள்
நாடு நாடாய் ஊர் ஊராய்
ஓடினோம்.
குடும்பத்தைப்
பிரிந்து வாழ்பவர்கள் பலர் உண்டு, பல
ஊர்களில் பல நாடுகளில். அவரவர்கள்
ஒவ்வொருவருக்கும் மனதில் ஆயிரமாயிரம் ஏக்கங்கள்,
அறச் சீற்றங்கள், பிரிவின் தாக்கங்கள், உளவியல்
மனவியல் ரீதியான உடல் உபாதைகள்
பற்பல உண்டு. இவற்றையெல்லாம் இந்த
நீதிமன்றம் கருத்தில் கொள்ளுமா?
நாங்கள்
ஏன் ஊர் ஊராய் நாடு
நாடாய் அலைந்தோம்? எங்களூக்காகவா? எங்கள் தலைமுறைக்குப் பின்
அடுத்த தலைமுறை கொஞ்சமாவது தம்
சொந்தக்காலில் நிற்க ஏதுவாய் அவர்களுக்கு
தேவையான கல்வியை தர நாங்களை
எங்களை மெழுகுவர்த்திபோல் ஆக்கிக்கொண்டு எங்களை வருத்திக்கொண்டு போராடிவருகிறோம்.
பற்பல குற்றச் சாட்டு கூறும்
முன்னர், இந்த மாதிரி பற்பல
கஷ்டங்களையும் இடையூறுகளையூம் இதே சமூகம் அனுபவிக்கும்.
அவர்கள் எப்படி தத்தம் பொழுதுபோக்கை
கடைப்பிடிக்கிறார்கள். எல்லாருக்குமா வாய்க்கிறது, சங்கீதம், இயல், இசை நாடகம்
என்று கண்டு கேட்டு மகிழ?
குற்றம்
சாட்டுவது எளிது. குற்றம் சாட்டப்பட்டவன்
சார்பில் அவன் இடத்தில் இருந்து சிந்தித்துப் பாருங்கள். புரியும். பற்பல உண்மைகள் விளங்கும்.
(முடிந்தது)
No comments:
Post a Comment