Friday, August 20, 2021

மனக் குரல் / மனதின் குரல் / மன் கீ பாத்

 மனக் குரல் / மனதின் குரல் / மன் கீ பாத்

'ஏன்டா சங்கரா, இன்னும் எழுந்திருக்கலியா? அப்பா இதோ வந்துடுவா ஸ்னானம் பண்ணிட்டு, அதுக்குள்ளே எழுந்து கை கால் அலம்பிண்டு வா. காப்பி தரேன், பரீட்சைக்கு படிக்க உட்காரு' அக்காவின் குரல் உள்ளேயிருந்து.
சற்றே கண்ணயர்ந்து வெளிச்சம் வந்துடுத்தான்னு மித்தம் (முற்றம்) நோக்கி பார்க்கிறேன். இன்னும் இருட்டு விலகவில்லை, காலைப் பனியின் குளிர் வீர்யம் தெரிகிறது. போர்வைக்குள் முடங்கியிருந்த அந்த அதிகாலைச் சுகம் அதுக்குள்ள 5 மணியாச்சா என ஆர்ப்பரிக்கிறது மனம்.
பக்கத்துல சாஸ்தா மடத்தில் 'வினாயகனே வினை தீர்ப்பவனே' என சீர்காழி அபபோதுதான் முடிக்க, அப்போதுதான் சௌந்தர்ராஜன் குரலில் 'கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன், நற்கதி அருள்வாய் அம்மா' என்கிறார்.
மெதுவே எழுந்து வாசப் பக்கம் எட்டிப் பார்த்தால் வாசலில் அடுத்தாத்து பிரேமா அக்கா பெருக்கி அலம்பி அவாத்தில் கோலம் போடும் காட்சி. இந்தப் பக்கம் மீனாட்சியம்மா தான் வேலை செய்யும் அடுத்தடுத்த இரண்டு வீடுகளிலும் சாணமிட்டு வாசலில் பெருக்கித் தெளித்துக் கொண்டிருக்கிறார்.
'டிடிங் டிடிங்' என சைக்கிள் பெல் அடித்தவாறே பேப்பர் போடும் ஸ்ரீதர் தினமலர், தி இந்து, தினமணி என அவரவருக்கான பேப்பரை திண்ணையிலோ கதவு திறந்திருந்தால் ரேழியிலோ தூக்கிப் போட்டுவிட்டு போகிறான்.
ஸ்ரீதரைப் பார்த்தவுடன் 'என்னப்பா' எனக் கேட்கும் த்வனியில் கண்ணசைவிலேயே குசலம் விசாரிக்க, அவனும் பதிலுக்கு 'ஆல் இஸ் வெல்' என ஒரு சுந்தரப் புன்னகை விடுத்து தன் ஜோலியப் பார்க்கப் போகிறான். பாவம், அவனுக்கும் 6 மணிக்குள் தெரு முழுக்க பேப்பர் போட்டுட்டு ட்யூஷனுக்கு போகணும், 9 மணிக்குள் ஸ்கூல் போவதற்குள் அவனவன் கார்த்தால ஆயிரம் வேலை இருக்குமே?
பக்கத்தாத்து வெங்கு மாமா அப்போதுதான் காவிரிக்கரை ஸ்னானம் முடித்து அங்கிருக்கும் அவா தோட்டத்துலேருந்து பவழமல்லி, நந்தியாவட்டை, மஞ்சள் நிற அந்த அரளியோ என்னவோ கூடவே செக்கச் சிவக்கும் செம்பருத்திப் பூ என பூக்கூடையில் வைத்துக் கொண்டு 'ராம நாமாவோ' 'ஓம் நமசிவாயவோ' ' ஓம் நமோ நாராயணாவோ' சொல்லிக்கொண்டே உள்ளே போகிறார்.
