Wednesday, December 31, 2014

சீரியஸ் அல்ல, சிரிக்க மட்டும்!! Just for Laugh!!

Posted and shared via Email to Lata Swaminathan, Ramamirtham Mama and Soma Somasundaram (only) since  19.12.2014 

[அன்புடையீர், முழுவதும் நகைச்சுவைக்காக மட்டுமே!! இடுக்கண் வருங்கால் நகுக, கடுக்கண் தொலைந்தாலும் நகுக என்று சொல்லாமல் சொல்லிய மாண்பமை வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு பொய்க்கலாமோ, அங்ஙணம் இது மிகைப்படுத்தப்படாமல் நகைச்சுவையெனும் உள்ளீட்டின் முன்னிட்டு தங்கள் முன் பகிரப்படுகிறது. குற்றம் குறை, சொற்குற்றம், பொருட்குற்றம் பொறுத்தருள்க!!]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரையொட்டிய உத்தரமேற்கு ப்ராந்தியம் தானே மாவட்டம் விரார் அருகிலுள்ள வசை மாநகரில் வாழும், (தமிழ் நாடு சிவகங்கை மாவட்டம், கோனாப்பேட்டைச் சேர்ந்தவரும், தஞ்சை ஜில்லா கும்பகோணம் மாநகராட்சிக்கு அருகில் சோழபுரம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவரும் ஆகிய  ரிடையர்ட் பள்ளி ஆசிரியர் ஆர். கே. ஸார் ஜேஷ்ட குமாரன் சிரஞ்சீவி ஸ்வாமினாதன் அவர்கள் சமூகத்திற்கும்,

மேற்குறிப்பிட்ட வசை மாநகரில் வாழ்பவரும், மயிலாடுதுறை தாலுக்கா, குத்தாலம் வட்டம், கதிராமாங்கலம் பகுதியைச் சார்ந்தவரும் ஆகிய என் ஆருயிர் நண்பர் திரு. என். ராமாமிர்தம் அவர்களின் சமூகத்திற்கும்,

தஞ்சை ஜில்லா கும்பகோணம் மாநகர் கல்லூரைப் பூர்விகமாகவும், குடந்தை நகரில் பிறந்து தவழ்ந்து வளர்ந்து விளையாடி பள்ளிப்பருவம் கல்லூரிப்பருவம் கடந்து பற்பல ப்ராந்தியங்கள் தேசங்கள் காடு மலை ஏரி குளம் தாண்டி தற்சமயம் சிங்கை எனும் சிங்கப்பூரில் குடியேறி வாழ்ந்துவரும் அடியேன், கல்லூர் (லேட்) 'வரேன்' சுந்தரசேய்யர் அவர்களின் த்ருதிய குமாரன், சிவசங்கரனின் மேலான விண்ணப்பம் தங்கள் மேலான பார்வைக்கு!!

என்னோட சகதர்மிணி பண்ற அழிச்சாட்டியம் தாங்கமுடியலேட்டேளா?

25 வருஷமாச்சு, சில்வர் ஜூப்ளி என்னென்னமோ பாத்தாச்சும், என்னென்னமோ பண்ணிப்பாத்தாச்சு, இந்த மனுஷன் என்ன அடிச்சாலும் அசர மாட்டேன்றானேன்னு நினைச்சாளோ என்னவோ?

நாலு வருஷம் முன்னால தம் ஆருயிர்த் தமக்கை மற்றும் மாமன் முறைவரும் அவர்தம் கணவர் (என்னுடைய ஆருயிர்ச் சகோதரரும் கூட) இருவரும் சிங்கை மலேயா சுற்றிப்பார்க்க வந்தபோது ஒரு சிறு அழிச்சாட்டியம் செய்து என்னை வசியமாக்கி தன் வசப்படுத்த திட்டமிட்டார் போலும். என்ன மாயமோ நடந்தது அன்று (22.1.11 அன்றும் 23.1.11 அன்றும்).

