#சபரிமலை குறித்து
உச்சநீதி மன்றத்தில் அருமையான வாதம் - அட்வெக்கட் பராசரன்
சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கம்
பிரம்மச்சர்யம் சார்ந்தது; பாலின பாகுபாடு அல்ல
சுப்ரீம் கோர்ட்டில் பராசரன் வாதம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறையானது பாலின பாகுபாடு சார்ந்ததல்ல. அது அரசியல் சட்டப்பிரிவு 25ன் கீழ் வராது என்று சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீல் வாதிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்க மறுப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஒருவரை பொது சுகாதாரம், அரசு உத்தரவு மற்றும் அறநெறிகளின் அடிப்படையில் மட்டுமே ஒருவரை தடுக்க முடியும். வேறு எந்த காரணங்களுக்காகவும் தடுப்பது அரசியல் சட்டம் 25,26வது பிரிவுகளுக்கு எதிரானது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில்மூத்த வக்கீல் பராசரன் சுப்ரீம் கோர்ட்டில் புதன்கிழமை ஆஜரானார். அப்போது அவர் முன்வைத்த வாதம்:
* கேரள மக்கள் கல்வியறிவு பெற்ற சமுதாயம். 96 சதவீத கேரள பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள். அவர்கள் சுதந்திரமானவர்கள். கேரள சமூகம் தாய்வழி சமூகம். எனவே சபரிமலை கோயிலில் பின்பற்றப்படும் வழக்கமானது ஆணாதிக்க அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது அடிப்படையிலேயே தவறானது.
* சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கத்தை ‘சதி’ நடவடிக்கையுடன் ஒப்பிடுவது சரியல்ல. உண்மையில், சதி வழக்கத்துக்கும் இந்து நம்பிக்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தசரதன் மறைவுக்கு பிறகு அவர் மனைவிகளும், மகாபாரதத்தில் பாண்டுவின் மறைவுக்கு பிறகு குந்தியும் சதி எனப்படும் உடன்கட்டை ஏறவில்லை.எனவே இந்த விவகாரத்தை நாம் ஆணாதிக்க மனோபாவம் என்ற கோணத்தில் அணுகக்கூடாது.
* எப்போதும் சரியான கேள்வி சரியான விடைக்கு வழிவகுக்கும். தவறான கேள்வி தவறான விடைக்கே வழிவகுக்கும். ஒருவர் நான் பிரார்த்தனை செய்யும்போது புகைப்பிடிக்கலாமா? என்று கேட்டால் அவருக்கு ‘அறை’ விழும். அதே நபர், ‘நான் புகைப்பிடிக்கும்போது பிரார்த்தனை செய்யலாமா?’ என்று கேட்டால் பாராட்டப்படுவார். எனவே இந்த வழக்கில் கோர்ட் சரியான கேள்வியை முன்வைத்தால் சரியான விடை கிடைக்கும்.
* ஜனநாயகம், குறிப்பாக ஜனநாயகவாதிகள் மதம் மற்றும் பாரம்பரியத்தை அவசியம் பாதுகாக்க வேண்டும். ஒருவர் எங்கிருந்து வந்திருந்தாலும் அவரது தகுதி மற்றும் ஞானத்துக்கு இந்து மதமானது மதிப்பளிக்கிறது. நீதியைப் பொருத்தவரை இன்றும் விதுர நீதி குறிப்பிடப்படுகிறது. அதுதான் இந்து மத நம்பிக்கையின் சிறப்பம்சம்.
* இந்த கோர்ட் சமூக ஆர்வலர்களின் குரல்களை கேட்க வேண்டியது அவசியம்.
அதே அளவுக்கு பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்போரின் குரலையும் அவசியம் கேட்க வேண்டும். சட்டம் இயற்றுபவர் பிரம்மா, அதை நடைமுறைப்படுத்துபவர் விஷ்ணு என்றால் நீதி வழங்குபவர் சிவன். ஏனென்றால் அரசியல் சட்டம் 14 சொல்லும் இரு பாலினத்தவரும் சமமாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அர்த்தநாரியாக அவர் மட்டுமே நிற்கிறார். சிவன் பிரம்மச்சாரி அல்ல. ஆனால், அவர் தியானத்தில் இருந்தபோது அதை சீர்குலைக்க முயன்ற காமதேவனை அவர் சாம்பலாக்கிவிட்டார். அவரது தியானத்துக்கு காமன் மதிப்பளிக்காததால் அந்த முடிவு ஏற்பட்டது.