நானும் கை கால் அலம்பிக்கொண்டு விபூதி இட்டுண்டு காபி கடகடன்னு குடிச்சுட்டு என்னோட ஷார்ட் ஹான்ட் நோட் பென்சில், முதல் நாள் மாஸ்டர் கொடுத்த ஹோம் வொர்க் செய்ய திண்ணைக்கு விரைகிறேன்.
'என்ன சங்கரா, கடையத் தொறந்துட்டியா?' பரீட்சை எப்போ என்று கேட்டபடியே மூர்த்தியோ ரமேஷோ 'வர்ட்டா சங்கரா' என தரணியோ சங்கரனோ சீனு அண்ணாவோ சைக்கிளில் வேகமாய் விரைகிறார்(கள்).
நாலு வீடு தள்ளி சாஸ்தா மடம் எதிரே இருக்கும் தாத்தாக்கடையில் கணேசன் அப்போதுதான் கடையைத் திறந்து ஒவ்வொரு ஐட்டமா எடுத்து வெளியே வைத்து ஸ்வாமிக்கு தீபம் ஏற்றிக் கும்பிட்டுவிட்டு நித்யக் கடமையை செய்ய கடையை திறக்கிறான். 7 மணிக்கு தாத்தா வருவதற்குள் எல்லாம் க்ளீன் பண்ணி வைக்கணும், அதன் பின்னர் ஸ்கூலுக்கோ படிக்கவோ கிளம்பணும்.
தாததா கடைதான் எங்களுக்கெல்லாம் பிக்பஜார் சூப்பர் மார்க்கெட். கடலை மிட்டாய், வெத்தலை சீவல், ஸ்வாமிக்கு பூஜைக்கு வேண்டிய சாமான்கள், சாக்லேட், பிஸ்கட் அது இது என எல்லா அவசரத் தேவைகளுக்கும் அவர் கடையும் அருகே இருக்கும் இன்னொரு தாத்தா (கோபு, சாமு அப்பா) கடையும்தான்.
அப்ராஸு மாமா 'என்ன கணேசா, நல்லா படிக்கிறியா?' எனக் கேட்டுக்கொண்டே 'அபிராமி அபிராமி' எனச் சொல்லிக்கொண்டே திருப்புகழோ திருமறையோ தேவாரமோ முணுமுணுத்துக் கொண்டே விசாலாட்சி கோயில் விரைகிறார்.
6_7க்குள் காலசந்தி பூஜைக்காக குருக்கள் கோயில் நடை திறக்கும்போது விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வனாதர் ஸ்வாமி தரிசனம் காலையில் அவரவர் காலை நேர அவசரத்தில் நேரமிருந்தால் கோயிலுக்குள் ஒரு எட்டுப் போய் ஸ்வாமிக்கு ஹலோ சொல்லிண்டோ, இல்லையேல் வாசலில் இருந்தே ஒரு கும்புடு போட்டுக்கொண்டோ விரையும் அக்ரஹாரவாசிகள்.
அடுத்தாத்து மர்பி ரேடியோவில் 'வணக்கம், ஆல் இந்தியா ரேடியோ, மாநிலச் செய்திகள் வாசிப்பது' என 6.50க்கு ஜெயா பாலாஜியோ வெங்கட்ராமனோ குரல் கேட்கிறது. பலருக்கும் நான் உள்பட ஜெயா பாலாஜியின் குரல்தான் தினசரி சுப்ரபாதம். அடுத்த 15 வது நிமிஷம் 7.15க்கு 'ஆல் இந்தியா ரேடியோ, முக்கியச் செய்திகள் வாசிப்பது' என சரோஜ் நாராயணசாமி, விஜயம், வெங்கட்ராமன் குரல் தொடர்ந்து கேட்கும்.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே என் அன்றைய நாள் துவக்கம். சுருக்கெழுத்து ப்ராக்டீஸ் முடித்து ஸ்கூல் சம்பந்தமா என்னவோ அதையும் முடித்து நானும் குளித்து ரெடியாகணும். வீட்டிற்குள் தினசரி டூட்டி அக்காவுக்கு அனுசரணையா ஒண்ணொண்ணா செய்து முடித்து டிபன் முடித்து கிளம்புவதற்குள் 8.50 ஆகிடும்.