ஊக்க மருந்தோ செயற்கைக் குளிர்பானங்களோ இன்னபிற பழச்சாறுகளின் துணையின்றி சற்றே நினைவாற்றலும் சமயோசிதமும் பிறழ்ந்து நான் அங்கலாய்ப்பில் ஆழ்ந்திருந்த வேளையில் அதனை ஒரு மார்க்கமாகப் பயன்படுத்திக்கொண்டு என்னை அப்படியே நாடு கடத்தி சென்னைக்கு இட்டுச்சென்று அடுத்த வாரத்திலேயே பற்பல சிகிச்சைகள் என்கிற முகமன் மொழிகளில் ஆட்படுத்தி ஒரு சிறு ஸ்ப்ரிங் மூலம் சுமார். ரூ. 4 இலக்கம் (அன்றைய சந்தை மதிப்பு) பொருட்செலவில், அதுவும் என் கணக்கில் என்னை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார். அந்த இன்ப(துன்ப) அதிர்ச்சியிலிருந்தும் பின்னர் தொடர்ந்து சுமார் ரூ.2000 மாதாந்திரத் தவணையில் ஆங்கிலத்தில் .எம்.ஸி. என்பார்களே (ஆனுவல் மெயின்டனஸ் கான்ட்ராக்ட் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்புச் செய்ய பொருந்தும் ஒரு நாமகரணம்) ஏதோ ஒரு பெயரைச் சொல்லி இன்று வரை என் காலட்சேபம் ஏதோ ஓடிக்கொண்டுள்ளது. இடையே எனது வாழ்க்கையில் தொழிலில்லாத் தொழிற்புரட்சி (வேலையின்மை), பொருளாதாரப் புரட்சி இன்ன பிற சங்கடங்களை நான் சந்திக்க நேர்ந்தது. இவற்றைச் சமாளிக்க நான் கண்டம் பல தாண்டி பொருளீட்ட முற்பட்டேன். அய்யகோ, என் சொல்வேன்?
என் முயற்சிகள் சரியான பலனளிக்காமல் நான் மீண்டும் தாயகம் திரும்பி சில கால முயற்சிக்குப்பின் சிங்கை வந்து இப்போதுதான் ஒரு ஆறு மாத காலமாகிறது. சற்றே தொய்வுக்குப்பின் மீண்டும் பொருளீட்டும் வாய்ப்பு கிட்டி காலட்சேபத்தை சரியாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன் என்று சற்றே நான் அயர்வாய் இருந்தவேளையில்........................................!!

நடந்தது என்ன?

எனது நடவடிக்கைகள் எங்கே போகிறேன் எங்கே வருகிறேன் எப்போது வீடு திரும்பி வருகிறேன் என்று என்னைக் கண்காணிக்க ஒரு உபகரணம் சுமார் ரூ.50000 மதிப்பில் வீட்டில் வாங்கிவைக்க உத்தேசித்து அதற்காக என்னை நேரடியாக அணுக இயலாததால் மருத்துவ ரீதியாக எனக்குள்ள சில பலவீனங்களை பயன்படுத்தி மருத்துவ ரீதியாக என்னை அட்டாக் பண்ணும் நோக்கில் சுமார் ரூ. 10 இலக்கம் பெறுமானமுள்ள வைத்தியப் பொருட்செலவில் ஒரு சிறு பாட்டரி சைஸ் உபகரணத்தை எனது இருதயத்திற்கு சற்றே மேலே பொருத்தும் வழிமுறையைக் கண்டறிந்து (இதனால் அந்த 50000 மற்றொரு உபகரணத்தில் விலையில் ஒரு சிறு தள்ளுபடி கிட்டும் என்கிற லாப நோக்கிலும் கூட) சில தினங்களுக்கு முன் புனர் நிர்மாணம் மற்றும் பழுதுபார்ப்பு (பிளான்ட் மெயின்டனன்ஸ்) என்கிற செலவின வகையில், அதுவும் என் கணக்கில், பொருத்த ஆயத்தம் செய்து வெற்றியும் கண்டுவிட்டார்.