* வாழ்வின் அம்சங்கள் குறித்து நம்முடைய முன்னோருக்கு எதுவும் தெரியாது. நமக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மனநிலையுடன் நாம் ஒருபோதும் ஒருவிஷயத்தை அணுகக்கூடாது.ஐயப்பனின் நைஷ்டிக பிரம்மச்சரியம் அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டது. (இதை வாதிட்டபோது 1964ம் ஆண்டில் தில்வாத் கோவிந்தாஜி மகராஜ் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கோர்ட்டில் பராசரன் சமர்ப்பித்தார்).
* ஒரு பெண் 50 வயதுக்கு முன்னதாக இறக்க நேரிட்டால், அவர் அந்த வயது வரை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கப்படாதது அவருக்கு இழைக்கப்படும் அநீதி என்ற வாதத்தை நிராகரித்த பராசரன், ஒவ்வொருவரும் பிறக்கும்போதே அவரின் விதியை சுமந்து வருகிறோம். அந்த விதியை பாரம்பரியத்தை பெறுவதற்கான முன்னுரிமையாக சட்டரீதியாக எடுத்துக்கொள்ள முடியாது. பல கோயில்களில் படிபூஜைக்காக ஆயிரக்கணக்கானோர் முன் பதிவு செய்து வைத்துள்ளனர். அவர்களில் பலர் இறந்த பிறகுதான் அவர்களின் பெயரில் படிபூஜை நடக்கிறது. எனவே பாரம்பரியத்தை சிதைப்பதற்கு மரணத்தை காரணம் காட்டுவது எங்கும் வழக்கத்தில் கிடையாது.
*சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கமானது, அங்கு வழிபடும் தெய்வமான ஐயப்பனின் பிரம்மச்சரியத்தை அடிப்படையாக கொண்டதே தவிர, பெண்களுக்கு எதிரான வெறுப்பின் அடிப்படையிலானது அல்ல.
சபரிமலைக்கு வரும் பக்தர்களும் அதே பிரம்மச்சர்யத்தை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால்தான் சபரிமலை பயணத்தின்போது பெண்களை அழைத்துவருவது தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
(இதை வாதிடும்போது நைஷ்டிக பிரம்மச்சர்யம் பற்றி ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் குறிப்பிட்டிருப்பதை பராசரன் வாசித்துக் காட்டினார்).
* கடவுள் ஐயப்பன் ஒரு யோகி என்று குறிப்பிட்ட பராசரன், யார் யோகி என்பதை ஆதிசங்கரரின் வார்த்தையை குறிப்பிட்டு விளக்கினார். பெண் வெறுப்பை இந்து சாஸ்திரங்கள் ஒருபோதும் ஆதரித்ததில்லை. அதேபோல் கற்பு, ஒழுக்கநெறி என்பது முழுக்க முழுக்க பெண்களுக்கு மட்டுமேயானது என்றும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் கற்பு நெறி என்பது ஆண்களுக்கும் உரியது என்று வலியுறுத்துகிறது. இந்து சாஸ்திரங்கள் பெண்களுக்கு உயர்ந்த இடத்தை வழங்குகிறது. சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கமானது, பெண் வெறுப்பின் அடிப்படையிலான கற்பனையின் நீட்சி அல்ல. அது முழுக்க முழுக்க ஐயப்பனின் பிரம்மச்சர்யம் சார்ந்தது மட்டுமே.