கணேசன் கடை திறக்கும்போதே சுப்ரமணி ஐயர் குரல் கேட்கும், நிற்காமல் போய்க்கொண்டே நலம் விசாரித்துவிட்டோ தலையசைப்பில் 'அப்புறமா வரேன்' எனச் சொல்லிட்டோ கடந்து போவார். தினசரி அட்டென்டென்ஸ் இதுபோல் பலரும் உண்டு.
கார்த்திகை, மார்கழி மாதம் வந்துவிட்டால் தினசரி ஐயப்பன் பாடல்களும் திருப்பாவை, திருவெம்பாவை 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்' என கேட்காத நாளே கிடையாது. திண்ணைகளில் ஆங்காங்கே உறங்கிக் கொண்டிருக்கும் பலரையும் எழுப்பி விடும் அலாரம் அது.
அடுத்த வீட்டில் கிழக்கிலிருந்து வரும் வெண்கலக் குரல் மாமா 'ஜெயராமா' என கல்யாண மண்டபத்திலிருந்தே குரல் கொடுப்பார். தன் வீட்டின் முற்றத்தில் அல்லது ரெண்டாம் கட்டு பின்கட்டில் ஏதோ வேலையாய் இருக்கும் ஜெயராம் மாமா 'இதோ வந்துட்டேன்' என சொல்லிக்கொண்டே விரைவார். 'ரெண்டு நாளா இந்த ரேடியோ சரியாவே கேட்க மாட்டேங்கறது, போன மாசம் நீ சரிபண்ணிக் கொடுத்தியே அந்த ரெண்டு ஃபேனும் சரியாவே சுத்தலைப்பா. என்னன்னு வந்து பார்த்துடறியா?' என விளித்துக் கொண்டே வெங்கு மாமாவிடம் நலம் விசாரித்து விட்டு அவரும் செல்வார்.
'ஜேம், செத்த பம்ப் எடுத்துக்கறேன்'ன்னு யாரோ வந்து சைக்கிள் பம்ப் எடுத்துக்கொண்டு திண்ணைக்கு விரைந்து அவரவர் சைக்கிளுக்கு காற்றடித்துக் கொள்வர்.
ஜேம் (ஜெயராமன்) மாமா ஒரு சகலகலா வித்தகர். அவரது கைவண்ணத்தில் அக்ரஹாரத்தில் பல வீடுகளில் ஃபேன், அயன்பாக்ஸ், மிக்ஸி, சைக்கிள் அது இது என அவர் கைபடாத பொருளே யார் வீட்டிலும் இருக்க வாய்ப்பில்லை. அவரது முக்கிய தொழிலையும் பார்த்துக் கொண்டு எப்போதும் ஒரு சிரித்த முகத்துடன் இதுபோன்ற சிறு குறு ரிப்பேர் வேலைகள் அவருக்கு கைவந்த கலை.
அப்பாவின் நண்பர் காமாட்சி மாமா 'ஏன்டா அம்பி, அப்பா இருக்காரோ?'