இந்தச் சதியின் பின்னணியில் யார் யார் இருந்தார், என் அகத்தி சகதர்மிணி மட்டுமே தனிப்பட்ட முறையில் இதைச் செய்தாரா வேறு யார் துணையுடன் இதை நிறைவேற்றியிருக்கக்கூடும் என்று எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கிறது.

இறையருளின் துணையுடன் மேற்சொன்ன சிகிச்சை இனிதே நிறைவேறிவிட்டது. தற்சமயம் நான் 3 வார மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வில் இருக்கிறேன்.

என்னைக் கண்காணிக்க மும்பையிலிருந்து விக்னேஷ் என்னும் ஒரு இளைஞர் வேறு வர இருப்பதாக சற்றுமுன் கிடைத்த உடைப்புச் செய்தி (ப்ரேக்கிங் ந்யூஸ்) சொல்கிறது.

காலம் காலமாய் என்னை அறிந்தோர் அவனியில் பலருண்டு. என் நேர்மை, அறிவும் செறிவும் மனித குல மாண்பில் நான் கண்டுணர்ந்த நற்குணங்களையும் பேணிக்காத்து வந்துள்ளேன் என்று எனது உற்றமும் சுற்றமும் நட்பும் என்னை அறிவார்கள் என்பது திண்ணம்.

கிட்டத்தட்ட 31 வருடப் பொதுவாழ்வில் நான் யாருக்கும் ஒரு தீங்கும் இழைத்ததோ இழைக்க நினைத்ததோ கிடையாது. பொருளீட்டுவதில் நேர்மை, பழகுவதில் இனிமை, நட்பையும் சுற்றத்தையும் பேணுவதில் தன்மை என்கிற நற்பண்புகளை நான் உளமாறப் பேணி வந்துள்ளேன் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை.

மேற்சொன்ன விக்னேஷ் என்னும் சிபிஐ அதிகாரி வேடதாரி,  எனது சிகிச்சைக்குப்பின்னர், நான் ஓய்வெடுக்கும் சூழலில் அவர் இவ்விடம் வரும் பின்னணி என்னை பெரிதும் வியக்க வைக்கிறது.

என்னைச் சுற்றி ஒரு சதிவலை பின்னப்பட்டுள்ளதோ என்று தோன்றுகிறது. இடது கையை மேலே தூக்காதே, இடது கையால் ஒரு பொருளையும் எடுக்காதே, குனியாதே, நிமிராதே, உட்கார்ந்த இடத்திலேயே ரொம்ப நேரம் இருக்காதே, குளிக்கும்போதும் உடை மாற்றும்போதும் கையை மேலே உயர்த்தாதே, ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருக்காதே, வரவேற்பறை மற்றும் படுக்கை அறை தவிர வேறு எங்கும் நடமாடாதே, வீட்டை விட்டுத் தனியே செல்லாதே, உரக்கப் பேசி எனர்ஜியை வேஸ்ட் செய்யாதே, அதற்காக எதுவும் பேசாமல் மௌனமாயும் இருக்காதே, பேஸ்புக் மற்றும் இமெயில் பார்க்க அனுமதி உண்டு ஆனால் பகலில் 1 மணி நேரம், இரவுக்கு முந்தைய பின் மாலையில் 1 மணி நேரம் மட்டுமே அனுமதி உண்டுடிவி இன்ன பிற பொழுதுபோக்குச் சாதனங்களைப் பார்க்காதே, என்று பற்பல நிபந்தனைகளில் என்னைக் கட்டுப்படுத்தி என்னை கிட்டத்தட்ட வீட்டினுள் சிறைக்கைதியாய் ஆக்கிவிட்டாள் என் சகதர்மிணி.

இதைத் தட்டிக்கேட்க யாரும் இல்லையா ஞாயமாரே?




