Sunday, August 1, 2021

கடன்

 கடன்


கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் (புராணச் சொல்லாடல்) 


எம் கடன் பணி செய்து கிடப்பதே (இது வேற கடன்) 


இன்று ரொக்கம் நாளை கடன் (வியாபாரிகளின் லௌகீகச் சொல்) 


இன்று கடன், நாளை வட்டி, என்றுமே இ.எம்.ஐ. தான் (சாகும்வரை, இது சாமானியனுக்கு!!) 


சூதானமா இல்லேன்னா கடனில் மூழ்கணும், அதுக்கு நதிக்கரையோரம், கட்டுமரம் தேடி கடலோடி கப்பலாடிச் செல்ல வேண்டியதில்லை. 


மாதம் 500, 5000, 50000, 5 லட்சம், 50 லட்சம் என உழைப்பாளி, மூட்டை தூக்கி, கூலிக்காரர், மாதச் சம்பளதாரர், சிறு குறு தொழில் செய்வோர், தொழில் முனைவோர், பெருவணிகச் செம்மல்கள் என யார்தான் கடன் வாஙகலை? 


வாங்கிய கடனை வீட்டு மனையிலோ, வீட்டுக் கட்டுமானத்திலோ, இன்சூரன்ஸ், ம்யூச்சுவல் ஃபன்ட், ஷேர் மார்க்கெட் அது இது என முதலீடு செய்யாத தனி மனிதன் உண்டோ? 


சம்பாதிப்பதில் ஒரு சிறு துளி மாதா மாதம் ரிக்கரிங் டிபாசிட், ம்யூச்சுவல் ஃபன்ட் எனில் எஸ். ஐ. பி எனும் ரூட்டில் முதலீடு செய்து வந்தால், வருட இறுதியில் முதிர்ச்சி அடைந்தபின் மறு முதலீடு செய்யலாம், ஃபிக்ஸட் டிபாசிட் அது இது என்று. 


இல்லையேல் அவ்வப்போது வரக்கூடிய அவசர செலவினம், மருத்துவச் செலவுகள், பள்ளி, கல்லூரிக் கட்டணம் செலுத்த என அந்த ரிக்கரிங் டிபாசிட்தான் ஆக அதிகப்பட்ச சேமிப்பின் லாபகரமான அதே சமயம் கைக்காசு நட்டமாகாத முதலீடு எனலாம்.  இதெல்லாம் தனி மனிதனுக்கு.


ஒரு வியாபாரிக்கு, அல்லது பொருட்களை தயாரித்து விற்கும் முதலாளிக்கு உள்ளே வருவதை சரியாக திட்டமிட்டால்தான் வெளியே செல்வதையும் திட்டமிட்டு ஒருங்கே நிதி நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்களை அருகில் வைத்துக்கொண்டால், நிகர லாபம் நஷ்டமாகாமல் தப்பிக்கலாம். 


தனி மனிதனோ வியாபாரியோ பெரு முதலாளியோ கடன் வாங்காமல் சர்வைவல் இல்லை என ஆகிவிட்டது. 


நவீன காட்ஜெட்டுகள் எதுவுமே வேண்டாம், டிவி, மொபைல், இன்டர்னெட், இருசக்கர / நாற்சக்கர வாகனங்கள் எதுவுமே வேண்டாம், பொதுப் போக்குவரத்து மட்டுமே போதும் எனக்கு, ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் அது இது என மேற்கத்திய நாகரிகம் அளித்த எந்த ஒரு நவீன கண்டுபிடிப்பும் வேண்டாம், அதன் பிரயோகம் தெரிந்துகொண்டு எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை எனில் நான் க்ரெடிட் கார்டு பக்கம் போக வேண்டாம். 


அப்படியும் வாழ்வோர் நம்மில் பலர் உண்டு. என்ன, அவர்களின் இல்லாள், அல்லது பெற்றோரைக் கேட்டால் சொல்வார்கள்: 


' நானும் என்னெல்லாமோ சொல்லிப் பார்த்தாச்சு. உன் ஃப்ரென்ட்ஸைப் பாரு, அவனவன் எப்படியெப்படி சாமர்த்தியமாய் வாழ்க்கையை வாழ்கிறான், முன்னேறுகிறான், நீயும் தான் இருக்கியே' என்று பிலாக்கணம் பாடாத இல்லாள் உண்டா, பெற்றோர் உண்டா? ஆச்சா? 