* அரசியல் சட்டம் பிரிவு 25(2) (பி) சமூக சீர்திருத்தத்துக்கு மட்டுமே பொருந்தும். அரசியல் சட்டத்தின் பிரிவு 26(பி)யின் கீழ் வரும் மத விவகாரங்களுக்கு பொருந்தாது. மேலும் இந்த வழக்கு அரசியல் சட்டம் பிரிவு 25(2)(பி)யின் கீழ் வராது. ஏனெனில் இந்த சட்டமானது ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டுடன் தொடர்புடையதே தவிர பாலினத்துடன் தொடர்புடையது அல்ல.
* அரசியல் சட்டம் பிரிவு 25(2)(பி) இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று பராசரன் வாதிட்டபோது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட்,
‘அரசியல் சட்டப் பிரிவு 25(2)(பி) இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற வாதம் குறித்து ஆச்சர்யம் தெரிவித்தார்.
நீதிபதி நாரிமன் குறுக்கிட்டு, ‘அரசியல் சட்டப்பிரிவு 25(2)(பி), பழங்குடியின பெண்ணின் உரிமைகளை பாதுகாக்காதா? என்று கேள்வி எழுப்பினார்.
*நீதிபதி நாரிமன் விவாதத்தை நிராகரித்த பராசரன், அரசியல் சட்டம் 25(2)வது பிரிவு ஜாதியைத்தான் ஒரு வகுப்பாக பார்க்கிறதே தவிர பாலின அடிப்படையில் அல்ல. எனவே ஜாதிய பிரிவுகள் உள்ள இந்து மதத்துக்கு மட்டுமே அரசியல் சட்டப்பிரிவு 25 பொருந்தும். அதேபோல், அரசியல் சட்டப்பிரிவு 15 மத அமைப்புகளுக்கு பொருந்தாது.
*அரசியல் சட்டப்பிரிவு25(2)(பி) சமூக சீர்திருத்த அடிப்படையிலானது. அரசியல் சட்டத்தின் 26(பி) பிரிவின் கீழ் வரும் மத அடிப்படையிலான பிரச்னைகளுக்கு இது பொருந்தாது. இந்த பிரிவின்படி ஒவ்வொரு மத அமைப்பும் தங்களின் மதரீதியான விஷயங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்ள உரிமை உள்ளது.
*அரசியல் சட்டப்பிரிவு 25(2) தீண்டாமை ஒழிப்பை குறிக்கும். அந்த சட்டத்தின் 17வது பிரிவு ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்தான் வலியுறுத்துகிறது.
*அரசியல் சட்டத்தின் 15(2) பிரிவு, கடைகள், ஓட்டல்கள் போன்ற பொது இடங்களுக்கு அனைத்து குடிமகன்களும் சென்றுவர உரிமை அளிக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் கோயில்கள், மத அமைப்புகள் வராது.
*சபரிமலையில் பெண்களில் குறிப்பிட்ட வயதினர் அனுமதி மறுக்கப்படுவது சமூக பிரச்னை இல்லை. இந்த வழக்கு சமூக பிரச்னை குறித்து தொடரப்படவில்லை. இது மதரீதியான பிரச்னை. எனவே இந்த வழக்கு அரசியல் சட்டம் 25(2) பிரிவின் கீழ் வராது.(இப்படி வாதிடும்போது இது தொடர்பாக இதற்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள்காட்டி பராசரன் வாதிட்டார்).
* சபரிமலையில் பின்பற்றப்படும் நடைமுறையை ரத்து செய்வது என்பது குறிப்பிட்ட மத நிறுவனத்தின் குணம்சார்ந்த தன்மையை சீரழிக்கும். இது அரசியல் சட்டப்பிரிவு25(1) பக்தர்களுக்கு வழங்கும் உரிமைக்கு எதிரானது.
*இந்த விவகாரத்தில் அதீதமான செயல்பாடு என்பது திரிசங்கு சொர்க்கம் கதையாகிவிடும். கேரளாவில் உள்ள பல பிரபலமான ஐயப்பன் கோயில்களில் பெண்கள் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறையானது பாரபட்சம் சார்ந்ததல்ல.
இவ்வாறு பராசரன் வாதிட்டார்.
** நன்றி #தினமலர் வேலூர் பதிப்பு
No comments:
Post a Comment