அவன் அவள் அகல்

அவன் அவள் அகல்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
அவன் அவளின் அகல்
அவள் அவனின் அகல்
அவனியில் அவனின்றி அவள் அகலேல்
அவனியில் அவளின்றி அவன் அகலேல்
அவன் அகலின் அவள் ஆவாள் அகல்
அவள் அகலின் அவன் ஆவான் அகல்
அகலின்றி அவள் அவனில் அகல்
அகலின்றி அவன் அவளில் அகல்
அவளால் அவன் அகலான்
அவனால் அவள் அகலாள்
அகலால் அவள் அகலின் அவன் அகலான்
அகலால் அவன் அகலின் அவள் அகலாள்
அவளின்றி அவன் அகலேன்
அவனின்றி அவள் அகலேள்
அகலும் (நேரம்) அவள் அவனில் அகல்
அகலும் (நேரம்) அவன் அவளில் அகல்
அவளின் அகல் அவன்
அவனின் அகல் அவள்

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

October 25, 2014 at 11:16pm
தினமும் காலை எழுந்து தேனீர் அருந்தி சிறிது உடற்பயிற்சி செய்தபின் குளித்து தலைதுவட்டி அன்றாட இறை வணக்கத்தை முடித்து காலை உணவு முடிந்தபின் அலுவலகம் செல்லத் துவங்கினேன். 

அருகில் 5 நிமிடத் தொலைவில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் துறைமுக இரயில் நிறுத்தம் (ஹார்பர் ஃப்ரன்ட்) நோக்கிச் செல்லும் பேருந்திற்காகக் காத்திருக்கிறேன். 

வழக்கம்போல் நடக்கும் நேரம் சிறு பிரார்த்தனை உண்டு (நாம ஜெபம் என்றும் கொள்ளலாம்). அன்றும் அதேபோல் நாமா சொல்லிக்கொண்டே கைத்தொலைபேசியில் அன்றைய புதுத்தகவல் தலைப்புச்செய்தி என்று தேடிக்கொண்டிருந்தேன். 

பக்கத்தில் வழக்கமாய் பார்க்கும் அதே நபர்கள் (பரிச்சயம் இல்லையெனினும் அடிக்கடி பார்ப்பதால் ஒரு தலையசைப்பு, ஹலோ இத்யாதியுடன்) பரஸ்ப்ர உபயகுசலோபரி முகபாவனையில் முடிந்தது. 

வேறொரு பேருந்து வந்தது. சிலர் அதனுள் தம்மை நுழைத்துக்கொள்ள எத்தனிக்கையில் ஒருவர் வந்தார், அருகிலுள்ள பாலத்திலிருந்து வேகமாக வந்திருப்பார் போல, சட்டென்று இடித்துவிட்டு பேருந்தினுள் போனார், நான் சுதாரித்துக் கொள்வதற்குள் பேருந்து கிளம்பிவிட்டது. தானியங்கி கதவு மூடிக்கொள்ளுமுன் அந்த நபர் சற்றே தாமதமாக தன் தவற்றை உணர்ந்தவராக சமிக்ஞை மூலம் வருத்தம் தெரிவித்தார். இதெல்லாம் சகஜம்தான் என்று தூரத்தில் வந்த என் பேருந்தினுள் நான் புகுந்தேன். 

ரயில் நிறுத்தம் முன் இறங்கி நிலையத்தினுள் சென்று எனது ப்ளாட்பாரம் வந்து காத்திருந்தேன். அப்போதுதான் ஒரு வண்டி கிளம்பியிருந்தது தெரிந்தது, அதிகமாக பயணிகள் கூட்டமில்லை,அடுத்த செட் மக்கள் தலைகள் தெரிய 3 அல்லது 4 நிமிடம் ஆகும். அடுத்த வண்டி 4 நிமிடங்களில் என்று மின்னியக்கத் தொலைக்காட்சித் திரையில் ஓடியது. 

ரயில் வந்து 10 நிமிடப் பயணத்தில் நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்கி மெதுவாக மற்றொரு பேருந்து பிடிக்க வேண்டி நடந்து கொண்டிருந்தேன். மனதுக்குள் என் நாம ஜெபம் தொடர்ந்தது. 

ரயில் நிலையத்தில் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்குச் செல்ல அன்டர்க்ரவுன்ட் வழிப்பாதையில் நடந்துசென்று அடுத்த பக்கம் வெளியே வந்து பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றேன். 