'காவேரி ஸ்னானத்திற்குப் போயிருக்கா மாமா'
'என்ன பண்றே, படிக்கிறியா? அப்பாவோட வெத்தலைப் பொட்டியில் கொஞ்சூண்டு சுண்ணாம்பு எடுத்துக் கொடேன்' என்பார். வெத்தலைப் பொட்டி எடுத்துண்டு வந்து சுண்ணாம்பு டப்பா தேடும்போது அதிலிருக்கும் ரெண்டு வெத்தலையில் ஒன்றை உருவிக்கொண்டே 'சீவல் இல்லையாடா அம்பி? அப்பா உள்ளே எங்கேயாவது வெச்சிருப்பா பாரு' எனச் சொல்லிக்கொண்டே அன்றைய காலைப் பொழுதிற்கான இலவச வெற்றிலை சீவல் வசூல் ஆரம்பம். உள்ளூர சிரித்துக் கொண்டே அவர் கேட்டதை எடுத்துக் கொடுத்துண்டே இருப்பேன், தூரத்தில் அப்பா கையில் கிண்டியில் காவேரி ஜலத்துடன் தன் பூஜை புனஸ்காரம், நித்ய கர்மாவிற்கு அகத்திற்குள் விரைவார். கண் ஜாடையில் வெத்தலை சீவல் டப்பாவை உள்ளே வை எனும் குறிப்பால் உணர்த்துவதும். இது தினசரி வாடிக்கை என்பதால் அப்பா அப்பப்போ திட்டினாலும் பழகிடுத்து.
ஆச்சு, மணி 8.45 அப்பா பூஜை, டிபன் முடித்து கெளம்பிடுவார். சைக்கிள் எடுத்து கீழே வைக்கணும். அவர் கிளம்பிய அடுத்த நிமிடம் நானும் குளித்து பரபரவென ஸ்கூலுக்கு கிளம்பணும். "சங்கர், சந்தி பண்ணிட்டியோ?'ன்னு கேட்டுண்டே அப்பா டூட்டிக்கு கெளம்புவார்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=========================================
வருடங்கள் உருண்டோடியது. கல்லூரிப் படிப்புப் பிராயம். உள்ளூர் ஆடிட்டரிடம் பயிற்சி, கூடவே உள்ளூரில் இருந்தால் தினசரிக் கடமைகள் வீட்டில் முடித்து நானும் 9 மணிக்கு அலுவலகம் போவதும் வெளியூர் எனில் ஆடிட்டிங் டூர் அது இது என என் பி.காம் காலம் களைகட்டியது. நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஜமா வேற.
வெங்கு மாமா பார்க்கும்போதெல்லாம் கேட்பார் 'என்ன சங்கரா, காலில் சக்கரம் எதுவும் கட்டிண்டிருக்கியா? இன்னிக்கு எந்தூரு? இப்போ எங்கே இருக்கே, பம்பாயா, பெங்களுரா? மதராஸா?' பஸ், ரயிலுக்கு சீசன் டிக்கெட் எடுத்துட்டியோ' என சிரித்துக் கொண்டே நலம் விசாரிப்பார்.
பக்கத்தில் ஹோம் வொர்க் செய்து கொண்டிருக்கும் கிருஷ்ணாவோ வெங்கடேஷோ விசுவோ தாத்தாவுக்கு உதவியாய் கணக்கெழுத, சம்பாஷனைகளில் கலந்து கொள்ளாமல் 'சிரித்துக்கொண்டே' வழியனுப்புவார்கள்.
ஊரை விட்டுப் போய் பல காலம் ஆனாலும் எப்போ போனாலும் அன்றலர்ந்த மலர்போல் விசாலம் மாமி 'சங்கரா, எப்படி இருக்கே? என்ன சாப்பிடறே? நோக்குப் பிடிச்ச எள்ளுஞ்சாதம் வெச்சிருக்கேன், தரவா?' என்பார் அன்பாய்.
'எங்கே எத்தனை ஊர் போனாலும் சிவசங்கர் மட்டும் மாறவேயில்லே, அதே பேச்சு, அதே புன்னகை, அதே விறுவிறு நடை' என்பார் மீனாட்சி மாமி.