மாறாக, படு சாமர்த்தியமாய் 'தன் சுய காசை எடுக்காமல் அடுத்தவன் காசிலேயே சிங்கிள் டீ முதல் தினசரி லஞ்ச், டின்னர், சினிமா டிராமா எல்லாமுமே அடுத்தவன் காசில் ஆட்டையப் போட்டு சுயகாசை வேறு எங்கோ தொலைத்து கூடவே சொல்லடி கல்லடி பட்டு ஒரு சமயம் வாழ்க்கையையே தொலைத்தவரும் நம்மிடையே உண்டு. 'இவன்லாம் வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன, இவன்லாம் நம்ம சினேகிதன் லிஸ்ட்ல இல்லேன்னு யார் அழுதா? என்று அவனைப் பற்றி சிலாகிக்கும் சாமானியனும் உண்டு. வெளியே சொல்ல மாட்டார்கள், அம்புட்டுத்தேன். 


ஆக, ஆக, என்ன சொல்ல வருகிறேன்? பொறுமை, பொறுமை. 


1) கடன் வாங்குவது அத்தியாவசிய‌ தேவைக்காக மட்டும் இருக்கணும். அது நேர்மையாய் நேர்வழியில் வங்கிக்கடன் மட்டுமே. 


2) தனி நபரிடம் அப்பப்போ கைமாற்று வாங்கினால் வட்டி சேர்த்தோ சேர்க்காமலோ அவரவர் புரிதல் அறிந்து குறிப்பிட்ட காலத்தில் திருப்பித் தந்துவிடும் நேர்மை நாணயம் வாக்குச் சுத்தம் இருப்போர் மட்டுமே கைமாற்றே வாங்கணும். அப்படிப்பட்ட கைமாற்று நமக்கு எதனால் தரப்படுகிறது? நம்மாளு, ஒரு முடைக்கு கேட்கறான், கொடுத்துடுவான் எனும் நம்பிக்கை அங்கே அச்சாரம். அந்த நம்பிக்கை பொய்த்தால் உறவும், நட்பும் கோவிந்தா. 


3) வங்கிக்கடன் எனில் கடன் தொடர்பான நிபந்தனைகள், கால நேர வர்த்தமானங்கள், வட்டி விகிதம் இத்யாதி நடைமுறை யதார்த்தம் தெரிந்து, கண்டிஷன்கள் படித்துப் பார்த்து பரிபூரணமாய் நம்மால் இதைக் கடைப்பிடிக்க இயலும் என்கிற உத்திரவாதம் இருந்தால் மட்டுமே கடன் வாங்கணும். வாங்கியபின் வட்டியுடன் சேர்த்து குறித்த காலத்தில் அடைக்கணும். அதுதான் உச்சப்பட்ச நேர்மை. 


4) தவிர்க்க இயலாத பொருளாதார சங்கடங்கள், திட்டமிட்டு முதலீடு செய்து அது 'அடிவயிற்றில்' அடித்து 'உப்பு விற்கப் போனேன், மழை பெய்தது' 'உமி விற்கப் போனேன், காத்தடிச்சுது' என அசந்தர்ப்ப வேளையில் நஷ்டம் எனில், தவணை கட்ட இயலவில்லை எனில் என்ன செய்யணும்?


5) சொத்து பத்து இருந்தால் கடனுக்கு நிகராய் ஈடு ஆகும் எனில் சொத்தை விற்று கடனை அடைக்கலாம் என தோன்றும். அதுதான் நியாயமான நடைமுறை. ஆனால், இக் கலி காலம், நாம் விற்கப்போகும் நாளில் நாட்டின் பொருளாதார அரசியல் சமூகச் சூழலில் நாம் எதிர்பார்க்கும் விலை கிட்டாது. அடிமாட்டு விலைக்கு விற்றாலும் கடனுக்கு ஈடாகாதே?  என்ன செய்வது? 