வழக்கமாய் நான் சொல்லும் சூரிய வணக்கம் குறித்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே மேலே அண்ணாந்து பார்த்தால் கதிரவன் தன் முழுக் கிரணங்களையும் காட்டிக்கொண்டு பளிச்சென்று தெளிவாக முழுவதும் கண்ணுக்குப் புலனாகிறான். எனக்கு ஆச்சரியம்!! 

பல நாட்களாக இந்த பேருந்து நிறுத்தத்தில் நாம் காணும் காட்சி இன்று எப்படி மாறியது? வழக்கமாக நான் மேலே பார்த்து சூரிய வணக்கம் கூறும் கோணத்தில் அடர்ந்த மரங்களின் இடையே கதிரவன் இலைகளின் இடுக்குகள் வழியேதான் கண்ணுக்கு தெரியும்.  அந்தக் கோணத்தில் பார்த்தே பழகிவிட்டது எனக்கு. 

பேருந்து வரும் வரை 5 நிமிடமோ 10 நிமிடமோ அப்படித்தான் சாலையின் இருமருங்கிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டோ வரும் போகும் வாகன ஓட்டத்தை கவனித்து வந்திருக்கிறேன். 

சாலையின் நடுவே என்றும் இல்லாத திரு நாளாய் சில பணியாளர்கள் தத்தம் பணியில் மும்முரமாக இருந்தார்கள். அதில் சிலர் இந்தியத் தொழிலாளர்கள், சிலர் பங்களாதேஷ் அல்லது மியான்மர் ஆட்களாய் இருக்கலாம். 

அப்போதுதான் ஒன்றை உணர்ந்தேன். இத்தனை நாட்கள் நாம் பார்த்த இரண்டு மரங்கள் திடீரென்று காணவில்லை, கதிரவன் முழுக் கிரணங்களைக் காட்டி சிரித்த காரணம் இப்போது விளங்கியது. 

சாலை நடுவே இருந்த இரண்டு பெரிய மரங்களைக் காணவில்லை, கிட்டத்தட்ட 30 வருட வயது சொல்ல முடியும் அது மாதிரி மரங்களுக்கு. அவற்றின் பரந்து விரிந்த கிளைகள், அதனூடே இலைகள் அதனூடே ஆங்காங்கே கதிரவனின் ஒளிக்கீற்றுக்கள் இத்தனை நாட்கள் கண்ணுற்று இயல்பாய் சூரிய வணக்க ஸ்தோத்ரம் சொல்லும் உபாயம் கிட்டியது. 

இன்று அதிசயமாய் ஆதவன் முழுவதும் தெரிந்ததன் குழப்பம் நீங்கியது. அந்த மரங்களை நீக்கியதன் பொருட்டே அந்தப் பணியாளர்கள் சாலை நடுவே இருந்த இரண்டு மரங்களின் அடிப்பாகத்தை துப்புரவு செய்து கொண்டிருந்தார்கள். 

இரவோடு இரவாக அல்லது அதிகாலை நேரத்தில் மரங்களை அகற்றி இருக்க வேண்டும். வேறு எங்கோ அந்த மரங்கள் நட்டிருப்பார்கள். சாலை விரிவாக்கம் தொடர்பாக அடிக்கடி இது மாதிரி இந்தச் சிறு நகரில் நடப்பது சாத்தியமே. 

ஆனால் சுமார் இரண்டு மாதங்களாய் தினம் காலை நேரத்தில் பார்த்துப் பார்த்து பழகிய இயற்கைக்காட்சி இப்போதெல்லாம் வேறு மதிரி வெட்ட வெளியின் வெறுமை தாங்கவில்லை. 

இதே மாதிரி சென்னை சாலிக்கிராமம் பகுதியில் சுமார் 15 ஆண்டுகள் முன்பு அவிச்சி பள்ளி முன்பாக சுமார் 4 அல்லது 6 மரங்கள் சாலை நடுவே இருந்தவை நீக்கப்பட்டு சாலை விரிவாக்கம் காரணமாக அவை நீக்கப்பட்ட அன்று யதேச்சையாக அந்தப்பக்கம் வந்தவன் அத்தனை மரங்களையும் காணாமல் வியந்தது நினைவில் ஆடுகிறது. 