கடை திறந்த அவசரத்தில் வெறுமே ஹலோ சொல்லிண்டே போன சுப்புணி மாமாவோ வெங்கலக் குரல் மாமாவோ தினசரி மாலை அவரவர் டூட்டி முடிந்து திரும்பும்போது நின்று ரெண்டு வார்த்தை பேசிவிட்டுப் போவார். சிலசமயம் அது அன்றன்றைய அரசியல், நாட்டு நிலவரம் 'ஜப்பான்காரன் மெட்ராஸ்ல குண்டு போட்டுட்டான் போல இருக்கே' 'இந்திரா காந்திய சுட்டுட்டாளாம்டா' 'ராஜீவ் காந்தி இப்போ இல்லியாமே, ஏதோ குண்டு வெடிச்சு அவர் போய்ட்டாராமே' என்கிறது போல் அப்பப்போ என்ன நடக்குமோ அதுபற்றிய சிறு குறு அலசல், விவாதம். இதெல்லாம் அன்று.
========================================
அன்றே ஆடிட்டிங் அது இது என ஊர் சுற்றியதால் ஊர் திரும்பிய சில நாள் காலையில் தினசரி நடக்கும் ஒரு சில சம்பாஷணைகளில் சிலதும் மிஸ்ஸிங்.
அடுத்த வீட்டு நண்பர் சொல்வார். 'சங்கரா, நோக்கு சேதி தெரியுமோ? வெண்கலக் குரல் மாமா போயிட்டாராம்டா. எனக்கும் தெரியாது, நானும் ஊர்ல இல்லை. ராத்திரி தூங்கியவர் கார்த்தால எழுந்திருக்கவே இல்லை. தூக்கத்திலேயே முடிஞ்சுடுத்தாம்'.
இன்னொரு மாமா, இன்னொரு செய்தி, இனி அந்த அதிகாலை அவசரகதி குசலமும் ஊர்வம்பு அலசலும், அந்த வெண்கலக் குரலும் கேட்கவே கேட்காது.
***************************
வருடங்கள் கடந்தும் இன்றும் வேற ரூட்ல தினசரி காலை ஏதோ ஒரு ஸ்வாமி ஸ்வரூபம் 'டொய்ங்'னு வந்து வாட்ஸப்பில் வந்து விழும். அது சங்கரனோ, சீனு அண்ணாவோ, ராமன் அண்ணாவோ,மாதவன் ஸாரோ, கணேஷ்ஜியோ இன்னும் சிலரின் நற்காலை குசலம் விசாரிப்பின் மறுவடிவம் இந்த வாட்ஸப் வழி 'குட்மார்னிங்'.
இந்த குட்மார்னிங் சிலவற்றில் ஓரிரண்டு சில நாட்கள் வராவிடில் நமக்கு உள்ளூரப் பதைபதைக்கும். என்னாச்சோ, மாமாவுக்கு உடம்பு முடியலியோ? மத்தியானம் கூப்பிட்டு விசாரிக்கணும் என தோணும். அன்றைய பொழுதின் அவசரகதி வாழ்க்கையின் ஓட்டத்தில் மறந்தே போயிருப்போம்.
ஓரிரு வாரம் கழித்து தகவல் 'சிவா, நம்ம .............. ஸார் போன வாரம் உடம்புக்கு முடியாமல் கொரோனாவில்.............'எனத் தகவல் வரும். அந்த அன்பான நலம் விசாரிப்பின் 'குட் மார்னிங்' வாழ்த்து செய்தியில் ஒன்று இனி வரவே வராது எனும்போது அந்த நபர் சார்ந்த நினைவலைகள் நம்மில் நம்மை உள்ளுணர்வில் செலுத்தும் அந்த மணித் துளிகள்.
************************
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ
(நித்தம் நித்தம்)
சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது
சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது
தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது
(நித்தம் நித்தம்)
இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது
இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது
காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது
என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது
என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது
(நித்தம் நித்தம்)
தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று
அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க நின்றது ஒன்று
இதற்க்கிதுதான் என்று முன்பு யார் நினைத்தது
வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது
வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ !!
Like
Comment

No comments:

Post a Comment