6) வருவது வரட்டும், இருப்பதை விற்று கடன் சுமையைக் கொஞ்சம் குறைக்கலாம். 


7) கடன் கொடுத்தவனிடமே சரணாகதி அடைந்தால், அவன்  ஈவு இரக்கம் காட்டினால், கூடுதல் தவணை கிட்டலாம். 


12 வருடம் ஒரு முறை எந்த தேசத்திலும் பொருளாதாரச் சூழல் மறு சுழற்சிக்கு ஆட்படுகிறது. ஏறும் விலைவாசி திரும்ப இறங்கியதாய் சரித்திரம், பூகோளம் வர்லாறு இல்லை. ஆனால், பங்குச் சந்தை, நிதிச் சந்தை எல்லாம் 1_5 வருடங்களில் ஒரு ஏற்றம் அபரிமிதமாய் ஏறினால் 6_10ல் அபரிமிதமாய் இறங்கும். சந்தைப் பொருளாதாரம் அப்படித்தான். 


மார்க்கெட் கரெக்சன் (correction) என்பார்கள். அது அனேகமாய் 11_12ம் வருடத்தில் நடக்க வாய்ப்பு உண்டு. இந்தச் சுழற்சி சில சமயம் சில ஆண்டுகள் முன்னே பின்னே நடக்கவும் வாய்ப்புண்டு. அப்போது நமது முதலீடுகள் தரும் லாப நட்டம் அளவீடுகள் மாறும். 


ஆட்சிகள் மாறும்போதும் மேற்சொன்ன விளைவுகளின் தாக்கம் நமக்கு புரிபடலாம்.  கடன்பட்டோர் சற்றே அமைதியாய் அவதானித்து அடிப்படை வாழ்வாதாரம் செலவினங்களில் கண் வைத்து செலவைக் குறைத்து வருமானத்தை சரிவழியில் கடன் அடைக்க நேர்வழியில் சிந்தித்தால் கடன் சுமை காலப்போக்கில் குறையும். 


இது நடக்க நமக்குத் தேவை விவேகம், பொறுப்புணர்வு, எல்லாவற்றிற்கும் மேலே அதீத தன்னம்பிக்கை வேண்டும். சுற்றியுள்ளவர்களின் உண்மை நிறம் என்ன, அவரவர் நோக்கம் என்ன, புரிதல் என்ன என்பதை அவர்களையும் சேர்த்தே நமக்கு அடையாளம் காட்டும் அற்புதக் கண்ணாடிதான் இந்த கடன் சுமை எனும் சுனாமித் தாக்குதல். 


அந்த விவேகத்தின் துணையோடு, வாழ்க்கைத்துணையின் பரிபூரண புரிதலும் இருந்தால், பொருளாதாரச் சுனாமி எனும் கடனிலிருந்து மீள வாய்ப்பு உண்டு. 


அந்தப் பொறுமையின்றி 'எல்லாத்திலும் அவசரம், நிதானமின்மை நம்மை ஆட்கொள்ளும்போது' ஒன்றும் சொல்வதற்கில்லை. வருவதை ஏற்க வேண்டியதுதான்.


நானுமே ஒரு ஃபைனான்ஸ் ஆசாமி, நானுமே சில நேரம் எடுத்த மிகச் சரியான (விரும்பத்தக்க, வெறுக்கத்தகாத) முடிவுகளை 'மிகச் சரியல்லாத காலக்கட்டத்தில்' எடுத்ததால் சறுக்கியுள்ளேன். அதன் வெளிப்பாடாகவும் இதை அணுகலாம். 


Whatever call or decision we take, timing is very important. 

Globally popular investor Warren Buffet used to say (audience used to quote him always): 


Buy when everyone sells, sell when everyone buys' (to be an good investor, to safeguard your finances).


Most of us become panicky and sell when markets tumble, and buy at a full pace when market is growing - this may not work well all the time.


Above applies to all scenarios, not only stock market, even real estate, and other probable investment avenues.

No comments:

Post a Comment