முன்பெல்லாம் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் 25ஜி 37ஜி 17எம் என்று எனது பேருந்திற்காகக் காத்திருந்த நாட்கள் நினைவில்.  

தினமும் நாம் பார்த்த நிகழ்வுகள் சட்டென்று சூழல் மாறும்போது மனம் ஒரு வெறுமையை நோக்கி வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு ஏக்கம் தோன்றும். கூடவே மரங்கள் இருந்ததால் இருந்த நிழல் அந்த நிழலின் அருமை இப்போது வெட்ட வெளியில் கதிரவனின் கிரணங்களின் நேரடித் தாக்கம் நம்மை ஆழ்த்தும்போதுதான் நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சொல்வார்களே அதைப் பரிபூர்ணமாய் உணர்கிறேன். 

இதுதாண்டா வாழ்க்கை!!

இதுதாண்டா வாழ்க்கை!!

October 28, 2014 at 4:47am
வாழ்க்கைன்னா என்ன?

அவரவர் சூழலுக்கும் வாழ்ந்த வாழும் வளர்ச்சி நிலைக்கும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்ப மாறுபடும், மாறிக்கொண்டே இருக்கும் (மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்கிற மாதிரி).

சுருக்கமாச் சொன்னா, பதினேழு பதினெட்டு ஒருத்தன் நியாயமாய்ச் செய்ய நினைத்தது ஆசைப்பட்டது சமூக பொருளாதார சூழலில் இயலாமையால் கைவிடப்பட்டு தன்னுடைய 50 55 வயதில் தன் பிள்ளைக்கு அதே வாய்ப்பை வேறு ஒரு சூழலில் அமைத்துக்கொடுக்க நினைக்கும், அதற்காக அனைத்து ப்ரயத்தனங்களையும் எத்தனித்து ததிங்கிணத்தோம் போடுவதுதான் வாழ்க்கை!! 

இதில் அன்று பெய்த மழையில் முளைத்த காளான்போல் வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வளர்ந்தவன் புத்திசாலி, 

வாய்த்த வாய்ப்பைத் தவற விட்டவன் அபாக்கியசாலி.

வாய்ப்பு வந்தும் தவறவிட்டவன் துரதிருஷ்டசாலி. 

வாய்ப்பு வந்து பற்றிக்கொண்டு பலமைல் தூரம் பயணித்தவன் வெற்றி வாகை சூடியவன் சாமர்த்தியசாலி.

வாய்ப்பும் கிட்டி வெற்றியும் பெற்று தானும் வளர்ந்து தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் கைதூக்கி விடுபவன் கருணையுள்ளம் கொண்ட புத்திசாலி மற்றும் பரோபகாரி. 

வாய்ப்பு வந்து வெற்றியும் பெற்று கற்றதும் பெற்றதும் மறந்து அல்லது துறந்து வாழ்ந்து கெட்டவன் துர்பாக்கியசாலி (வாழத் தெரியாதவன் விளங்காதவன்னும் சொல்லலாம்)

கிடைத்தது ஒரு வாழ்க்கை, அதை வாழ்ந்து பாரடா என்று துணிச்சலுடன் பீடு நடை போடுபவன் தைரியசாலி!!

இந்த மாதிரி பல அனுபவங்கள், தியாகங்கள், விட்டுக்கொடுத்தல்கள், சில நேரம் கோபதாபங்கள், சில நேரம் பிடிவாதம்!!

சில பல நேரம் வரட்டு வேதாந்தம் அல்லது சித்தாந்தம் பேசி பொழுதை வீணடித்து தானும் வளராமல் தன்னைச் சுற்றியுள்ளவரையும் கவனியாமல் வாழ்க்கையைத் தொலைப்பவன் என்னத்தச் சொல்ல!!

யார் என்ன சொன்னால் என்ன, என் வழி தனிவழி என்று வாளாவிருப்பவன் ஊரோடும் ஒட்டாமல் அதே நேரம் யாரோடும் விலகாமல் தான் தன் குடும்பம் தன் பாதை என்று இருப்பவன் அவனையும் நான் விட்டுவிட முடியாது!!

வெற்றி பெறுகிறோமோ இல்லையோ வாழும் வகை தொகை தெரிந்து தானும் வாழ்ந்து சுற்றம் உற்றத்தையும் கைதூக்கி அரவணைத்துப் போய் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்பவன் கொடுத்துவைத்தவன்!! 

இதில் நாம் ஒவ்வொருவரும் எந்த வகை நம் மனசாட்சிக்கே தெரியும்!! 

என்ன, இதையெல்லாம் வாழ்க்கையில் நாம் உணரும் நேரம் பெருமூச்சு விட்டு ஆயாசப்படுத்திக்கொள்வதற்குள் ஓடியிருக்கும் ஒரு 30 40 வருஷம்!! பணவீக்கம், பொருளாதார முன்னேற்றம், சமூக மாற்றம் உளவியல் மனவியல் தாக்கங்கள் இவற்றைக் கண்ணுற்று நாம் சுதாரித்துக்கொள்வதற்குள் சிலருக்கு காலனின் அழைப்பு வந்திருக்கும்!! சிலருக்கு அந்த வசந்த அழைப்பு வந்து தள்ளிப்போயிருக்கும்!! 

இதுதாண்டா வாழ்க்கை!! இதைக் கடப்பதற்குள் எத்தனை ஏச்சுக்கள், பேச்சுக்கள், ஏக்கங்கள், நிராசையாய்ப் போன ஆசைகள், நிறைவேறாத கனவுகள், முற்றுப்பெறாத முயற்சிகள், முற்றுப்பெற்றதா இல்லையா எனவே அறியவியலாத குழப்பச் சூழல்கள் அஹா, வாழ்க்கை எனும் ஓடம், அதில் ஏறி வந்த பாடம், ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல!!

ஓடிக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை!! ஓடாமல் ஒரு நிமிஷம் நின்று பாருங்கள், அப்போது தெரியும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் மறுபக்கம்!! அதுவும்தான் வாழ்க்கை!!   

இருபது இருபதுக்குள் இருக்குதய்யா மாயம்!!

இருபது இருபதுக்குள் இருக்குதய்யா மாயம்!!

November 14, 2014 at 8:08pm
இருபது இருபதுக்குள் இருக்குதய்யா மாயம்!!
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=====================================

[எதுகை மோனை இலக்கணம் செய்யுள் உரை நடை எதுவாய்க் 
கொள்ளினும் அந்தி சந்திப் பிழை பொறுத்தருள்வீர்]

இருபதுக்குள் இருக்குதய்யா மாயம்

முதல் இருபதில் பயமறியாக் காளைக்கன்றாய்
முதல் முதல் உலகமறியாப் பருவம் வென்றாய்
முதல் தலைமுறையிடம் தயக்கம் கொண்டாய்

இரண்டாம் இருபதில் உலகறியத் தலைப்பட்டாய்
மிரண்டால் வருவதில் கலகமறியாக் காரியம் கொண்டாய்

அரண்டால் வருமோ உலகம் உன் கைக்குள், உருண்டு
புரண்டால் வருமே பலதும் உன் மெய்க்குள்

முதல் இருபதை அடக்கும் ஏனை இருபதுகள்
இரண்டாம் இருபதை மடக்கும் பிந்தை இருபதுகள்
மூன்றும் நாலும் கடக்கும் வாழ்வின் அனுபவங்கள்

முதலாம் இருபது கேட்கும் ஆயிரம் கேள்விகள்
இரண்டாம் இருபது மிளிரும் மிரளும் உருளும் பிரளூம்
மூன்றாம் இருபது மெல்ல மெல்ல நற்குணம் பேணும்

மூன்றாம் இருபதில் கடக்கும் வாழ்வின் மயக்கம்
நாலாம் இருபதில் நடக்கும் வாழ்வோ தாழ்வோ ஏன் தயக்கம்

மூன்றாம் இருபது கடக்கும் ஏனை இருபதுகளின் ஏற்றம் இறக்கம்
(மூன்றாம் இருபது தாங்கும் ஏனை இருபதுகளின் ஏற்றம் இறக்கம்)

நாலாம் இருபது பாங்காய் ஏற்கும் மற்றை இருபதுகளின் மயக்கம்
நாலாம் இருபது தேங்காய் ஏங்கும் கூற்றை வருவது நோக்கும்

முதலோ கடையோ பிறழ்கின் இரண்டும் மூன்றும் தாங்கும் குடும்பச் சுமைகள்
முதலிரண்டில் வாரா ஞானமும் பேறும் கடை இரண்டில் வாழ்வைத் தாங்கும்
கடையிரண்டில் வருமே பேறும் புகழும் முதலிரண்டில் உணரா வேட்கை
முதல் மூன்றில் காணா யாவும் நான்கில் கொள்ளும் வாழ்வின் யாக்கை

வாழ்வில் இருப்பதை இருபது இருபதாய்க் கொண்டால், ஓர் 
இருபதில் இருப்பது மற்றை இருபதில் இல்லை

வாழ்விலும் தாழ்விலும் இருபது இருபதாய்க் கடந்தால்
வாழ்வதும் தாழ்வதும் நாரணன் செயலே!! 

கல்வி வேளையில் கலவியிச்சை வரலாமோ முறையோ?

Posted as a Note in FB Wall since 24.12.2014

கல்வி வேளையில் கலவியிச்சை வரலாமோ முறையோ?

பள்ளிப் பிராயம் பாடம் படிக்க பள்ளியறைப்பாடம் ஏதுக்கடா
துள்ளித் திரியும் ஓடம் துடிக்க தெள்ளுதமிழ் தெம்மாங்கு போதுமடா

கல்வியில் கலவி கலந்தால் கல்வியும் போம் கலவியும் போம்
பள்ளியில் கல் கல்லாததும் அவனியில் செல்லாவிடம் செல், 
பரணியில் காணாவிடம் காண் ஏதேகிலும் செய், கல்வி கொள்!!

கலவி வேளை வரும் போம் கல்விவேளையில் வாரா ஒழுக்கம் 
உலவி நாளை கதறினும் வருமோ நல்லொழுக்கம்
கலவி நாளையெண்ணி கல்விவேளை தொலைத்தால்
உலவி திக்கெட்டும் சாவாய் மெய்யுணர்வு வேண்டி.

உள்வினை மாயமோ ஊழ்வினை மாயமோ  
கொள்வினை பருவத்தே பயிர் செய்
உன்வினை நீயறியாய் அவனறிவான்
தன்வினை அறியான் பவனியிலோர் பாவம்
முன்வினை அறியா மானிடா தவமிருந்தும் கிட்டா பாவம்
எள்வினை கொள்ளேல் ஊழ்வினை கொணரேல்.

மெய்யென்ன பொய்யென்ன எல்லாம் மாயமடா
மெய்யென்ன செயமென்ன பயமென்ன காயமடா
மெய்யென்ன செய்யும் பொய்யென்ன செய்யும்
மெய்பொய் உள்ளாறு பொய்யெனும் கொல்.

செல் செல் செல் எனச் செல்வாய்
கல் கல் கல் எனக் கொள்வாய்
சொல் சொல் சொல் எனக் கேளாய்
நில் நில் நில் ஒருக்கணம் நில்லாய்
கல் கல் கல் என மரணம் வரினும் கற்பாய்.

செல்வம் வரினும் உற்றம் வரினும் யாக்கை போயினும்
கொள்வம் ஒழுக்கம் பெறினும் பெரிது கொண்டது கற்றது போயினும்
கொள்வம் விழுப்பம் அதனினும் பெரிது இப் பிறவியெனும் 
கோளறு பதியம் எதனினும் அரிது கற்கை நன்றே கற்கை நன்றே. 

[கோனார் நோட்ஸெல்லாம் கேட்கக்கூடாது!! புரிஞ்சா புரிஞ்சுக்கோங்க!!)